Thursday 20 July 2017

அபிராமி அந்தாதி வரிசை ...10 அபிராமி அந்தாதி வரிசை ...10



                                                           அபிராமி  அந்தாதி வரிசை ...10

                                                                                                   



அபிராமி  அந்தாதி - 10
நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பது உன்னை
என்றும் வணங்குவது உன் மலர்த்தாள் - எழுதா மறையின்
ஒன்றே, அரும்பொருளே , அருளே , உமையே, இமயத்து
அன்றும் பிறந்தவளே, அழியா முக்தி ஆனந்தமே


அன்பரின் விளக்கவுரை 

நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பது உன்னை
என்றும் வணங்குவது உன் மலர்த்தாள் 

நான் நிற்கும் பொழுதும், அமரும் பொழுதும், கிடக்கும் பொழுதும், நடக்கும் பொழுதும், எல்லா நிலைகளிலும் நான் நினைப்பது உன்னைத் தான்.
சதாசர்வ காலமும் அம்பிகையின் திருவுருவை தியானம் செய்யும் ஒரே வேலையைத்தான் செய்கிறார் அபிராமி பட்டர். அவருடைய உடம்புதான் நிற்கிறது, படுக்கிறது, அமர்கிறது, நடக்கிறது. வெளியிலிருந்து பார்த்தால் அவர் நிற்பது போல் தெரியும்.ஆனால் அவர் அம்பிகை தியானத்தில் இருக்கிறார். மற்றவர்களுக்குத்தான் அவர் படுத்து உறங்குவதுபோல் இருக்கும். ஆனால் உண்மையில் அவர் அம்பிகை தியானத்தில் இருக்கிறார்

அப்படி அவர் எல்லாவற்றிலும் அன்னையையே காண்பதால் தான் மன்னர் கேள்வி கேட்ட சமயத்திலும் அன்னையின் ஒளி பொருந்திய முகத்தை தரிசனம் செய்து கொண்டு இருந்ததால் தான் பெளர்ணமி என்று   சொல்லிட்டாரோ ?


 சௌந்தர்ய லஹரி, 27-வது ஸ்லோகத்தில், ஸ்ரீ பகவத்பாதாளும் பாடியிருக்கார்.

ஜபோ ஜல்ப சில்பம், சகலம் அபி முத்ரா விரசனா
கதி: ப்ராதக்ஷிண்ய க்ரமனம், அசன அத்யாஹுத்ய விதி:
ப்ரணாம சம்வேஷ:, சுகம் அகிலம் ஆத்மார்ப்பன த்ருஷா
ஸபர்யா பர்யா: தவ பவது யன்மே விலஸிதம்
அம்பிகையே! எல்லாமே உனக்கு அர்ப்பணம் என்றுஆத்ம சமர்ப்பண பாவனையுடன்நான் பேசும் வெற்றுப் பேச்சு ஜபமாகவும்,என் உடல் அசைவுகள் உன்முத்திரைகளின் விளக்கமாகவும்,நடையெல்லாம் உனக்குச் செய்யும் பிரதட்சிணமாகவும்,நான் புசிப்பதெல்லாம் உனக்குச் செய்யும் ஹோமமாகவும்,நான் கிடப்பது உனக்குச் செய்யும் நமஸ்காரமாகவும்,இம்மாதிரி என் சுகத்திற்காக நான் செய்யும் மற்ற செயல்களும் உனக்குச் செய்யும் பூஜையாக நிறைவேறட்டும்னு பகவத்பாதாளும் சொல்லிருக்கார்.
அதாவது, நமது ஆத்மாவை அம்பாளுக்கு அர்ப்பணம் செய்துவிட்டால், நமக்கு ஜீவன் முக்தி கிடைக்கும். அப்படி செய்வதால், நாம் பேசும் பேச்சு, அம்பாளை வர்ணிக்கும் ஸ்லோகங்களாக கருதப்படும், நாம் என்ன செயல் செய்தாலும், அது அம்பாள் வழிபாடாக மாறும். இவையே ஆத்மநிவேதனம் எனப்படும் 9 வகை பக்தியின் சிறப்பு.
பக்தியின் உச்சநிலையில், பக்தர்கள், தேவியைத் தவிர வேறெதுவும் அவர்கள் கண்ணுக்குப் புலப்படாததால், தாங்கள் செய்யும் அனைத்துச் செயல்களையும், நடப்பது உண்பது படுப்பது உட்பட, அவளுக்கு அர்ப்பணமாகவே செய்கிறார்கள். தன்னுடைய செயல்களும் அம்மாதிரியே ஆக வேண்டுமென, ஆதிசங்கரர் பிரார்த்தனை பண்ணிக்கறார்.
இதையேதான் நம்ம மகாகவியும் பாடியிருக்கார் இப்படி!!
பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா - நின்றன்
பச்சை நிறம் தோன்றுதையே நந்தலாலா
கேட்கும் ஒளியில் எல்லாம் நந்தலாலா - நின்றன்
கீதம் இசைக்குதடா நந்தலாலா
தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா - நின்னை
தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா .


