Wednesday 23 May 2018

வைகாசி விசாகம்


                                                   வைகாசி விசாகம் 
                                                                

                                                                 
                                                                 
                                                                      
வைகாசி மாதத்தில் விசாக நட்சத்திரத்தில் வரும் புனிதமான பௌர்ணமியை 'வைகாசி பூர்ணிமா' அல்லது 'வைசாகி பூர்ணிமா' என்று அழைக்கின்றனர். அந்தப் பௌர்ணமி அன்று மேலே விரிந்திருக்கும் ஆகாயம் பிரகாசமாக இருக்கும். வெட்ப பிரதேசமான நம் நாட்டின் ஆகாய வெளியில் வெள்ளியைப் போல மின்மினுக்கும். தன்னுடைய உடலை வெளிக் காட்டியபடி மெல்ல சந்திரன் வெளி வந்து ஆகாயத்தில் உள்ள வெள்ளை மேகங்கள் மீது மெல்லத் தவழும் பொழுது ஆகாயங்கள் அதற்கு வணக்கம் கூறி வரவேற்பதைப் போன்ற உணர்வு ஏற்படுகின்றது. இது இயற்கையின் அற்புதங்களில் ஒன்றாகும். இப்படியாக நமக்குப் புரியாத வகையில் இதமான வெளிச்சத்தை வழங்கியபடி வெளி வரும் சந்திரனின் பௌர்ணமி தினம் புத்த மதத்தினருக்கும் இந்துக்களுக்கும் விஷேமான தினமாகும்.

'விசாகன்' எனப்படும் முருகனின் பிறந்த நட்சத்திரமே 'விசாகம்' என்பதினால் அது மிகவும் புனிதமான தினமாகக் கருதப்படுகின்றது. விசாக நட்சத்திர தினத்தின் அன்று மூன்று நட்சத்திரங்கள் ஒன்று சேர்வதினால் ஆகாயம் ஒரு நுழை வாயிலைப் போலத் தெரிகின்றது. 'வைகாசி'யில் பதினான்காம் நாள் அன்று தோன்றும் அந்த நட்சத்திரத்தன்று சூரியன் பூமத்திய ரேகையைக் கடப்பதினால் அந்த மாதம் முழுவதும் அதிக வெட்பமாக உள்ளது.

வைகாசி விசாக தினம் 'சைவ', 'வைஷ்ணவ', மற்றும் புத்த மதத்தினருக்கும் முக்கியமானது. சைவர்களைப் பொறுத்தவரை 'வைகாசி விசாகம்' என்பது 'முருகன் அவதரித்த தினம்'. வைஷ்ணவர்களுக்கு அது 'பெரியாள்வார் ஜெயந்தி'. மற்றும் புத்த மதத்தினருக்கு அது அற்புதங்கள் நிகழ்த்திய, ஞானம் பெற்ற புத்த மகான் 'மஹாசமாதி' அடைந்த தினம். 

முருகன் பிறப்பை ஷண்முக அவதாரம் என்கின்றனர். 'சூரபத்மன்', 'சிங்கமுகன்' போன்றவர்களின் கொடுமைகளைத் தாங்க முடியாத தேவர்களின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு, 'சூரபத்மன்', 'சிங்கமுகன்' மற்றும் 'தாரகன்' என்ற மூன்று அசுரர்களையும் அழித்து தர்மத்தை நிலை நாட்ட முருகன் அவதரித்த தினம் அது. அந்த மூன்று அரக்கர்களும் பல்வேறு வரன்களைப் பெற்றிருந்து பலம் பெற்று இருந்ததினால் தேவர்களை துன்புறுத்தி வந்தனர். அதனால் தேவர்கள் சிவபெருமானை வேண்டி துதித்து வேண்ட சிவபெருமான் ஆறுமுகனைப் படைத்தார். 'குமாரகுருபரர்' கூறியதைக் கேளுங்கள்:

ஐந்து முகத்தோடோடு முகமும்
தந்து திருமுகங்கள் ஆறாக்கி

திருமூலர் ஆயிரம் ஆண்டுகள் முன் எழுதிய தன்னுடைய திருமந்திரத்தில் அந்த செய்தியை இப்படியாக எழுதினார்:

எம்பிரான் முகமைந்தோடு மருயா
எமே பிறனுக் கதோமுகமருல

தன்னுடைய நெற்றிக் கண்ணில் இருந்து சிவபெருமான் ஆறு நெருப்புத் துளிகளை வெளியேற்ற, அது ஜொலித்தவாறு உலகில் வெளி வந்தது. அந்த பொறிகளை 'வாயு'வும் 'அக்னி'யும் கொண்டு போய் 'கங்கை'யில் தள்ள, அது அவற்றை 'சரவணப் பொய்கை'யில் தாமரை மலர்களும் கோரைப் புற்களும் இருந்த இடத்தில் வெளித் தள்ளியது. தாமரையை நல்ல இதயம் போலவும் நாணல் புதரை உடலின் நரம்புகள் போலவும் தத்துவார்த்தமாகக் கருத வேண்டும். அந்த நதி தெய்வீக உருவமாக இருந்ததினால் 'தாமரை'யும் மற்றும் 'நாணல் புதர்' என அனைத்தும் ஒன்றுடன் ஒண்றிணைந்து உள்ள தத்துவம் விளங்கும்.

ஒருவனின் ஆறு குணங்களான உடல், மூச்சு, மனம், உணர்வு, விவேகம் மற்றும் அகம்பாவங்களைக் குறிப்பவையே முருகனின் ஆறு முகங்கள்.
ஏரியில் விழுந்த அந்த பொறிகள் ஆறு குழந்தைகளா மாறி விட, அவற்றை ஆறு கிருத்திகைகள் எடுத்து வளர்த்தன. அந்த ஆறு குழந்தைகளையும் சக்தி தேவி எடுத்து அணைக்க, அந்த ஆறு குழந்தைகளும் ஆறு முகமும் பன்னிரண்டு கைகளையும் கொண்ட ஒரே ஒரு குழந்தைகயாக மாறின. அதுவே வைகாசி மாத பூர்ணிமாவில் தெய்வீகம் பொருந்திய ஷண்முக அவதாரம் எனக் கூறப்பட்டது.

கச்சியப்ப சிவாச்சாரியார் "உலகத்திற்கு விமோசனம் தருவதெற்கென்று முருகன் ஆறு முகங்களுடனும், பன்னிரண்டு கைகளுடனும் ஒன்றுக்கு மேற்பட்டவராகவும், ஆரம்பம் அற்றவராகவும், உருவம் இல்லாத உருவத்துடனும் ஒளி வெள்ளம் போன்ற பிரும்மனாக அவதரித்தார்." என்று வலிப்பு படுத்துகிறார்.

அறுவமும் உருவமுமாகி அனாதியாய் பலவாய் ஒன்றை
பிரும்மமாய் நின்ற ஜோதி பிலம்பதோர் மேனியாக
கருணைக்கோர் முகங்கள் ஆறும் கரங்கள் பன்னிரண்டு கொண்டே
ஒரு திருமுருகன் வந்திங்கு உதித்தானாம் உலகம் உய்ய


"மனதாலும், எண்ணங்களினாலும் விவரிக்க முடியாத, ஏன் வேதங்களினாலும் கூட விவரிக்க இயலாத எங்கும் நிறைந்துள்ள சிவம் ஆறு குழந்தைகளாக எழுந்து ஆறு தாமரை இலைகளில் சரவணப் பொய்கையில் மலர்ந்தது" என்று கூறுகிறார். 


முருகப் பெருமான்  சுப்ரமணியனாக அதாவது 'சு-ப்ரமண்யா' அதாவது எதில் இருந்து அனைத்தும் வெளிவந்து முடிவில் அடங்குமோ அந்த பிரபஞ்சத்தில் வியாபித்து இருப்பவர், எங்கும் நிறைந்து இருப்பவர், மயில் மீது அமர்ந்து இருக்கும் சேனாதிபதி, கையில் ஒரு வேலினை வைத்திருந்தபடி தேவயானை மற்றும் வள்ளியுடன் தோன்றுபவர், அதர்மத்தை நிலை நிறுத்த ஷண்முகனாக வந்தார் என்று கூற வேண்டும்.

