Tuesday 19 November 2019

சுப்ரமண்ய புஜங்கம்.... 30



                                                  சுப்ரமண்ய புஜங்கம்....  30



जनित्री पिता च स्वपुत्रापराधं

सहेते न किं देवसेनाधिनाथ ।

अहं चातिबालो भवान् लोकतातः

क्षमस्वापराधं समस्तं महेश ||

ஜநித்ரீ பிதாச ஸ்வபுத்ரா பராத

ம்ஸஹேதே ந கிம் தேவசேனாதி நாத |அஹம் சாதிபாலோ வான் லோதாத: க்ஷமஸ்வாபராதம் ஸமஸ்தம் மஹேச

இந்த ஸ்லோகத்தில் முருகனை தன்னுடைய அப்பா அம்மாவாக நினைச்சு ஆச்சார்யாள் சரணாகதி பன்றார்.
.
‘ஹே தேவசேனாதி நாதா’தேவர்களுடைய சேனைக்கு அதிபதியே.

ஜநித்ரீ’ – அம்மாவோ,

 ‘பிதாச’ – அப்பாவோ,

 ‘ஸ்வபுத்ராபராதம்’ – தன் குழந்தைகள் செய்த அபராதத்தை , 

‘ஸஹேதே ந கிம்’ – பொறுத்துக்கிறது இல்லையா? 

 ‘ததா’ – அப்படியே ,

 ‘அஹம் சாதிபால:’ – நானோ ரொம்ப சின்னக் குழந்தை,

 ‘பவான் லோக தாத:’ – நீங்கள் உலகத்துக்கே அப்பா ,

‘ஹே மஹேச’ – பரமேஸ்வரா,

ஸமஸ்தம் அபராதம் க்ஷமஸ்வா’ – என்னுடைய எல்லா அபராதங்களையும் பொறுத்துக் கொள்ளுங்கள் 

இந்த பரமேஸ்வரனும், பார்வதி தேவியும் ‘அம்மையும் அப்பனுமாக’ இருக்கா. அவா இரண்டு பேருமே ஆச்சார்யாளுக்கு இந்த முருகப் பெருமான் கிட்டேயே தெரியுறதுனால, ‘முருகப் பெருமானே! நீயே என்னுடைய அம்மை அப்பன் ‘ ன்னு சொல்லி, ‘உங்கிட்ட நான் வேண்டிக்கிறேன். என்னுடைய பிழைகளைப் பொறுத்து எனக்கு அநுக்கிரஹம் பண்ணு’ அப்படின்னு சொல்றார்.

பகவானை அம்மை அப்பனா பார்த்து அவா பண்ண அநுக்கிரஹத்த நினைக்கிறது நிறைய மகான்கள் பண்ணி இருக்கா.

 திருவாசகத்துல நிறைய அந்த மாதிரி பாடல்கள் வரும்.

"அம்மையே! அப்பா! ஒப்பு இலா மணியே! அன்பினில் விளைந்த ஆர் அமுதே! பொய்ம்மையே பெருக்கி, பொழுதினைச் சுருக்கும், புழுத் தலைப் புலையனேன் தனக்கு,செம்மையே ஆய சிவபதம் அளித்த செல்வமே! சிவபெருமானே!
இம்மையே, உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே?"

"பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து, நீ, பாவியேனுடைய ஊனினை உருக்கி, உள் ஒளி பெருக்கி, உலப்பு இலா ஆனந்தம் ஆயதேனினைச் சொரிந்து, புறம் புறம் திரிந்த செல்வமே! சிவபெருமானே!"

இராமலிங்க அடிகளார் இந்த மாதிரி ‘அம்மையே அப்பா’ன்னு பாடியிருக்கார். 

"தாயாகித் தந்தையுமாய்த் தாங்குகின்ற தெய்வம்
தன்னைநிகர் இல்லாத தனித்தலைமைத் தெய்வம்
வாயார வாழ்த்துகின்றோர் மனத்தமர்ந்த தெய்வம்
மலரடி என் சென்னிமிசை வைத்தபெருந் தெய்வம்
காயாது கனியாகிக் கலந்தினிக்குந் தெய்வம்
கருணைநிதித் தெய்வம்முற்றுங் காட்டுவிக்குந் தெய்வம்
சேயாக எனைவளர்க்குந் தெய்வமகா தெய்வம்

சிற்சபையில் ஆடுகின்ற தெய்வமதே தெய்வம்."

