Sunday 6 May 2018

அபிராமி அந்தாதி - 30



                                                                          அபிராமி அந்தாதி - 30
                                                                                              
அன்றே தடுத்து என்னை ஆண்டு கொண்டாய் கொண்டதல்ல என்கை
நன்றே உனக்கு இனி நான் என் செயினும் நடுக்கடலுள்
சென்றே விழினும் கரையேற்றுகை நின் திருவுளமோ
ஒன்றே பல உருவே அருவே என் உமையவளே


அன்பரின் விளக்கவுரை 

அன்றே தடுத்து என்னை ஆண்டு கொண்டாய்
பாவம் இது புண்ணியம் எது என்று நான் அறியாத காலத்தில், நான் சிறுவனாக இருந்த காலத்திலேயே... நான் பாவக் கடலில் விழவிருந்த வேளையிலே.... என்னை விழாது தடுத்து உனது பேரருளால் அடியவனாக ஏற்றுக் கொண்டு என்னை ஆண்டு கொண்டாய். இதனால் நான் பாவக் கடலில் விழுந்து விடவில்லை அம்மா...

கொண்டதல்ல என்கை நன்றே உனக்கு? –

அப்படி என்னை அடிமையாகக் கொண்டுவிட்டு பின்னர் உன் உடைமையான என்னை இல்லை என்று சொல்வது உனக்கு ஏற்புடைத்தாகுமோ?

உனக்கு ஆட்பட்டு உன்னடிமையாக நான் இருக்கையிலே நான் எப்படி
விழுந்திடுவேன்... "கொண்டது அல்ல என்கை நன்றே உனக்கு?" ஆனால் இன்று பார்... உன்னை எண்ணி நான் தியானித்திருந்த வேளையில் அறியாது உரைத்த வார்த்தைகளுக்காக என்னைக் கொடுந்தீயில் தள்ளிவிட இம்மாந்தரெல்லாம் காத்திருக்கின்றனர்...
இதோ இருபத்தொன்பது பாடல்களைப் பாடிவிட்டேன்.. இருபத்தொன்பது கயிறுகள் உரியிலிருந்து அறுக்கப் பட்டுவிட்டன..
இது முப்பதாவது பாடல். இப்பாடல் முடிந்தபின் இன்னொரு கயிறும் 
அறுபடும் ஆனால் நீ இன்னும் வெளிப்படவில்லையே.


நீ என்னை உன் அடிமை இல்லை என்றுரைக்கப் போகிறாயா?


வெளிப்படாது மறைந்தே இருக்கப் போகிறாயா? அவ்வாறு

என்னை மறுதலித்தல் உனக்குத் தகுதியான செய்கையா அம்மா?

இனி நான் என் செயினும்

 இனிமேல் நான் என் செய்தாலும்

நடுக்கடலுள் சென்றே விழினும்– 

அறிவில்லாமல் நடுக்கடலுள் சென்று விழுந்தாலும்
 குழந்தை தன் தாயிடம் அன்புடன், உரிமை கொண்டு, ' நீ என்னை ஆட்கொள்ளவில்லை என்று சொன்னால், நான் நடுக்கடலில் வீழ்ந்து விடுவேன். பிறகு காப்பாற்ற வேண்டியது உன் பொறுப்பு ' -என்கிறார்.( நடுக்கடல் -.ஸம்ஸார ஸாகரம்)
"கற்றூணைப் பூட்டிக் கடலிற் பாய்ச்சினும், நற்றுணையாவது நமச்சிவாயவே.." என்று அப்பர்
பெருமான் ஈசன் மீது நம்பிக்கை வைத்து பாடியதும், ஈசன் அருளால் அக்கற்றூணே மிதவையாகி அவரை மீட்டு வந்த வரலாறு இவ்விடம் நினைவுக்கு வருகிறது..

கரையேற்றுகை நின் திருவுளமோ –

என்னைக் காத்துக் கரையேற்றுவது உன் திருவுள்ளம் தானே?!
ஒன்றே பல உருவே அருவே என் உமையவளே –

அம்பாள், பரமார்க்கத்தில் ஒருத்தியாக இருந்தாலும் ந.ந்த்தகீ ( நடிகை) போல பலவிதமான வேஷங்களைப் போட்டுக்கொண்டு பலவிதமான ரூபங்களுடன் இருக்கிறாள்என்று எல்லா புராணங்களும், நூல்களும், வேதங்களும் கூறுகின்றன.
 இறை என்னும் போது ஒன்றாகவும், அவரவர் தம் மனத்திற்கு ஏற்ற வகையில் வணங்கும் பல உருவங்களாகவும், இறைவனுக்கு உருவம் இல்லை என்று உருவமற்ற இறைவனை வணங்குபவர்களுக்கு அருவமாகவும் இருக்கும் என் அன்னை உமையவளே!


