Thursday, 11 May 2017

அபிராமி அந்தாதி வரிசை


                                                  அபிராமி அந்தாதி வரிசை 

                                                     விளக்கவுரையும் குருஜியின் இசையில் பாடலும் பெருமானின் அருளாலும்,குருஜியின் ஆசியினாலும் 503 திருப்புகழ் பாடல்களை முழுமையாக உன்னத இசையுடன் அனுபவித்தோம்.

செந்திலாண்டவன் அருளாலும்,அன்னை அபிராமியின் பரிபூர்ண கடாக்ஷத்துடனும் குருஜி நமக்கு அளித்துள்ள மற்றொரு அருள் பிரசாதம் அபிராமி அந்தாதியும்,பதிகமும்.ஆடி மாதம்,தைமாதம்முழுவதும்உலகில் உள்ள அன்பர்கள் அந்த தெய்வீக பாடல்களை  இல்லங்களிலும்,கூட்டாகவும் இசைத்து அன்னை அபிராமி தரிசனம் கண்டு பரவசமடைகிறார்கள்.

பரம பொக்கிஷமான குருஜியின் அந்தாதி,பதிகம் இசை வடிவில் 6 ஒலி நாடாக்கள் பெட்டகமாக 2000 ம் ஆண்டு வெளியிடப்பட்டது.

அடுத்து சென்னை அன்பர்கள் தங்கள் வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்கள்.

அதன் குறியீடு மற்றும்  "திருப்புகழ் நவமணிகள் "  (6 டிவிடி  க்கள் ) முதல் டிவிடி யிலும் இடம் பெற்றுள்ளது.

முதலில் அபிராமி அந்தாதி பாடல்களை வரிசையாக குருஜி கற்பிக்கும் முறையிலும், அடுத்து அன்பர்களபின்பற்றும் முறையிலும் அளிக்க விருப்பம் கொண்டுள்ளோம்.


நம் அன்பர்களில் பல துறைகளில் வல்லவர்களாக உள்ளனர்.சொற்பொழிவாளர்கள்,இசைசொற்பொழிவாளர்கள்,விரிவுரையாளர்கள்,உரையாசிரியர்கள்,ஓவியர்கள்,சிற்பிகள் போன்ற அருளாளர்கள் குடத்திலிட்ட விளக்கு போல் தங்கள் சேவையை நம் இயக்கத்தின் பொருட்டுஅர்ப்பணித்து வருகிறார்கள்.

அவர்களில் ஒருவர்தான் அருளாளர் நீலா குமார் அவர்கள்.ஆன்மீகத்தில் மிகவும் ஈடுபட்டுள்ள அவர் திருப்புகழ் சம்பந்தமான பல அரிய கட்டுரைகள் வழங்கி வருகிறார்கள்.சமீப காலமாக தன்  முக நூலில் அபிராமி அந்தாதி பாடல்களுக்கு ,லலிதா சஹஸ்ரநாமத்தை ஓப்ப்பிட்டும்,தொடர்புடைய பல புராண சம்பவங்களை சுட்டிக் காட்டியும் மிக அற்புதமாக விளக்க உரை எழுதி வருகிறார்கள்.


அபிராமி அந்தாதிக்கு பல அறிஞர்கள் உரை எழுதி உள்ளனர்.நம் வலைத்தளத்தின் குறிக்கோள் நம் அன்பர்களுக்கு இடையில் மெளனமாக  சேவை  செய்துவரும் அத்தகைய அருளாளர்களை முக்கியத்துவம் கொடுத்து அவர்களை கௌரவப் படுத்தும் நோக்கில்  அவர்களின் படைப்புகளை தக்கதருணத்தில்  வெளியிட்டு வருவதுதான்..அந்த வகையில் அந்தாதிக்கு அருளாளர் நீலா குமார்  எழுதிவரும் அரிய விளக்க உரைகளை அளிக்க விரும்புகிறோம்.

குருஜி அருளுரையுடன் தொடங்குவோம்.video
                                                                            

முதலில் அபிராம பட்டரின் மகத்தான வரலாறை சுருக்கமாக பார்ப்போம்.