(திருவருட்பா: ‘அருட்ஜோதி நிலை’)

“தடித்தஓர் மகனைத் தந்தை 
ஈண்டடித்தால் தாயுடன் அணைப்பள் தாய் அடித்தால் பிடித்தொரு தந்தை அணைப்பன் இங்கெனக்குப் பேசிய தந்தையும் தாயும்பொடித் திருமேனி அம்பலத் தாடும் புனிதநீ ஆதலால் என்னைஅடித்தது போதும் அணைத்திடல் வேண்டும் அம்மைஅப்பா இனி ஆற்றேன்.”(திருவருட்பா: ‘பிள்ளைச் சிறு விண்ணப்பம்’)
அருணகிரி நாதரும் கந்தர் அநுபூதியில,

"எந்தாயும் எனக்கு அருள் தந்தையும் நீ
சிந்தாகுலம் ஆனவை தீர்த்து எனையாள்
கந்தா, கதிர் வேலவனே, உமையாள்
மைந்தா, குமரா, மறை நாயகனே."  என்று போற்றுகிறார்.

வெற்றி வேல் முருகனுக்கு …ஹர ஹரோ 

Friday 15 November 2019

அபிராமி அந்தாதி - 43




                                                      அபிராமி அந்தாதி - 43


                                                                      
அன்னையின் அழகினை ரொம்ப அருமையா வர்னனை பண்ணியிருக்கார் பட்டர். 
பரிபுரச் சீறடிப் பாசாங்குசை பஞ்சபாணி இன்சொல்
திரிபுரசுந்தரி சிந்துர மேனியள் தீமை நெஞ்சில்
புரிபுர வஞ்சரை அஞ்சக் குனி பொருப்புச் சிலைக்கை
எரிபுரை மேனி இறைவர் செம்பாகத்து இருந்தவளே
அருஞ்சொற்பொருள்:
பரிபுரம்: சிலம்பு
சீறடி: சிறிய அடி
பொருப்பு: மலை (இங்கே மேரு மலை)
சிலை: வில்
குனித்தல்: வளைத்தல்
எரி: நெருப்பு  


பரிபுரச் சீறடி - சிலம்பினை அணிந்த அழகிய சிறிய திருவடிகளை உடையவளே;

நம்மை எல்லாம் பரிபாலனம் செய்யும் திருவடி அம்மையின் திருவடி. அவையும் சின்னஞ்சிறியவை. இதைத்தான், 'பரிபுரச் சீறடி' என்று குறித்தார் பட்டர்.  

