Wednesday, 17 May 2017


அபிராமி அந்தாதி  வரிசை ....பாடல்   1

உதிக்கின்ற செங்கதிர், உச்சித் திலகம், உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம்போது, மலர்க்கமலை
துதிக்கின்ற மின்கொடி, மென்கடிக் குங்குமத் தோயமென்ன,
விதிக்கின்ற மேனி அபிராமி என்றன் விழுத் துணையே"


அன்பரின் விளக்க உரை 
உதிக்கின்ற அந்தக் கதிரோனின் ஒளிக்கீற்றை உச்சித்திலகமாய் அணிந்தவளாய், உணர்ந்து தெளிந்தோர் மதிக்கின்ற மாணிக்கம் போன்று விளங்குபவளாய், மாதுளம் மொட்டு போன்று இருப்பவளாய், தாமரை மலர்களிலே வீற்றிருக்கும் லஷ்மியும் சரஸ்வதியும் துதித்து வணங்கும் மின்னல் கொடி போன்று இருப்பவளாய், மெல்லிய இடை கொண்டவளாய், குங்குமத்தால் ஆனதென்ன போல் சிவந்த மேனி கொண்டவளாய் விளங்கும் அபிராமியே! எனக்கு எப்போதும் துணையாய் நீ இருக்க வேண்டும் என்று ஆரம்பிக்கிறார் அபிராமி பட்டர்.

உதிக்கின்ற அந்தச் செங்கதிர் வெம்மை தருவதில்லை. ஒளி மட்டுமே தருகிறது. ப்ரகாசம் தந்து ஒரு நாளை ஆரம்பித்து வைக்கிறது. வைகறைப் பொழுதிற்கு அறைகூவல் விடுத்து, நம்மை எல்லாம் இருளில் இருந்து மீட்டு எழுப்புகிறது. அபிராமி அம்மை அத்தகைய செங்கதிரைத் திலகமாய் அணிந்து , நம்மை இருள் என்னும் அஞ்ஞானத்லேருந்து காப்பாற்றுகிறாள்.

தாயே! கதிரவன் உன் நெற்றியில் திலகமாகக் காட்சிதருகிறான். உன் பேரெழிலின் முன் அவனது ஒளி மங்கி மழுங்கிவிடுகிறது. உன் நிறம் அருணவர்ணமா? பசுமையா? மாணிக்கமா? மாதுளம்பூ உன் எதிரே நிற்க முடியாமல் உன் நிற அழகில் தோற்றுவிடுகிறதோ? அப்படியானால் ஏன் உன் அடியார்கள், ‘தாடிமீகுஸுமப்ரபா, அருணாம் கருணாதரங்கிதாக்ஷீம், என்று பேசுகின்றனர்? கருணை அலைவீசும் கண்கள் என்கிறார்களே. தாயே, உன் நிறம்தான் என்ன? சிவப்பா? பசுமையா? பாலபாஸ்கரன் நுதல்திலகமா? ஆம், திலகம்தான், இதே காட்சியைத்தான் புதுமைக் கவிஞர், “முற்றிய ஆழியிலே அலைவந்து மோதிஎறிகையிலே, கற்றைக்கதிர் எழவே உமை திருக்காட்சி வியப்பேனடி” என்கிறார்.
அது மட்டுமா?

"உச்சித் திலகம்" என்று சொல்லும் பதம் ரொம்பவும் விஸேஷம்.

"ஸீமந்த ஸிந்தூரி" என்று லலித ஸஹஸ்ரநாமம் சொல்வது போல், உச்சியிலேதான் அணிந்து இருக்கிறாள். அலை அலையாய்ப் பரவும் கேசச் சுருள்கள் அந்த சூரியனின் கிரணங்கள் போல் இருக்கின்றன.

முதலில் திருமுக மண்டலத்தையும் திலகத்தையும் கண்ட அவர் தாயின் திவ்ய ஸெளந்தர்யத்தை ஏற இறங்க ஒரு முறை பார்க்கிறார். மரகதாங்கியா? அல்ல, மதிக்கின்ற, உணர்வுடையோர் மதிக்கின்ற மாணிக்கமாகச் சிவந்த நிறத்தவளாகக் காட்சி தருகிறாள்.

