Friday 8 November 2019


                                             அபிராமி அந்தாதி ....42




இடங்கொண்டு விம்மி இணை கொண்டு இறுகி, இளகி, முத்து

வடங்கொண்ட கொங்கை மலை கொண்டு இறைவர் வலிய நெஞ்சை
நடங்கொண்ட கொள்கை நலம் கொண்ட நாயகி நல் அரவின்
படம் கொண்ட அல்குல் பனி மொழி வேதப் பரிபுரையே

அன்பரின் விளக்கவுரை 

இடம் கொண்டு விம்மி இணை கொண்டு இறுகி, இளகி முத்துவடம் கொண்ட கொங்கை மலை கொண்டு)
அன்னையின் திருநகில்கள் அகன்று,பரப்புற்று, பருத்து,ஒன்றினை ஒன்று இணைதல் உற்றுத் தளர்வு இன்றி இறுக்கம் பெற்று இளகிய மென்மைத் தன்மை பெற்றவை. அவ்வழகிய திருமார்பில் லேமுத்துமாலை புரள்கிறது. அம்மாலை புரள்வதும் ஓர்அழகே!
பரஞானத்துக்கும் அபரஞானத்துக்கும் அடையளமானவை அம்பிகையின் திருமுலைகள். அவை ஓன்றுக்கொன்று இணையாக இறுகியும் இளகியும் முத்துவடம் சூடிய மலைகள் போல் தோன்றி வல்லமை பொருந்திய சிவபெருமானின் திருவுள்ளத்தை ஆட்டுவிக்கும் கொள்கை கொண்டன. 
வடமொழியில் காளிதாசருக்கும், தமிழில் திருமூலர், கம்பர்,அருணகிரிநாதர் முதலான தெய்வக் கவிஞர்களுக்கும் இவ்வருணனை உரிமை உண்டு. ' பருத்த முலை, சிறுத்த இடை, வெளுத்த நகை, கறுத்த குழல்,சிவத்த இதழ், மறச்சிறுமி விழி ' என்பார் அருணகிரிநாதர். ( திருப்புகழ் - வேல் வகுப்பு)
அபிராமி அம்மையின் ஸ்தனங்கள் [மார்பகங்கள்] கருணை ததும்புவது, பெரியது போன்றெல்லாம் முந்திய பாடல்கள் சிலவற்றில் பார்த்துள்ளோம். அவை ஒன்றொடு ஒன்று போட்டியிட்டுக்கொண்டு கருணை சுரப்பதால் இடமின்றி மோதிக்கொண்டு விம்முகிறது. பின்னர் இரண்டும் சற்றே இளகி மேலும் கருணை சுரக்க வழிவகுக்கின்றன.
இறைவர் வலிய நெஞ்சை நடங்கொண்ட 

நம் தலைவராம் சிவபெருமானின் எதற்கும் அசையாத வலிய நெஞ்சையும் உன் எண்ணத்திற்கு ஏற்ப ஆடம் படி செய்தஇறைவன் தன் திருவுள்ளப்படி எல்லோரையும் இயக்குவர்; ஆட்டுவிப்பவர்; அவர் ஆட்டுவிக்க நாம் ஆடுகின்றோம். நம் கர்மவினைகளுக்கு ஏற்ப, அவர் நம்மை ஆட்டுவித்துக் கொண்டிருக்கிறார். ' ஆட்டுவித்தால் ஆர் ஒருவர் ஆடாதாரோ! ' ஆனால் நம்மை ஆட்டுவிக்கும் அத்தனையே ஆட்டுவிக்கின்றாள் நம் அன்னை. அவளது திருவுள்ளப்படி அந்த ஆடவல்லான் ஆடுகின்றான். அருளே வடிவான அந்தப் பிராட்டியின் வசப்ப்பட்டு அவனும் ஆடுகின்றான். 

கொள்கை நலம் கொண்ட நாயகி


 பிள்ளைகளான எங்களுக்கு அருள் செய்யும் நல்ல கொள்கை நலம் கொண்ட தலைவியே

நல் அரவின் படம் கொண்ட அல்குல் -

 அம்பாளின் இடையானது நல்ல பாம்பின் படம் போல், மெல்லியதாகவும், ஒளி வீசுவதாகவும் உள்ளது.

பனி மொழி வேதப் பரிபுரையே -

 அன்னை அபிராமியின் ' மொழி ' - குளிர்ச்சியாகவும்,இனிமையாகவும் உள்ளது . மதுரபாஷினி என்று அம்பாளுக்கு பெயர் உண்டு.
இதற்கு ஈடு,இணை, நிகர் எதுவும் இல்லை. 27. நிஜ ஸல்லாப மாதுர்ய - விநிர்பத்ஸித கச்சபீ - தன்னுடைய பேச்சின் இனிமையினால் தானே கச்சபீ எனப்படும் ஸரஸ்வதி தேவியின் வீணையும் தோற்றது.

பசுபதியான பரமசிவனின் லீலைகளை அழகாக வீணை மீட்டி சரஸ்வதி பாடுகிறாள். அதை அம்பாள் ரசிக்கிறாள். அப்போது "ஆஹா" என்று அதை பாராட்டி தேவி கூறுகையில், அந்த சப்தம், தனது வீணையை காட்டிலும் இனிமையாக இருந்ததால், சரஸ்வதி, வெட்கப்பட்டுக்கொண்டு தன் வீணையினை உரை போட்டு யாருக்கும் தெரியாதவாறு மூடி மறைத்து விடுகிறாள்.

வேதப் பரிபுரையே' என்பதற்கு அறிஞர்கள் 'வேதங்களைக் காற்சிலம்பாகக் கொண்டவளே' என்று பொருள் சொல்லியிருக்கிறார்கள். .

இந்தப் பாடலை ' வேதப் பரிபுரையே ' என்று முடிக்கிறார்
வேதங்களே அன்னையின் திருவடிகள். அவற்றில் உள்ள சிலம்புகளே நான்மறையாய் ஒலிக்கின்றதாம்.


இதையே ஆதிசங்கரர் ஸௌந்தர்யலஹரியில் ( 66) சொல்கிறார். " விபஞ்ச்யா காயந்தீ "
46. ஸிஞ்ஜான மணிஞ்ஜீர மண்டித ஸ்ரீபதாம்புஜா சப்திக்கின்ற மணிகளையுடைய சிலம்புகளால் அலங்கரிக்கப்பட்ட திருவடித் தாமரைகளையுடையவள்..
அம்பாள இவாள்ளாம் அழகா வர்ணணை பண்ணும்போது மனசுல தெய்வாம்சம் தான் நிக்கறது அவாளுக்கு. கேட்கிற நமக்கும் அந்தப் பக்குவம் வரவேண்டும் என்பதற்காகத்தான் பட்டர், பகவத்பாதாள் இவாள்ளாம் நமக்கு இப்படிப்பட்ட அந்தாதி, செளந்தர்யலஹரிலாம் குடுத்திருக்கா.
ஒவ்வொரு அந்தாதியும், அதன் அழகான, அபாரமான கவித்துவத்தையும் நல்ல முறையில் கேட்டும், அனுபவதித்தும், மனதில் எந்தவிதமான குயுக்தியும் ஏற்படா வண்ணம், நம் அன்னையை நாம் எப்படி நினைப்போமோ, அதற்கும் மேல் இந்த அன்னையை, இவளை, இந்த ஆதிபராசக்தியை ஆராதிப்போம்.
அபிராமி சரணம் சரணம்!!

முருகா சரணம் 

No comments:

Post a Comment