Monday 15 October 2012

தேவி உன்னை சரணடைந்தோம்



அன்பர்களுக்கு  நவராத்திரி நல் வாழ்த்துக்கள்... 

பொதுவாக நவராத்திரி தினங்களில்  பிற அன்பர்கள் இல்லத்துக்கு சென்றால் தான்  பரிசுப் பொருள்கள்  கிடைக்கும் . ஆனால் நம் அன்பர்களுக்கு பரிசுப்பொருள்கள்  தானாகவே வந்து அடைந்துள்ளன.ஆம்.நம் அன்பர் சாந்தா /சுந்தரராஜன் தம்பதியர்  நமக்கு  அபிராமி  பதிகத்தின் பொருள் /விளக்கவுரை களை தாமாகவே முன் வந்து அளித்துள்ளார்கள் .தேவியே நம்மை வந்து அடைந்ததாக உணர்கிறோம் அவர்களது வலைதளத்துக்கு முன்பே LINK  கொடுத்துள்ளோம். அன்பர்கள் நன்கு பயன் படுத்தி தேவியின் அருள் பெற வேண்டுகிறோம்.மற்றும் அன்பர்கள் தங்களது கருத்துக்களை மனம் உவந்து அவர்களுக்கு அளித்து நம்முடைய நன்றியை தெரிவித்து அவர்களை மேலும் உற்சாக ப் படுத்த தாழ்மையுடன் வேண்டுகிறோம்.



Friday 12 October 2012

அபிராமி பதிகம்


சில வருடங்களுக்கு முன் 'அபிராமி பதிகம் எங்கள் பார்வையில்' என்ற நூல் வெளியிட்டிருந்தோம். அதில் நாம் கற்றிருக்கும் அபிராமி பதிகங்களுக்கு பத உரை தந்திருந்தோம். அதன் மின் வடிவத்தை எங்கள்  blog ல்  ஏற்றிருக்கிறோம். அன்பர்கள் படித்து இன்புறலாம். தற்சமயம் முதல் 13 பாடல்கள் மட்டுமே இடம் பெற்றிருக்கிறது.மற்றவை கூடிய விரைவில் இடம் பெறும்.  Link http://thiruppugazhamirutham.shutterfly.com/abiramipadigam

காப்பு செய்யுளின் பதவுரை


                                           விநாயன் துணை

தூயதமிழ்ப் பாமாலை சூட்டுதற்கு மும்மதன்நால்
வாய்ஐங் கரன்றாள் வழுத்துவாம் - நேயர்நிதம்
எண்ணும் புகழ்க்கடவூர் எங்கள்அபி ராமவல்லி
நண்ணும்பொற் பாதத்தில் நன்கு

நேயர் நிதம் - அன்பர்கள் தினந்தோறும்
எண்ணும் - நினைக்கும்
புகழ்க் கடவூர் - புகழ் பெற்ற திருக்கடவூரில்(எழுந்தருளிருக்கும்)                                       
எங்கள் அபிராமவல்லி - எங்கள் அபிராமவல்லி(யை)
நண்ணும் - அணுகி
பொற்பாதத்தில் - பொன்போன்ற திருப்பாதத்தில்
நன்கு - நன்றாக
தூயதமிழ்ப் பாமாலை - புனிதமான செந்தமிழ் பாக்களால் தொடுக்கப்பட்ட மாலையை
சூட்டுவதற்கு - அணிவிப்பதற்கு
மும்மதன் இச்சை, கிரியை, ஞானம் என்னும் மூன்று சக்திகளை உடைய
நால்வாய் - தொங்கும் வாயுடைய
ஐங்கரன் தாள் - ஆக்கல், அளித்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்ற தொழில்களை புரியும் ஐந்து கரங்களை உடைய விநாயகப் பெருமானின் பாதக் கமலங்களை
வழுத்துவாம் – வணங்குவோம்

எந்த செயல் தொடங்குவதற்கு முன் கணபதியைத் தோத்திரம் செய்து வணங்குவது என்பது தமிழ் இலக்கியத்தில் காணப்படும் ஒரு மரபாகும். அந்த வகையில் தான் இயற்றப் போகும் இந்த பதிக ஆரம்பத்தில் விநாயகப்பெருமானை துதித்து தூய தமிழ்ப் பாமாலைஅணிவிப்பதற்கு வேண்டுகிறார். நாமும் அவருடன் வேண்டிக்கொள்கிறோம்.

