Friday 27 April 2012

“மட்டவிழ் மலர்கொடு பணிவேனே”







மட்டவிழ் மலர்கொடு பணிவேனே” –
இந்த வேண்டுகோள் எங்கு வருகின்றது?
விநாயாகர் அருளை நாடி தான் பாடவிருக்கும் திருப்புகழ் என்னும் மகா காவியத்தின் ஆரம்பமாக – நுலின் தொடக்கமாக -அமைந்திருக்கும் பாடலில்தான் இந்த வேண்டுகோள் வருகின்றது.
மட்டவிழ் மலர்கொடு பணிவேனே - மணம் வீசும் மலர்களைக் கொண்டு உன்னை பணிவேன். எல்லா கவிஞர்களுமே விநாயகனின் அருள் வேண்டி காவியத்தை தொடங்குவார்கள். அருணகிரியும் அதற்கு விதிவிலக்கல்ல. கணபதியை வணங்கி உன்னை பணிவேன் என்று காவியத்தை தொடங்குகிறர்.
அவனை முதல்வோனே என்கிறார்.
ஏன் தெரியுமா? ஸகலதேவர்களுக்கும் முதற்கடவுள் அதனால் முதல்வோன்; எந்த காரியம் தொடங்கினாலும் முதலில் வழிபடவேண்டியர் அதனால் முதல்வோன்: சிவ குமாரர்களில் மூத்தவன் அதனால் முதல்வோன்; பிரணவமே யாவற்றுக்கும் முதல், பிரணவ ஸ்வரூபன் விநாயகன் என்பதால் முதல்வோன். ஞானப்பழத்தை சிவனிடமிருந்து முதலில் பெற்றதால் முதல்வோன்; யாவராலும் எந்த பூஜை தொடங்கும் முன் செய்யும் பூஜை கணபதி பூஜையானதால் முதல்வோன்; சிவகணங்களுக்கு அதிபதி (முதன்மை)யானதால் (கணாத்யஷன்- விநாயகனின் 16 நாமாக்களில் ஒன்று) முதல்வோன்: கிரஹங்களுக்கு நாயகனாதால் (lord of all ganas) முதல்வோன். சொல்லிக்கொண்டே போகலாம்.

அவன் எப்படி இருக்கிறான்? மத்தள வயிறு, யானை முகம். மல்யுத்தம் செய்வதற்கு ஏதுவானது போல் பரந்த தோள்கள். கையில் கனியை வைத்திருக்கிறான்.
அவன் பார்வதி தேவியின் (உத்தமி) புதல்வனானாக்கும். சந்திரனையும், ஊமத்தம் பூவையும் தலயில் சூடியிருக்கும் சிவனின் ( அரன்) குமாரனுமாவன். அவனுடைய பராக்கிரமம் எப்படி என்றால், அன்று திரிபுரம் எரிப்பதற்கு சிவபிரான் தேரில் ஏறிச் சென்றபொழுது அந்த தேரின் அச்சை முறியச் செய்தவன். அதுமட்டுமல்ல, வள்ளியை முருகன் திருமணம் செய்து கொள்ள, யான வடிவம் கொண்டு உதவி செய்தவன்.
அவன் கல்வி கற்கும் அடியார்களின் புத்தியில் வாசம் செய்பவன். மேரு மலையில் முன்பு முத்தமிழை எழுதினவன். (அகத்தியர் தமிழுக்கு இலக்கணம் கூற அதை விநாயகன் எழுதினதை குறிப்பிடுகிறார். மகாபாரதம் எழுதிய வாரலாறுமென கொள்ளாலாம்). முற்பட எழுதிய முதல்வோனே - வியாசர் சொன்ன வேகத்திற்கும் மிகையாக எழுதினதால் முற்பட எழுதினவாகிறார்.
<!--[if !supportLineBreakNewLine]-->
<!--[endif]-->
கற்பகமே என்று துதித்தால் போதும் அவர்களின் வினைகளை அகற்றிடுவான்
அந்த விநாயகனை, உத்தமி புதல்வனை, அரன் மகனை, முதல்வோனை
மட்டவிழ் மலர்கொடு - தேன் துளிக்கின்ற மலர்கள் கொண்டு- பணிவேனே- பணியமாட்டேனா?
நூலின் நாயகனை முதன் முறையாக குறிப்பிடும் பொழுது கந்தன், முருகன், குமரன் என்று சொல்லாமல் சுப்பிரமணிஎன்று சொல்வது ஒரு சிறப்பு, அருணகிரி நாதர் வேதங்கள், உபநிடதம் பற்றி அறிந்தவர். வேதத்தில் பெயர் குறிப்பிட்டு சொன்ன  கடவுளான சுப்ரமணியனை ( சிவபிரானை ‘ஸதாசிவோம்’ என்பதுபோல் முருகனை “ஸுப்ரஹ்மண்யோம் என்று) நினைவு கூறும் வகையில் இங்கு, வேதத்தை ஒத்த திருப்புகழில், தொடக்கத்திலே அழைத்திருப்பதுதான் அந்த சிறப்பு. சுப்பிரம்ணீயம் என்ற ஒரு நிலை சாதக்கன் ஒருவன் எட்டிப்பிடிக்கவேண்டிய ஒரு உன்னத நிலை. அதை அடைந்தபிறகு கிடைக்கவேண்டியது எதுவுமிலையென்றே சொல்லாம். சாதகன் வளர்ச்சிக்கு உதவிகிறவன் என்ற பொருளும் சுப்பிரணியத்துக்கு உண்டு. திருப்புகழ் இசைவழிபாடு நடத்தப் போகவிற்கும் சாதகன் ஒருவன்  சுப்ரமணிய நிலையை அடைய வேண்டுவதற்கு ஆரம்பத்திலேயே நினைவூட்டுகின்றார் போலும். வேள்விகளை அனுஷ்டிக்கும் சமயம் வணங்க வேண்டியவன் ‘ஸுப்ரஹ்மண்யன்’. திருப்புகழ் ஓதுவதும் ஒரு வேள்விதானே! இதேப்போல் சுப்ரமணி என்று திருப்புகழில் வெகு சில இடங்களில் மட்டுமே குறிப்பிட்டிருக்கிறார்.