உலகத்தைப் படைத்த அன்னையின் வடிவு மிகப்பெரிது.. ஆயினும் நம் போன்ற சிறியோர்களும் காணும் வண்ணம் அவள் அழகிய சிறு குழந்தை வடிவில் காட்சி தருகிறாள்..அன்னையை சிறு குழந்தை வடிவில் மனத்தில் எண்ணிப் பாருங்கள்!!
நம் அன்னையின் திருவடிகள் சிறியன: அத் திருவடிகளில் அவள், வேதமாகிய சிலம்புகளை அணிந்துள்ளாள். அவள் மெல்ல நடக்கையில், அவளது திருவடியின் சிலம்புகள் வேத நாதமாய் ஒலிக்கின்றன. பரிபுரச் சீறடி கொண்டவள் அவள்.
பரிபுரம் என்றால் சிலம்பு. முந்தைய பாடலின் முடிவில் பரி+புரை என்று பிரித்துப் பொருள் கொண்ட சொல், இங்கே பரிபுரம் என்ற தனிச்சொல்லாகச் சிலம்பு என்ற பொருளில் வருகிறது. காலில் சிலம்பணிந்தவள் என்று சக்தியை இறையிலக்கியங்களில் நிறைய வர்ணித்திருக்கிறார்கள். லலிதாசஹஸ்ர நாமத்தில் 'நவரத்தின மணியினாலான சலங்கை' என்று சொல்லப்பட்டிருக்கிறது.
சௌந்தர்யலஹரியில், சக்தியின் சலங்கையொலியைப் பற்றிச் சுவையாகச் சொல்லியிருக்கிறார் சங்கரர். 'ஊடலில் தோற்றுச் சரணடைந்த சிவனின் தலையில் சக்தி தன் கால் விரல்களை விளையாட்டாக வைத்துத் தட்டும் பொழுது ஏற்படும் கிணுகிணுப்பான வெற்றி ஓசையில் எல்லாம் அடங்கி விடும்' என்ற அழகான சங்கரர் கற்பனையை,
வீரைக் கவிராஜர் 'இறையை வென்றனன் விழியை வென்றனன் என முழங்கிய குரல் எனாது அறைச் சிலம்பு எழும் அரவம் என்பதேன் அருண மங்கலக் கமலையே' என்று அருமையான தமிழில் சொல்லியிருக்கிறார்.
சிவனிடம், "ஐயா நீர் மலையை வளைத்து அம்பெய்தி முப்புர அரக்கரைக் கொல்லும் வலிமை படைத்தவர் என்பதெல்லாம் சரி, ஆனால் எம் தலைவியின் கால் சலங்கையொலி உம்மையும் அடக்கி விடுமே?" என்பது போல் தொனிக்கும் பட்டரின் உட்பொருள் இன்னும் சுவை.
 "பாசாங்குசை (பாசம்  அங்குசம் )
பாசத்தினால் தான் பிள்ளைகளை இணைத்துத் தன்னிடம் ஈர்த்து வைத்திருக்கிறாள். அத்துடன் தன் உள்ளத்து பாசத்தையும் கைவழி காட்டுகின்றாள். அங்குசம் ஆணவத்தை அடக்கும் கருவி. பாசம் கொண்ட தாய். தனது பிள்ளைகளின் ஆணவத்தினையும் அடக்க வல்லவள்; ஆவணத்தினை அடக்கியாக வேண்டும் என்ற கட்டுப்பாடு உடைய ள் அவள்.  
அன்னை அபிராமி பாசம் ( அல்லது ஆசை) என்னும் கயிற்றை தனது இடது பின்கையில் தாங்கியிருப்பது பாசத்தைக் காட்டும் பண்பு உடையவள் அன்னை என்று சொல்லுகிறது.
அங்குசம் என்பது யானையை அடக்க அதன் பாகன் பயன்படுத்தும் தொரட்டி. யானை மிகவும் பலசாலியானது. அதற்கு மதம் பிடித்தால் அடக்கப் பயன்படும் ஆயுதம் தொரட்டி. எல்லாவற்றிற்கும் மூலமாகிய மலம் ஆணவம். அதற்கு யானையை உவமையாகச் சொல்வது வழக்கம். அகங்காரம் என்னும் மதயானையை அடக்க நம்மால் இயலாது. அது அவள் அருளினால் தான் முடியும். இந்த மதயானையை அடக்கும் பாசாங்குசத்தை அவள் ஏந்தியிருப்பது இதற்கு அடையாளம்.
மேலும் காமத்தில் வசப்படுத்தும் மாயா சொரூபியும், அதனின்று நீக்கும் ஞானசொரூபியுமாக விளங்குகிறாள் அன்னை பிராமி. முதல் வேலை மன்மதனுக்கு. இரண்டாவது வேலை ஞானக்கொழுந்தனாகிய கணபதியின் மூலம் நடக்கிறது. இதனாலே தான் கணபதியின் கையில் பாசாங்குசம் காணப்படுகிறது. அகங்காரம் அழிய. அன்னையை பாசாங்குசம் ஏந்தியவளாகத் தியானிக்க வேண்டும்.
அன்னை அபிராமியின் உருவத் தியானத்தினால் ஆணவம், மாயை,கண்மம் என்ற மும்மலமும் அழிந்து, அன்னையின் அன்பு என்னும் அருளினால் இன்பம் உண்டாகும் என்பதை அபிராமிபட்டர் இந்தப் பாடல் மூலம் சொல்கிறார்.
அன்னையைச் சொல்கின்ற போது, அவளது கைகளில் பஞ்சபாணம், பாசாங்குசம் என்றார்.ஏன்? கருப்புச்சிலை என்று அபிராமிபட்டர் சொல்லவில்லை. அந்தச்சிலை என்ற வில் எங்கே போயிற்று ? வில்லைச் சொல்லாமல் விட்டாரே என்று நாம் பேதுறுகிறோம். ' சொன்னேன் ' என்கிறார் அவர். அந்தக் கரும்புவில், எரிபுரை மேனி இறைவரிடம் பொருப்பு வில்லாயிற்று. 
எரிபுரை என்ற சொல்லை அருணகிரியும் பயன்படுத்தியுள்ளார். “தரணியில் அரணிய” என்ற பாடலில் “எரிபுரை வடிவினள்” என்று அம்மையை விளிக்கிறார்.
இது விந்தை! இன்னும் ஒரு விந்தையையும் இந் பாடலில் காண்போம். அம்பாளின் மூன்று கைகளைப் பக்தர் விவரித்தார். ஒரு கையில் அங்குசம் ; இன்னொரு கையில் பாசம் ; மூன்றாவது கையில் பஞ்சபாணங்கள் என்றார்.நான்காவது கையினைச் சொல்லாமல் விட்டுவிட்டார். நான்காவது கையினை, அவளது வலப்பாகம் கொண்ட சங்கரனாரின் கையில் உள்ள பொருப்புச் சிலையுடன் சேர்த்தார். அன்னைக்குள்ள மூன்று கைகளைச் சொல்லி, எரிபுரை மேனியரின் நான்கு கைகளில் ஒரு கையை மட்டும் சொன்னதால், இறைவனின் செம்பாகத்தில் நம் அன்னை அரைப்பாகம் அல்ல, முக்கால் பாகம் பெற்றுவிட்டாள் என்று முழங்கத் தோன்றுகின்றது.
இன்சொல் திரிபுரசுந்தரி - இனிய சொற்களையுடைய மூவுலகங்களிலும் அழகில் சிறந்தவளே

