Wednesday 23 August 2017

அபிராமி அந்தாதி - 15


                                                    அபிராமி அந்தாதி - 15
                                                                                                


தண்ணளிக்கு என்று முன்னே பல கோடி தவங்கள் செய்வார்
மண்ணளிக்கும் செல்வமோ பெறுவார் மதி வானவர் தம்
விண்ணளிக்கும் செல்வமும் அழியா முக்தி வீடும் அன்றோ
பண்ணளிக்கும் சொல் பரிமள யாமளைப் பைங்கிளியே!!


அன்பரின் விளக்க உரை 


தண்ணளிக்கு என்று முன்னே பல கோடி தவங்கள் செய்வார்- உன் குளிர்ச்சியான திருவருள் பெறுவதற்காக பல கோடி தவங்கள் செய்பவர்


 என்றென்றும் தாம் வெப்பமுடன், ஆங்காரத்தோடு இருந்தாலும், அவள் தன் மக்களான உலகின் மாந்தருக்கு அருளும் அருளோ குளிர்ச்சியானது... இதனால்தான் அவள் தமிழகத்தில் மழையின் பெயரால் மாரியம்மன் என்றழைக்கப் பட்டாள்.. வெம்மை நோயை நீக்கி குளிர்ச்சியான இன்பத்தைத் தருபவள் அன்னை அல்லவா? அதனால்தான் அபிராமிப் பட்டர் இங்கு  திருவருளை மிகக் குளிர்ச்சியானது என்று குறிப்பிடுகிறார்.

மண்ணளிக்கும் செல்வமோ பெறுவார் - இந்த மண்ணுலகம் கொடுக்கும் செல்வங்களை மட்டுமா பெறுவார்?


மதி வானவர் தம் விண்ணளிக்கும் செல்வமும் - சிறந்த வானவர் தம் விண்ணுலகம் தன்னில் வாழ்ந்து அனுபவிக்கும் செல்வமும்


அழியா முக்தி வீடும் அன்றோ - என்றும் அழியாத இன்பம் தரும் முக்தி எனும் வீடு பேறும் அன்றோ பெறுவார்.

பண்ணளிக்கும் சொல் பரிமள யாமளைப் பைங்கிளியே - இசையின் பிறப்பிடமாகும் சொற்களைச் சொல்லும், நறுமணம் வீசும், ஈசனின் தோழியான பசுங்கிளியே.
கிளியே' என்று அழைத்துப் பேசுகிறார் பட்டர். அந்தக் கிளி என்ன பண்ணுகிறது? இனிய பண்களைப் பாடுகிறது. நல்ல சுகந்தமான மணம் கொண்டு திகழ்கிறது.
அம்பாளைக் கிளி என்றதில் ஓர் விசேஷார்த்தம் உள்ளது. கிளியின் உடல் பச்சை. அன் மூக்கு சிவப்பு. சிவன் - சிவந்த மேனியன். அம்மையின் நிறம் பச்சை. ( மதுரை மீனாட்சி அம்மன் பச்சை நிறத் திருமேனியுடன், தனது திருக்கரத்தில் கிளியைக் கொண்டிருப்பதும் காண்க) இவ்விரண்டு நிறங்களும் கலந்திருப்பது சிவசக்தி சம்மேளனத்தைக் குறிக்கும். சிவனும், சக்தியும் சேர்ந்தே பூர்ண வஸ்துவாகின்றது.
ஸ்ரீ லலிதா த்ரீசதீ ( 215) - ஹ்ரீங்கார - பஞ்சரசுகீ - ஹ்ரீங்காரமாகிய கூண்டில் உறையும் பச்சைக் கிளி.

