Friday, 6 March 2015

புய வகுப்பு  தொடர்ச்சி- பூர்வி கல்யாணி ராகம் 
                               பாடல் பகுதி 

இசைதனில் இனிய கயிசிகை கவுட வராளித
னாசி தேசி பயிரவி குச்சரி
பஞ்சு ரந்தெ ரிந்து வீணைக் கிசைந்தன  ...... 17

இறுதியில் உதய ரவிகண நிகரென ஆறிரு
காது தோயும் இலகும ணிக்கன
விம்ப குண்ட லங்கள் மேவிப் புரண்டன  ...... 18

எதிர்படு நெடிய தருஅடு பெரிய கடாம்உமிழ்
நாக மேகம் இடிபட மற்பொரு
திண்சி லம்ப டங்க மோதிப் பிடுங்கின  ...... 19

எழுதரும் அழகு நிறமலி திறல்இசை யாகஉ
தார தீரம் என உரை பெற்றஅ
டங்க லுஞ்சி றந்து சாலத் ததும்பின  ...... 20

இருள்பொரு கிரண இரணிய வடகுல பாரிய
மேரு சாதி இனமென ஒத்துல
கங்கள் எங்க ணும்ப்ர காசித்து நின்றன  ...... 21

இயன்முநி பரவ ஒருவிசை அருவரை யூடதி
பார கோர இவுளிமு கத்தவள்
கொங்கை கொண்ட சண்ட மார்பைப் பிளந்தன22 

இபரத துரக நிசிசரர் கெடஒரு சூரனை
மார்பு பீறி அவனுதி ரப்புனல்
செங்க ளந்து ளங்கி ஆடிச் சிவந்தன  ...... 23

எவையெவை கருதில் அவையவை தருகொடை
யால்மணி மேக ராசி சுரபிய வற்றொடு
சங்க கஞ்ச பஞ்ச சாலத்தை வென்றன  ...... 24


அருளாளர் திருப்புகழ் அடிமை நடராஜன் சாரின் விளக்க உரையை பார்ப்போம்.

இறை பணியாக வெளியிட்டுள்ள கௌமாரம் இணைய தளத்துக்கு நன்றிகள் பல 


இசைதனில் இனிய கயிசிகை கவுட வராளித
னாசி தேசி பயிரவி குச்சரி
பஞ்சு ரந்தெ ரிந்து வீணைக் கிசைந்தன  ...... 17


........                     . பதவுரை .........  

இராகங்களில் இனிமையான கைசிகை முதலிய ராகங்களின் இலக்கணத்தை அறிந்து கொண்டு அவற்றை வீணையில் அமைத்து மீட்டுவன (முருகனின் வாகைப் புயங்களே).

முருகன் பல ராகங்களில் பிரியம் கொண்டவர் - ராக விநோதன்

சிவபிரானும் வீணை வாசிப்பார் - விடமுண்ட கண்டன் நல்ல வீணை தடவி

அது போல் முருகனும் தணிகை மலையில் பல வாத்தியங்களை வாசித்து விளையாடுவார் என்பதை கந்த புராணம்,

காடு இயம்பியும் வேய்குழல் ஊதியும் குழலால் நீடு தந்திரி இயக்கியும் -

மேலும் அருணகிரியார் தனது படைப்புகளில் ராகங்களைப் பற்றி கூறுகையில்,

இதத்த கயிசிகம் - பொருகளத் தலகை வகுப்பு
கவுட பயிரவி - பூத வேதாள வகுப்பு
காலம் மாறாத வராளி - பூத வேதாள வகுப்பு
தனாசி தேசி - பூத வேதாள வகுப்பு
சாதாரி தேசி நாதநாமக்ரியா பாதாளமாதி - திருப்புகழ்
குச்சரி டெக்கம்படி மாடி

... என்பார்.

இறுதியில் உதய ரவிகண நிகரென ஆறிரு
காது தோயும் இலகும ணிக்கன
விம்ப குண்ட லங்கள் மேவிப் புரண்டன  ...... 18


.......                    .. பதவுரை .........  

எல்லையற்ற ஒளி வீசும் உதய சூரியனுக்கு ஒப்பான 12 காதுகளில் நிலை பெற்று விளங்கும் ரத்ன பொன் மயமான பிரகாசிக்கும் குண்டலங்கள் பொருந்தப் பெற்று விளங்கின -

(முருகனின் வாகைப் புயங்களே).

(மின் குலவு நவ ரத்ன மகர குண்டலம் ஆட)

எதிர்படு நெடிய தருஅடு பெரிய கடாம்உமிழ்
நாக மேகம் இடிபட மற்பொரு
திண்சி லம்ப டங்க மோதிப் பிடுங்கின  ...... 19


.........                   பதவுரை .........  

