Thursday 30 November 2017

அபிராமி அந்தாதி - 25



                                                                   அபிராமி  அந்தாதி - 25
பின்னே திரிந்து உன் அடியாரைப் பேணி பிறப்பு அறுக்க
முன்னே தவங்கள் முயன்று கொண்டேன் முதல் மூவருக்கும்
அன்னே உலகுக்கு அபிராமி என்னும் அருமருந்தே
என்னே இனி உன்னை யான் மறவாமல் நின்று ஏத்துவனே


அன்பர் தொகுத்து அளித்துள்ள விளக்கவுரை 
"பின்னே திரிந்து உன் அடியாரைப் பேணி பிறப்பறுக்க முன்னே தவங்கள் முயன்று கொண்டேன்"..
உன் அடியவர்களின் பின்னால் திரிந்து அவர்களை அடி பணிந்து அவர்களுக்குப் பணிவிடை செய்து என் பிறப்பிறப்புத் துன்பத்தை அறுத்துக் கொள்ளும் பாக்கியத்தை பலகாலமாக செய்தத் தவங்களின் பயனால் அடைந்தேன்.

உலகத்தோர் இப்பிறப்பில் செய்யும் புண்ணிய பாவங்கள் அடுத்த பிறப்பில் தமது தகுதியை நிர்ணயம் செய்யும் என்று நம்புகிறார்கள்..இதற்கெனவே தான தர்மங்களை நிகழ்த்திக் கொண்டிருக்கின்றார்கள்..ஆலயத்துக்குச் சென்று இறைவனை வழிபடும் போது இப்பிறப்பின் எதிர்காலநன்மைகளுக்காக வேண்டுகின்றனர்.. இனி எனக்கு பிறவி கிடையாது என்று முழங்கும் அபிராமிப் பட்டர், அதற்கான காரணத்தையும் விளக்குகிறார். உன் திருவடியைப் பற்றியிருக்கக் கூடிய உனது அடியார்களைப் பின் தொடர்ந்து அவர்கட்கு வேண்டிய திருப்பணிகளை நான் செய்து வருகிறேன். எனவே எனக்கு

இனிமேல் பிறவி கிடையாது.. இத்திருப்பணிகளை நான் மேற்கொள்ள வேண்டிய புண்ணியம் எனக்கு எங்ஙனம் கிடைத்தது தெரியுமா? நான் முற்பிறப்பில் பல தவங்களை இயற்றி இவ்வரத்தினைப் பெற்றேன்.

பொருட்செல்வம் மிகப் பெற்றோர், தாம் முற்பிறப்பில் செய்த புண்ணியத்தால் இந்நிலையை அடைந்ததாகப் பெருமைப்பட்டுக்கொள்கின்றனர்.. ஆன்மீக வழியில், உயர்ந்த நிலையை அடைந்த பெரியோர் யாரும் தமது முற்பிறவிப் பயனால் இது எமக்குக் கிட்டியது என்றுமுழங்கியதில்லை.. ஆனால் அபிராமிப் பட்டர் மிக உறுதியாக தனது கருத்தைத் தெளிவுபடுத்துகிறார். மூன்று உண்மைகள்.. ஒன்று. தான் முற்பிறப்பில் செய்த தவங்கள். இரண்டு. அத்தவங்கள் வாயிலாக இப்பிறப்பில் அபிராமி அன்னையின் அடியார்களுக்குச் செய்யும் திருத்தொண்டு. மூன்று. அத்திருத்தொண்டின் வாயிலாக இப்பிறப்புத் துன்பத்தை நீக்குதல். வேறெந்த பிறப்பும் ஏற்படாத உன்னத நிலையை அடைதல். இம்மூன்று உண்மைகளுக்கும் நடுநாயகமாக விளங்குவது அன்னையின் அடியாருக்குச் செய்யும் திருத்தொண்டுதான்.
"முதல் மூவருக்கும் அன்னே"

அன்னை அபிராமியே மும்மூர்த்திகளைப் பெற்றெடுத்தாள் என்பதை இன்னுமொருமுறை தனது பாடலின் வாயிலாகக் கூறுகிறார்.


"உலகுக்கு அபிராமி என்னும் அருமருந்தே" 

எதுவும் தேவையில்லை அன்னை அபிராமியை விடுத்து... என்னும் தன் நிலையில் உறுதியாக இருக்கும் அபிராமிப் பட்டர் அன்னை அபிராமி உலகத்தாருக்குக் கிடைத்த ஒரு அரிய மருந்து என்கிறார். அபிராமியை எண்ணித் துதித்தால் எந்தவித காயமும் ஆறிப்போகும். எல்லாவித நல்நிலையும் தேடிவரும் என்பதே நிச்சயமான உண்மை. உலகத்தார் செய்த புண்ணியம் அவ்வருமருந்தினைப் பெற்றிருப்பது.

"என்னே.?" 

உனது பெருமைகளையெல்லாம் எங்ஙனம் உரைப்பேன்...?

 "இனி உன்னை யான் மறவாமல் நின்று ஏத்துவனே"

இனியும் உன்னை நான் மறக்காமல் தொழுது கொண்டிருப்பேன்.

 அன்னையை மறப்பது அபிராமிப் பட்டரால் இயலுமா? எக்கணமும் உன்னை மறவாது தொழுவேன் என்று பறைகிறாரே.... துன்பத்தில் இறைவனை நினைப்பது, இன்பத்தில் இறைவனை மறப்பது .. இதுதான் உலகத்தார் வாடிக்கை.. எனவேதான் குந்தி தேவி, கண்ணனிடம் தனக்கு எப்பொழுதும் துன்பங்கள் வந்து கொண்டேயிருக்க வேண்டும் என்று வேண்டினாள். அத்துன்பங்கள் தொடர்ந்து கொண்டேயிருந்தால் 

 இறைவனை என்றும் மறவாது தேடிக்கொண்டே இருப்போம் என்பது அவரது கருத்து..

ஆனால் அபிராமிப் பட்டரால் அன்னையை மறப்பது முடியுமா? என்றும் மறப்பதில்லை... ஆயினும் தொழுதல் என்பது வேறு... மறவாதிருத்தல்
என்பது வேறு.. அன்னையை மறவாது நினைப்பது மட்டுமே புண்ணியம் தரும் செயலல்ல... நாத்திக அன்பர்கள் தினம் ஒருமுறையாவது "இறைவன் இல்லை" என்று சொல்லி இறைவனை நினைவுகூர்ந்து கொண்டிருக்கின்றார்கள். அவர்களுக்கு இறைவனின் திருவருள் கிட்டுமா? எனவே தொழுதல் முக்கியம்.. இனிமேல், எக்கணமும் உன்னைத் தொழுது கொண்டேயிருப்பேன் 
அபிராமி சரணம் சரணம்!!


                                                          பாடலை குருஜி  கற்பிக்கிறார் இசையுடன்



                                                                                                 

                                                          U Tube Link for ANDROID  and   I PAD   PHONE 

                                                               https://youtu.be/bzwYJnC3Ur4



                                                                             அன்பர்கள் இசைக்கிறார்கள் 


                                                                                                                           

                                                               U Tube Link for ANDROID  and   I PAD   PHONE 


                                                                https://youtu.be/nz_5v1oKEJY


                                              அபிராமி சரணம் சரணம்!!
                                                        முருகா சரணம் 

No comments:

Post a Comment