Thursday 31 August 2017

அபிராமி அந்தாதி 16


                                                      அபிராமி அந்தாதி  16

கிளியே கிளைஞர் மனத்தே கிடந்து கிளர்ந்து ஒளிரும்
ஒளியே ஒளிரும் ஒளிக்கு இடமே எண்ணில் ஒன்றும் இல்லா
வெளியே வெளி முதல் பூதங்கள் ஆகி விரிந்த அம்மே
அளியேன் அறிவு அளவிற்கு அளவானது அதிசயமே

தொகுத்து அளித்துள்ள அன்பரின் விளக்கம்.

கிளியே 

அழகும் குரலினிமையும் வாய்ந்த கிளி நாம் சொல்வதைத் திரும்பச்சொல்கிறது. நாம் சொன்ன வார்த்தைகளைக் கிளி பேசினால் நமக்குஎவ்வளவோ மகிழ்ச்சி.ஏன் தெரியுமா?கிளி நாம் சொன்னதைப்பேசுகிறது என்பது மட்டுமல்ல.அது நமக்காகப் பேசுகிறது.ஒரு குழந்தையிடம் அதன் தாய் பேசுவதைப்பாருங்கள்…! அந்தத் தாய் எவ்வளவு தேர்ந்த அறிஞராக இருந்தாலும்குழந்தையின் மழலை உச்சரிப்பைத்தான் தன் குரலில் பேசுவாள்.
சரியான சொற்களைத் தேர்ந்த உச்சரிப்பில் சொல்ல அவளுக்குத்
தெரியும்.ஆனால் அன்னை தன்னைப்போலவே பேசுகையில்
குழந்தை அடையும் குதூகலம் அவளுக்கு மிகவும் உகப்பானது.
அதுபோல் அம்பிகையாகிய அன்னை அடியவர்களின் சிரமங்களை
இறைவனிடம் எடுத்துச் சொல்வாளாம் .
“வேய்முத்துப் பந்தரின்கீழ் இறைவனும் நீயும் இருக்கையில் என் மனக்குறை சொன்னால் உன் வாய்முத்து உதிர்ந்திடுமோ”
என்று அடியவர் ஒருவர் கேட்டதும் இந்த உரிமையில்தான்.
எனவே அபிராமிபட்டர் அன்னையை கிளியே என்று அழைக்கிறார்.
கிளைஞர் மனத்தே கிடந்து கிளர்ந்து ஒளிரும் ஒளியே - 

கிளைஞர் என்பதுஅன்னையின் அடியவரைக் குறிக்கும். அன்னை ஒரு மரமெனில் அதன் கிளைகளாக அவளது அன்பர்கள் உள்ளனர்... எனவே அவளது அடியவரை கிளைஞர் என்று .குறிப்பிடுகிறார்.

கிளர்ந்தல் நல்ல எண்ணங்கள் உருவாகுதல் அது எவர் மனத்தில் உருவகுமோ அவர்கள் கிளைஞர்.எனவே கிளியே, கிளர்ந்து, என்பதற்கு பொருந்தும் வகையில் கிளைஞ்ர் என்ற சொல்லைப்போட்டு இருக்கலாம் 

கிளையென்றால் என்ன? ஒன்றிலிருந்து ஒன்று வருவது. அந்த ஒன்றிலிருந்து மற்றொன்று. இப்படி கிளைத்துக் கொண்டே இருக்கும். அதுபோல அன்னையைப் பற்றிய எண்ணம் கிளைத்துக் கொண்டே இருப்பவர்கள் கிளைஞர்கள்.

இளைஞர்கள் மனதில் ஒரு எண்ணம் உண்டானால் அது வேறொரு எண்ணத்திற்குத் தாவி...அங்கிருந்து இன்னொரு இடத்திற்குப் போகும் 


ஆனால் கிளைஞர்கள் அம்பிகையைப் பற்றிச் சிந்தித்தால் அது அம்பிகை பற்றிய இன்னொரு கிளையாகி...அது மற்றொரு  கிளையாகி......


ஒளிரும் ஒளிக்கு இடமே - 

உன்னை எப்போதும் சூழ்ந்திருக்கும் அடியார்களின் மனத்தில் எப்போதும் இருந்து சுடர் விட்டு ஒளிரும் ஒளியே!

