Wednesday 16 May 2018

அபிராமி அந்தாதி - 31



                                            அபிராமி அந்தாதி - 31
                                                              

உமையும் உமையொருபாகனும், ஏக உருவில் வந்து இங்கு
எமையும் தமக்கு அன்பு செய்யவைத்தார்
; இனி எண்ணுதற்குச்
சமையங்களும் இல்லை;
ஈன்றெடுப்பாள் ஒரு தாயும் இல்லை;
அமையும் அமையுறு தோளியர்மேல் வைத்த ஆசையுமே. :


அன்பரின் விளக்கவுரை 

உமையும் உமையொரு பாகனும் ஏக உருவில் வந்து "

உமையவளாகிய அன்னை அபிராமியும், அவளின் ஒரு பாகமாய் விளங்கும் ஈசனும் ஓர் உருவில் வந்து... சிவசக்தி சொரூபமாய், அர்த்த நாரீஸ்வரராய் எனக்குக் காட்சியளித்தார்கள். கிடைத்தற்கரிய பேறு அல்லவா? முன்னர் ஒரு பாடலில் இவ்வுருவைத்தான் அதிசயம் என்று பாடினார் அபிராமிப் பட்டர். அன்னையையும் அப்பனையும் ஏகவுருவில் காணும் பேறு பெற்றது அபிராமிப் பட்டர் செய்த பாக்கியம் அல்லவா...?

அவர்கள் வந்து என்ன செய்தார்கள் தெரியுமா?
"இங்கு எமையும் தமக்கு அன்பு செய்ய வைத்தார்" அவர்கள் இருவரும் ஓருருவாக இங்கு வந்து, எம்மையும் -( இவ்விடத்து அழுத்தம் கொடுக்கிறார் அபிராமிப் பட்டர்.) கீழோனான என்னையும் தம் மேல் அன்பு செய்ய வைத்தார்கள். எந்தவிதக் கெட்ட எண்ணங்களும் இன்றி, அன்னையின் மேல் முழு பக்தியாக இருந்த அபிராமிப் பட்டர், தன்னை மிகக் கீழோன் என்று குறிப்பிடுவது வியப்புக்குரியது இல்லையா!!


 இனி எண்ணுதற்குச் சமயங்களும் இல்லை; 

அவளுக்கு அன்பு செய்யுமாறு அந்தத் தாயே பணித்த பின்னர், வேறு எண்ணம் ஏதேனும் தோன்றுமா என்ன? இல்லை. நிச்சயமாகத் தோன்றாது. அவளுக்கு அன்புசெய்ய ஆரம்பித்து விட்ட பின்னர், எண்ணுதற்கு என்று வேறு எதுவும் இல்லை. எண்ணம் என்றே ஒன்று இல்லாமல் அல்லவா போய் விடுகிறது? சிந்தை என்று ஒன்றே அற்றுப் போய்விடுமானால்,மனிதப் பிறவியென்னும் சங்கிலித் தொடரினைப் பின்னிப் பிணைக்கும் நன்மையும் தீமையும் அற்றுப் போய் விடுமானால், வேறு மார்க்கம் எதுவும் தேடிப் போக வேண்டும் என்ற அவசியம் இல்லாமல் போய் விடுகிறது.
பேரன்பு கிடைத்த பின்னர் வேறெந்த சமயங்கள் வேண்டும்? இந்த பூஜையை செய்தால் இறையருளைப் பெறலாம்.. இந்த மந்திரங்களைப் படித்தால் இறையருளைப் பெறலாம். இந்த வழியில் நின்றால் இறையருளைப் பெறலாம். என்று பல்வேறு சம்யங்கள் உரைக்கின்றன.. ஆனால் உங்கள் மேல்வைத்த அன்பு ஒன்றே எனக்கு உங்கள் பேரருளைப் பெற்றுத்தந்து விட்டது. இனி நான் சிந்தித்துப் பார்ப்பதற்கு வேறு சமயங்கள் இல்லை..

அபிராமி சமயம் நன்றே ' என்ற கோட்பாட்டை மறுபடியும் சொல்ல விரும்பி, " இனி எண்ணுதற்குச் சமயங்களும் இல்லை " என்றார். முன்னர் " பர சமயம் விரும்பேன் " ன்னு 23 வது அந்தாதில சொன்னார். ஆக அவர் சமயம் அபிராமி சமயம் தான் அப்படிங்கறத இந்த அந்தாதில அழுத்தம் திருத்தமா சொல்றார் பட்டர் நமக்கு.