விநாயகனை வழிபடாமல் சென்றதால் சிவனின் தேரின் அச்சு (axil) உடைந்தது. விநாயகன் வந்து உதவி செய்யாதவரை முருகனால் வள்ளியை மணம் செய்து கொள்ள முடியவில்லை. இதை குறிப்பிட்டு, தன் முயற்சியில் வெற்றி அடைய அய்யா கணபதி, உன்னை வணங்குகிறேன் என்கிறார் அருணகிரி.
காளிதாஸன் இரகுவம்ச காவிய ரம்பத்தில் ஜகதப்பிதரெளஎன்று பார்வதியையும், சிவனையும் குறிப்பிட்ட மாதிரி, இங்கு அருணகிரி நாதரும் உலக தாய் தந்தையாரான பார்வதியையும் ( உத்தமி ), சிவனையையும் ( மத்தமும் மதியும் வைத்திடும் அரன்) குறிப்பிட்டிருப்பது நோக்கத்தக்கது.
கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ’ என்று கணபதியை இங்கு குறிப்பிட்டது போல், ‘புலவர் நாவில் உறைவோனே என்று முருகனை வேறோரிடத்தில் அழைக்கிறார். முனிவர்தம் அகத்தினில் ஒளிர் தருவாய் என்று கண்ணனை பாஞ்சாலி சபதத்திலும், ‘கூறு பாவலர் உள்ளத்தில் இருப்பாள் என்று சரஸ்வதியை பாரதி சொல்வது நம் நினவுக்கு வரலாம். வெளியிலெங்கும் தேடவேண்டாம், உள்ளத்தில் உறைபவனை உணர்ந்தால் போதும் என்பதுதான் ஞானிகர்களின் அநுபவம். உள்ளத்தில் கோயில் கட்டி அதற்கு குடமுழுகாட்டிய பூசலார் நாயானார் வரலாற்றை நாம் மறந்துவிட முடியுமா? அன்பர்களின் ஆனந்த கண்ணீரே இறைவனின் நீராடல் என்று அருணகிரி நாதர் பிரிதொரு பாடலில் கூறவில்லையா?
அவனை மட்டவிழ் மலர் கொண்டு பணிவோம்.
சாந்தா & சுந்தர ராஜன்