சிந்துர மேனியள் - சிந்துரத்தை மேனியெங்கும் அணிந்தவளே

தீமை நெஞ்சில் புரி புர வஞ்சரை - தீய நெஞ்சத்தைக் கொண்டிருந்த திரிபுர அசுரர்களை அவர்கள்

அஞ்சக் குனி _   அஞ்சும்படியாக   

 பொருப்புச் சிலைக் கை - அஞ்சும்படியாக மேருமலையால் ஆன வில்லை வளைத்தக் கையினை உடைய

 பொருப்பு என்றால் மலை. சிலை என்றால் வில். சிவன் மேருமலையை வில்லாக வளைத்ததாக திரிபுரம் எரித்த கதையில் வருகிறது. 

எரிபுரை மேனி - எரியும் நெருப்பினை ஒத்த மேனியைக் கொண்ட

எரிபுரை என்ற சொல்லை அருணகிரியும் பயன்படுத்தியுள்ளார். "தரணியில் அரணிய" என்ற பாடலில் "எரிபுரை வடிவினள்" என்று அம்மையை விளிக்கிறார்.  

இறைவர் செம்பாகத்து இருந்தவளே - நம் தலைவராம் சிவபெருமானின் சரிபாதியாக இருந்தவளே

வாம பாகம்,செம்பாகம் எதாயிருந்தால் என்ன அம்பாள் இருக்கும் இடம் செம்மையாக இருக்கும்.
எரிகின்ற நெருப்பில் செம்மை எது? ஒளி. நெருப்பிற்கு உரிய பண்புகள் வெப்பமும் ஒளிச்சுடரும். வெப்பத்திற்கு நிறமில்லை. ஆனால் ஒளிச்சுடருக்கு? அது செம்மைதானே? அப்படி வெளிச்சமும் வெப்பமும் சேர்ந்திருப்பதுதான் அம்மையப்பன். பிரிக்க முடியாதது..
ஆகவே நாமும் அன்னையை அந்த பஞ்சபாணியை, எரிபுரை மேனியரின் இடப்பாகத்தில் இருப்பவளை நம் மனக் கண்களாலும், அகக் கண்களாலும் தரிசனம் செஞ்சுண்டே, தியானிச்சின்டே இருப்போமா!!

                                           அபிராமி சரணம்!!

Monday 11 November 2019

சுப்ரமண்ய புஜங்கம்.... 29



                                                                                                                                                     சுப்ரமண்ய புஜங்கம்....  29   



                                                                                       
                                                                                                                                                                           

முருகப் பெருமானுடைய  கையில இருக்கிற வேலுடைய மஹிமை.

