Tuesday 8 January 2019

அபிராமி அந்தாதி - 37



                                                          அபிராமி அந்தாதி - 37 

                                                                                


கைக்கே அணிவது கன்னலும் பூவும் கமலம் அன்ன
மெய்க்கே அணிவது வெண் முத்துமாலை விட அரவின்
பைக்கே அணிவது பன்மணிக் கோவையும் பட்டும் எட்டுத்
திக்கே அணியும் திரு உடையானிடம் சேர்பவளே

அன்பரின் விளக்கவுரை 

அம்பிகையை, கேசாதி பாதாந்தம், வர்ணனை செய்கிறார் பட்டர்
கைக்கே அணிவது கன்னலும் பூவும் - கைகளுக்கு அணிகலங்களாக நீ அணிந்து கொள்வது கரும்பும் பூக்களும்
 மனமாகிய கரும்பு வில்லும் , பஞ்சதன்மாத்திரைகளான (சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் எனும் ஐந்து மூலப்பொருட்கள்) ஐந்து மலரம்புகளும் அன்னையின் கரங்களில் அணியாக கைவிளங்குகின்றன.

கமலம் அன்ன மெய்க்கே அணிவது வெண் முத்துமாலை - தாமரை போன்ற திருமேனிக்கு அணிகலங்களாக அணிவது வெண்ணிற முத்துமாலைகள்
விட அரவின் பைக்கே அணிவது பன்மணிக் கோவையும் பட்டும் - நல்ல பாம்பின் படம் எடுத்த தலையைப் போல் இருக்கும் இடைக்கு அணிந்து கொள்வது பலவிதமான மாணிக்கங்களால் ஆன மாலைகளும் பட்டுத்துணியும்
எட்டுத் திக்கே அணியும் திரு உடையானிடம் சேர்பவளே - எட்டுத் திக்குகளையே (திசைகளையே) ஆடையாக அணிந்து கொண்டிருக்கும் எல்லா செல்வங்களையும் உடைய (ஐஸ்வர்யம் உடையவன் ஈஸ்வரன்) சிவபெருமானின் இடப்பாகம் சேர்பவளே


ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமத்தில் 32. ரத்ன க்ரைவேய சிந்தாக லோலமுக்தா பலான்விதா - ரத்னத்தால் அமைந்த அட்டிகை பதக்கம் அவைகளிலிருந்து தொங்கும் முத்துமாலைகளோடும் கூடியவள். கழுத்தை ஒட்டிய அட்டிகை, அதன் நடுவே பதக்கம், அவற்றின் கீழ் தொங்கும் முத்துச்சரங்கள், 

இம்மூன்றும், மூன்று வகையான பக்தர்களைக் காட்டுவது போல் உள்ளன. சிலருடைய வாய் மட்டும் தேவியை துதிக்குக் கொண்டிருக்கும்ம் அனால் மனம் எங்கோ இருக்கும். அவர்களது நினைவில் தேவி கழுத்தளவு தான் நிற்கிறாள். இவர்கள் க்ரைவேய சிந்தாகர்கள்.

கழுத்திற்கு மேல் தேவியைப் பற்றி நினைப்போடிருப்பவர்கள் அட்டிகையில் தொங்கி ஆடிக் கொண்டிருக்கும் லோலர்கள். அவர்களுடைய மனமும் செயலும் வழிபாட்டில் சிறிது நேரமும் வேறொங்கோ சிறிது நேரமும் ஆடிக்கொண்டிருக்கும்.

மூன்றாவது வகையோ, முக்தா - விடுபட்டவர்கள். வெளிச்சிந்தனைகளும், அதன் விளைவாக செயல்பாடும் நீங்கி மனத்தாலும், செயலாலும் வாக்காலும் தேவியிடம் ஈடுபட்டவர்கள்.

51. ஸர்வாபரண பூஷிதா - எல்லா ஆபரணங்களாலும் அலங்கரிக்கப் பெற்றவள். 

சிவனை திகம்பரனாகச் சொல்லி, அவன் பத்னியை சகலாபரண பூஷிதையாகக் கூறும் அபிராமி பட்டரின் கவிநயம் வெகு அழகு!
இப்படி உடல் முழுக்க ஆபரணங்கள் சூடிக்கொண்டு நமக்கு தரிசனம் தரும் அந்த அன்னை, நம்மை யாரிடம் சேர்க்கிறாள்? எந்த ஒரு ஆடை அணிகலங்களும் சூடிக்கொள்ளாத, திகம்பரனாய்த் திகழும் அந்த ஈசனிடம் நம்மை சேர்ப்பிக்கிறாள். அந்த ஈசன், எட்டுத்திக்குகளையே ஆடையாய் அணிந்து இருப்பவன். இந்த உலகு அனைத்தையும் தனது மேனியாய்ர்க் கொண்டவன். இப்படி, அனைத்து உலகையுமே தனது ஆடையாய்க் கொண்டதனால், அவன் 'திருவுடையான்' ஆகிறான் என்கிறார் பட்டர் 

அபிராமி சமயம் நன்றே!!
                                                      பாடலை குருஜி  கற்பிக்கிறார் இசையுடன்

                                                                       காம்போதி ராகம்                          

    
u tubes published  by us are available in the following link

https://www.youtube.com/channel/UCig4GnMNmCHwvGlQVUHr_NA/videos

                              முருகா சரணம் 

No comments:

Post a Comment