Wednesday 18 April 2012

திருப்புகழ்: நூலின் பெயர் காரணம்


திருப்புகழ்

நூலின் பெயர் காரணம்

திருப்புகழ் என்றால் என்ன?  திருப்புகழ் என்றால் தெய்வப் புகழ்ப்பாட்டு. தேவாரம் என்றால் தெய்வத்தைப் புகழ்ந்த இசைப்பாடல். அதுபோல் திருப்புகழ் என்றால் ஆண்டவனின் புகழ்பாடும் ஒரு துதிதான் திருப்புகழ். தேவாரம் ஒரு நூலின் பெயர். ஆனால் திருப்புகழோ? நூலின் பெயர் திருப்புகழாய் அமைந்திருப்பதோடு மட்டுமன்றி, நூலில் அமைந்துள்ள 1325 பாடல்கள் ஒவ்வொன்றுமே திருப்புகழ் என்றே வழங்கப்படுவது இந்நூலின் சிறப்பாகும். எப்படி அந்த சிறப்பு வந்தது? திருஎன்றால் அழகு,  ஐஸ்வர்யம் என்று பொருள். அழகனாகிய, ஐஸ்வர்யம் தருகின்ற முருகனை புகழ்வதால், ‘திருப்புகழ்என்று பெயர் உண்டானது என கூறலாம். தெய்வத்தின் புகழை பாடும் எந்த பாடலுக்கும் அது பொருந்த வேண்டுமல்லவா?அம்பா மனம் கனிந்துஎன்று சிவகவிபடத்தில் இடம்பெற்ற அற்புதமான பாடல் ஒன்று. பாபநாசம் சிவன் எழுதியது. அதில் சிந்தையும் என் நாவும் எந்நேரமும் நின் திருப்புகழ் பெயர் மறவாமாயையும் வேண்டும்என்று வரும். ஆனாலும் அருணகிரிநாதரின் பாடல் தொகுப்பு மட்டுமே திருப்புகழ் என்ற பெயர் தாங்கி விளங்குவது ஒருவிதத்தில் அதன் தனிச் சிறப்பைக் காட்டுகிறது. அருணகிரிநாதரே தனது நுலுக்கு அப்படி ஒரு பெயர் கொடுத்தாரா என்றால் அப்படி இல்லை என்றே சொல்ல வேண்டும். பாடல்கள் 1325ம் ஒரே நாளிலோ ஒரே சமயத்திலோ தொடர்ந்து பாடியவை அல்ல அல்லவா..
அண்ணாமலை கோபுரத்திலிருந்து குதித்தவரை தடுத்தாண்டுகொண்டு ‘என்னை பாடு” என்று சொல்ல ‘எப்படி பாடுவேன்’ என திகைக்க முத்தைத்தரு என அடியெடுத்து கொடுக்க அருணகிரி ஸ்வாமிகள் பாடியது நமக்கு எல்லாம் தெரிந்த கதை. பாடியபின் மவுனமாகிவிட்டர். ‘ஏன்ன இது, ‘நாம் பாடச்சொன்னால் இப்படி மவுனமாகி விட்டானே’ எனக் கருதிய முருக பெருமான் அவர் கனவில் தோன்றி வயலூர் வா என அழைத்து எனது மயிலையும், வேலையும், சேவலையும், மாலை அணிந்த தோள்களையும், தெய்வ யானையையும் வள்ளிநாயகியையும், சதங்கை அணிந்த திருவடிகளையும் வைத்துப் பாடு எனக் கூறினார். அவன் அருளால் அவரும் சித்ர கவித்துவமிக்கப் பாடல்களை இயற்றி உலகில் பரவச் செய்தார். அவர் பாடல்களிலேயே திருப்புகழ் என்ற சொற்ப்ரயோகம் வந்திருப்பதை நாம் கவனித்திருப்போம்.
அருணகிரிநாதர் பாடல் தொகுப்புக்கு யாரால் திருப்புகழ் என்று பெயர் சூட்டப்பட்டது? அவரே அவ்வித தலைப்பை கொடுத்தாரா? அவருக்குப்பின் வேறு ஒருவரால் ‘திருப்புகழ்’ எனப்பெயரிடப்பட்டதா?
இதற்கு விடை அளிப்பதற்குமுன் இந்த திருப்புகழ் என்ற பெயர் இந்நூலில் எங்கெல்லாம் வருகிறது என பார்ப்போம்.
  'திருப்புகழ் விருப்பமொடு செப்பு என எனக்கருள்கை மறவேனே'----------பக்கரை
 
 'சொலற்கரிய திருப்புகழை உரைத்தவரை
அடுத்த பகை அறுத்தெறிய உறுக்கியெழும்'---------வேல்வகுப்பு

ஒளி வளர் திருப்புகழ் மதாணி க்ருபாகரனும்--------- வேடிச்சி காவலன் வகுப்பு
                                           
திருப்புகழை உரைப்பவர்கள் படிப்பவர்கள் மிகப் பகைமை செயித்தருளும் இசை பிரிய----------------------------------- கருப்புவிலில்