मृगाः पक्षिणो दंशका ये च दुष्टा-

स्तथा व्याधयो बाधका ये मदङ्गे ।

भवच्छक्तितीक्ष्णाग्रभिन्नाः सुदूरे

विनश्यन्तु ते चूर्णितक्रौञ्जशैल ॥ २९॥

ம்ருகா: பக்ஷிணோ தம்சகா யே ச துஷ்டா:

ததா வ்யாதயோ பாதகா யே மதங்கே |

பவச்சக்தி தீக்ஷ்ணாக்ர பின்னா: ஸுதூரே

விநச்யந்து தே சூர்ணித க்ரெளஞ்ச சைல ||


அன்பரின் விளக்க உரை 

க்ரெளஞ்ச மலையை வேலால் பொடிப் பொடியாக ஆக்கியவரேன்னு கூப்பிட்டு


 ‘மதங்கே’ என்னுடைய உடம்பில்  

‘யே’ – எந்த கஷ்டங்கள் – பலவிதமான உடம்புக்கு வரக் கூடிய ஆபத்துக்களை சொல்றார். 

‘ம்ருகா:’ – கொடிய மிருகங்களால் கஷ்டம் வரலாம்,

 ‘பக்ஷிண:’ – தீடிர்னு ஏதாவது பக்ஷி வந்து தாக்கலாம்.

 ‘தம்சகா:’ –  பலவிதமான பூச்சிகள், கொசுக்கள் அதெல்லாம் வந்து கடிக்கலாம். 

‘ததா’ – அப்படியே, 

‘துஷ்டா: வ்யாதய:’ – ரொம்ப கஷ்டப் படுத்தக் கூடிய வ்யாதிகள்

 ‘பாதகா:’ – இதெல்லாம் என்னை  ஹிம்சை பண்றது. அவற்றையெல்லாம்

 ‘பவச்சக்தி தீக்ஷ்ணாக்ர பின்னா:’ 

உன்னுடைய சக்தி ஆயுதம், உன்னுடைய வேலாயுதத்தைக் கொண்டு, அது தீக்ஷ்ணமா இருக்கு. கூராக  இருக்கு. அதை வெச்சு நீ மலையையே பிளந்தாய். இந்த வ்யாதிகள் மாதிரி எனக்கு வர கூடிய கஷ்டங்களை எல்லாம், அந்த வேலின் கூர் முனையால வெட்டி போட்டுடு. 

‘ஸுதூரே விநச்யந்து’ – அதையெல்லாம் எங்கேயோ தூரத்துல கொண்டு போய் தள்ளி நாசம் பண்ணிடு. 

அப்படி அந்த ஸுப்ரமண்ய ஸ்வாமியோட வேலை வெச்சுண்டு பூஜை பண்றவாளுக்கு எந்த ஒரு கஷ்டமும் அண்டாதுங்கற ஸ்லோகம்..

வேலைப் பத்தி வரக்கூடிய கந்தர் அலங்கார பாடல்கள்.


தேர் அணி இட்டு புரம் எரித்தான் மகன் செம் கையில் வேல்
கூர் அணி இட்டு அணுவாகிக் கிரௌஞ்சம் குலைந்து அரக்கர்
நேர் அணி இட்டு வளைந்த கடகம் நெளிந்தது சூர்ப்
பேர் அணி கெட்டது தேவேந்திர லோகம் பிழைத்ததுவே

தேரை அலங்கரித்துச் செலுத்தி, [‘ஆணவம்-மாயை-கன்மம்’ என்னும்] மூன்று கோட்டைகளைத் [தம் திருப்பார்வையினாலேயே] எரித்து அருளிய சிவபெருமானுடைய திருக்குமாரர் திருமுருகப்பெருமானின் சிவந்த கையில் உள்ள கூர்மையான வேலாயுதத்தால் தைக்கப்பட்ட கிரௌஞ்ச மலையானது அணு அணுவாக துகள்பட்டு அழிந்தது. ஆரம்பத்தில் நேராக அணி வகுத்து வந்து பின்னர் வட்ட வடிவில் வளைந்து கொண்ட அசுரர்களின் சேனை தளர்ந்து ஓடியது; சூரபன்மனுடைய பெரிய நடுச்சேனையும் அழிந்தது. தேவர்களின் உலகமான அமராவதியும் அசுரர்களிடமிருந்து உய்வு பெற்றது.