ஆதிசங்கரர் ( நவரத்ன மாலா) - " ஓங்கார - பஞ்சரசுகீ - ஓங்காரமென்னும் கூண்டில் வாழும் கிளி.
அதி கோமளமும், சியாமளமும், சந்த்ரகலை அணிந்ததுமான உன் திருஉருவை த்யானிப்பவனுக்கு எந்த சித்தி தான் சாத்தியமாகாது? அவனுக்கு சமுத்திரம் விளையாடும் குளம். இந்திரனுடைய நந்தவனம் விளையாடும் சோலையாகும். பூலோகம் பத்ராஸனமாகும். ஸரஸ்வதி பணிப்பெண்ணாவாள். ஸ்ரீ தேவி தானாகவே வந்து அவனது வேலைக்காரி ஆகின்றாள்.

அம்பாளின் மாதுர்ய வசனத்தை, ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் " நிஜ ஸல்லாப மாதுர்ய விநிர்பர்த்ஸித கச்சபீ " என்கிறது. தன்னுடைய  பேச்சின்  இனிமையால்கச்சபீ எனப்படும் ஸரஸ்வதி தேவியின் வீணையையும் வென்றவள். .


வீணையில் ஸாஹித்யங்களிலன் ஒலி கேட்காது. ஸ்வர ஒலி மட்டும் தான் கேட்கும். ஆனால் சரஸ்வதி நாத ரூபிணி, சப்தரூபிணி என்பதால் அவள் வீணையில் அக்ஷர ஒலியும், ஸ்வர நாதத்துடன் சேர்ந்து ஒலிக்கும். ஆனாலும் அவ்வக்ஷர ஒலி கிளி, சிசு, இவர்களது மழலை போலவே ஸ்பஷ்டமாகப் புரியாது. இப்படிப்பட்ட ஸரஸ்வதீ தேவியின் வீணை ஒலியையும் தேவியின் பேச்சின் இனிமை வென்றுவிடுகிறது.
இந்த வாக்கினிமையை விளக்குவதாக ஸௌந்தர்ய லஹரீ ( 66) வது பாடல் ஸ்லோகம் " விபஞ்ச்யா காயந்தீ " - சொல்கிறது. ஸரஸ்வதீ தேவி வீணை வாசிக்கும் போது,அதன் இனிமையை ரசித்த தேவீ "ஸபாஷ்" என்று வாய்விட்டு கூற முற்பட்டதுமே, தேவியின் வாக்கின் இனிமையினால் வெட்கிய சரஸ்வதீ தன் வீணையை உறையிலிட்டு மூடினாள் என்று கூறப்படுகிறது.