மாணிக்கக் கல் சிகப்பு நிறம். நவரத்னங்கள் இருந்தாலும், "மனிதருள் மாணிக்கம்" என்று யாரையாவது உயர்த்திப் பேசும்போது, மாணிக்கக் கல்லையே உதாரணம் சொல்லுகிறோம்.

இப்படிக் காட்சி தருகிற அன்னையை நோக்கி, “அம்மா, உணர்வுடையோர் மதிக்கின்ற மாணிக்கமல்லவா நீ?” என்கிறார். உணர்வு என்பது எதைக் குறிக்கிறது?

உன்னைப் பிள்ளைத் தமிழாலே வழிபட்ட குமரகுருபார்? அன்பு, பக்தி, வாத்ஸல்யம் இவற்றையே அவர் நுண்ணுணர்வு என்று குறிக்கிறார். அத்தகைய மெய்யடியார்களால் எப்போதும் முப்போதும் மதிக்கப்பெறும் மாணிக்கம் அல்லவா நீ?

மலர்க்கமலை' என்பது யர்? பொதுவாக இது லஷ்மியைக் குறித்தாலும், ஸரஸ்வதியும் கூட தாமரையில் வீற்றிருப்பவள் தான். செந்தாமரை மலரில் இருக்கும் லஷ்மியும், வெண்தாமரை மலரில் அமர்ந்து இருக்கும் ஸரஸ்வதியும் என இருவருமே போற்றும் தெய்வமாகத் திகழ்கிறாள் அபிராமி.

குங்கும அர்ச்சனை ஏற்பவள் அல்லவோ அவள்? அப்படி, குங்கும அர்சனையை ஏற்று ஏற்று, குங்குமத்தால் ஆன மேனியாய் ஆகி விட்டாள் அவள். அந்தக் குங்குமம் நிலைக்கவும் மங்கலம் தங்கவும் அவளே அல்லவோ துணை?

சதாரணமாக, ஆண் தெய்வங்களைப் பாடும்போது பாதாதி கேசாந்தமாகவும், பெண் தெய்வங்களைப் பாடும்போது கேசாதி பாதாந்தமகவும் பாடுவது மரபு.

உதாரணத்திற்கு, பிள்ளையாரைப் பாடும் ஔவையார், "சீதக் களபச் செந்தாமரைப் பூம்பாதச் சிலம்பு" என்று பாதத்தில் இருந்து தொடங்குகிறார்.

கந்தர் சஷ்டிக் கவசமும் கூட, "சஷ்டியை நோக்கச் சரவண பவனார் சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன், பாதம் இரண்டில் பண்மணிச் சதங்கை" என்று தொடங்குகிறது.

சிவபுராணமும் "நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வழ்க!" என்றே தொடங்குகிறது.

லலிதா ஸஹஸ்ரநாமமோ, அம்பிகையின் வர்ணனையை கேசாதி பாதாந்தமாகத் தொடங்குகிறது. "ஸம்பகாஸோக புன்னாக ஸௌகந்திக லஸத் கஸா" - "ஸம்பகம், அசோகம், புன்னாகம் போன்ற புஷ்பங்களின் வாசனையை எல்லாம் இயற்கையிலேயே தன்னகத்தில் கொண்ட கூந்தல்" என்று கேசத்தில் இருந்து தொடங்குகிறது.

விஷ்ணுவிற்கு பாதாதி கேசாந்தம் மட்டுமே ஸ்தோத்ரம் செய்த ஆதி சங்கர பகவத் பாதர், சிவ பெருமானுக்கு பாதாதி கேசாந்தமும் கேசாதி பாதாந்தமும் என இரு விதமாகவும் ஸ்தோத்ரம் செய்திருப்பது சிவ பெருமானை சிவனாகவும் பார்வதியாகவும் என இரு விதமாகவும் பார்த்ததினல்தான்.

