Thursday, 19 March 2015

                                       அமரர் அருளாளர் திருப்புகழ் அடிமை நடராஜன் சார்.

அருணகிரிநாதரின் வேல் விருத்தம் ,மயில்விருத்தம் ,திரு  வகுப்புக்கள்
நம் வலைத்தளத்தில் ,அருளாளர் திருப்புகழ் அடிமை நடராஜன் சாரின் விளக்க
உரையுடன் அனுபவிப்பதை  நம் பாக்கியம் என்றே கருதவேண்டும்.
இறைபணியாகவெளியிட்டுள்ள கௌமாரம் இணைய தளத்துக்கு நன்றிகள் பல.

திருப்புகழுக்கு தன்னையும் தன் குடும்பத்தையும் சமர்ப்பித்துள்ள
எண்ணிக்கையற்ற அடியார்கள் குடத்தில் இட்ட விளக்கை போல் தங்கள் தெய்வீக
பணியை செவ்வனே ஆற்றி வருகின்றனர்.பெருமானின் புகழ் பாடுவதுதான் தங்கள்
வேலை ,தன் புகழ் பாடுவது அற்பமான செயல் ,மற்றவர்களும் தங்கள் புகழ்
பாடலில்  இறங்கக்கூடாது என்ற மேன்மையுடன் வாழ்கிறார்கள் நம் குருஜி தன்னை
திருப்புகழ் தொண்டன் என்றுஅன்பர்கள் கருத விழைந்தார்.நடக்க இருக்கும்
வள்ளி கல்யாண வைபவ அழைப்பிதழில் அமைப்பாளர்கள்" திருப்புகழ் தொண்டனின்
தொண்டர்கள் " என்றே வினயத்துடன் நம்மை அழைக்கிறார்கள்..இவை எல்லாம்
பெருமானை சரணடையும் தத்துவம்தான்..இருப்பினும் அத்தகைய
 அருளாளர்களைப்பற்றி சில சந்தர்ப்பங்களில்நன்றிக்கடன் கருதி குறிப்பிட
 வேண்டிய அவசியம் எழுகிறது. .உதாரணமாக நம்வழிபாடு நூலில் ,
முன்னுரையில் சில அருளாளர்களின் குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.

அந்த வகையில் நடராஜன்சாரைப்பற்றி  சில வார்த்தைகள் கூறவிரும்புகிறோம்.
அன்பர்கள் பொறுத்தருள்க.

அடிமை வாழ்வைப்பற்றி பல விதங்களில் கூறலாம்.ஆனால் இறைவனுக்கு அடிமை
என்பது ஒப்பற்றது .ஏன் இறைவனே அடியார்களுக்கு அடிமையான சம்பவங்களும்
உண்டு சுந்தர மூர்த்தி நாயனார் திருவாரூர் நாயகனுக்கு அடிமையானதின்
பெருமையை எப்படி உணர்த்துகிறார் பாருங்கள்


மேலும் தன்னை மீளா அடிமை என்று மற்றொரு பாடலில் உரைக்கிறார்.
அடிமையின் பெருமையை ஓர் அன்பர் எப்படி மிக அருமையாக விளக்குகிறார்
 பாருங்கள்.


"அறிந்தும் அறியாமலும், தெரிந்தும் தெரியாமலும், உணர்ந்தும் உணராமலும்

தொடர்வது வாழ்க்கை.இந்தத் தொடர்கதை இன்பம் நோக்கியது. முடிவில் இன்பம் பெறவெனமுயன்றுகொண்டேயிருப்பது.முழுதான இன்பத்தை அது ஒருபோதும் 
தொட்டதில்லை எனும்போது முற்றுப் பெறாதஇந்தத் தொடரின் முடிவுதான் என்ன?


பிறப்பெடுத்த எல்லா உயிர்க்கும் இறப்பு என்பதே முற்றுப் புள்ளியாய்த் தெரிகிறது.

பிறப்பின் பின் மரணம் என்பது எல்லோரும் அறிந்த ஒன்றுதான்.
ஆனால் எல்லோரும் அறிந்த இந்த ஒன்றில் அறியாமல் கலந்திருப்பதும்
ஒன்றுண்டு. அது மரணத்துக்குப் பின்னும் ஒரு வாழ்வுண்டு என்பது.
„மரணத்துக்குப் பின் வாழ்வாவது.. அதை அறிந்துவந்து சொன்னவர் யார்?“ எனும்
கேள்விக்கு நம்பத்தகுந்த மாதிரி பதில் சொல்லத் தெரியாமல், தெரிந்தாலும்
தெளிவுபடுத்த முடியாமல் மௌனித்துப் போகிறார்கள் எல்லோரும்.
உணர்ந்தவர்களால் மட்டுமே. இந்த உண்மையைக் கண்டுகொள்ளமுடியும்.
பிறருக்கு அதை உணர்த்தமுடியாமல் போவதற்குக் காரணங்கள் பல இருக்கலாம்.
ஆனால் உணர்வதற்குத் தன்னைத்தான் உணரத்தலைப்பட்டவருக்கு இயலும்.

தன்னைத்தான் உணர்ந்தவன் பிற உயிர்கள் அனைத்திலும் அன்பு கொள்கிறான்.
அன்பினால் பிறரை இவன் ஆளுகை செய்தபோதிலும் உண்மையில் இவன் 
தன்னையோர்அடிமையாகவே காட்டிக்கொள்கிறான்  அறிந்ததை அறியாததாய்,
 தெரிந்ததை தெரியாததாய், உணர்ந்ததைஉணராததாய் காட்டிக் கொள்ளும்
 சந்தர்ப்பங்கள் எல்லோரது வாழ்க்கையிலும்தான்வருகின்றன.
எல்லாம் எனக்குத் தெரியும்!“ என்ற இறுமாப்பு ஒருவனை வீரனாகக் காட்டலாம்.
சொல்லுங்கள் கேட்கிறேன்!“ என்று பணிவோடு நிற்பவன் அடிமைபோலத் 
தோன்றலாம்.ஆனால் உண்மை வேறானது. அடிமைக் கோலம் என்பது 
பக்தியில் மூழ்கிநிற்பவனுக்கு பரவசம் தருவது.உலக சுகங்களுக்காக
 மற்றவர்க்கு அடிமையாயிருத்தல் என்பது அவமானகரமானது.
தன்னலம் மறுத்து தன் சுகம் வெறுத்து மற்றவர் நலம் நோக்கும் உயரிய
கொள்கைகளோடு பிறருக்காய் வாழ்வதென்பது பார்வைக்கு அடிமைத்தனம் 
எனப் பெயர்கொண்டாலும் அந்த அடிமைத்தனம் உயர்வானது.அன்பினால்
 பிற உயிர்களை ஆண்டுகொண்டே அவர்க்கு அடிமையாய் சேவகம்செய்பவன்

உண்மையில் இறைவனுக்கே அடிமையாகிறான்.
 தன்னலத்துக்காக பிறரைஅடக்கியாளுகின்ற வீரத்தைவிட மற்றவர்கள் 
பணிக்கெனத் தன்னைத்தாழ்த்திக்கொண்டு, „என்கடன் பணி செய்துகிடப்பதே!“ 
என வாழும் அடிமையேஉயர்வானவன்.