உலகமெல்லாம் பரவி நிற்கும் ஒரே இறைசக்தியான அன்னை பராசக்தியே... அன்பர் விரும்புமிடத்து அவர் விரும்பும் வடிவில், கலைமகளாக, அலைமகளாக, மலைமகளாக, நான்முகனாக, நாராயணனாக,  


முக்கண்ணனாக, ஆனைமுகனாக, ஆறுமுகனாக, என பல்வேறு வடிவுகளிலும் காட்சியளிப்பவள் நீயே... 
அவன் அரூபமானவன் என்று உரைப்போரிடத்து நீயே அவ்வருபமாகத் 
தோன்றுகின்றாய் அனைத்தும் என் தாயாகிய உமையவள் நீயே.
லலிதா சஹஸ்ரநாமமும் அன்னையை
666. பூமரூபா - அனைத்துமாக இருப்பவள். பூமா என்ற சொல்லிற்கு ப்ரஹ்மம் என்றே பொருள். எனவே ப்ரஹ்ம வடிவானவள். 

401. விவிதாகாரா - பலவித ரூபங்களையுடையவள்னு சொல்றது.
137. நிராகாரா - உருவம் இல்லாதவள். - நாம் காணும் அவள் வடிவங்கள் - மாயை. அவளுடைய உண்மை ஸ்வரூபம் - வடிவற்றதே. எங்கும் வ்யாபித்து இருப்பதால் அவளுக்கு குண ஸம்பந்தமான உருவம் ஏதும் இல்லை என்று இந்த நாமாவின் பொருள்.
824. பஹுரூபா - பல உருவங்கள் உள்ளவள்.


 ( 665) - ஏகாகினி - தனித்து இருப்பவள். தன்னைத் தவிர வேறான எந்த ஒரு வஸ்துவும் இல்லாமல் தனித்து நிற்பவள்.
623. கேவலா - தனித்த வடிவினள். வேறு எந்த குணமோ, தோஷமோ கலக்காமல் தானாக இருப்பவள். கேவலம் - ' மிகச் சிறந்தது ' - ' தனித்தது ' என்று பொருள்.
இறைவன் மீது நம்பிக்கை... முழு நம்பிக்கை வைக்க வேண்டுமென 
இப்பாடல் நமக்கு அறிவுறுத்துகிறது.. என்னதான் நடந்தாலும் சரி... 
நம்மை காக்க அன்னை கண்டிப்பாக வருவாள் என்ற நம்பிக்கையை நம்

மனத்துக்குள் விதைக்கும் பாடல் இது. 

பரிபூரண நம்பிக்கையை நாம் அன்னைமேல் வைத்தால் மட்டுமே
" நாள் என் செய்யும்? வினைதான் என் செய்யும்?
நாடி வந்த கோள் என் செய்யும்? குமரேசர் இரு
தாளும், சதங்கையும், தண்டையும்,
என் கண் முன்னே தோன்றிடினே"
என்ற அருணகிரிநாதரின், கந்தர் அலங்காரத்தினை நினைவு படுத்துகிறது.
கூற்றாயினவாரு விலக்ககிலீர்" என்ற, திருநாவுக்கரசரின் பதிகத்தினையும் நினவுறுத்துகிறது.
இந்தப் பாடலைப் பயிலும்போது, மார்கண்டேய சரித்ரம் நினைவுக்கு வருகிறது.
அந்த எமனையும் உதைத்த கால்கள், எம் அம்மையின் கால்கள் அன்றோ? எம் பெருமானின் இடது திருவடி அன்றோ எமனை உதைதது!
இந்தப் பாடல், மிக அழகிய தத்துவங்களையும் நினவு படுத்துகிறது.
"மர்க்கட கிசோரம்" , "மார்ஜர கிசோரம்" என்று இரண்டு வித பக்தி மார்கங்கள் உண்டு.