திருக்டையூர்த் திருத்தலத்தில், பிள்ளையார் “கள்ள வினாயகர்”என்ற பெயருடன் எழுந்தருளியுள்ளார். அபிராமி பட்டர் இவ்விநாயகரையும் தன் பதிகத்தால் துதி செய்துள்ளார். “பங்கயத்தாளும்” என்ற சொற்றொடருடன் ஆரம்பிக்கும் இப்பதிகம் மிக்க இனிமையானதொன்றாகும். ஒவ்வொரு நான்காவது அடியும் “கடவூர் வாழும் கள்ள விநாயகனே” என்ற சொற்றொடருடன் முடிகின்றது. அதன் விளக்கம் பின்னொரு சமயம் தருவதற்கு அந்த கள்ள விநாயகன் அருள வேண்டும்.


சாந்தா
சுந்தர ராஜன்

Thursday 4 October 2012

திருஎழுகூற்றிருக்கை: முன்னுரை



எழு கூற்றிருக்கை என்பது பிரபந்த வகைகளில் ஒன்றாகும்.  இவ்வகை கவிகள் அநேகமாக இறைவனையும், இறை அருளையும் கருப்பொருளாக வைத்துப் பாடப் படுவதால் ‘திரு’ என்ற அடை மொழி சேர்த்து திருஎழு கூற்றிருக்கை என்று சொல்வது மரபாயிற்று. கூற்று என்றால் ( பொருளை) கூறும் சொற்கள் என்பதாகும்.

இந்த இலக்கண வகையில் பாடுவது மிகக் கடினம். இதற்கு சொல்வளத்துடன், புலமைத்திறமையும் அதற்க்கும் மேலாக இறைவனின் பரிபூர்ண கடாக்ஷ்மும் இருந்தால்தான் இப்படிபட்ட கவிதை அமைக்கமுடியும். அவ்வகையில் தமிழ் இலக்கிய உலகில் மிகச் சிலரே திருஎழு கூற்றிருக்கை பாடியிருக்கிறார்கள். தமிழில் மட்டுமன்றி சம்ஸ்கிருத்த்திலும் இவ்வகை இலக்கியங்கள் இருக்கின்றன. அஷ்ட நாக பந்தம், ரத பந்தம், முரச பந்தம், பதும பந்தம் போன்றவை பிரபலம். தமிழில் இருக்கும் திருஎழு கூற்றிருக்கை கவிதைகள் ரத பந்தப்படுத்தி எழுதுவதுதான் மராபியிருக்கிறது. இப்படி அருணகிரிநாதர், திருஞான சம்மந்தர், திருமங்கை ஆழ்வார், நக்கீர தேவ நாயனார் மட்டுமே அமைத்திருக்கிறார்கள் என்பதிலிருந்தே இதன் கடினம் நமக்கு புரியும். பந்தம் என்றால் அடைத்தல், பொருத்துதல், கட்டுதல் என பொருள். ரத பந்தம் என்றால் அமைக்கும் கவிதை ஒரு ரத அமைப்பில் இருக்க வேண்டும். ஒரு ரதம் அல்லது தேர் எப்படி மேலே குறுகியும் படிப்படியாக விரிந்தும் பின்னர் அடியில் குறுகியும் இருக்கிறதோ அதே வடிவில் கவிதையும் ஆரம்பத்தில் குறுகியும் பின்னர் விரிந்து மறுபடியும் குறுகியும் அமையும். எழு கூற்றிருக்கை பிரபந்தத்தில் ஒன்று முதல் ஏழு வரை எண்களைக் கூட்டியும், குறைந்தும் வருமாரு  வைத்துப் பாட வேண்டும். தேருக்கு மேற்பாகம், கீழ்ப்பாகம் இருப்பது போல் இந்த கவிதையிலும் ஒவ்வொரு பாகத்திலும் ஏழு அடுக்குகள் அமைய வேண்டும். 