அவன் இறைவனின் அடிமை.

அவனுள் இறைவன் வாழ்வதால் ஆள்பவனும் அவனே".

இவை எல்லாவற்றிற்கும் பொருத்தமானவர் திருப்புகழ் அடிமை நடராஜன் சார்
முருக பக்தியில் ஈடு படுத்தியவர்இலங்கையை சேர்ந்த பாலானந்த ஸ்வாமிகள்
அவர் கற்பித்த "..வாசிக்க ஒனாதது"என்று தொடங்கும் திருப்புகழை மந்திர
உபதேசமாக ஏற்று முருக பக்தியில்திளைத்தார். தேவார இசையிலும் தன்னை
 அர்ப்பணித்த அவர் பாபநாசம் சிவன்நடத்திய மார்கழி மாத பஜனைகளில் பல
 ஆண்டுகள் கலந்து கொண்டார்.

திருப்புகழில் திளைத்த குகஸ்ரீ ரசபதி (ரத்ன சபாபதி நாயக்கர் )மற்றும்
திருப்புகழ் சதுரர் ராமலிங்கம் பிள்ளை போன்றவர்கள்  அவர்  சிந்தனை
விசாலமாக காரண கர்த்தாக்கள்.ஆம்."யான் பெற்ற இன்பம் பெருக
இவ்வையகம்"  என்றகோட்பாடின்படி திருப்புகழின்  பொருளையும்,அதில்
பொதிந்துள்ளஉபதேசங்கள்.வாழ்க்கை முறை போன்றவைகளை மற்றவர்களுடன் 
பகிர்ந்து கொள்ளவேண்டும் என்ற பேராவலுடன் வகுப்பை சென்னையில் உள்ள 
கல்யாணிமாமிஇல்லத்தில்தொடங்கினார்.நம்திருப்புகழ்அன்பர்கள்கலந்து கொண்டு,பயின்று,மற்றவர்களுக்கும் இன்றுவரை தங்கள் குரு நாதரைப்போல் 
தொண்டாற்றிவருகிறார்கள் என்று சொல்லத்தேவையில்லை.அருளாளர்கள் 
ஐயப்பன் ,சித்ராமூர்த்தி போன்றவர்கள் குறிப்பிடத்தக்க மாணவர்கள்.

நடராஜன் சார் சாதுராம்சுவாமிகளை அடிக்கடி சந்தித்து ,உரையாடி தன்

ஐயங்களையும் போக்கி உயர்ந்த தத்துவார்த்த நிலையையும் உணர்ந்தார்.

திருப்புகழ் வரிகளைக்கொண்டே சிருங்கேரி மகா சந்நிதானம் அபிநவ
வித்யாதீர்த்த ஸ்வாமிகளைப்பற்றி "இணையில்லாத குரு"  என்ற  ஒரு நூல்
படைத்துள்ளார்.

மற்றும் "மனித வாழ்க்கைக்கு திருப்புகழ் " என்ற நூலை எழுதியதோடு
மட்டுமல்லாமல் ,பல திருப்புகழ் விழா மலர்களிலும் கட்டுரைகள்
அளித்துள்ளார்.

சென்னை வட பழனி திருப்புகழ் திருப்புகழ் சபாவில் பல ஆண்டு தலைவராக
பணியாற்றி ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15ம தேதி அருணகிரிநாதர் நினைவு
விழாதொடந்து  நடத்த காரணமானவர்.

எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தால் போல் ,மயிலை கபாலீஸ்வரர் ஆலயத்தில்
அருணகிரிநாதர் உருவச்சிலை நிறுவ காரணகர்த்தாவும் நிலைத்து
நிற்கிறார்.ஆலயத்தின் கொடிமரம் அருகே தரிசிக்கலாம்.

அண்மையில் பாம்பன் சுவாமிகளின் "குமாரஸ்துவம் " பற்றி விரிவாக
அன்பர்களுடன் வகுப்பில் பகிர்ந்து கொண்டார் அந்த நிலையில் அடுத்த
வகுப்புக்காக குறிப்புகள் எடுத்துக்கொண்டிருந்த சமயத்தில்
(12.3.2013)பெருமான் திருவடிகளை சென்றடைந்தார்.

நெஞ்சை உருக்கும் அருளாளர் ஐயப்பனின் அஞ்சலியை கேட்டு மனம்
 உருகாதவர்கள்இருக்கமாட்டார்கள்.


அவருடைய மாணாக்கர்களும் .,அன்பர்களும் அவரது நினைவு நாளை 
அவரதுஇல்லத்தில் இசை வழிபாடுடன் நினைவு கூர்கிறார்கள்.அவரது
இரண்டாம் ஆண்டுநினைவு அஞ்சலி சென்ற 15.3.15 அன்று நடை பெற்றது.

"வையத்து வாழ்வாங்கு வாழ்பவர் வானுறையும்

தெய்வத்துள் வைக்கப்படும்"

என்ற திருவள்ளுவர் கூற்றுப்படி தெய்வமாகிவிட்டதோடு மட்டும்  அல்லாமல்
நடராஜன் சார்  திருப்புகழிலும் ,அன்பர்கள் இதயத்திலும்என்றென்றும்
உறைகிறார்.

முருகா சரணம்.

Friday, 13 March 2015

                                               மயில் வகுப்பு 


                                                    
  முருகனின் மயில் பிரணவ மந்திர ரூபம்.

   ஆன தனி மந்திர ரூப நிலை கொண்டது ஆடு மயில் ..

... என்பார் அருணகிரியார் சோலைமலைத் திருப்புகழில்.
('வாதினையடர்ந்த' - பாடல் 1318).

விந்து சக்தியாகிய சகல ஒலிக்கும்/ஒளிக்கும் மூலகாரணமாகிய மஹாமாயையே மயில். மாயை அகல வேண்டும் என்றால் நாம் மயிலை போற்ற
வேண்டும். அது மாயையை நீக்கிவிடும். வினை ஓடிவிடும் கதிர் வேலால்.
மாயை நீங்கும் மயிலால்.                                    