 "ஈன்றெடுப்பாள் ஒரு தாயும் இல்லை"


 இதன்பொருள்பொருள் நான்பிறவிப்பெருங்கடல்நீந்திவிட்டேன். இனி என்னை ஓர் தாய் ஈன்றெடுப்பாளோ? இல்லவே இல்லை.. இத்துடன் என்பிறவி முடிந்தது.. ஏனெனில் என் அன்னை அபிராமியின் பேரன்பு எனக்குக் கிடைத்திருக்கின்றது என தனக்கு மீண்டும் பிறவி இல்லை என அபிராமிப் பட்டர் திட்டவட்டமாகக் குறிப்பிடுகிறார். 
சகஸ்ராரம் சென்று அம்மையப்பனை தரிசித்தவர்களுக்கு அடுத்த பிறவி
ஏன் காமம் மட்டுமின்றி குரோதம், உலோபம், மதம், மார்ச்சர்யம் இவையும் இல்லை. .
அந்த நிலையைத்தான், பட்டர் இங்கு வர்ணிக்கிறார். அப்படிப்பட்ட நிலையை அடைந்துவிட்ட பிறகு, பிறப்பு என்று ஒன்று ஏற்படாது. ஜனன - மரண சங்கிலித்தொடரை அறுத்துவிட்ட பின்னர், ஜனனம் எப்படி ஏற்படும்? நிகழாது. அதைத்தான், பட்டரும், "ஈன்றெடுப்பாள் ஒரு தாயுமில்லை" என்று பேசுகிறார். 
அமையுறு தோளியர்மேல் வைத்த ஆசையுமே. :
பெண்ணாசை உட்பட. மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை என்னும் மூவாசைகளிலே, பெண்ணாசைதான் மிகவும் கொடுமை வாய்ந்தது. எப்படிப்பட்ட தவ யோகியர்களையும் கூட, "பெண்ணாசை" விட்டு வைக்கவில்லை.
அபிராமி பட்டரும் இங்கே அதையே சுட்டிக் காட்டுகிறார். அந்த இறைவனும் இறைவியும், ஏக உருவில் வந்து தமது பாதம் பணிய அருள் புரிந்த பின்னர், அந்தப் பெண்ணாசையும்கூட இற்றுப் போய்விட்டது என்று சொல்லுகிறார் பட்டர் 
என் மனதில் இனி நிறையப்போவது அழகான தோளையுடைய அபிராமியின் மேல் நான் வைத்திருக்கும் அன்பு மட்டுமே.

                                                                               கருத்துரை 


ஒளி போன்ற உமையவளும், அவளைத் தன்னுடலின் ஒரு பாகமாக ஏற்ற சிவபெருமானும் ஓருருவாக இணைந்து அர்த்தநாரியெனும் வடிவத்தில் என் கண்ணில் தோன்றி உள்ளத்தில் நிறைந்ததுடன், என்னை அவர்கள் மேல் பக்தியுண்டாகும்படி செய்துவிட்டனர்; (அதனால்) இனி இன்னொரு மதத்தையோ கடவுளையோ எண்ணப் போவதில்லை; பிறவாமை நிலையடையப் போவதால் எந்தத் தாயும் என்னை இனிப் பெற்றெடுக்க வேண்டியதில்லை; என் மனதில் இனி நிறையப்போவது அழகான தோளையுடைய அபிராமியின் மேல் நான் வைத்திருக்கும் அன்பு மட்டுமே.
இந்த பாடலின் கருத்து என்னன்னா, அன்னை அபிராமியின் அருள், அடியார்களை அத்தனிடம் அதாவது எம்பெருமானிடம் சேர்க்கும் என்பதுதான்.
                                                                பாடலை குருஜி  கற்பிக்கிறார் இசையுடன்



                                                                 U Tube Link for ANDROID  and   I PAD   PHONE
  

                                           https://youtu.be/Nb2Dy4mkZDM


                                                                                  அன்பர்கள் 


                                                                                                     
                                                                U Tube Link for ANDROID  and   I PAD   PHONE


                                              https://youtu.be/0XUD-TffWes

                                         
                                         அபிராமி சரணம் சரணம்!!

                                                   முருகா சரணம் 

No comments:

Post a Comment