இதனில் வரும் சொற்கள் தமது சப்த ஆற்றாலாலும், பொருள் ஆற்றலாலும் மேற்சொன்ன எண்களை குறிக்குமாறு தொகுக்கப் படவேண்டும். அப்படி தொகுக்கப்படும் போது அதனின் பொருளும் சிறக்க வேண்டும். இதில்தான் கவியின் சாமர்த்தியம் தெரிய வருகிறது. 

தமிழ் இலக்கணத்தில் இருக்கும் ஆசுகவி, மதுர கவி, வித்தார கவி சித்திர கவி வகைகளில் இது சித்ர கவி வகைச் சேர்ந்ததாகும். இவ்வகை கவிகள் தமிழ் இலக்கியத்திற்கு அழகு சேர்க்கும் அணிகலங்கள் ஆகும். சமீப காலத்தில் வண்ணச்சரபம் ஸ்ரீ தண்டபாணி ஸ்வாமிகள் 8, 9, 10 கூற்றிருக்கை என ஆதித்தன், விநாயகன், சிவன், அம்பிகை, விஷ்ணு, கந்தன் என அறுவகைச் சமயத்திருக்கும் அமைத்திருக்கிறார் என்பது இரு வியப்பதற்குறியதாகும்.

திருஞான சம்ப்ந்த மூர்த்தி நாயனார் பாடிவந்த தேவாரங்கள் அனைத்தையும் அவ்வப்போது பாராயணம் செய்து வந்த அவரது தந்தையார் சிவபாதஹ்ருதயர்அவை நாள்தோறும் எண்ணிக்கையில் பெருகிக் கொண்டு வர நித்ய பாராயணம் செய்வது கடினமாகிக் கொண்டு வந்தன. சம்பந்தரிடம் அவரது தேவாரம் முழுவதையும் பாராயணம் செய்த பலன் கிடைக்கும்படியும் ஆனால் அதே சமயம் ஒரு சிறிய நூலாகவும் இருக்கும்படியும் மிகமிகச் சக்தியுள்ளதான ஒரு சிவஸ்தோத்திரத்தை அருளிச் செய்யும் படி வேண்டினார். அதன்படி சம்பந்தரும் திருவெழுக் கூற்றிருக்கையை இயற்றி அருளினார். அதைப் போலவே அருணகிரிநாதர் அருளிய இந்நூலும் அவரது இதர நூல்கள் அனைத்தையும் பாராயணம் செய்த பலனைக் கொடுக்கும் என்பர்.

திருஎழுகூற்றிருக்கையில் எண்கள் வரும் அமைப்பு இப்படி இருக்கும். மேற்பாகத்தில் முதல் கூற்றில் ஒன்று, பிறகு அடுத்த கூற்றில் ஒன்று இரண்டு, ஒன்று என்ற வகையில் கீழே கொடுத்துள்ளவாறு அமையும்.

1
121
12321
1234321
123454321
12345654321
1234567654321

கீழ் பாகம் இதேமாதிரி மாறி அமையும்.

ஒவ்வொரு கூறுக்கும் இரண்டிரண்டு அறைகள் அதிகமாகிக் கொண்டே வருவதால் தேர் போன்ற அமைப்பு. மேலும் கீழுமாய் அமைகின்றன. உச்சியிலிருந்து நடுவுக்கு இறங்குமுகம் அடியிலிருந்து நடுவுக்கு ஏறுமுகம். ( கூறு - பகுதிஅறைகள் - சதுரகட்டங்கள் )

மேற்பகுதியை  நோக்கினால் அதில் வரும் எண்கள் ரதத்தைச் சுற்றி சுழந்து நின்று தொங்கும் சுரங்களைப் போலத் தொய்ந்து காட்சியளிக்கின்றது அல்லவா!