அபிராமி பட்டர் (இயற்பெயர்: சுப்ரமணிய ஐயர்) ஸ்ரீவித்யா நெறி நின்று, யோகமுறைப்படி பராசக்தியை வழிபட்ட ஒரு அந்தணர். இவர் அபிராமி அந்தாதியை இயற்றியவர். இவர் வாழ்ந்த காலம் பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதி முதல் பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதி வரை என கருதப்படுகிறது.
சோழவள நாட்டின் காவிரிக்கரையில் உள்ள சிவாலயங்களில் ஒன்று திருக்கடையூர். அபிராமிவல்லி அமிர்த கடேஸ்வரர் ஆலயமும் ஒன்றாகும். அபிராமி பட்டர் அன்றைய சோழநாட்டுப்பகுதியான திருக்கடையூரில் வாழ்ந்து வந்தார்.இசைத்துறையிலும் பாடல் புனைவதிலும் வல்லவராக இருந்தார். அம்பிகையை வழிபடும் சாக்த நெறியில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டார். ஒளி வடிவில் அம்பிகையைத் தரிசித்து பேரின்பம் கண்டார். ஆனால், இவரின் தெய்வீகநிலையை மற்றவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. பித்தன் என்று வசைபாடினர். அவர்களின் ஏச்சையும் பேச்சையும் அபிராமி பட்டர் ஒரு பொருட்டாக எண்ணவில்லை.