இந்த மரபை ஒட்டியே அபிராமி பட்டரும், கேசாதி பாதாந்தமாகவே தொடங்குகிறார்.

இன்னொரு குறிப்பிட வேண்டிய விஷயம், அபிராமி அந்தாதி முழுக்க முழுக்க லலிதா ஸகஸ்ரநாமத்தை ஒட்டியே செல்கிறது.

லலிதா ஸகஸ்ரநாமம் தொடங்கும் போது, "உத்யத் பானு ஸஹஸ்ரபா" - "ஆயிரம் உதிக்கின்ற சூரியர்கள் போன்று வெம்மையில்லாத ஒளி பொருந்தியவள்" என்று தொடங்குகிறது. அபிராமி அந்ததியும், லலிதா சஹஸ்ரநாமத்தின் அடி ஒற்றி, 'உதிக்கின்ற சூரியன்" என்று ஆரம்பிக்கிறது.

இந்தப் பாடல் முழுக்க, அம்பிகையின் சிவந்த நிறமே பேசப்படுகிறது. உதிக்கின்ற செங்கதிரும், மாணிக்கமும், மாதுளம் மொட்டும், குங்குமம் என்னச் சிவந்த மேனியும் என்று இப்படி அத்தனை வர்ணனையுமே அம்பிகையை சிவந்த திருமேனியளாகவே காட்டுகின்றன.

அம்பிகையை செந்நிறமாகக் குறிப்பிடுவது எதற்காக? த்யானம் செய்பவர்கள் நெற்றிப் பொட்டின் நடுவே அம்பிகையின் திருவுருவத்தை வைத்து ஜபித்து ஜபித்து அந்த த்யான விசேஷத்தால் அங்கே செந்நிற ஒளியைக் காண்பதால்தானோ?

எந்தன் விழுத் துணையே = அவள் எந்தன் விழுத் துணையே.

ஒரு இரயில் நிலையத்திற்கோ, கோவில் திருவிழாவிர்க்கோ சின்ன பையனையோ அல்லது பெண்ணையோ அழைத்து செல்லும் அம்மா என்ன சொல்லுவாள். "என் கைய கெட்டியா பிடிச்சுக்கோ. கைய விட்டுறாத " அப்படின்னு சொல்லுவாள். அந்த குழந்தையும் அம்மாவின் கையையை பிடித்துக் கொண்டு கவலை இல்லாமல் திரியும். வேடிக்கை பார்க்கும், வருபவர்கள் போபவர்களை பார்க்கும்..அதுக்கு ஒரு கவலையும் இல்லை . அம்மாவின் கையை பிடித்து இருக்கும் வரை, உலகில் என்ன நடந்தாலும் குழந்தைக்கு ஒரு கவலை இல்லை

சிறந்த துணை. வாழ்கைப் பாதை நீண்டது, சிக்கலானது, ஆபத்து நிறைந்தது. துணையோடு அல்லது நெடுவழி போகேல் என்பது அவ்வை வாக்கு. நமக்கு, நம் வாழ்க்கைப் பாதையில் எப்போதும் துணை இருப்பவள் அபிராமியே. அவள் கையை பிடித்து கொள்ளுங்கள். அவள் உங்களை வழி நடத்துவாள். அப்புறம் என்ன கவலை ? என்ன வேண்டுமானாலும் பண்ணுங்க. அவ கையை மட்டும் விட்டுடாதேங்கோன்னு சொல்லி தரார் பட்டர் நமக்கு.

நாமளும் பட்டர் சொன்னபடி அபிராமி கைய பிடிச்சுண்டே நடக்கலாமா!!

அவா பிண்ணாடியே நடந்துண்டு ஒவ்வொரு அந்தாதியா கேக்கலாமா!!                                                                         அன்பரின் குரலில்                                                                                          

                                                                              குருஜி கற்பிக்கிறார் 


                                                                                                                        


                                                                    அன்பர்கள் குரலில் பாடல் 
                                                                                         

                                                                முருகா சரணம்   

                                                   அன்னை அபிராமி சரணம்                                                       

No comments:

Post a Comment