Saturday, 1 July 2017

அபிராமி அந்தாதி வரிசை ...7


                                                          அபிராமி அந்தாதி வரிசை ...7

                                                                                                 


                                                                     அபிராமி அந்தாதி - 7

                                                                               பாடல் 

ததியுறு மத்தின் சுழலும் என் ஆவி, தளர்வு இலது ஓர்
கதியுறுவண்ணம் கருது கண்டாய்-கமலாலயனும்,
மதியுறுவேணி மகிழ்நனும், மாலும், வணங்கி, என்றும்
துதியுறு சேவடியாய். சிந்துரானன சுந்தரியே.

அன்பரின் விளக்கவுரை 

ததியுறு மத்தின் சுழலும் என் ஆவி,

ததியுறுமத்து - அழகான உவமையணிமத்து....

தயிர் கடைவதற்காக மத்து தயிர்ப் பானையில் இடப்பட்டு கயிற்றினால் இழுக்கப்பட்டு இடசாரி, வலசாரியாகச் சுழலும்.
இந்த பிரபஞ்சம் - தயிர்ப்பானை. மத்து - ஜீவன். நல்வினை, தீவினை - இரண்டும் கயிற்றின் இரு நுனிகள்.
அபிராமி அன்னையே - தயிர் கடையும் சிற்றிடைச்சி.
தயிர் உடைந்து வெண்ணெய் திரண்டு மோருக்கும், வெண்ணெய்க்கும் சம்பந்தம் இல்லாமல் விலகும் போது கடைதலும் நிற்கும். மத்து மாறி, மாறிச் சுற்றும். பிரபஞ்ச வாழ்க்கையிலே மத்தாகிய ஜீவனானது நல்வினை, தீவினைகளால் மாறி மாறி சுற்றுகின்றது. ( "அறம் பாவம் என்னும் அருங்கயிற்றால்" - திருவாசகம்)
அம்பிகையின் கருணாவிலாசமே திரோபவ சக்தியாகி பிரபஞ்சத்தில் மாறி மாறிப் பிறக்கச் செய்து பிரபஞ்சம் நீக்கி தயிர் உடைத்து மோராகி வெண்ணெய்யும் திரண்டு விட்டது போல் ஜீவன் பக்குவ நிலையடைந்தால் மோரில் ஒட்டாத வெண்ணெய் போல், பானையிலே கிடந்தாலும் தனித்திருக்கும்.
அப்போது கடைவது நிற்கும்.
பக்குவ நிலை கண்டு கடைதலை நிறுத்துபவளும் அபிராமியே தான். பக்குவம் வரக் கடைபவளும் அவளே தான். அவளின்றி அணுவும் அசையாது.
இதைத்தான் லலிதா ஸஹஸ்ரநாமம் இப்படி சொல்றது
ம்ருத்யு மதனீ - பக்தர்களுக்கு மரண பயத்தைப் போக்குபவள். பரமேஸ்வரன் கால காலனாக, மார்க்கண்டேயரை எம பயத்திலிருந்து காப்பாற்றியதைப் போல அம்பாளும் தன் பக்தர்களை மரணத்திலிருந்தும் காப்பாற்றுகிறாள். சிவனும், சக்தியும் ஒன்றே தான் அல்லவா! மரணம் சரீரத்திற்கு மட்டும் தான். ஆத்மாவிற்கு இல்லை என்ற தத்துவஞானத்தை பக்தர்கள் உணரச் செய்கிறாள். தயிரைக் கடைந்து, வெண்ணெயைப் பிரித்து எடுப்பது போல, மரணம் என்ற பயத்தை நன்கு கடைந்து தத்துவஞானத்தை ஏற்படுத்தி பயத்தை போக்குகிறாள் அன்னை அபிராமி. அதாவது பக்தன் பாவனையால் அவளாகவே மாறிவிடுவதால் அழிவற்றவன் ஆகிறான்.

பஞ்ச ப்ரஹ்ம ஸ்வரூபிணி அன்னை 5 ப்ரமங்களின் வடிவானவள், ப்ரஹ்மா, விஷ்ணு,ருத்ரன்,ஈசுவரன்,சதாசிவன் - இவர்களை பஞ்ச ப்ரம்மங்கள் என்றும் சொல்வதுண்டு. ஆஸனத்தின் வடிவான இந்த ஐந்து பேருடைய வடிவங்களாக தேவி விளங்குகிறாள். ஐந்து வகையான வடிவங்கள் யாவும் தேவியின் வடிவங்கள். இந்தக் கருத்தினை ஆதிசங்கரரும் ஸௌந்தர்யலஹரியில் "சிவாகாரே மஞ்சே" (8) "கதாஸ்தே மஞ்சத்வம்" (92) என்று சொல்கிறார்.
மாணிக்கவாசகரும் இதனை மனதில் கொண்டு " மத்துறு தண்டயிரிற் புலன் தீக்கது வக்கலங்கி வித்துறு வேனை விடுதி கண்டாய்" என்கிறார்.