பௌர்ணமி திதி

அக்காலத்தில் தஞ்சையைத் தலைநகராகக் கொண்டு மகாராஷ்டிர வம்சத்தைச் சேர்ந்த முதலாம் சரபோஜி மன்னர் ஆண்டு வந்தார் (கி. பி. 1675–1728). தெய்வ பக்தியும் மதப்பற்றும் மிகுந்தவர். அவர் ஒரு தை அமாவாசை தினத்தன்று காவிரி சங்கமத்தில் நீராட எண்ணித் தம் பரிவாரங்களுடன் காவிரிப்பூம்பட்டினம் சென்று தம் நேர்த்திக்கடனை நிறைவு செய்தபின், ஸ்ரீ அமிர்தகடேசுவரர், ஸ்ரீ அபிராமி அம்பிகையையும் தரிசனம் செய்துகொள்ளவேண்டும் என்ற ஆவல் மிகுதியால் திருக்கடவூரை அடைந்தார்.
அரசர் திருக்கோயிலுக்கு உள்ளே செனறபொழுது கோயிலில் அபிராமி பட்டர் அம்பிகையின் முன் இவ்வுலக நினைவு ஏதுமின்றி தியான நிலையில் அமர்ந்திருந்தார். மன்னரின் வருகையைக் கூட கவனிக்காமல் பட்டர் இருப்பதைக் கண்ட மன்னர் வியப்பில் அருகில் இருந்தோரை நோக்கி, “இவர் யார்?” என்று கேட்டார். அருகில் இருந்தவர்கள், “இவர் ஒரு பித்தர்; தம் குல ஆசாரங்களை எல்லாம் கைவிட்டுவிட்டு ஏதோ ஒரு துர்தேவதையை வழிபடுகின்றவர்” என்று கூறினார்கள்.ஆனால், சரபோஜி மன்னர் அவர்கள் சொன்னதை நம்பவில்லை.ஆகையால் திரும்பி வரும்போது பட்டரின் உள்ளுணர்வை அறிய விரும்பிய மன்னர், பட்டரே! இன்று என்ன திதி? என்று கேட்டார். அம்பிகையின் அருள்மிகு தோற்றத்தை ஆனந்தமாய்க் கண்டு பரவசமுற்றிருந்த நிலையில் இருந்த அபிராமி பட்டர் வாய் குழறி, “இன்று பௌர்ணமி” என்றார்.
அரசரும் அவருடைய பரிவாரமும் சென்ற பின்னர், தியானம் கலைந்தெழுந்த அபிராமி பட்டர் நிகழ்ந்ததை உணர்ந்து பெரிதும் வருந்தினார். ஏற்கெனவே ஊரும், உலகமும் தம்மைப் பித்தன் என்று சொல்லி எள்ளி நகையாடுவதை மெய்ப்பிப்பது போலவே நடந்த இந்த நிகழ்ச்சியால் மனம் வருந்தி, அரசர் வரும் வேளையில் கவனக்குறைவால் ஏற்பட்ட தவறிலிருந்து அம்பிகையே தன்னைக் காத்தருளவேண்டும் என்று வேண்டிக்கொண்டு அபிராமி சந்நிதி முன் ஒரு ஆழமான ஒரு குழியை வெட்டி, அதில் விறகை அடுக்கி தீமூட்டினார். அதற்கு மேல் ஒரு விட்டமும், நூறு கயிறுகளாலான உறியையும் கட்டி, அதில் ஏறி அமர்ந்து கொண்டார். அம்பிகை எனக்குக் காட்சி கொடுத்து இந்தப் பழியை நீக்காவிட்டால் என் உயிரை விடுவேன்” என்று சபதம் செய்து விட்டு, அபிராமி அந்தாதியைப் பாட ஆரம்பித்தார்."உதிக்கின்ற செங்கதிர்" என்று ஆரம்பிக்கும் இந்த அந்தாதிப் பாடல்களில் ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும் உறியின் ஒவ்வொரு கயிறையும் அறுத்துக் கொண்டே வந்தார்.அப்போது எழுபத்தொன்பதாவது பாடலாகிய,
        “விழிக்கே அருளுண்டு அபிராம வல்லிக்கு வேதம்சொன்ன
        வழிக்கே வழிபட நெஞ்சுண்டு எமக்கவ் வழிகிடக்கப்
        பழிக்கே சுழன்றுவெம் பாவங்க ளேசெய்து பாழ்நரகக்
        குழிக்கே அழுந்தும் கயவர்தம் மோடென்ன கூட்டினியே”
என்ற பாடலை பாடிய உடன், ஸ்ரீ அபிராமியம்பிகை பட்டருக்கு வெளிப்பட்டுத் தோன்றிக் காட்சி கொடுத்தருளினாள்.தன் தாடங்கம் என்னும் தோடினை எடுத்து வானவீதியில் தவழ விட்டாள். அந்த தாடங்கம் வானில் மிதந்து பலகோடி நிலாக்கள் ஒன்றுகூடினாற் போல் ஒளியைப் பொழிந்து பெளர்ணமியைப் போல பிரகாசித்து ஜொலித்து. அவள் பட்டரிடம், நீ வாய் தவறி மன்னனிடம் கூறிய சொல்லையும் மெய்யே என நிரூபித்தேன். நீ தொடங்கிய அந்தாதியை தொடர்ந்து பாடு, என்றாள். அம்பிகை அருள்பெற்ற அபிராமிப்பட்டர் பரவசமுற்றார். அதோடு, தம் அனுபூதிநிலையை வெளிப்படுத்தும் அந்தாதிப் பாடல்களைப் பாடி நிறைவு செய்தார்.
மன்னர் அபிராமி பட்டரிடம் மன்னிப்பு கோரினார்.அரசர் பட்டருக்கு ஏராளமான மானியம் கொடுத்துத் தலைமுறைத் தலைமுறையாக அனுபவித்துக் கொள்ளும்படி வேண்டினார்.
இந்தப்பாடல்கள் தமிழ் இலக்கியத்தில் "அபிராமி அந்தாதி" என்றப்பெயரில் வந்தன, அந்தாதி என்றால் (அந்தம்-முடிவு, ஆதி-துவக்கம்) முதல் பாடல் எந்த வார்த்தையில் முடிந்ததோ அதே வார்த்தையில் அடுத்தப்பாடல் தொடங்க வேண்டும். அபிராமி அந்தாதியில் மொத்தம் நூறு பாடல்கள் உள்ளன. இவையனைத்தும் ஒரே இரவில் பாடப்பெற்றது. அபிராமி அந்தாதியில் இன்னொரு சிறப்பம்சம் என்னவென்றால் முதல் வரி 'உதிக்கின்ற'என்ற வார்ததையுடன் ஆரம்பிக்கும் முதல் பாடல் அதே வார்த்தையை கடைசி வார்த்தையாகக் கொண்டு நூறாவது பாடல் முடிவடைகிறது.