எதிரே தென்படும் நீண்ட மரங்களை அழிப்பனவாய் அபரிவிதமான மத நீரை வெளிப்படுத்துகின்ற அஷ்ட திக்கு யானைகள் இடி மேகங்கள் போல் ஒன்றோடு ஒன்று மோதி பேரொலி செய்ய மற்போர் செய்வித்து வலிமையான அஷ்ட கிரிகளையும் தாக்கி பிடுங்கி எறிய வல்லன -

(முருகனின் வாகைப் புயங்களே).

கந்த புராணம் பேசுகிறது - ஆசை சாங்கிரிகள் தம்மை அங்கை கொண்டு ஒன்றோடு ஒன்று பூசல் செய்விக்கும். குலகிரி அனைத்தும் ஓர் பால் கூட்டிடும் அவற்றைப் பின்னர் தலை தடுமாறடறமாக தரையினில் நிறுத்தும்.

எழுத அரும் அழகு நிறம் மலி திறல் இசையாக
உதார தீரம் என உரை பெற்ற
அடங்கலும் சிறந்து சாலத் ததும்பின  ...... 20


........                  . பதவுரை .........  

சித்தரித்துக் கூற அரிதான அழகும் ஒளியும் மேம்பட்ட வீரச் செயல்களும் பிறரால் புகழப்பட்டு இலக தயாள குணம் வீரம் என்று பேசப்பட்ட அனைத்து நற்பண்புகளுக்கு இடம் என மேலோங்கி விளங்கின -

(முருகனின் வாகைப் புயங்களே).

(பழுதுறாத பாவாணர் எழுதொணாத தோள் வீர)

இருள்பொரு கிரண இரணிய வடகுல பாரிய
மேரு சாதி இனம் என ஒத்து
உலகங்கள் எங்கணும் ப்ரகாசித்து நின்றன  21


........                    . பதவுரை .........  

இருளை விலக்குவதும் ஒளி வீசுவதும் பொன் மயமானதும் வட திசையில் விளங்குவதும் சேஷ்டமானதும் பருத்ததுமாகிய மேரு மலைக் கூட்டங்களின் ஜோதி போல் திகழ்ந்து இளைத்து உலகங்களிலும் ஒளி வீசி நின்றன -

(முருகனின் வாகைப் புயங்களே).

இயன்முநி பரவ ஒரு விசை அருவரை ஊடதி
பார கோர இவுளி முகத்தவள்
கொங்கை கொண்ட சண்ட மார்பைப் பிளந்தன..
 22

........                   . பதவுரை .........  

முத்தமிழில் சிறந்த தேர்ச்சி பெற்ற நக்கீரர் திருமுருகாற்றுப்படை பாடி துதித்த போது முன்பு திருப்பரங்குன்றத்தில் பெரிய மலைக் குகையில் மிகப் பெரிய பயங்கரமான குதிரை முகம் கொண்ட கற்கி முகி எனும் பூதத்தின் பெரிய தனங்களை உடைய மார்பைப் பிளந்து அழித்தன -
(முருகனின் வாகைப் புயங்களே).

அருவரை திறந்து வன்சங்க்ரம சற்கிமுகி அபயமிட அஞ்சல் என அங்கீரனுக்கு உதவி - பூத வேதாள வகுப்பு.

இப ரத துரக நிசிசரர் கெட ஒரு சூரனை
மார்பு பீறி அவன் உதிரப் புனல்
செங்களம் துளங்கி ஆடிச் சிவந்தன  ...... 23

......                ... பதவுரை .........  

யானைப்படை, ரதப்படை, குதிரைப்படை கொண்ட அரக்கர்கள் அழிந்து போகவும், ஒப்பற்ற சூரபத்மனின் மார்பைப் பிளந்து அவனது இரத்த வெள்ளத்தால் சிவந்திருந்த போர் பூமி கலங்கும்படி பரவச் செய்து கோபித்தன -

(முருகனின் வாகைப் புயங்களே).

எவை எவை கருதில் அவை அவை தரு கொடையால் மணி
மேக ராசி சுரபி அவற்றொடு
சங்க கஞ்ச பஞ்சசாலத்தை வென்றன  ...... 24


......                 ... பதவுரை .........  

அடியார்கள் என்ன என்ன விரும்பினாலும் அவைகள் அனைத்தையும் வருவித்து தரும் வள்ளல் தன்மையில் (அடியவர் இச்சையில் எவை எவை உற்றன அவை தருவித்தருள் பெருமாளே), சிந்தாமணி, மேகக் கூட்டங்கள், காமதேனு இவைகளுடன் சங்க நிதி, பதும நிதி இரண்டையும் தெய்வ தருக்களான கற்பகம் முதலிய ஐந்து கூட்டத்தையும் ஜெயித்து விளங்கின -

(முருகனின் வாகைப் புயங்களே)


பாடலை குருஜியின் குரலில் கேட்போம் புய வகுப்பின் கடைசி பகுதி தொடரும் 

முருகா  சரணம் 

No comments:

Post a Comment