விந்து தத்துவம்தான் மயில் உருவத்தில் தன் ஆற்றலை வெளிப்படுத்தியது, 


மயிலின் பெருமையை ,மகத்துவத்தை மயில் விருத்தங்களில் 

" இமையகிரி குமரிமகன் ஏறுநீ லக்ரீவ   ரத்னக் கலாப மயில்...,படைநிருதர் கடகம் உடை பட நடவு பச்சைப்   பசுந்தோகை வாகை மயில்,...கல்லாரகிரி உருக வரு கிரண மரகத   கலாபத்தில் இலகு மயில்....,முருகன் உமை குமரன் அறுமுகன் நடவு விகட தட   மூரிக் கலாப மயில், .....வேலும் மயிலும் துணைஎன்கிற மகாமந்திரத்தின் பொருளாகநின்று அதை ஜெபிக்கும்அடியார்களுக்குவேண்டிய வரங்களைக் கொடுக்கும் வெற்றி மயில்,.....

கொடிய நிசிசரர் உதரம் எரி புகுத விபுதர் பதி  குடி புகுத நடவு மயில்...துரக கஜ ரத கடக விகட தட நிருதர் குலதுஷ்டர் நிஷ்டூர மயில்,...வரை அசைய உரகபிலம் அசைய எண் திசை அசைய   வையாளி ஏறு மயில் "என்று பலவாறாக 
முன்னரே படித்து அனுபவித்தோம்.

ராக மாலிகையில்  அமைந்துள்ள இந்த மயில் வகுப்பு விந்து தத்துவமான மயிலின் ஆற்றலைக் கூறுவது.அதோடு பாகவதம்.ராமாயணம்,மன்மத தகனம் முதலிய புராண நிகழ்வுகளிலும் பங்குகொண்டுதன்சக்தியைவெளிப்படுத்தியது,ஆணவம்கொண்டராகு,கேது,கருடன்,பிரம்மாவின் வாகனமாக வும்,கொடியாகவும் விளங்கும் அன்னம் முதலியோரின் கொட்டத்தை அடக்கி அமைதியை நிலை நாட்டியது மற்றும் பல தத்துவ உபதேசங்களை வெளிப்படுத்தியதை அருளாளர் திருப்புகழ் அடிமை நடராசன் சார் மிக அருமையுடன் விளக்குகிறார். பார்ப்போம். 


புராணக்கதைகள் பல இடம் பெற்றிருப்பதால் விளக்கஉரைநீண்டுள்ளதுஅன்பர்கள்பொறுமையாக படித்து அனுபவிக்க  வேண்டுகிறோம்.                                                                                                    
                                      பாடல்

ஆதவனும் அம்புலியும் மாசுறவி ழுங்கியுமிழ்
    ஆலமரு வும்பணியி ரண்டும் அழுதே

ஆறுமுகன் ஐந்துமுகன் ஆனைமுகன் எங்கடவு
    ளாமெனமொ ழிந்தகல வென்று விடுமே  ...... 1

ஆர்கலிக டைந்தமுது வானவர்அ ருந்தஅருள்
    ஆதிபக வன்துயில்அ நந்தன் மணிசேர்

ஆயிரம் இருந்தலைக ளாய்விரிப ணங்குருதி
    யாகமுழு துங்குலைய வந்த றையுமே  ...... 2

வேதமுழு தும்புகல் இராமன் ஒரு தம்பிமிசை
    வீடணன் அருந்தமையன் மைந்தன் இகலாய்

வீசும்அர வஞ்சிதறி யோடவரு வெங்கலுழன்
    மேல்இடி எனும்படிமு ழங்கி விழுமே  ...... 3

மேதினிசு மந்தபெரு மாசுணம யங்கநக
    மேவுசர ணங்கொடுல கெங்கு முழுமெ  ...... 4

வேலியென எண்டிசையில் வாழும்உர கந்தளர
    வேஅழலெ னுஞ்சினமு டன்ப டருமே  ...... 5

போதினில் இருந்தகலை மாதினைம ணந்தவுயர்
    போதனை யிரந்துமலர் கொண்டு முறையே

பூசனைபு ரிந்துகொடி யாகிமகிழ் ஒன்றுதுகிர்
    போல்முடிவி ளங்கவரும் அஞ்சம் அடுமே  ......6

பூதரொடு கந்தருவர் நாதரொடு கிம்புருடர்
    பூரணக ணங்களொடு வந்து தொழவே

போரிடுவ வென்றுவெகு வாரணக ணங்களுயிர்
    போயினம் எனும்படிஎ திர்ந்து விழுமே  ...... 7

கோதகலும் ஐந்துமலர் வாளிமத னன்பொருவில்
    கோலவுட லங்கருகி வெந்து விழவே

கோபமொடு கண்டவிழி நாதர் அணி யும்பணிகள்
கூடிமனம் அஞ்சிவளை சென்று புகவே

கூவியிர வந்தம்உணர் வாழியென நின்றுபொரு
    கோழியொடு வென்றிமுறை யும்ப கருமே  ......8

கோலமுறு செந்தில்நகர் மேவுகும ரன்சரண
    கோகனதம் அன்பொடுவ ணங்கு மயிலே.  ...... 9

                                   

                              ......... பதவுரை .........  

ஆதவனும் அம்புலியும் மாசுற விழுங்கி உமிழ்


 வெயில் பரப்பும் சூரியனும் தண்மை வரிக்கும் சந்திரனும் களங்கம் அடைய வாயில் இட்டு மீண்டும் கக்கும் குணம் அடை
 ஆலமரு வும்பணியி ரண்டும் அழுதே

விடம் பொருந்திய இராகு கேது எனும் இரு பாம்பு உருவ கோள்களும் அலறி அழுது,

ஆறுமுகன் ஐந்துமுகன் ஆனைமுகன் எம் கடவுள் 

 ஆறுமுகப் பரமன், ஐம்முகச் சிவன், யானை முகக் கணபதிகள் எமது வழிபடு தெய்வங்கள்,

ஆம் என மொழிந் அகல வென்று விடுமே ..


நிச்சயமாக சொல்கிறோம் என்று கூறி வழி விலகி ஓட ,முனைப்பு அகல வென்று ,அவர்கட்கு உயிர் பிச்சை தரும்.