பாலென்பது மொழி பஞ்சென்பது பதம் பாவையற்கண்
சேலென்பதாகத் திரிகின்ற நீ செந்திலோன் திருக்கை
வேலென்கிலை கொற்ற மயூரம் என்கிலை வெட்சித்தண்டைக்
காலென்கிலை மனமே எங்ஙனே முத்தி காண்பதுவே.

பாலை ஒத்தது [பெண்களின்] சொல், பஞ்சை ஒத்தது பாதம், கண்கள் கெண்டை மீனை ஒத்தவை என்று எண்ணி மயங்கித் திரிகின்ற மனமாகிய நீ, திருச்செந்தூர்த் திருமுருகப்பெருமானின் திருக்கையில் விளங்கும் வேலாயுதமே என்று சொல்கின்றாயில்லை; வெற்றி பொருந்திய மயில் என்றும் சொல்கின்றாயில்லை; வெட்சி மலரையும் தண்டையையும் அணிந்த திருவடிகள் என்கின்றாயில்லை. [ஆதலால்] நீ முத்திப் பேற்றை அடைவது எங்ஙனமோ?


கண்டுண்ட சொல்லியர் மெல்லியர் காமக் கலவிக்கள்ளை
மொண்டுண்டு அயர்கினும் வேல் மறவேன் முதுகூளித்திரள்
டுண்டுண் டுடுடுடு டூடூ டுடுடுடு டுண்டுடுண்டு
டிண்டிண்டெனக் கொட்டியாட வெஞ்சூர்க் கொன்ற ராவுத்தனே.

கற்கண்டைப் போன்ற சொற்களையுடையவரும் மென்மையானவருமான பெண்களின் காமப் புணர்ச்சியாகிய மதுவினை நிரம்பவும் மொண்டு குடித்து அவ்வெறியால் அறிவு மயங்கினாலும் தேவரீரின் வேலாயுதத்தை அடியேன் மறவேன். முதிர்ந்த பேய்க் கூட்டங்கள் ‘டுண்டுண் டுடுடுடு …’ என்னும் ஒலியை உண்டாக்கிக் கொண்டு பறையடித்துக்கொண்டு கூத்தாடுமாறு வெய்ய சூரபன்மனைக் கொன்று அருளிய சேவகனே.


 ‘வேல் வகுப்பில் 

பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை

கறுத்தகுழல் சிவத்தவிதழ் மறச்சிறுமி விழிக்கு நிகராகும்

வள்ளியம்மையோட கண்கள் வேல் மாதிரி இருக்குன்னு சாதாரண அர்த்தம் சொல்லலாம். வள்ளிமலை சச்சிதானந்த ஸ்வாமிகள் இதுக்கு விசேஷமா அர்த்தம் சொல்லி இருக்கார். இந்த ‘பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை கறுத்தகுழல் சிவத்தவிதழ்’ ங்கறதுக்கு, அம்பாள் பண்ணக்கூடிய அஞ்சு காரியங்கள் ‘ஸ்ருஷ்டி, ஸ்திதி, லயம், திரோதானம், அனுக்ரஹம்’ அப்படின்னு அர்த்தம் சொல்லி இருக்கார். மேலும் எப்படி அம்பாளோட கடாக்ஷம் அனுக்ரஹம் பண்ணுமோ, அந்த மாதிரி வேல் அனுக்ரஹம் பண்ணும் அப்படின்னு அவ்வளவு அழகா சொல்லி இருக்கார்.


தருக்கி நமன் முருக்கவரின் எருக்குமதி
தரித்தமுடி படைத்தவிறல் படைத்த இறை கழற்கு நிகராகும்

‘தருக்கிநமன் முருக்கவரின்’ – எமன் எருமை மாட்டு மேல ரொம்ப கர்வத்தோட வந்து பாசக் கயிறைப் போட்டு முறுக்கும் போது, மார்க்கண்டேயன் கழுத்துல பாசக் கயிறு போட வந்த போது, ‘எருக்கு, மதி’ இதெல்லாம் தலையில வச்சிண்டு இருக்கற சிவபெருமானுடைய கழல் என்ன பண்ணித்தோ,அதை இந்த வேல் பண்ணும் அப்படின்னு சொல்றார். அதற்கு நிகரான காரியத்தை செய்யும்.