அந்தாதியின் காப்பு (நூல்)


தாரமர்க் கொன்றையும் சண்பக மாலையும் சார்த்தும் தில்லை
ஊரர்தம் பாகத்து உமைமைந்தனே! உலகேழும் பெற்ற
சீரபிராமி அந்தாதி எப்போதும் என் சிந்தையுள்ளே
காரமர் மேனிக் கணபதியே! நிற்கக் கட்டுரையே”

அருளாளர் நீலா குமாரின் விளக்கவுரை 

"தாரமர்' என்ற சொல்லுக்கு இரு பொருள் உண்டு. கொத்துக் கொத்தாக இயற்கையிலேயே மாலை போல பூக்கும் தன்மை உடையதால், கொன்றை மலரை 'தாரமர் கொன்றை' என்பார்கள். 'கார்' என்றால் வண்டு. 'வண்டு வந்த அமரும் கொன்றை மலர்' என்றும் ஒரு பொருள் உண்டு. அதற்கு எதிர்மறையாக செண்பக மலரில் வண்டு வந்து அமராது. இந்த இரண்டையும் அணியக் கூடிய சிதம்பரத்தில் எழுந்தருளியுள்ள நடராஜப் பெருமானின் இடது பாகத்தில் எழுந்தருளியிருக்கின்ற உமையவள், பூர், புவ, ஸ்வஹ, மக, ஜன, தப சத்ய என்னும் ஏழு உலகங்களைக் கொண்டவள். 

கொன்றை மலருக்கும், செண்பகப்பூவுக்கும் ஒரு வரலாறு உண்டு. ஒருமுறை பிருகு மாமுனிவர் சிவனை மட்டும் வண்டு ரூபம் கொண்டு வலம் வந்தார். அம்பிகையை அவர் ஏறெடுத்தும் பார்க்கவில்லை. இதனால் அம்பிகை சிவனிடம் கோபம் கொண்டு கடம்ப வனம் சென்று சயனத்தில் ஆழ்ந்து விட்டாள். சிவனும் அங்கு எழுந்தருளி அம்பிகையை சமாதானப்படுத்த முயற்சித்தார். ஆனால் ஒரே முடிவாக அம்பிகை, 'எப்போது நான் வேறு, தாங்கள் வேறு என பக்தர்கள் கருதுகிறார்களோ, அப்போது எனக்கு தங்களுடன் வாழும் தகுதி இல்லை. இனி தான் கயிலை வரப்போவதில்லை...” என்று கூறிவிட்டாள். அம்பிகையை சமாதானப்படுத்த வழியில்லை என்றானவுடன், இறைவன் ஓர் உபாயம் செய்தார். கண் மூடி சயனித்திருந்த அம்பிகையின் திருப்பாதங்களில் தன் சிரசை வைத்து வணங்குவது போல ஒரு பாவனையை சிவபெருமான் செய்ய... பதறி எழுந்தாள் ஜகன்மாதா. உடனே அம்பிகையின் திருப்பாதங்கள் கொன்றை மலராய் மாறி, சிவனின் ஜடாமுடியில் சென்று அமர்ந்து கொண்டது. “சுவாமி! என்னை மன்னிக்க வேண்டும். தங்கள் ஜடாமுடி எனது பாதத்தில்பட்ட பாவம் நீங்க இனி என் உருவிலுள்ள கொன்றை மலர், தங்கள் சிரசில் நீங்காது இடம் பெறட்டும். மலர்கொத்து சிரசில் இருப்பது தோஷமாகாதல்லவா...?' என்ற அன்னை சிருங்காரக் குரலில் மேலும் சொல்வாள். “என் கரங்கள் மட்டும் என்ன பாவம் செய்தன? அவை செண்பக மாலையாகத் தங்கள் கழுத்தினை அலங்கரிக்கட்டும்”. இப்படி சொல்லிக் கொண்டே அம்பிகை சிவனின் கழுத்தில் தன் கரங்களைக் கோர்த்துக்கொள்ள அவை அழகிய செண்பக மாலையாக மாறின. தேவி மகிழ்வுடன் சிவனை நோக்க, இறைவன் கூறுவார்: “தேவி! நான் வேறு, நீ வேறு என்ற நிலை என்றும் இனி இராது சிவம் இல்லையேல், சக்தி இல்லை சக்தி இல்லையேல் சிவன் இல்லை. எனவே இன்று முதல் என் உடலின் இடப்பாகத்தை உனக்களித்தோம். இனி உமையொரு பாகத்தவனாக, உமா மகேஸ்வரனாகவே நாம் திகழ்வோம்,” என்றார். உடனே சிவசக்தி ஐக்கியம் கொண்டனர். பின் அர்த்தநாரியாக (அர்த்தம்பாதி, நாரிபெண்) இறைவன் அருட்காட்சி தந்தார். 