இராகு கேது வரலாறு:

விமல காசிபர் மகன் விப்ர சித்தி. அவன் சிமிக்கை என்பாளை மணந்து இராகு, கேது எனும் இருவரைப் பெற்றனர். திருமால் மோகினி உருவம் கொண்டு அமரர்க்கு அமுது பகிர்தளித்த காலத்தில் இராகு தேவ உருவம் கொண்டு சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே அமர்ந்து புத்தமிர்தம் வாங்கிப் புசித்தனர். மேலோர் உண்பதற்கு முன் உண்ணலும் உண்பதற்கு முன் கொள் அனுட்டானங்கள் இன்மையும் அசுர சாயலை உடைய இராகுவை சந்திர சூரியர் கண்டு திருமாலுக்கு அதை சமிக்கையால் உணர்த்தினர். உடனே அப்பெருமான் சட்டுவத்தால் அடித்து ராகுவின் தலையை நிலத்தில் தள்ளினார். 

அமுதுண்டு இறவாத தன்மை எய்திய அத்தலை இராகு எனவும், உடல் கேது எனவும் பெயர் பெற்றனர். உடன் பிறந்தவன் பெயர் கேது. அதே பெயர் தலையுடன் ஒன்றிப் பிறந்த கேதுவுக்கும் உரியதாயிற்று.

அதன் பின் இராகுவும் கேதுவும் பெரும் தவம் செய்து திருமால் அருளால் கரும்பாம்பு - செம்பாம்பு உருவாயினர். தம்மைக் காட்டித் தந்த காரணத்தால் மகத்தான பகை கொண்டு சந்திர சூரியர் ஆட்சியை மறைப்பதுவே தொழிலாகக் கொண்டனர். சாயாக் கிரகங்களான இவர்களது தொல்லை தாங்காத சந்திர சூரியர் அவர்கள் தம்மை பிடிக்க வரும் காலத்தில் சண்முக நாமம் ஜெபிக்கின்றனர்.

 ஜெபத்தின் முடிவில் விந்துத் தத்துவம் மயில் உருவமாக  வெளிப்படுகிறதுஅதைக் கண்டதும் பல்லில் விஷமுடைய பாம்புகட்கு அச்சம் மனதில் அதிகரிக்கின்றது. உடனே, ஆறுமுகச் சிவனார் என் தெய்வம், ஐந்துமுகச் சிவனார் எம் இறைவர், கணபதி எம் கடவுள், வாய்மையே எங்கள் வார்த்தை - என வினயமோடு விளம்பி ஒதுங்கிச் செல்ல, அவைகட்கு உயிர் பிச்சை அளித்து வாகை மாலை சூடும் மயில் என்றபடி.

ஆறுமுகன் சடாக்சரன், ஐந்து முகன் பஞ்சாட்சரன், ஆனைமுகன் ஏகாட்சரன் என்க. அதன்படி சூரிய சந்திர கிரண காலங்களில் ஷடாச்சர, பஞ்சாட்சர, ஏகாட்சர ஜெபம் செய்தால் கிரகண பீடை நீங்கும்

                          ......... பதவுரை .........  

ஆர்கலி கடைந்து அமுது வானவர் அருந்த அருள் 

. நிறைந்த பாற்கடலைக் கடைந்து அமரர் அமுது உண்ண உதவிய


ஆதி பகவன் துயில் அநந்தன் மணி சேர் ...

திருமால் துயில் கொள்ளும் படுக்கையான ஆதிஷேடனின் மாணிக்கங்கள் உடைய


ஆயிரம் இரும் தலைகளாய் விரி பணங்குருதி ஆக ...
 வன்மை உள்ள 1000 தலைகளில் இருந்து மலரும் 1000 படங்களும் குருதி குளம்பு மயமாக

முழுதும் குலைய வந்து அறையுமே
 ..
 அப்பாம்பின் உடல் முழுதும் நெறிய வந்து மோதும்.

ஆயுள் நீட்டிக்க உதவுவது அமுதம். கடல் கடைந்து அதை அமரருக்கு அருளியவர் ஆதிமூலர். அப்பெருமானது அயர்வு அகற்றி அரி துயில் கொள்ள அவருக்கு தனது உடலை உதவுகிறான் ஆதிசேடன்.அது மட்டுமல்லாமல்

  - நடந்தால் குடையாக , அமர்ந்தால் சிங்காசனமாக , நின்றால் திருவடியாக  நீள் கடவுள் என்றும் புனையான், மணிவிளக்கான் பூம்பட்டான், புங்கும் அணையான் திருமாலுக்கு அரவு - என்று பொய்கையார் கூறும்

புனிதத் திருப்பணி அளவிலாது செய்தலின் ஆதிசேடன் அநந்தன் எனும் பெயர் எய்தினான். இத்துடன் பூமியைத் தாங்கும் புனித நலமும் பெற்றான். இதனால் உலகம் அவனை உவந்து புகழ்ந்தது. முதிர்ந்த புகழ்ச்சி கர்வத்தை அளித்தது. அந்த முனைப்பு அகில தலத்தையும் அமைதி இன்றி கலங்கச்செய்தது  

அந்நிலையில் அமைதியைவிளைவிக்க விந்துதத்துவமயில் பாம்பின் உடல் முழுவதும் நெறிய வந்து மோதியது 

                        ......... பதவுரை .........  

வேதம் முழுதும் புகல் இராமன் ஒரு தம்பி மிசை


... எல்லா வேதங்களும் துதிக்க இராமபிரானின் ஒப்பற்ற தம்பியாகிய இலட்சுமணன் மேல்

வீடணன் அரும் தமையன் மைந்தன் இகலாய் ..


அருமையான விபீடணனின் தமையனாகிய இராவணனது மகனாகிய இந்திரஜித்து பகை மிகுந்து

வீசும்அரவம்சிதறிஓடவருவெம்கலுழன்மேல்


.. விட்ட நாக கணை சிதறுண்டு ஓடி ஒழிய உவந்து வந்த உக்ரமான கருடன் மேல்

இடி எனும்படிமு ழங்கி விழுமே


... இடி என்று சொல்லும்படி பெரும் முழுக்கம் செய்து மேல் வந்து மோதும்

(இராமன் தம்பி மேல் விபீடணன் அண்ணன் மகன் அரவாஸ்திரம் விட்டான். அதனால் இராமன் முதல் அனைவரும் அளவிலா கவலை அடைந்தனர். இதை அறிந்த விண்ணவர் வேண்ட வெளியேறினான் கருடன். அவன் வருகையைக் கண்டதும் பாம்பு அஸ்திரம் அச்சம் மிகுந்து இருந்த இடம் தெரியாதபடி ஓடி ஒளிந்தது. அதன் பின் லட்சுமணன் உயிரப்புடன் எழுந்தான், இராமனாதியர் மகிழ்ந்தனர். பல்லாண்டு இமையவர் பாடினர். இந்நிலையை நினைத்து கர்வமடைந்தான் கருடன். இந்த கர்வம் உலகம் அனைத்திற்கும் துன்பத்தை தந்தது. கதறியது உலகம். குறிப்பறிந்த பிரணவம்  மயிலாகி வந்தது. கர்ஜித்து மோதியது. கருடனை அவ்வளவில் செருக்கை அடக்கியது. திருந்தினான் கருடன். உய்ந்தது உலகம்

             ......... பதவுரை .........  