‘தனித்துவழி நடக்குமென திடத்துமொருவலத்தும்
இருபுறத்தும் அருகடுத்திரவு பகற்றுணையதாகும்

தனியா போயிண்டிருக்கும் போது, ‘தனித்து வழி நடக்கும் எனது ஒரு இடத்தும். ஒரு வலத்தும் இரு புறத்தும் அருகு அடுத்து இரவு பகல் துணையதாகும்’ 

திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன் மலை
விருத்தனென துளத்திலுறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே’

  இதெல்லாம் மஹாமந்திரங்கள்..  

அப்படி ‘வேல்’ங்கறது பயத்தைப் போக்கும். மிருகங்கள் கிட்ட இருந்தோ, வியாதியில் இருந்தோ நமக்கு வர்ற பயத்தை போக்கறதுக்கு ‘வேல் வழிபாடு’ உற்ற வழி, அப்படின்னு ஆச்சார்யாளும் சொல்லியிருக்கார். அருணகிரிநாதரும் நிறைய சொல்லியிருக்கார்.

வெற்றி வேல் முருகனுக்கு …ஹர ஹரோ ஹரா

Friday 8 November 2019


                                             அபிராமி அந்தாதி ....42




இடங்கொண்டு விம்மி இணை கொண்டு இறுகி, இளகி, முத்து

வடங்கொண்ட கொங்கை மலை கொண்டு இறைவர் வலிய நெஞ்சை
நடங்கொண்ட கொள்கை நலம் கொண்ட நாயகி நல் அரவின்
படம் கொண்ட அல்குல் பனி மொழி வேதப் பரிபுரையே

அன்பரின் விளக்கவுரை 

இடம் கொண்டு விம்மி இணை கொண்டு இறுகி, இளகி முத்துவடம் கொண்ட கொங்கை மலை கொண்டு)
அன்னையின் திருநகில்கள் அகன்று,பரப்புற்று, பருத்து,ஒன்றினை ஒன்று இணைதல் உற்றுத் தளர்வு இன்றி இறுக்கம் பெற்று இளகிய மென்மைத் தன்மை பெற்றவை. அவ்வழகிய திருமார்பில் லேமுத்துமாலை புரள்கிறது. அம்மாலை புரள்வதும் ஓர்அழகே!
பரஞானத்துக்கும் அபரஞானத்துக்கும் அடையளமானவை அம்பிகையின் திருமுலைகள். அவை ஓன்றுக்கொன்று இணையாக இறுகியும் இளகியும் முத்துவடம் சூடிய மலைகள் போல் தோன்றி வல்லமை பொருந்திய சிவபெருமானின் திருவுள்ளத்தை ஆட்டுவிக்கும் கொள்கை கொண்டன. 
வடமொழியில் காளிதாசருக்கும், தமிழில் திருமூலர், கம்பர்,அருணகிரிநாதர் முதலான தெய்வக் கவிஞர்களுக்கும் இவ்வருணனை உரிமை உண்டு. ' பருத்த முலை, சிறுத்த இடை, வெளுத்த நகை, கறுத்த குழல்,சிவத்த இதழ், மறச்சிறுமி விழி ' என்பார் அருணகிரிநாதர். ( திருப்புகழ் - வேல் வகுப்பு)
அபிராமி அம்மையின் ஸ்தனங்கள் [மார்பகங்கள்] கருணை ததும்புவது, பெரியது போன்றெல்லாம் முந்திய பாடல்கள் சிலவற்றில் பார்த்துள்ளோம். அவை ஒன்றொடு ஒன்று போட்டியிட்டுக்கொண்டு கருணை சுரப்பதால் இடமின்றி மோதிக்கொண்டு விம்முகிறது. பின்னர் இரண்டும் சற்றே இளகி மேலும் கருணை சுரக்க வழிவகுக்கின்றன.
இறைவர் வலிய நெஞ்சை நடங்கொண்ட 

நம் தலைவராம் சிவபெருமானின் எதற்கும் அசையாத வலிய நெஞ்சையும் உன் எண்ணத்திற்கு ஏற்ப ஆடம் படி செய்தஇறைவன் தன் திருவுள்ளப்படி எல்லோரையும் இயக்குவர்; ஆட்டுவிப்பவர்; அவர் ஆட்டுவிக்க நாம் ஆடுகின்றோம். நம் கர்மவினைகளுக்கு ஏற்ப, அவர் நம்மை ஆட்டுவித்துக் கொண்டிருக்கிறார். ' ஆட்டுவித்தால் ஆர் ஒருவர் ஆடாதாரோ! ' ஆனால் நம்மை ஆட்டுவிக்கும் அத்தனையே ஆட்டுவிக்கின்றாள் நம் அன்னை. அவளது திருவுள்ளப்படி அந்த ஆடவல்லான் ஆடுகின்றான். அருளே வடிவான அந்தப் பிராட்டியின் வசப்ப்பட்டு அவனும் ஆடுகின்றான். 