அவர் கார்த்திகேகைகளினால் வளர்ந்ததால் கார்த்திகேயனாகவும், ஒவ்ஒருவர் மனதிலும் வசிப்பதால் குஹனாகவும், சரவணை பொய்கையில் இருந்து வந்ததினால் சரவணபவனாகவும், ஆறுமுகங்களைக் கொண்டவராக இருந்ததினால் ஆறுமுகனாகவும் ஆனார். 

முருகனை சிவப்பானவர் என்ற அர்த்தத்தில் சீயோன் என கூறினாலும் தத்துவ நீதியில் அவர் நீல நிறமானவர் என்றே கூறப்பட்டு உள்ளது. சில நேரங்களில் அவர் இரண்டு மனைவிகளான வள்ளி மற்றும் தெவயானையுடனும் மயிலின் பக்கத்தில் நின்றிருக்க, மயில் தன் அலகில் ஒரு பாம்பை கவ்விக் கொண்டு இருப்பது போன்ற காட்சி சிலவற்றில் அமைக்கப்பட்டுள்ளது. அந்த காட்சியில் உள்ள அனைத்திற்கும் ஒவ்ஒரு அர்த்தம் உண்டு. ஆகாயம், மற்றும் பூமியைப் போல எல்லையற்ற நிலையைக் குறிப்பதே நீலநிறம்.

அனைவரின் இருதயக் குகைகளிலும் வசிப்பவன் குஹன் என்ற உண்மையை பிரதிபலிக்கும் தன்மையை குறிக்கும் நிலையை காட்ட அவரவர்களின் உள்ளத்தில் உள்ள ஐம்புலன்களுடன் கூடிய ஆறு (ஷண்) முகமாக காட்சி தருகிறார்.

மயில் 'அழகையும் செருக்கையும்' குறிக்கின்றது. பாம்பு 'தான்' எனும் அகம்பாவத்தை குறிக்கும். ஓவ் ஒரு மனிதனும் உலகத்தில் உள்ள சிற்றின்ப ஆசைகளைத் தேடி ஓடுகின்றனர். 'தான்' என்ற அகம்பாவத்தின் காரணம் 'அறியாமை' என்கின்ற 'அவைத்தியா'. அதை அடக்கி வெற்றி கொண்டு உண்மையைத் தேடிப் போக வேண்டும். அந்த தத்துவத்தைத்தான் பாம்பை தன் அலகில் கௌவிக் கொண்டு உள்ள மயில் உருவம் எடுத்துக் காட்டுகின்றது. 

தீய எண்ணங்களையும், இயலாமையையும் அழித்து விடுவது வேல் என்பதினால் அது விவேகத்தைக் குறிக்கும். விடா முயற்சி, இச்சா சக்தி மற்றும் தூய்மையான அன்பை எடுத்துக் காட்டும் விதமாக வள்ளி காட்சி தர , இறவாமை, கிரியா சக்தி மற்றும் செயல் திறமையையும் வெளிப்படுத்துபவளாக தேவயானை இருக்கின்றாள். ஆக அந்த மூன்று சக்திகளும் ஒண்றிணைந்து அகம்பாவத்தை அழிக்கின்றன.
மஹா பெரியவா தெய்வத்தின் குரல் முதல் பகுதியில ஸனத்குமார யோகிதான் சுப்ரமண்ய ஸ்வாமியா அவதாரம் பண்ணார்ன்னு ஒரு கதை சொல்றா. ஸனத்குமார யோகிங்கறவர் ப்ரம்மஞானி, ப்ரம்ம நிஷ்டர். உலகத்துல எந்த விதமான பற்றும் இல்லாதவர். அவருக்கு ஒரு நாளைக்கு தான் தேவ சேனாதிபதியாக இருந்து அசுரர்களோட யுத்தம் பண்ற மாதிரி ஒரு ஸ்வப்னம் வந்துதாம். அவர் அப்பாவான ப்ரம்மா கிட்ட போய் கேட்டாராம். ‘எனக்கு இப்படி ஸ்வப்னம் வந்துதே என்ன அர்த்தம்’ ன்ன போது, “நீ அடுத்த ஜென்மத்துல, தேவ சேனாதிபதியாக இருந்து அசுரர்களோட யுத்தம் பண்ண போற. உன் கனவுல வந்தா, நீ ஞானிங்கறதுனால அது நடக்கும்னு’ சொன்னாராம். ‘ஓஹோ அப்படியா’ ன்னு சொல்லி கேட்டுண்டு போயிட்டார்.