மேதினி சுமந்த பெரு மாசுணம் மயங்க 

... 
உலகைத் தாங்கிய பெரிய பாம்பான ஆதிசேடனுடைய அறிவு நிலை குலைய

நக மேவு சரணம் கொடு உலகெங்கும் உழுமெ


நகங்களை உடைய பாதங்களைக் கொண்டு உலகம் முழுவதையும் கிளறி உழுதலைச் செய்யும்.

(வனைந்த உலகங்கள் அனைத்தையும் காக்க வலம் வருகின்றது மயில். அதன் பாதங்களில் உள்ள வலிமையான நகங்கள் நிலத்தை ஏர் போல் உழுகின்றன. அந்த அதிர்ச்சியால் ஆதி சேடனின் தலைகள் அதிர்கின்றன என்றும் உயிர்கள் நிலத்தில் வித்து இட்டு விளைவு மிக வழி செய்கின்றது .


                                ......... பதவுரை .........  

வேலி என எண் திசையில் வாழும் உரகம் தளரவே 


உலகிற்கு இட்ட வேலி போல் எண் திசையிலும் வாழ்கின்ற எட்டு நாகங்களும் உடலும் உள்ளமும் பெரும் தளர்ச்சி அடையும்படி,

 அழல் எனும் சினமுடன் படருமே


 மூங்கிலில் எழும் காட்டுத் தீ என  எண்ணும்படியான கோபக் கொதிப்புடன் பவனி வரும்.

( "எண்திசைகளைவரைஅறுத்தோம்நாம்...தாங்குகின்றோம் நாம், இல்லாவிட்டால் உலகம் நிலை குலையும்"... என்ற பாம்புகளின் செருக்கை (கர்வம்)அடக்கிய செய்தி இது).

                      ......... பதவுரை .........  

போதினில் இருந்த கலை மாதினை மணந்த


 ... வெண் கமலத்தில் வீற்றிருந்த கலை மகளை மணந்து கொண்ட,


போதனை யிரந்துமலர் கொண்டு முறையே


உயர்ந்த புத்தியுள்ள பிரமனைக் குறை இரந்து (சொல்லி)மலர் 

பூசனைபு ரிந்துகொடி யாகிமகிழ் ஒன்று
மலர் பறித்து விதிப்படி அர்ச்சித்து வழிபட்டு அதன் பயனாக அப்பிரமனுக்குக் கொடியாக விளங்கி, மகிழ்ச்சி பொருந்தும்

துகிர் போல் முடி விளங்க வரும் அஞ்சம் அடுமே

பவளம் போல் உச்சிக் கொண்டை விளங்க வெளி வருகின்ற அன்னத்தைத் தண்டிக்கும்.

உலகத்தையே  படைக்கும் பிரம்மாவுக்கே வாகனமாகவும் ,கொடியும் ஆனேன் எனும் செருக்கு மிகுந்து  "நீ எனக்கு எம்மாத்திரம்"என்று எதிர்த்த அன்னத்தை, நம் மயில் சத்திய லோகம் வரை சென்று தண்டித்தது.

                              ......... பதவுரை .........  

பூதரொடு கந்தருவர் நாதரொடு கிம்புருடர்

பூத கணங்களுடன் கந்தர்வர்கள் நவநாத சித்தர்கள் கிம்புருடர்கள்
பூரண கணங்களொடு வந்து தொழவே

பதிணென் கணங்களுடன் வந்து வணங்க
போரிடுவ என்று வெகு வாரண கணங்கள்

அவர்களிடம் போர் செய்து தடை விளைவிப்பம் என்று கருதி அளவிலா யானைகள்

உயிர்போயினம் எனும்படி எதிர்ந்து விழுமே

உயிர்ப்பு ஒழிந்தோம் என பிளிறும்படி அவைகளை எதிர்த்த மோதும்.
(வாழ வல்ல கந்தர்வர் இசை வழிபாட்டில் பூத கணத்தவர்கள் கலந்து கொள்வர். பதநாதம், அபரநாதம், பரஅபரநாதம் எனும் மூன்று நாதங்களிலும் லயித்திடுவார்கள் நவ நாதர்கள். அவர்களுடன் மனித முகமும் கொண்ட கிம்புருடர்கள் எப்போதும் நயந்து நிற்பர். பின் நின்றவர் பதிணென் வகை தேவஜாதியர். இவர்களைவரிசைப்படஇந்தஅடிநினைவுறுத்தும் அழகை உணர்க.

அமல முருகனை இவர்கள் வழிபட ஆரம்பிக்கும் போதெல்லாம் ஐம்புலக்களிறுகளின் எதிர்ப்பை எழுப்பி வழிபடுதலைத் தடை படுத்தும்

.
அச்சமயம் நோக்கி விந்துத் தத்துவமான மயில் வெளியாகும். வீரிடும்படி புலக்களிறுகளை மோதி பக்தர்களைக் காக்கும்                                                                 ......... பதவுரை .........  

கோதகலும் ஐந்துமலர் வாளி மதனன்பொருவில்


... குற்றம் அகன்ற ஐந்து மலர்களை உடைய மன்மதனது நிகரற்ற
கோல உடலம் கருகி வெந்து விழவே

அழகிய உடல் வெந்த தீய்ந்து போகும் வண்ணம்,
கோபமொடு கண்டவிழி நாதர் அணியும் பணிகள்(பாம்புகள் )

உக்ர நோக்கம் செய்த அருள் நாத வடிவினரான சிவனார் அணிந்துள்ள ஆபரணங்கள் ஆகிய பாம்புகள்
கூடி மனம் அஞ்சி வளை சென்று புகவே

ஒருங்கு சேர்ந்து உள்ளம் பயந்து வளையில் ஓடி ஒளியும்படி
கூவி இரவு அந்தம் உணர் வாழி என நின்று

கொக்கரக்கோ எனும் பெரும் குரல் எழுப்பி கூவி இரவின் முடிவை உணர்த்தி உயிர்கள் அதனால் வாழ்க என் கூறி நிமிர்ந்து நின்று
பொரு கோழியொடு வென்றி முறையும் பகருமே

 அறியாமையை மோதும் சேவலுடன் தனது வெற்றி முறைகளை விரிவாக எடுத்துச் சொல்லும்.