கொள்கை நலம் கொண்ட நாயகி


 பிள்ளைகளான எங்களுக்கு அருள் செய்யும் நல்ல கொள்கை நலம் கொண்ட தலைவியே

நல் அரவின் படம் கொண்ட அல்குல் -

 அம்பாளின் இடையானது நல்ல பாம்பின் படம் போல், மெல்லியதாகவும், ஒளி வீசுவதாகவும் உள்ளது.

பனி மொழி வேதப் பரிபுரையே -

 அன்னை அபிராமியின் ' மொழி ' - குளிர்ச்சியாகவும்,இனிமையாகவும் உள்ளது . மதுரபாஷினி என்று அம்பாளுக்கு பெயர் உண்டு.
இதற்கு ஈடு,இணை, நிகர் எதுவும் இல்லை. 27. நிஜ ஸல்லாப மாதுர்ய - விநிர்பத்ஸித கச்சபீ - தன்னுடைய பேச்சின் இனிமையினால் தானே கச்சபீ எனப்படும் ஸரஸ்வதி தேவியின் வீணையும் தோற்றது.

பசுபதியான பரமசிவனின் லீலைகளை அழகாக வீணை மீட்டி சரஸ்வதி பாடுகிறாள். அதை அம்பாள் ரசிக்கிறாள். அப்போது "ஆஹா" என்று அதை பாராட்டி தேவி கூறுகையில், அந்த சப்தம், தனது வீணையை காட்டிலும் இனிமையாக இருந்ததால், சரஸ்வதி, வெட்கப்பட்டுக்கொண்டு தன் வீணையினை உரை போட்டு யாருக்கும் தெரியாதவாறு மூடி மறைத்து விடுகிறாள்.

வேதப் பரிபுரையே' என்பதற்கு அறிஞர்கள் 'வேதங்களைக் காற்சிலம்பாகக் கொண்டவளே' என்று பொருள் சொல்லியிருக்கிறார்கள். .

இந்தப் பாடலை ' வேதப் பரிபுரையே ' என்று முடிக்கிறார்
வேதங்களே அன்னையின் திருவடிகள். அவற்றில் உள்ள சிலம்புகளே நான்மறையாய் ஒலிக்கின்றதாம்.


இதையே ஆதிசங்கரர் ஸௌந்தர்யலஹரியில் ( 66) சொல்கிறார். " விபஞ்ச்யா காயந்தீ "
46. ஸிஞ்ஜான மணிஞ்ஜீர மண்டித ஸ்ரீபதாம்புஜா சப்திக்கின்ற மணிகளையுடைய சிலம்புகளால் அலங்கரிக்கப்பட்ட திருவடித் தாமரைகளையுடையவள்..
அம்பாள இவாள்ளாம் அழகா வர்ணணை பண்ணும்போது மனசுல தெய்வாம்சம் தான் நிக்கறது அவாளுக்கு. கேட்கிற நமக்கும் அந்தப் பக்குவம் வரவேண்டும் என்பதற்காகத்தான் பட்டர், பகவத்பாதாள் இவாள்ளாம் நமக்கு இப்படிப்பட்ட அந்தாதி, செளந்தர்யலஹரிலாம் குடுத்திருக்கா.
ஒவ்வொரு அந்தாதியும், அதன் அழகான, அபாரமான கவித்துவத்தையும் நல்ல முறையில் கேட்டும், அனுபவதித்தும், மனதில் எந்தவிதமான குயுக்தியும் ஏற்படா வண்ணம், நம் அன்னையை நாம் எப்படி நினைப்போமோ, அதற்கும் மேல் இந்த அன்னையை, இவளை, இந்த ஆதிபராசக்தியை ஆராதிப்போம்.
அபிராமி சரணம் சரணம்!!

முருகா சரணம்