ஞானிகளுக்கு ஜன்மா எடுக்கறதை பத்தி வருத்தமும் இல்லை, சந்தோஷமும் இல்லை. அவாளுக்கு அது ஒரு பொருட்டு கிடையாது.
அப்போ பரமேஸ்வரன் பார்த்தாராம். இவர் ப்ரம்மஞானி, ஜன்மா எடுக்கறதை பத்தி அவர் ஒண்ணும் நினைக்கப் போறது இல்லை, அதுனால நாம தான் இதை ஆரம்பிக்கணும் ன்னு, பார்வதி பரமேஸ்வராள் போய், ஸனத்குமார யோகிக்கிட்ட, ‘உன்னுடைய தபஸ்ல த்ருப்தியானேன், உனக்கு ஏதாவது வரம் வேணும்னா கேளு’ன்னாளாம்

அவர் பார்வதி பரமேஸ்வராளைப் பார்த்து சிரிச்சிண்டு, ‘எனக்கு ஒண்ணும் தேவைகளே இல்லையே. எனக்கு ஒண்ணும் வரம் வேண்டாம். ஏதோ இந்த வரம் சாபம் இதிலேல்லாம் உங்களுக்கு நம்பிக்கை இருக்கற மாதிரி தெரியறது. உங்களுக்கு ஏதாவது வரம் வேணும்னா கேளுங்கோ’ன்னாராம். 

பரமேஸ்வரன் அதுக்கு தான் காத்துண்டு இருந்தார். ‘எனக்கு நீ குழந்தையா பொறக்கணும்’ ன்னு வரம் கேட்டாராம். இந்த சனத்குமாரர் யோகி ‘ஆகட்டும்’ அப்டீன்னாராம். ‘ஆனா நீங்க மட்டும் தான் என் கிட்ட கேட்டேள், அதனால நான் உங்களுக்கு மட்டும் குழந்தையா பொறக்கறேன்’ ன்னு சொன்னாராம்.

 அப்போ பார்வதி தேவி ‘கணவர் கேட்டா அது மனைவிக்கும் தானே. நான் தனியா கேட்க முடியுமா? நீ இப்படி சொல்லலாமா?’ ன்னு கேட்ட போது, இந்த ஸனத்குமார யோகி சொன்னாராம், ‘என்ன இருந்தாலும் ஒரு ஸ்த்ரீ சம்பந்தத்துல, கர்ப்ப வாசம் பண்ணி, ஊர்த்வமுகமா பொறக்கறதுல எனக்கு இன்னும்கூட லஜ்ஜை இருக்கு, அதனால நான் பரமேஸ்வரன் என்னை தன்னிடத்திலேயிருந்தே எப்படி உற்பத்தி பண்ணுவாரோ, அந்த மாதிரி நான் பொறக்கறேன்’ னாராம். 

‘எனக்கு அம்மான்னு ஆக வேண்டாமா, அம்மான்னு இருந்து குழந்தையை கொஞ்ச வேண்டாமா’ ன்னு பார்வதி கேட்டாளாம், அப்போ அவா ஒரு compromise பண்ணிண்டாளாம்.
பஸ்மாசுரன்னு ஒரு அசுரன் இருந்தான். அவன் யார் தலையைத் தொட்டாலும் அவா பஸ்மம் ஆயிடுவான்னு பரமேஸ்வரன் கிட்ட வரம் வாங்கிண்டு உன் தலையை தொடறேன்னு வந்தான்னு கதை இருக்கு இல்லையா! அப்பறம் விஷ்ணு பகவான் மோஹினியா வந்து விளையாட்டு காண்பிச்சு அந்த பஸ்மாசுரனை தன் தலையை தொட வச்சார்ங்கறது அப்புறம். அதுக்கு முன்னாடி ‘உன் தலையையே தொட வர்றேன்’ ன்னு சொன்ன போது அந்த இடத்துல பரமேஸ்வரன் அந்தர்த்யானம் ஆயிட்டாராம். மறைஞ்சு போயிட்டாராம். திடீர்னு பரமேஸ்வரன் மறைஞ்சு போயிட்டார்.