ஆணவ இருள் விலகும் காலம் அண்மையில்  உள்ளது. அகக் கண் திறந்து சிவ சூரியனை தரிசிக்க சித்தமாய் இருங்கள். வாழும் வழி இது என்று சேவலான நாதத் தத்துவம் செய்தி உரைத்து ஆசியும் செய்கிறது.

அதே சமயத்தில் வித்தக ஞான விமல சூரியனை இதோ கொணர்கிறேன் நான் என்று விந்துத் தத்துவமான மயில் தன் வெற்றி விருதையும் நினைவுறுத்துகிறது என்பது இங்கு போந்த பொருள்.

குற்றமற்ற மலர்களைக் கொடுங் கணைகளாக்கி தன்னைக் கோலம் செய்வதிலேயே நோக்குடைய மாமதம் பிடித்த மன்மதன் பலம் சாம்பலாகும்படி உறுத்து நோக்கியது யோக சிவம். அதன் பின் திருமேனி அணிகளான பாம்புகள், சேவல் குரல் கேட்டு ஓடி வலையில் ஒளிந்தன

பாம்பு உருவ குண்டலிகள் அருள் நாதம் எழும் சமயம் அஞ்சி இடம் விட்டு அகலும் என்ற குறிப்பை நினைவு  கூறலாம்.

                    ......... பதவுரை .........  

கோலமுறு செந்தில் நகர் மேவு குமரன்


 அழகிய திருச்செந்தூரில் விரும்பி எழுந்தருளிய குமரப்பரமேஸ்வருடைய


சரண கோகனதம் அன்பொடு வணங்கு மயிலே


திருவடித் தாமரைகளை அன்புடன் வணங்கும் மயிலே.

மயிலேறும் குமரன் மலரடிக்கே அடைக்கலம்.


                      திரு நடனம் புரியும் மயில்.

இவ்வளவு ஆற்றலும் ,வலிமையையும் வாய்ந்த மயில் சங்கீதத்திலும் ,நடனத்திலும் குறைந்ததா என்ன?


சங்கீதத்திற்கு ஆதாரமான, 'சட்ஜம்', 'ரிஷபம்', 'காந்தாரம்', 'மத்யமம்','பஞ்சமம்', 'தைவதம்' எனப்படும் ஆறு சுரங்களும் முருகப்பெருமானின்
ஆறுதிருமுகங்களிலிருந்துதோன்றியவைகளாகும். 

ஏழாவது சுரமாகிய'நிஷாதம்' முருகப் பெருமானின் வாகனமாகிய மயிலிலிருந்து தோன்றியது.

சமீபத்தில் திருவனந்தபுரத்தில் நடந்த வழிபாட்டில் அன்பர்களின் பாடலுக்கு ஏற்ப மயில் திரு நடனம் புரிந்ததாக செய்திகள் வந்துள்ளன.

இப்போது ஆடும் பரியாகிய மயிலின் திரு நடனத்தை குருஜி இசைக்கும் மயில் வகுப்பு பாடலுடன் ரசிப்போம்.
உதவி..அருளாளர் ஐயப்பன் 

மற்ற வகுப்புக்கள் தொடரும் 

முருகா சரணம்.Wednesday, 11 March 2015                                     கடைக் கண் இ யல் வகுப்பு 

இவ்வகுப்பு முருகக் கடவுளின் கடைக்கண் நோக்கின் பெருமையை யும் ,மகத்துவத்தையும் விளக்கும் வகுப்பு, மற்றும்    உலகோரை முருகனிடத்தில் ஆற்றுப்படுத்தி உய்யும் வழியை உபதேசிக்கும் கருணை வகுப்பு

அபிராமபட்டர் அன்னை அபிராமி அம்மையின் கடைக்கண்கள் அடியார்கள் மீது பட்டால் அவர்கள் அடையும் மென்மையான பயன்களை  இப்பாடலில் விளக்கியுள்ளார்.

"தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வு 

அறியாமனம் தரும் தெய்வ வடிவும் தரும் 

நெஞ்சில் வஞ்சம் இல்லாஇனம் தரும் நல்லன 

எல்லாம் தரும் அன்பர்என்பவர்க்கேகனம் தரும் 

பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே"


பாபநாசம சிவன் ஒரு  பாடலில்


"அம்பா மனம் கனிந்துனது கடைக்கண் பார்

திருவடி இணை துணையென் (அம்பா)"


இவ்வாறுபலமகான்களும்அடியார்களும்தெய்வத்தின்கடைக்கண் பார்வைக்குஏங்குகிறார்கள்.
இன்றும் காத்திருக்கின்றனர்.

அருணகிரியார் திருப்புகழ் பாடல்களில் மயிலையும், அயிலையும் கடைக்கண் இயலையும் பாடிப் பாடி தான் பெற்ற பேரின்பத்தை உலகோரனைவரும் அடையவேண்டும் என்ற உயர்ந்த கருணை நோக்கத்துடன் இவ்வகுப்பைப் பாடியுள்ளார். ஆதலால் நம்மை ஆற்றுப்படுத்தும் இவ்வகுப்பை ஒரு திருமுருகாற்றுப்படையாக கருதலாம்

அருணகிரியார் தனக்கு பார்வை தீட்சை கிடைத்ததை பல திருப்புகழ் பாடல்களில் குறிப்பிட்டிருக்கிறார்.

ஒளி தழைந்த நயனமும் இருமலர் சரணமும் மறவேனே
 குரம்பை மலசலம்  - பழநி திருப்புகழ்

   பரகதி பெற்றிட நோக்கிய பார்வையும் மறவேனே
 சதுரத்தரை நோக்கிய  - திருவேட்களம் திருப்புகழ்.