இச்செய்தியை அறிந்த பிருகு முனிவர் மீண்டும் வண்டு உருவம் தாங்கி அங்கே வந்தார். சிவபெருமான் ஜடாமுடியில் அம்பிகை சூட்டிய கொன்றை மலர்க்கொத்தின் மீது அமர்ந்து வணங்கி பிறகு எழுந்து பறந்தார். உடனே சற்றே கோபமான குரலில், “பிருகு முனிவரே!” என்றழைத்த அம்பிகையின் அழைப்புக்குக் கட்டுப்பட்ட பிருகு திரும்பியும் பறந்து வந்து, “அகர உகர மகார ரூபமான உலகையாளும் உமையம்மையே! என்ன விஷயம் கூறுங்கள்!” என்றார். “முன்பு நீ பெருமானை மட்டும் வணங்கிச் சென்றாயல்லவா.. எனவே இறைவனிடம் வாதாடி அவர் உடலில் இடப்பாகத்தை நான் பெற்றிருக்கிறேன். இப்போதோ நீ அவர் சிரசில் சூடியுள்ள கொன்றை மலரை மட்டும் வணங்கி, செண்பக மாலையை ஏறெடுத்தும் பாராது போவது ஏனோ?” என்றாள் அம்பிகை. 

வண்டு உருவம் தாங்கியிருந்த பிருகுவும் சுயவடிவம் பெற்று, “அன்னையே கொன்றை மலராய் மாறி ஐயன் தலையில் அமர்ந்திருப்பது தங்கள் திருப்பாதங்கள். செண்பக மாலையாய் அவர்தம் கழுத்தில் தவழ்வது தங்கள் திருக்கரங்கள். நானோ மோட்ச கதி வேண்டி தவம்புரியும் கோர தவத்தோன். எனவே தான் சதாசர்வ காலமும் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல் மற்றும் அருளல் என ஓய்வேயின்றி ஐந்து வினைகளும் புரியும் தங்கள் கரங்களாகிய செண்பக மாலையை நாடாமல், சரணடைந்தவர்க்கு சடுதியில் முக்தி தரும் தங்கள் பாதார விந்தங்களாகிய கொன்றை மலர்க்கொத்தில் அமர்ந்து வணங்கிச் செல்கிறேன்...” என்று பணிவுடன் கூறினார். அதைக் கேட்டு மகிழ்ந்த அம்மையப்பர் ஏக உருவில் பிருகு முனிவருக்கு உடனே மகிழ்ந்து அருளாசி தந்து மறைந்தனர்

. அத்தகைய பெருமை வாய்ந்த கொன்றை மலரையும், செண்பக மாலையும் சாத்தும் தில்லை நடராஜரின் பாகத்தவளாகிய உமையவளின் மைந்தனே மகாகணபதி. 'ஸ்ரீகாமேஸ்வர முகாலோக கல்பிதஸ்ரீ கணேஸ்வர நம:' என்று ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் போற்றும். ஸ்ரீ காமேஸ்வரரின் முக தரிசனத்தாலேயே அம்பிகை கணேஸ்வரரைப் பெற்றாள். எதையும் தொடங்கும்போதே விநாயகரை வழிபட்டுத் தொடங்கும் மரபு வழுவாமல் நிதானமாக விநாயகர் காப்பில் தொடங்குகிறார் அபிராமிபட்டர் என்பதில் எந்த வியப்புமில்லை

ஆனால் திருக்கடவூரிலுள்ள அம்பிகையைப் பாடும்போது அங்கிருக்கும் விநாயகரை விட்டுவிட்டு தில்லையிலுள்ள கற்பக விநாயகரைப் பாடுகிறார் என்பதுதான் வியப்பு. இத்தனைக்கும் திருக்கடவூரிலுள்ள விநாயகர்மீது தனியாகவே பின்னாளில்பதிகம் பாடப்போகிறவர்தான் அபிராமிபட்டர். அப்படியானால் அபிராமிஅந்தாதியின் விநாயகர் காப்புச் செய்யுளில் திருக்கடவூர் விநாயகரை விட்டுவிட்டு தில்லை விநாயகரைப் பாட என்ன காரணம்? இப்படி வேண்டுமானால் இருக்கலாம்.