 " ஸ்ரீமன் நாராயயணீயத்துல " பட்டத்ரீயும் இதே கருத்தத்தான் சொல்லிருக்கார்.
நாராயணீயத்துல 3வது தஸகம்ல 7 வது ஸ்லோகத்துல வருகிறது 

விதூ⁴ய க்லேஸா²ன்மே குரு சரணயுக்³மம்ʼ த்⁴ருʼதரஸம்ʼ
ப⁴வத்க்ஷேத்ரப்ராப்தௌ கரமபி ச தே பூஜனவிதௌ⁴ |
ப⁴வன்மூர்த்யாலோகே நயனமத² தே பாத³துலஸீ
பரிக்⁴ராணே க்⁴ராணம்ʼ ஸ்²ரவணமபி தே சாருசரிதே ||
"ஸ்ரீஅப்பனே!.. என் கால்கள் உமது திருக்கோயில்களுக்குச் செல்லட்டும்.. கைகள் உமக்கு பூஜை செய்வதிலும், கண்கள் உம் திருவுருவை தரிசிப்பதிலும், மூக்கு உமது திருவடிகளில் சமர்ப்பித்த துளசியை முகர்வதிலும், காதுகள் உம் லீலைகளைச் சொல்லும் கதைகளைக் கேட்பதிலும் மட்டுமே ஈடுபடட்டும்.. இவ்வாறு நான் இன்புறுவதற்கு, என் துன்பங்களைப் போக்கி அருள்வாயாக!!".
.
நின்றும் இருந்துங் கிடந்தும் எழுந்தும் நக்கும் அழுதுந் தொழுதும் வாழ்த்தி' என்று திருவாசகத்திலும் பாடப்பட்டுள்ளது 

எழுதா மறையின் ஒன்றே,அரும்பொருளே , அருளே 


 எழுதப்படாத வேதங்களில் ஒன்றி நிற்கும் அரும்பொருளே. 

வேதங்களை வடமொழியில் ஸ்ருதி என்றும் தமிழில் மறை என்றும் கூறுவர் அவை எழுதப் படவில்லை.ஸ்ருதி என்பது ஸ்வர அமைப்புக்ள் மாறாமல் குரு வாயினால் ஓத அதை சிஷ்யன் தன கத்தினாள் கேட்டு மனதில் பதித்துக் கொண்டு பல காலம் ஓதி பயில்வது.இதில் ஒலி தான் மிக முக்கியம்.


தேவியின் இருப்பிடமான ஸ்ரீ நகரத்தின் நான்கு வாயில்களாக  நான்கு வேதங்களும் அமைந்துள்ளன.வேதநாயகியான அம்பிகையால் அருளப்பட்டவை. அந்த வேதங்களின் உட்பொருளாகிய பிரம்ம ஞானமாக விளங்கக் கூடியவள் அம்பிகை.

அரும்பொருளே , அருளே 

அவள் அடையவொண்ணா அரும்பொருள். எல்லாத் தவங்களின் இருதியாய், தவங்களின் பயனாய் அடைவது என்று ஒன்று இருந்தால் அது அவளின் அருளுக்குப் பாத்திரமாவது ஒன்றாகவே இருக்க வேண்டும். அவளின் அருள் மட்டுமே நமக்கு வேண்டும். 
அவள், அருட்கடல். எது கேட்டாலும் தந்து விடுவாள். நமக்கு அது சரிப்படுமோ, படாதோ, தந்து விடுவாள். 
அதே போல்தான், அந்த அபிராமியிடம் வேண்டுவதும். எது கேட்டாலும் கொடுத்து விடுவாள். ஆனால், அவளிடல் ஏதும் கேட்காமல் இருப்பதே உத்தமம். அவளையே கேட்பதுதான் சிறந்தது. அவள் அருகிலேயே, அவள் அடியிலேயே இருந்து விட்டால், வேறு என்ன வேண்டும் 
உமையே 