                                 பாடல் 

அலைகடல் வளைந்து டுத்த எழுபுவி புரந்தி ருக்கும்
    அரசென நிரந்த ரிக்க வாழலாம்  ...... 1

அளகைஅர சன்த னக்கும் அமரரர சன்த னக்கும்
    அரசென அறஞ்செ லுத்தி யாளலாம்  ...... 2

அடைபெறுவ தென்று முத்தி யதிமதுர செந்த மிழ்க்கும்
    அருள்பெற நினைந்து சித்தி யாகலாம்  ...... 3

அதிரவரும் என்று முட்ட அலகில்வினை சண்டை நிற்க
    அடல்எதிர் புரிந்து வெற்றி யாகலாம்  ...... 4

இலகிய நலஞ்செய் புட்ப கமுமுடல் நிறம் வெளுத்த
    இபஅர செனும்பொ ருப்பும் ஏறலாம்  ...... 5

இருவரவர் நின்றி டத்தும் எவர்எவர் இருந்தி டத்தும்
    ஒருவன்இவன் என்று ணர்ச்சி கூடலாம்  ...... 6

எமபடர் தொடர்ந்த ழைக்கில் அவருடன் எதிர்ந்துள் உட்க
    இடிஎன முழங்கி வெற்றி பேசலாம்  ...... 7

இவையொழிய வும்ப லிப்ப தகலவிடும் உங்கள் வித்தை
    யினையினி விடும்பெ ருத்த பாருளீர்;  ...... 8

முலையிடை கிடந்தி ளைப்ப மொகுமொகென வண்டி ரைப்ப
    முகையவிழ் கடம்ப டுத்த தாரினான்  ...... 9

முதலிபெரி யம்ப லத்துள் வரையசல மண்ட பத்துள்
    முநிவர்தொழ அன்று நிர்த்தம் ஆடினான்  ...... 10

முனைதொறு முழங்கி யொற்றி முகிலென இரங்க வெற்றி
    முறைநெறி பறந்து விட்ட கோழியான்  ...... 11

முதியவுணர் அன்றுபட்ட முதியகுடர் நன்று சுற்று
    முதுகழுகு பந்தர் இட்ட வேலினான்  ...... 12

மலைமருவு பைம்பு னத்தி வளருமிரு குன்ற மொத்தி
    வலிகுடி புகுந்தி ருக்கு மார்பினான்  ...... 13

மழலைகள் விளம்பி மொய்த்த அறுவர்முலை யுண்டு முற்றும்
    வடிவுடன் வளர்ந்தி ருக்கும் வாழ்வினான்  ...... 14

மலையிறை மடந்தை பெற்ற ஒருமதலை யென்று தித்து
    மலையிடிய வுந்து ணித்த தோளினான்  ...... 15

மயிலையும் அவன்தி ருக்கை அயிலையும் அவன் கடைக்கண்
    இயலையு நினைந்தி ருக்க வாருமே.  ...... 16

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -  
                                      பதவுரை 
அலைகடல் வளைந்து உடுத்த எழுபுவி புரந்திருக்கும் அரசென நிரந்தரிக்க வாழலாம்  ...... 1

                          ......... பதவுரை .........  

அலை வீசும் கடலால் சூழப்பட்டு ஆடை அணிந்தது போல் திகழும் ஏழு உலகங்களையும் காத்து ரட்சிக்கும் சக்ரவர்த்தி என்று எவரும் புகழும்படி முடிவில்லாத காலம் வரை நீங்கள் வாழமுடியும்,


அளகை அரசன் தனக்கும் அமரர் அரசன் தனக்கும் அரசென அறம் செலுத்தி ஆளலாம்  .....2

                          ......... பதவுரை .........  

அளகாபுரியின் தலைவன் பெரும் செல்வந்தனான குபேரனுக்கும் தேவராஜனான இந்திரனுக்கும் நீயே அரசன் எனும்படி தருமவழியில் நாட்டை ஆளலாம்,


அடைபெறுவது என்று முத்தி அதிமதுர செந்தமிழ்க்கும் அருள் பெற நினைந்து சித்தி ஆகலாம்..... 3

                        ....... பதவுரை .........  

மோட்சமே அடையத்தக்க இலட்சியம் என்று உணர்ந்து (அதைப் பெறுவதே ஒரு சிறந்த வழி என) முத்தி முதல்வனின் அருள் பெறுவதே எனக்கருதி முத்தமிழ் விநோதப் பெருமாள் முருகன் முத்தமிழால் வைதாரையும் அங்கு வாழ வைப்பவன் ஆதலின் மிக இனிய செந்தமிழ் ஞானம் பெற அவனது அருளையே நாடி எண்ணிய எண்ணம் கை கூடப் பெறலாம் (கனத்த செந்தமிழால் நினையே நினைக்கவும் தருவாய் உனது ஆரருள்)


அதிரவரும் என்று முட்ட அலகில் வினை சண்டை நிற்க அடல் எதிர் புரிந்து வெற்றி ஆகலாம்  ...... 4

                         ......... பதவுரை .........  

பகைவர்கள், மனம் அச்சத்தால் நடுங்கும்படி, எதிர்த்து தாக்க வரும் அளவற்ற தந்திர உபாயங்களுடன் போர் புரிய வந்தாலும் அவர்களை எதிர்த்து சண்டை போட்டு ஜெயம் அடையலாம்,


இலகிய நலம் செய் புட்பகமும் உடல் நிறம் வெளுத்த இப அரசு எனும் பொருப்பும் ஏறலாம்  5

                             ......... பதவுரை .........  

எல்லா நலங்களும் திகழும் குபேரனின் ரதமான 1000 கோடி மணிகள் கட்டப்பட்ட புஷ்ப விமானத்திலும் வெண்ணிறமுடைய வாரண ராஜனான ஐராவதத்திலும் சுகமாக ஏறலாம், (மயில் வகுப்பை பாராயணம் செய்வதாலும் இப்பேறுகள் கிடைக்கும் - ஐராவதம் ஏறப்பெறுவர்).


இருவரவர் நின்றிடத்தும் எவர் எவர் இருந்திடத்தும் ஒருவன் இவன் என்று உணர்ச்சி கூடலாம்  ...... 6

                   ......... பதவுரை .........  

இரண்டே பேர்கள் கூடி இருக்கும் இடத்திலும் பலர் இருக்கும் சபையாக இருந்தாலும் இதோ இங்கு இருப்பவன் ஒப்பற்ற ஞானி என பார்ப்பவர்கள் எல்லாரும் கூறும்படி ஞான அறிவு வாய்க்கப் பெறலாம்.

(இக்குறிப்பை திருப்புகழிலும் காணலாம்.

   தத்துவந்தரந்தெரி தலைவனென
   தக்கறஞ்செயுங்குண புருஷனென
   பொற் பதந்தருஞ் சனனம்பெறாதோ?

 தலை வலையத்து  - காஞ்சீபுரம்;

   உனைப்புகழும் எனைப் புவியில் ஒருத்தனாம் வகை திரு அருளாலே

 கருப்புவிலில்  - பழநி).

எமபடர் தொடர்ந்து அழைக்கில் அவருடன் எதிர்ந்து உள் உட்க இடி என முழங்கி வெற்றி பேசலாம்  ...... 7

                     ......... பதவுரை .........  