இப்படிப்பட்ட ஸ்யாமளை என்கிற அந்தக் கிளி என்னெல்லாம் தருகிறதுன்னு கேட்டால், வேண்டுவன எல்லாம் தருகின்றது. ஆனால், எதை வேண்டுவது? அந்தப் பைங்கிளியான அம்பிகையிடம், என்ன வேண்டுவது? எது கேட்டாலும் தந்துவிடும் அந்தத் தாயிடம், என்ன கேட்க வேண்டும்? சொல்லித் தருகிறார் பட்டர். செல்வம் கேட்கலாமா? குபேர நிதியையே அல்லவா கொடுத்து விடுவாள்? ஆனால், என்ன செல்வம் கேட்பது? பட்டர் அழகாக சொல்லுகிறார் : அப்பா, வெகு கஷ்டப் பட்டு, பல கோடி காலம் தவங்கள் செய்து, சாதாரணமான செல்வமா பெறுவது? இல்லை. நீ பெறும் செல்வம் எல்லா செல்வங்களையும் விடவும் மிகச் சிறந்த செல்வமாக அல்லவா இருக்க வேண்டும்? பொன்னும், மண்ணும் கேட்டு என்ன பெறப் போகிறாய்? மண்ணளிக்கும் செல்வத்தினால் என்ன பயன்? அது காலப் போக்கில் அழிந்து விடும். அழியாத செல்வம் அல்லவா நீ பெற வேண்டும்? விண்ணவர் செல்வம் அல்லவா நீ கேட்க வேண்டும்? அந்த தேவர்கள் அனுபவிக்கும் வீடுபெறு அல்லவா நீ கேட்க வேண்டும்? அம்பிகையிடம், அவளையே அல்லவா கேட்க வேண்டும்? அவளது பொற் பாதங்களையே அல்லவா கேட்க வேண்டும்? இதனை விட்டு விட்டு, எனக்கு பொன் வேண்டும், பொருள் வேண்டும் என்றெல்லாம் கேட்பது எவ்வளவு வேடிக்கையாக இருக்கிறது என்று பேசுகிறார் பட்டர் பிரான்
!இதே கருத்தினையே, பெரிய பெரியவாளும் நிறைய இடத்தில் சொல்லி இருக்கிறார். அந்த அம்பிகையிடம், எதுவும் கேட்காமல், அவள் அருள் ஒன்றை மட்டுமே கேட்பதுதான் சிறந்தது என்று சொல்லுவார் பெரியவாள். அதற்கு அழகாக உதாரணம் ஒன்று சொல்லுவார் : "ஒரு குழந்தை அழுகிறது. அதற்கு ஏற்கனவே உடம்பு சரியில்லை. சாக்லேட் கேட்டு அழுகிறது. அம்மா சிறிது நேரம் பார்ப்பாள். பிறகு, போனால் போகிறது என்று கொடுத்து விடுவாள். அந்த அம்மாவிற்கும் தெரியும் - இந்த இனிப்பு குழந்தைக்கு ஆகாது என்று. ஆனாலும், குழந்தை விடாமல் அழுதால், அவளும்தான், என்ன பண்ணுவாள்? இனிப்பையும் கொடுத்துவிட்டு, அதனால் அந்த குழந்தை கஷ்டப்படும்போது மருந்தும் கொடுப்பாள். அந்த மருந்து கசக்கத்தான் செய்யும். வேறே என்ன செய்வது? அந்தக் குழந்தை போல்தான் நாமும் இருக்கிறோம். மனமுருகி ப்ரார்த்தித்துவிட்டு, இது கொடு , அது கொடு என்று ஏதேனும் கேட்டு விடுகிறோம். அந்த அன்னைக்குத் தெரியாதா நமக்கு என்ன வேண்டும் என்று? அவளைப் ப்ரார்த்தித்துவிட்டு, பேசாமல் இருந்து விட்டால், அவளே பார்த்துக் கொள்வாளே" என்று சொல்வார்.
'சிவன் அவன் சிந்தையில் நின்ற அதனால் அவன் அருளாலே அவன் தாள் வணங்கி " என்று பேசுவார் மாணிக்கவாசகப் பெருமான் சிவபுராணத்தில். இதற்குப்  பொருள் : அவனைப் பணியவும் அவன் அருள் இருந்தால்தான் முடியும் என்பது. இதற்கு, இன்னொரு பொருளும் உண்டு என்று தோன்றுகிறது. அவன் அருளைப் பெறுவதன் நோக்கமே, அவன் தாள் பணிவது மட்டும்தான் என்றும் பொருள் கொள்ளலாம் போலிருக்கிறது!அந்த அபிராமியைப் பணியும் வரம் மட்டுமே நாமும் கேட்போம்!! அவள் தாளினைப் பணியும் வரம் மட்டுமே நாமும் பெறுவோம்!
அபிராமி சரணம் சரணம்!!


                                                           பாடலை குருஜி  கற்பிக்கிறார் இசையுடன் 

                                                                                                 


                                                               Utube  Link for ANDROID  and   IPAD   PHONE


                                                      https://www.youtube.com/watch?v=3GaZ7Fi7vlU


                                                                   அன்பர்கள் இசைக்கிறார்கள் 

                                                                                           

                                                                                                 

                                                             Utube  Link for ANDROID  and   IPAD   PHONE

                         https://www.youtube.com/watch?v=RsaA7vbn_VY

                                                                                                                                                                                                                                                                    முருகா சரணம்                

No comments:

Post a Comment