இருப்பு அவல் திருப்புகழ் விருப்பொடு படிப்பவர்------------------ இருப்பவல்

பழிப்பவர் தமக்கும் திருப்புகழ் நெருப்பு என்று அறிவோம் யாம்---------------சினத்தவர்

திருப்புகழ் ஓதும் கருத்தினர் சேரும்----------வினைக்கின
                                                
திருபுகழை ஓதற்கு எனக்கு அருள்வோனே                  ------------------------- சரியையா

சித்ர கவித்துவ சத்தம் மிகுத்த திருப்புகழை------------------ பத்தர் கணப்ரிய

உன கமல பத(ம்) நாடி உருகி
உ(ள்)ளத்து அமுது ஊற உனது திருப்புகழ் ஓத-------------- பழியுறு சட்டகமான
                                           
மெய் திருப்புகழ் பெறு வயலூரா---------ஆசார வீன

யான் ஆக நாம(ம்) அற்புத திருப்புகழ் தேன் ஊற ஓதி--------------------------  ஆனாத ஞான புத்தி
                  
சிவமமார் திருப்புகழை எனு நாவினில் புகழ ----------------------வலிவாத

திகழ்புகழ் கற்றுச் சொற்கள் பயிற்றி--------தலைமயிர்

ஓதுகின்ற திருப்புகழ் நித்தம் பாடும் அன்பு-------------------- கோல குங்கும

குறித்த நல் திருப்புகழ்  ப்ரபுத்துவ கவித்துவ
குருத்துவத்து எனை பணித்து-----------------இலைச்சுருட்

மயலொடு மலமற அரிய பெரிய
திருப்புகழ் விளம்பு என் முன் அற்புதமெழுந்தருள் குக------------இதமுறு

படிப்பன திருப்புகழ் எடுப்பன முடிப்பன-----------------------துடித்தெதிர்

..............அருணை நாடதில் ஓது திருப்புகழ்
தணிய வோகையில் ஓத எனக்கருள் புரிவாயே ----------------மருவுலாவிடு

உனை பல நாளும் திருப்புகழாலும்
உரைத்திடுவார் தங்கு உளி மேவி -------------------------எனக்கெனயாவும்

அருணகிரிநாதரே தன் பாடல்கலில் திருப்புகழ் என்று குறிப்பிட்டிருப்பதால் பிற்காலத்தில் வந்த கவிஞ்கர்கள் அவரின் பாடல்களை திருப்புகழ் என குறிப்பிட ஆரம்பித்து விட்டார்களோ?. உதாரணமாக, மார்க்க சகாய தேவர் திருவிரிஞ்சைப் பிள்ளைத் தமிழில், “எம் அருணகிரிநாதர் ஓது பதினாறாயிரம் திருப்புகழ் அமுதுமே”  என்றார். அருணகிருநாதர் பதினாறாயிரம் என உரை செய் திருப்புகழை’ என்றும் ‘சந்நிதி அருணகிரி நாதன் திருப்புகழை’ என்றும் ‘திருப்புகழான அருணகிரி நாதன் புகழ்ந்த பல மாலையும்’ எனவும், ‘எம் அருண்கிரிநாதர் ஓதும் பதினாறாயிரம் திருப்புகழ் அமுதமே’ எனவும் ‘எம்மையாள் அருணகிரிநாதர் ஓதும் திருப்புகழ் என்னும் ஆங்கார மணிமார்பன், எனவும், அருணகிரி நாதன் .... உரைபுகலும் தெய்வத் திருபுகழ், எனவும் அருணகிரியின் பாடல்களைத் திருப்புகழ்என்றே குறிப்பிடத் தொடங்கினர். யார் முதலில் சொன்னார் என்பதை எப்படி நிர்ணயிப்பது?.
பின்னால் கால வழக்கில் தொங்கலுடன் பாடப்படும் வண்ணப் பாடல்கள் யாவுமே திருப்புகழ் என்று குறிப்பிடப்பட்டு வரத் தொடங்கின. உதாரணம்: பஞ்சரத்னத் திருப்புகழ்’ ‘பெரியதிருப்புகழ் ராமானுஜதாசர் நூற்றெட்டுத் திருப்பதித் திருப்புகழ்முதலிய திரட்டுகள்.  
எவர் முதலில் சொல்ல ஆரம்பித்தார்கள் என திட்ட வட்டமாக கூறமுடியாவிட்டலும் அருணகிரிஸ்வாமிகள் பாடின ஒரு பாடலிலேயே இதற்கான ஒரு ஆதாரம் இருக்கின்றது.
எவருமே ‘கைத்தல” பாடல்தான் முதல் பாட்டு எனக் கருதினாலும் ஆராய்ச்சியாளர் கூறுவது என்னவென்றால் ‘பக்கர விசித்திரமணி”தான் அவர் பாடிய முதல் பாடல் என்று.
எனது மயிலையும், வேலையும், மாலை அணிந்த தோள்களையும், தெய்வ யானையையும் வள்ளிநாயகியையும், சதங்கை அணிந்த திருவடிகளையும் வைத்துப் பாடுஎன்ற கந்தனின் ஆணைப்படி மயில், வேல், மலர்மாலை, சேவல், தெய்வயானை, வள்ளி, திருவடிகளை வைத்து முதல் பாடலை கணபதி துதியாக அமைத்து அதிலேயே,
முருகனுடைய மயில் - பக்கரை விசித்ர மணி பொற்கலனை இட்ட நடை  பட்சி எனும் உக்ர துரகம்,
மலர்மாலை - நீபப் பக்குவ மலர்த் தொடை
வேல் - அக் குவடு பட்டு ஒழிய பட்டு உருவ விட்டு அருள் கை வடிவேல்
சேவல் - திக்கு அது மதிக்க வரும் குக்குடம்
முருகனுடைய திருவடி - ரக்க்ஷ தரு சிற்றடி
பன்னிரு தோள் - முற்றிய பன்னிரு தோள்
முருகனுடைய திருப்பதி - செய்ப்பதி வைத்து உயர் திருப்புகழ்  விருப்பமொடு செப்பு என எனக்கு அருள்கை மறவேனே 
என ‘பக்கரை விசித்திரமணி’ பாடலை வயலுரில் உள்ள பொய்யா கணபதி முன் பாடினார். முருகன் குறிப்பிட்ட அனைத்தையுமே அமைத்துப் பாடிவிட்டார். தாம் பாடுவது திருப்புகழ் என்று பெயரையும் குறிப்பிட்டுவிட்டார். அவர் இந்த அமைப்பில் பாடிய பதினாறாயிரம் பாடல்களும் திருப்புகழ் என்ற பெயரைப் பெற்றன. இதில் இன்னொரு விசேஷமும் உண்டு. விநாயகப் பெருமானுக்கு உகந்த நைவேத்தியங்களையெல்லாம் வரிசையாகப் பட்டியல் போட்டிருக்கிறார்.