 உடனே பார்வதி தேவி, அம்பாள் எல்லாம் தெரிஞ்சவா தான், இருந்தாலும் விளையாட்டா இப்படி ஒரு கதை, அங்கேயே கணவனை காணோமேன்னு உருகி ஜலமா ஆயிட்டாளாம். அந்த ஜலம் சரவணப் பொய்கைன்னு இமயமலை அடிவாரத்துல ஒரு குளமாக இருந்தது. அந்த சரவணப் பொய்கையில முருகப் பெருமான் அவதாரம் பண்ணி, அந்த விதத்துல என் குழந்தைன்னு நான் சந்தோஷப் பட்டுக்கறேன்னு பார்வதி தேவியும் ஸனத்குமார யோகியும் ஒரு ராஜி (compromise) பண்ணிண்டாளாம். 
பரமேஸ்வரன் தன்னுடைய நெற்றியிலிருந்து அந்த ஸனத்குமார யோகியை ஆறு தீப்பொறிகளா ஆவிர்பவிச்சு, அதை அக்னி பகவான், கங்கைகிட்ட கொடுத்து, கங்கை தாங்க முடியாம அதை போய் சரவணப் பொய்கையில சேர்த்த போது, அங்க ஆறு தாமரைப் பூக்கள்ல ஆறு குழந்தைகளாக அவதரித்தார். அம்பாள் ஆறு குழந்தைகளையும் சேர்த்தணைத்த போது, ஆறு திருமுகங்களும், பன்னிரண்டு திருக்கரங்களும், ஒரு உடம்பு, ரெண்டு கால்களோட ஆறுமுகரா ஆனார்ங்கிற வரலாறு இருக்கு.
அப்படி பார்வதிக்கும் குழந்தை. 

ஆனா முருகப் பெருமானுடைய விசேஷம் என்னன்னா முழுக்க முழுக்க பரமேஸ்வரன் தன்னிடதிலேருந்தே சிருஷ்டி பண்ணின ஒரு குழந்தை. 

அதனால ‘ஸுதாங்கோத்பவோ மேஸி’ என்னுடைய அங்கத்துலருந்து நீ வந்துருக்கே, என்று சுப்பிரமணிய புஜங்கத்தில் ஒரு ஸ்லோகத்தில் வர்ணிக்கிறார்.

இவ்வாறு பல மகத்துவங்களைக் கொண்ட" வைகாசி விசாகம் " புனித நன்னாள் உலகம் முழுவதும்  குறிப்பாக திருப்புகழ் அன்பர்களால் பல பகுதிகளில் வழிபாட்டுடன் கொண்டாடப் படுகிறது.

வழக்கம்போல் மும்பையில் இந்த ஆண்டு மே மதம் 28ம் நாள் திங்கள் கிழமை காலை 8 மணி அளவில் சுப்பிரமணிய ஸஹஸ்ரநாம அர்ச்சனையுடன் தொடங்கி திருப்புகழ் வழிபாடு  செம்பூர் அஹோபில மட வளாகத்தில் நடைபெற உள்ளது.மும்பை மற்றும் புணே அன்பர்கள் பெருமளவில் கலந்துகொண்டு பெருமான் அருள் பெற வேண்டுகிறோம்.

                                                                                         அழைப்பிதழ் 
                                                                    


                                    இன்சொல் விசாகா  க்ருபாகர 

                                              முருகா சரணம் 









                                                                                                  

No comments:

Post a Comment