'உமையே' என்ற சொல்லிலும் ஒரு கிளைக்கருத்து இருக்கிறது. உமா என்ற சொல்லுக்கு ஒளி என்று பொருள். உமா என்பதற்கு, 'பெண்ணே வேண்டாம்' என்றும் பொருள் உண்டாம்.
பார்வதியாகப் பிறந்த சக்தி, கரிய நிறத்தவளாக இருந்தாளாம். சிவன் பார்வதியை 'கரிக்குஞ்சு' என்று கிண்டல் செய்ய, பார்வதி கோபம் கொண்டு சிவனை விலகினாளாம். பதிலுக்கு ஏதாவது சிவனைக் கிண்டல் செய்து விட்டுப் போகக்கூடாதோ? தன்னுடைய நிறத்தை மாற்றக் கடுந்தவம் செய்யப் போனாளாம். 'வேண்டாம், கடுமையான தவம் மேற்கொள்ளாதே' என்று பார்வதியை அவளுடைய தாய் தடுத்ததாகப் புராணக் கதை. (உ, மா: பெண்ணே, வேண்டாம்!).
உமா என்ற சொல்லுக்கு ஒளினும் சொன்னோம் இல்லையா!!
திதியைத் தவறாகச் சொல்லிவிட்டு, உயிர் பிழைக்க பட்டர் அந்தாதி பாடியது அமாவாசையன்று இல்லியா, அமாவாசை பௌர்ணமியாக என்ன தேவை? ஒளி இல்லையா? அதனால் தான் பட்டர் அபிராயிய உமயேன்னு பாடறார்.

 இமயத்துஅன்றும் பிறந்தவளே 

இமாசலத்தில் அன்னை பார்வதியாய் திரு அவதாரம் செய்தவளே.


அழியா முக்தி ஆனந்தமே

அதுவும், எப்படிப் பட்ட ஆனந்தம்? அழியாத முக்தி ஆனந்தம். ஒரு பொழுதும் வற்றாத ஆனந்தம். வேறு ஏது சிந்தனையும் இன்றி அவளையே நினைத்து இருக்கும் பேறு நமக்கு வாய்த்து விட்டால், வேறு என்ன வேண்டும் நமக்கு?
முத்தி - என்பது விடுதலை - பந்தபாசங்களினின்றும், மாயை, பிறப்பு இறப்பு - அது ஆனந்தமானது. இதையே பேராந்தம், பிரம்மானந்தம், சிவானந்தம், ஆத்மானந்தம், சச்சிதானந்தம் என்றெல்லாம் கூறுவர்.
லலிதா சகஸ்ரநாமத்திலும் வருகிறது;
'முக்தி ரூபிணி' அப்படின்னு வர்ணிக்கப்பட்டிருக்கிறாள்.
முக்தி ரூபிணீ - முக்தியையே ரூபமாக உடையவள்
முகுந்தா - முக்தி அளிப்பவள். முகு : என்றால் மோட்சம். அதைத் தருபவள்.
முக்தி நிலையா - முக்தியின் இருப்பிடம்.
முக்திதா - தன் பக்தர்களுக்கு அன்னை முக்தியை அளிப்பவள்..

அவள் என்றும் அழியாத சாயுஜ்ய பதவியைத் தருபவள். சாயுஜ்ய முக்தி அடைந்தோர் அழியாத முக்தி ஆனந்தம் பெற்றவர்கள். ' ஆனந்தமே ' என்று இப்பாடலை முடிக்கிறார் பட்டர். 

அபிராமி சரணம் சரணம்!!

                                                                                 பாடல் இசை வடிவில் 

                                                                                   குருஜி கற்பிக்கிறார் 

                                                                                                       




                                                               Utube  Link for ANDROID  and   IPAD   PHONE


                                                                    https://youtu.be/_1KOPzByh4U
                                                                

                                                                                  அன்பர்கள் இசைக்கிறார்கள் 

                                                                                                          


                                                                      Utube  Link for ANDROID  and   IPAD   PHONE


                                                                            https://youtu.be/fE2h2IRc3lU

                                                                                       முருகா சரணம் 

No comments:

Post a Comment