 தளர்வு இலது ஓர் 

மேலும் அவர் சிவபுராணத்தில்
" புல்லாகி பூடாய் புழுவாய்....
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன்" என்பார்.
ஆதி சங்கரரும் பஜகோவிந்தத்தில்
"புனரபி ஜனனம் புனரபி மரணம்...." என்கிறார்.
பட்டினத்தாரும்
"மாதாவும் உடல் சலித்தாள். வல்வினையேன் கால் சலித்தேன் வேதாவும் கை சலித்து விட்டானே" - என்றார்.
அதாவது தளர்ச்சி என்பது திருதாமரையை தனது இருப்பிடமாகக் கொண்ட பிரமனும் சந்திரனைத் தாங்கும் சடாபார அணிந்த நெற்றியுள்ள பேரழகியே!
தயிரில் நின்று சுழலும் மத்தைப் போல பிறப்பு, இறப்பு இடையே
( நல்வினை, தீவினையால்) சுழலும் என்னை தளர்ச்சியில்லாததாகிய ஒரு நல்ல நிலையை அடையும் வண்ணம் நீ திருவுள்ளம் கொண்டருள வேண்டும்னு கேக்கறார் பட்டர்.


"கதிஉறு வண்ணம் கருது கண்டாய்" 
சிவபெருமானும், திருமாலும், நான்முகனும் மணித்தீவின் நடுவில் அமைந்திருக்கும் ஸ்ரீபுரம் சென்று அங்குச் சிந்தாமணிக் கிரஹத்தில் கொலுவீற்றிருக்கும் அன்னையைக் கண்டு நாவாரத் துதித்தனர். அந்தச் சிறந்த துதியே ' புவனேஸ்வரி துதி' எனப்படும். அம்மூவருக்கும் அன்னை அருள் கொண்டு முத்தொழில் புரியும் ஆற்றல் தந்தனன் என்று தேவிபாகவதம் தெரிவிக்கும்.
இப்படி அம்பிகை அளித்த ஆணைகளை ஏற்றுச் சிவனும், திருமாலும், பிரமனும் செல்வாராம். அப்படிப்பட்டமூவரே முன்னின்று வணங்கும் அன்னையிடம் அபிராமிபட்டர் வேண்டியது; "கதிஉறு வண்ணம் கருது கண்டாய்" 

"உயிர் படுகின்ற அல்லல் கொஞ்ச நஞ்சன்றுனு சொல்றார்.
திருப்புகழ்லயும் அருணகிரிநாதர்
சரவணபவநிதிலங்கற பாட்டுல
கடலுல கினில்வரு முயிர்படு மவதிகள்
கலகமி னையதுள கழியவும் நிலைபெற
கதியுமு னதுதிரு வடிநிழல் தருவது ...... மொருநாளேனு பாடியிருக்கார்.
கமலாலயனும்,
மதியுறுவேணி மகிழ்நனும், மாலும், வணங்கி, என்றும்
துதியுறு சேவடியாய். 

தாமரையை தனது இருப்பிடமாகக் கொண்ட பிரமனும் சந்திரனைத் தாங்கும் சடாபாரத்தையுடைய நின் கணவனாகிய சிவனும், திருமாலும் வணங்கி எப்போதும் துதி செய்கின்ற செம்மையான அதாவது சிவந்த பாதங்களை , திருவடிகளை உடையவளே, 

இந்தச் சுந்தரியை, கமலம் என்னும் தாமரை மலரில் வசிக்கும் பிறை ்நிலவைச் சடையில் சூடிய சிவனும் துதிக்கிறார். திருமாலும் வணங்கி நிற்கிறார். அப்படித் துதித்து துதித்து, அம்பிகையின் திருவடிகள் சிவப்பேறிவிட்டன. கமல ஆலயனும் மதியுறு வேணி மகிழ்நனும் மாலும் வணங்கி என்றும் 'துதியுறு சேவடியாய்' என்று இதன் காரணமாகத்தான் அன்னையை அழைக்கிறார்.

சிந்துரானன சுந்தரியே.

போன அந்தாதி பாடலில் அம்பிகையைப் பக்தர், 'சிந்துரவண்ணப் பெண்ணே' என்று அழைத்தார். இந்தப் பாடலில் அன்னையை அவர், ' சிந்துரானன சுந்தரியே'! என்று விளிக்கிறார். ' சிவந்த குங்குமத் திலகம் அணிந்த அழகியே' என்பது இதன் பொருள். 

ப்ரம்மா, விஷ்ணு, சிவன் - மூவருமே அன்னையின் திருவடிகளை வணங்கும் போது நாம் செய்ய வேண்டியது என்ன என்று கூறவும் வேண்டுமா?
அன்னை அபிராமியின் பாதாரவிந்தங்களில்சரணாகதி அடைந்து விட்டால் அம்மையே நம்மை பக்குவப்படுத்தி நம்மை நற்கதி அடையச் செய்து விடுவாள்.
அம்மா நீதான் என் மீது கருணை வைத்து இந்த துன்பங்களிலிருந்து காப்பாற்றி அருளனும்னு பட்டர் அபிராமியிடம் கேட்பது போல,நாம்பளும் அப்படியே இந்த தயிர்மத்துல அகப்பட்டுண்ட தயிர் மாதிரி கஷ்டபடாம இருக்கனும்னு அபிராமிகிட்ட அந்த சிந்துரானன சுந்தரியோட பாதங்களை கெட்டியா பிடுச்சுகலாமா!!
அபிராமி சரணம் சரணம்!!
                                                                                      


Utube  Link for ANDROID  and   IPAD   PHONE


                                                                          

Utube  Link for ANDROID  and   IPAD   PHONE
                                                அன்னை அபிராமியே சரணம் 

                                                          முருகா சரணம்                           

No comments:

Post a Comment