அப்படி ஒளிக்கும் ஒளிக்கு இடமானவளே!அவ்வொளி ஒளிரும் இடமான அத்தனை உள்ளங்களின் ஆன்மாவும் நீயேதான்......ஒலியும் அவளே ஒளியும் அவளே
எம்பெருமாட்டியை த்யானம் செய்பவர்க்கு அவள் ஒளி வடிவாகக் காட்சி தருவாள். அவளுடைய தேஜோமய உருவத்தைத் தியானிக்கிறார்கள். அம்பிகை தன் ஜோதி வடிவத்தை அன்பர்கள் உள்ளத்தே நிறுத்தி மேன்மேலும் ஒளிவிடும் படி செய்கிறாள்.
" அகந்தை கிழங்கை அகழ்ந்தெடுக்கும்
தொழும்பர் உளக்கோயிற்கு ஏற்றும் விளக்கே" - குமரகுருபரர்
தேவர்களே ஒளிமயமான திருஉரு உடையவர்கள் என்றால் அம்பிகையைப் பற்றி சொல்ல வேண்டுமா என்ன? அவள் ஒளிவடிவை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.
ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம்
449. காந்தி : காந்தி ரூபமாக இருப்பவள். பிறரை வசீகரிக்கும் மேனி ஒளி காந்தி எனப்படும்.
தேஜோவதி : தேஜஸ்ஸை ( ஒளியை )உடையவள்.
ஸ்வப்ரகாஸா : ஸ்வயம் ப்ரகாசமாக இருப்பவள். அதாவது தன்னிடமிருந்து வேறல்லாத ப்ரகாசத்துடன் கூடியவள்.
275. பானு மண்டல மத்யஸ்த்தா - சூரிய மண்டலத்தின் நடுவில் இருப்பவள்.
240;. சந்த்ரமண்டல மத்யகா - சந்திர மண்டலத்தின் மத்தியில் இருப்பவள்.
எண்ணில் ஒன்றும் இல்லா வெளியே -

எண்ணிப்பார்த்தால் சூன்யமாய் இருக்கும் வெட்ட வெளியானவளே!
உன்னை என்னதான் சொல்லி வர்ணணை செய்தாலும், உன்னை நான் தியானம் செய்யும் செய்ய எண்ணும் போது நீ ஒன்றும் இல்லாதவளாக அரூபியாக அல்லவா காட்சியளிக்கிறாய்... மனிதர்கள் தங்கள் மனத்திற்கேற்ப பற்பல வடிவங்களில் அன்னையைக் கண்டாலும், ஆன்மீகத்தில் நாம் முன்னேறிச் செல்லச் செல்ல இறைவடிவம் என்பது ஒன்றுமில்லாததாக வெளியாகத் தென்படுவதை நாம் அறிய இயலும்...

இராமகிருஷ்ண பரமஹம்சரிடம் ஒரு நாத்திகர் இறைவனைக்காண்பி என்று கேட்ட பொழுது அவர் இறைவனைக் காற்றுக்குவமையாக்கினார். காற்றுக்கு வடிவமில்லை... ஆனால் அது எல்லாவிடத்திலும் பரவியிருக்கிறது. அதனை நம்மால் உணர முடிகிறது... அதையே நாம் வெவ்வேறு வடிவ பலூன்களில் அடைக்கும் பொழுது, காற்றின்வெவ்வேறு வடிவ நிலைகளைக் காண இயலுகிறது... இறைத் தன்மை என்பது இதுதான்.
வெளி முதல் பூதங்கள் ஆகி விரிந்த அம்மே -
அண்டசராசரங்களையெல்லாம் படைத்த அகிலாண்ட கோடி நாயகிவெட்ட வெளியாகிய வானம் முதலாய் உள்ள ஐம்பூதங்களாய் (விண், மண், காற்று, தீ, நீர்) விரிந்து  அருள்பாலிக்கிறாள்..

அளியேன் அறிவு அளவிற்கு அளவானது அதிசயமே 
என்னைப் போன்ற எளியவன், சிறியவன் அறிவுக்கும் எட்டுமளவுக்கு நீ உன்னைக் குறுக்கி என்னை உன்பால் ஈர்த்தாயே... பஞ்சபூதங்களாகி விரிந்த அன்னை, இந்த எளியவன் அறிவுக்கும் எட்டுமளவிற்கு சிறியவளானது ஓர் அதிசயமே 

பனைமரம் எவ்வளவு நெடியது? ஆனால், நம் சிறிய கண்களால் அதனை முழுவதுமாகக் காண்கிறோம் அல்லவா? அதுபோலவே, மகத்தான அந்த அம்பிகை அவளது அருள்பெற்ற அடிகளாரது கண்களுக்கு அளவான உருவமாகத் தன்னை சுருக்கிக்கொண்டு காட்சி தருகிறாள்.
அன்னையின் பெருங்கருணையைப் பெற பக்தி மட்டுமே போதுமானது... பக்தி வந்திடில் மற்றன எல்லாம் தொடரும்... 

                                                           பாடலை குருஜி  கற்பிக்கிறார் இசையுடன் 




                                                                                             

                                                   Utube  Link for ANDROID  and   IPAD   PHONE

                                                         https://youtu.be/qUy8RmIn4Ws


                                                                 அன்பர்கள் இசைக்கிறார்கள் 
                                                                                                

                                                            Utube  Link for ANDROID  and   IPAD   PHONE


                                                                                                                                                                                                                                               https://youtu.be/OQ90HuIJ6lA




                                                                  அன்னை அபிராமியே சரணம் 




                                                                                முருகா சரணம் 

No comments:

Post a Comment