கணிதம் தெரிந்தவர்கள் உடனே சொல்லி விடுவார்கள், இது 1, 112,  1112, 11112, 111112, 1111112, 11111112 என்றல்லவா இருக்கிறது என்று. அதற்கும் மேலாக ஒவ்வொரு கூற்றின் கூட்டுத்தொகை எண்களான1, 4, 9, 16, 25, 36, 49  என்பது 12, 22, 32, 42, 52, 62, 72 ஆக அமைந்திருப்பது ஏதோ ஒரு வர்ணஜாலம் மாதிரி இருக்கிறது அல்லவா!

மேற்பகுதியின் 7 கூறுகளின் கூட்டுத்தொகை 140. அதேபோல் கீழ்பகுதியின் 7 கூறுகளின் கூட்டுத்தொகை 140. இவை இரண்டையும் கூட்டினால் 280. இந்த எண்ணை ஒற்றை எண்ணாக கொணர்ந்தால் வருவது 1. இதனால் திருஎழுகூற்றிருக்கைப் பாடல் ‘ஒன்று’ என்ற முழுமையையும், ‘ஏகத்துக்கு பெருமைக்கொண்டது.

அருணகிரிநாதர் ஸ்வாமிமலை முருகன் மீது இத் திருஎழு கூற்றிருக்கை அமைத்திருக்கிறார். இதனை சலவைக்கல்லில் எழுதி ஸ்வாமிமலை ஸ்வாமிநாத ஸ்வாமி கோயிலும், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலிலும் முருகன் திருவருட் சங்கத்தினர் பதித்துள்ளார்கள். தேர்வடிவில் இருக்கும்  இதனை அனைவரும் பார்த்து வரவேண்டும். அதனின் படத்தை இங்கு இட்டுள்ளோம்.

ஸ்ரீ அருணகிரி ஸ்வாமிகள் காலத்துக்கு முந்தி அருளப்பெற்ற திருஎழுகூற்றிருக்கைகளில் எல்லாம் மேற்கட்டமாகிய முதற் கட்டத்தில் ஒன்று என்ற எண் அமையப் பாட பெற்ற அமைப்பு இல்லை. ஆனால் இவரோ மேற்பகுதி எண் கட்டங்களுக்கு சிகரம் வைத்தாற்போல் ஒன்று எண் அமய வைத்து பாடி இருப்பதுதான் அருணகிரிநாதரின் புலமைத்திறன்அவரை முருகன் ஆட்கொண்டு கவிதைப்பாட வைத்ததின் வெளிப்பாடு.

பாடலில் ஸப்த ஜாலத்தால் எண்களை குறிப்பிடும் சொற்கள்:

ஒன்று –          ஒர் உருவு, ஒருவகை, ஒன்றாய், ஒன்றி, ஒருவன், ஓரா, ஒருசிறை, ஒருநொடி, ஒருகை,  ஒருநொடி, ஒருகுரு, ஒருநாள், ஒருவேல்

இரண்டு-      இருமரபு, இருவரில், இருபிறப்பாளர், இருமையின், இருதாள், இருசிறை, இருசெவி, இருவகை, இருவினை, இருமுலை, இருபிளவு

மூன்று-           மூவாது, முன்நாள், மூவர், முந்நீர், மும்மதம், மும்மதன், முக்கண், முத்தமிழ், முத்தலை,

நான்கு     நான்முகன், நானிலம், நால்வகை, நால்வாய், நன்மறை, நாற்கவி, நான்மறை

ஐந்து             அஞ்ச, ஐந்துகை, ஐந்தெழுத்து, ஐம்புலன், ஐந்தரு,

ஆறு               அறுகுசூடி, அறுமுகன், அறுமீன்

ஏழு                எழுதரும்


அருணகிரிநாதரின் பாடலின் பொருளை பாடலுடன் படித்து இன்புறவும். (http://www.thiruppugazhamirutham.blogspot.in & http://thiruppugazhamirutham.shutterfly.com/ )

By
Thiru Sundara Rajan