இக்கு, அவரை, நற்கனிகள், சர்க்கரை, பருப்பு, நெய், எள்பொரி, அவல், இளநீர், தேன் (வண்டெச்சில்) பயறு, அப்பவகை, பச்சரிசி பிட்டு, வெள்ளரிப்பழம், இடியப்பம் வகையறா, தனிமூலம் மிக்க அடிசில், கடலை.....
இந்தப் பாடலை அருணகிரிநாதர் பாடியபோது விநாயகர் அதில் மிகவும் லயித்துப்போய், ரசித்து தலையை அசைத்துக் கேட்டாராம். திருப்புகழ் நூலுக்கு அதிகாரபூர்வமாகப் பாடப்பட்ட முதற்பாடல் வயலூர் விநாயகரைத் துதித்து முருகனின் சிறப்பம்சங்களை அமைத்து முருகன் ஆணையிட்டது போலப் பாடிய 'பக்கரை விசித்ரமணி' திருப்புகழ் பாடல்தான். அந்த பாடலில்தான் கணபதியை வித்தக மருப்புடைய பெருமாளே! என் விளித்து 'உயர் திருப்புகழ் விருப்பமொடு செப்பென எனக்கு அருள்கை மறவேனே என்கிறார் எதை கூற அருள் வேண்டுகிறார்? “திருப்புகழை”. ஓப்புதல் அளித்தவர் யார்? அந்த பொய்யா கணபதி. அதனால் அருணகிரியின் பாடல்களுக்குத் திருப்புகழ்என்ற பெயர் அளித்தது வயலூர்ப் பொய்யா கணபதியேதான்!  

-    சாந்தா & சுந்தரரஜன்

Friday 13 April 2012

நந்த(வ)ன புத்தாண்டு


திருப்புகழ் அன்பர்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நந்த(வ)ன புத்தாண்டு வாழ்த்துக்கள்


அன்புடன்
பாலு சார்

Sunday 8 April 2012

விநாயகர் சரணம்


திருப்புகழ் அன்பர் திரு ஹரிஹரன், முலுண்ட், மும்பை அவர்களின் படைப்பு,


"அன்பர்களின் சிந்தனைக்கு..."