திருக்கடவூரிலுள்ள பிள்ளையாருக்குதிருட்டுப் பிள்ளையார் என்று பெயர். அமரர்களும் அசுரர்களும் அமுதக்குடத்தை முன்னிட்டு சண்டையிட்டுக் கொள்ள அந்தக் கலசத்தைத்தூக்கி கமுக்கமாக வைத்துக் கொண்ட கள்ளவாரணப் பிள்ளையார் அவர்.

தில்லையில் இருப்பவரோ கற்பக விநாயகர். எல்லாவற்றையும் தருபவர். 

அந்தாதி என்னும் அமுதக் கலசத்தை கள்ளவாரணப் பிள்ளையார் கைப்பற்றிக் கொள்ளக்கூடாதென்று கூட அதனைக் காக்கும் பொறுப்பை கற்பக விநாயகருக்கு அபிராமி பட்டர் அளித்திருக்கலாம்

எது எப்படியோ! அபிராமி அந்தாதி முழுமையிலும் தென்படும் ஒரு தரிசனத்தை விநாயகர் வணக்கப் பாடலிலேயே தொடங்கி வைக்கிறார் அபிராமிபட்டர். அபிராமி என்னும் அனுபவம் விகசிக்கும் அந்தாதியில் அம்மையையும் அப்பனையும் ஏகவுருவில் அர்த்தநாரீசுவரத் திருக்கோலத்திலேயே காட்டுவார் அபிராமி பட்டர். அந்தக் காட்சி காப்புச் செய்யுளிலேயே துவங்குகிறது. உலகேழையும் பெற்ற புவனமுழுதுடைய அம்பிகையாம் அபிராமியின் அந்தாதி, எப்போதும் என் சிந்தையில் நிற்க அருள்புரிவாயாக என்று அபிராமி பட்டர் வேண்டுகிறார். விநாயகப் பெருமானின் திருமேனி மேகநிறம். “”நெஞ்சிற் குடிகொண்ட நீலமேனி” என்பது விநாயகர் அகவல். விநயகருக்கு நிறமும் குணமும் கார்மேகம்தான். எப்படி வானிலுள்ள கார்முகில் தன்னில் தண்ணீரை மீதம் வைக்காமல் முழுமையாகப் பொழிகிறதோ அதுபோல் கருணையைக் கரவாது பொழிபவர் கணபதி.அந்த விநாயகர் திருவருளால் முகிலில் இருக்கும் வானமுதம் போலவே தன் உயிரில் இருக்கும் தேனமுதமாகிய அபிராமி அனுபவத்தை கரவாது வெளிப்படுத்தும் கவிதைப் பெருக்காக அபிராமி அந்தாதி அமைய வேண்டும் என்று விநாயகரை வழிபடுகிறார் பட்டர்

. ஒரு நூலுக்கான காப்புச் செய்யுளாக மட்டும் இப்பாடல் அமையவில்லை. “சீரபிராமி அந்தாதி எப்போதும் என் சிந்தையுள்ளே”. அபிராமி என்னும் முடிவுறாத் தொடர்சுழல் அனுபவம் எப்போதும் தன் சிந்தையில் நிலைபெற்றிருக்க வேண்டும் என்பதற்கான விண்ணப்பமாகவும்இந்தப் பாடல் அமைஞ்சிருக்கு. ஆரம்பமே எவ்ளோ அழகாயிருக்கு இல்லையா!! "


                                                             பாடலை குருஜி கற்பிக்கிறார்.video
                                                                                                               
                                                                        அன்பர்கள் 

video
                                                                                 

அபிராமி அந்தாதி தொடரும் 

முருகா சரணம்                           

No comments:

Post a Comment