 முதலாவதிலே, "மர்க்கட கிசோரம்" என்ப்படும் மார்கத்திலே, குரங்கு போன்றதான பக்தி பேசப்படுகிறது. குரங்கு, தன் குட்டிகளை பற்றி கவலைப் படுவது இல்லை.
அது, தன் மனம் போன போக்கிலே செல்லும். ஒரு மரத்திலிருந்து, இன்னொரு மரத்திற்குத் தாவும். குட்டிகளோ, தாயினை விடாமல், கெட்டியாக பிடித்துக் கொள்ளும். விழுந்து விடாமல் இருப்பது, குட்டிகளின் இருக்கமான பிடியில்தான் இருக்கிறது.
மிகப் பலர் பக்தி செய்வது, "மர்க்கட கிசோரம்" போன்றதுதான். அவர்கள் தான், விடாப் பிடியாக, அந்த அம்மையைப் பற்றிக் கொள்ள வேண்டும். அந்த அம்மை, தம்மை விட்டு விடாமல் இருப்பத்ற்காக, முயற்சிகள் பல செய்ய வேண்டும்.
இன்னொரு வித பக்தி, "மார்ஜர கிசோரம்" எனப்படுவது. இங்கே, பூனை தன் குட்டிகளை எப்படிப் பார்த்துக் கொள்கிறதோ, அது போன்ற பக்தி பேசப் படுகிறது.
பூனைக் குட்டிகள், தாமாக எந்த முயற்சியும் எடுப்பது இல்லை. குரங்கு குட்டிகள் போல் இல்லாமல், பூனை குட்டிகள் அவை போன போக்கிலே விளையாடிக் கொண்டிருக்கும். தாய்ப் பூனைதான், ஒரு இடத்திலிருந்து மற்றொரோ இடத்திற்குச் செல்லும்போது, குட்டிகளை விடாமல், வாயில் கவ்விக் கொண்டு செல்லும். குட்டிகளுக்கு வலிக்காமல் கவ்விக் கொண்டு செல்லும்.
மிகச் சிலருக்கே, "மார்ஜர கிசோரம்" போன்ற பக்தி வாய்க்கிறது. இந்த பக்தர்கள் என்ன செய்தாலும், அந்தத் தாய் விடுவது இல்லை. அவர்களை, மீண்டும், மீண்டும், தனது அன்பெனும் பிடிக்குள் கொண்டு வந்து அவர்களை உய்விக்கிறாள். இந்த பக்தர்கள் எங்கு சென்று வீழினும், எது செய்தாலு, தீமையே செய்தாலும் கூட, அவர்களைக் கரை ஏற்றுகிறாள்.
அபிராமி பட்டரும், முதலில் தாம் அன்னையைப் பற்றிக் கொண்டது போக, இப்போது, அந்த அம்மை, தன்னைப் பற்றிக் கொண்டதை பற்றி நினத்து நினைத்து ஆனந்தப் படுகிறார்.
இந்த பக்தி எளிதில் வாய்த்து விடாது. சுத்த சரணாகதி நிகழும்போது மட்டுமே அம்மை அந்த பக்தனைத் தானே வலிய வந்து ஆட்கொண்டு அருளுகிறாள்.
திரௌபதி, ஒரு கையால், தனது புடவை முந்தானையைப் பிடித்துக் கொண்டு, துச்சாதனனிடம் போராடிய வரையில், கண்ணன் வெறுமனே 

பார்த்துக்கொண்டுதான்  இருந்தான் அவள், தனது 
இரு கைகளையும் மேலே கூப்பி, கண்ணா என்று கதறிய போதுதான், முழு சரணாகதி நிகழ்ந்த போதுதான், ஓடி வந்து அருள் புரிந்தான்.
மார்க்கண்டேயன் ஓடி வந்து, சரணாகதி என்று விழுந்து கதறியபோதே அந்த ஈசனும் மனம் கனிந்து, காலனை உதைத்து அருளினார்.
அதே விதத்தில், அபிராமி பட்டரும், 'அம்மா, இனி எல்லாமும் நீதான். நீயே கதி" என்று சரணாகதி செய்துவிட்டதால், அம்மை மனம் கனிந்து விட்டாள். அவளே வந்து ஆட்கொண்டு அருள் செய்கிறாள்.
இதைத்தான் பட்டரும் எண்ணி எண்ணி, வியக்கிறார்.
ஆக பட்டர் சொன்னபடி நாம்பளும் அன்னையை எந்தவிதமான சந்தேகம் கொள்ளாமல் பரிபூரணமா பக்தி பண்ணுவோமா!!
அபிராமி சரணம் சரணம்!!

                                                                                         

                                                                பாடலை குருஜி  கற்பிக்கிறார் இசையுடன்


                                                                                     

                                                                 U Tube Link for ANDROID  and   I PAD   PHONE


                                               https://youtu.be/kL6wFrxopTs

                                                                                  அன்பர்கள் 
   
                                                                                                                                                        
                                                              U Tube Link for ANDROID  and   I PAD   PHONE


                                            https://youtu.be/E1m7og9DGAI




                                                                             அபிராமி சரணம் 

                                                                              முருகா சரணம் 


                             

No comments:

Post a Comment