எமராஜனின் தூதுவர்கள் என்னைப் பின் தொடர்ந்து என்னை எமபுரத்திற்கு வா என கூப்பிட்டால் அஞ்சாமல் அவர்களை எதிர்த்து அவர்களின் நெஞ்சு அச்சத்தால் நடுங்கும்படி இடி முழக்கம் போன்ற பெருத்த குரலுடன் அவர்கள் பயந்து ஓட வெற்றியைக் கூவி சவால் விடலாம்,


இவை ஒழியவும் பலிப்பது அகல விடும் உங்கள் வித்தையினை இனி விடும் பெருத்த பாருளீர்  ..8

                                 ......... பதவுரை .........  

மேற்சொன்ன வரங்கள் மட்டுமல்ல. உலகினில் பிறந்து வளர்வதாகிய சங்கிலியை நீக்கி விடும் (இறைவனின் கடைக்கண் பார்வையினால் பலிப்பது நீங்கி விடும் - கருவந்து விழ கடைகண்ணீந்து), நீங்கள் கற்றுக் கொண்ட உலக இயல் கலைகளை இனி விட்டு விடுங்கள் (உலக கலைகள் துக்கத்திற்குக் காரணமாகிய பிறவியை ஒழிக்காது). இறைவனின் அருள் பிரசாதமே அதைச் செய்யும்.

   (சிவ கலை அலது இனி
    உலக கலைகளும் அலம் அலம்

-  குருதி கிருமிகள்  - வயலூர் திருப்புகழ்)

பரந்த இப்பூமியில் வாழ்பவர்களே,

(மயிலையும் அவன் திருக்கை அயிலையும் அவன் கடைக்கண் இயலையு நினைந்திருக்க வாருமே  ...... 16

                       ......... பதவுரை .........  

மயிலையும் அவன் திருக்கையில் விளங்கும் வேலையும் முருகன் கடைக்கண் இயலையும் தியானிக்க வருவீர்களாக)


முலை இடை கிடந்து இளைப்ப மொகுமொகு என வண்டு இரைப்ப முகை அவிழ் கடம்பு அடுத்த தாரினான்  ...... 9

                        ......... பதவுரை .........  

முருகப் பெருமான் வள்ளிப்பிராட்டியை இருகத் தழுவுவதால் அவர் மார்பில் இருந்த கடப்ப மாலை அம்மையின் முலை பாரத்தால் நசுக்கப்பட்டன, அம்மாலையில் மொய்த்திருந்த வண்டுகள் ஒலி செய்து கொண்டு ஓட, மெட்டுக்கள் மலரும்படி கடப்ப மாலையை புனைந்தவன்,


முதலி பெரிய அம்பலத்துள் வரை அசல மண்டபத்துள் முநிவர் தொழ அன்று நிர்த்தம் ஆடினான்  ...... 10

                        ......... பதவுரை .........  

முழுமுதல் பொருளாம் நடராஜப் பெருமானின் நடன சபையாகிய பெரிய அரங்கில் மலை போன்ற கம்பீரமான கனக சபையில் பதஞ்சலியும் வியாக்ர பாதரும் வணங்கும்படி அன்று நடன தரிசனம் கொடுத்தான்:

அரிதுயில் சயன வியாள மூர்த்தனும்
    மணி திகழ் மிகு புலியூர் வியாக்ரனும்
        அரிதென முறை முறை ஆடல் காட்டிய ...... பெருமாளே.

...  மகரமொடுறு குழை  - சிதம்பரம் திருப்புகழ்).


முனைதொறு முழங்கி ஒற்றி முகிலென இரங்க வெற்றி முறை நெறி பறந்து விட்ட கோழியான்...... 11

                        ......... பதவுரை .........  

போர் முனைதோறும் போரொலி எழுப்பி தாக்கி மேகத்தின் இடி ஒலி போல் கர்ஜனையுடன் மோதி யுத்த வழிமுறைப்படி பறந்து சண்டை போடும் கோழியைக் கொடியாகக் கொண்டவன்,


முதிய அவுணர் அன்று பட்ட முதிய குடர் நன்று சுற்று முது கழுகு பந்தர் இட்ட வேலினான்  ...... 12

                         ......... பதவுரை .........  

மிகுந்த காலம் வாழ்ந்தவர்களாகிய அசுரர்களின் சமர் புரிந்த அந்த நாளில் அடிபட்டு வெளி வந்த முற்றி குடல்களை நன்றாக கழுத்து மாலைகளாக சுற்றி இருப்பதால் வயதான கழுகுகள் (அம் மாமிசம் உண்ண விரும்பி) பந்தல் போட்டது போல் மேலே சுற்றி இருக்கும் வேலாயுதத்தை உடையவனும்,


மலைமருவு பைம்புனத்தி வளரும் இரு குன்றம் ஒத்தி வலி குடி புகுந்திருக்கு மார்பினான்  ...... 13
    
                              ......... பதவுரை .........  

வள்ளி மலையில் பசுமையான தினைப்புனத்தை காத்திருந்த வள்ளியின் இரு மலை போன்ற கொங்கைகள் தாக்கினதால் வலிக்கின்ற மார்பை உடையவனும்,


மழலைகள் விளம்பி மொய்த்த அறுவர் முலை உண்டு முற்றும் வடிவுடன் வளர்ந்திருக்கும் வாழ்வினான்  ...... 14

                        ......... பதவுரை .........  

மழலைச் சொற்கள் பேசிக் கொண்டு தன்னைச் சுற்றி இருக்கும் கார்த்திகை மாதர்கள் அறுவரின் (தாரா கணமெனும் தாய்மார் அறுவர் தரு முலைப்பால் உண்ட பாலன்) உடல் அங்கங்கள் ஒவ்வொன்றும் முழு அழகுடன் வளர்ந்திருக்கும் வாழ்வை உடையவனும்,


மலை இறை மடந்தை பெற்ற ஒரு மதலை என்று உதித்து மலை இடியவும் துணித்த தோளினான்....15

                    ......... பதவுரை .........  

இமவான் மகள் பார்வதியின் ஒப்பற்ற குழந்தை என தோன்றி இருந்தாலும் ஒரு மலையைத் தூளாக்கிய புயங்கள் கொண்டவனும் (ஆன ஆறுமுகப் பெருமானின்

மயிலையும் அவன் திருக்கை அயிலையும் அவன் கடைக்கண் இயலையு நினைந்திருக்க வாருமே  ...... 16

                       ......... பதவுரை .........  

மயில் வாகனத்தையும் திருக்கரத்தில் உள்ள வேலாயுதத்தையும் அவன் கடைக்கண்களில் பெருகும் கருணை பெரும் தன்மைகளையும் தியானிக்க வருவீர்களாக.

குருஜியின் விருத்தத்துடன் பாடலைக் கேட்போம் 

 மற்ற வகுப்புக்கள் தொடரும் 


முருகா சரணம்