Monday 24 July 2017

அபிராமி அந்தாதி வரிசை ...11


                                                           அபிராமி  அந்தாதி வரிசை ...11

                                                                                       



ஆனந்தமாய் என் அறிவாய் நிறைந்த அமுதமுமாய்
வானந்தமான வடிவுடையாள் மறை நான்கினுக்கும்
தானந்தமான சரணாரவிந்த தவள நிறக்
கானந்தம் ஆடரங்காம் எம்பிரான் முடிக்கண்ணியதே


அன்பரின் விளக்கவுரை 

ஆனந்தமாய் என் அறிவாய் நிறைந்த அமுதமுமாய்
ஆனந்தமாய் என்று சொல்லி அறிவாய் என்றார். அறிவு - சித்துப்பொருள். பின் நித்தியமாகிய அமுதத்தைச் சொன்னார். அது சத்துப்பொருள். ஆகவே இந்த மூன்றினாலும் அம்பிகை ஆனந்தமாய், சித்தாய், சத்தாய் நிற்பவள். எனவே அவள் சச்சிதானந்த ஸ்வரூபி என்பதும் புலனாகும்.
லலிதா ஸஹஸ்ரநாமத்துல ஸச்சிதானந்த ரூபிணீ - ஸச்சிதாநந்த வடிவானவள்னு சொல்லியிருக்கு அம்பாளை.
தேவி ஆனந்த வடிவினள் என்று தொடங்குகிறார் பட்டர். ஆனந்தம் என்றால் என்ன? பெரும் ஞானியரின் ஆராய்ச்சிக்கு உரியதாக இந்தக் கேள்வி விளங்குகிறது. உணவு ஆனந்தம். தூக்கம் ஆனந்தம். புலன் வழி நுகர்ச்சிகளும் ஆனந்தம்தான். ஆனாலும், எல்லவற்றையும் விடப் பெரிய ஆனந்தம் எது என்ற கேள்வி எழும்போது, எல்லா இன்பங்களுமே சற்று நேரம்தான் என்ற உண்மையும் புரிகிறது. அப்படியனால், எது ஆனந்தம்?
அந்த அபிராமிதான் ஆனந்தம். அவளே ஆனந்த ஸ்வரூபி. அவளே ஆனந்த வடிவினள். ஆனந்தத்தினை எவ்வாறு உணர்கிறோம்? நமது அறிவினால்தானே? அந்த அறிவாகவும் அந்த அம்பிகையே இருந்துவிட்டால்?


திருமூலர் " அறிவார் பராசக்தி ஆனந்தம் என்பர் " ( 1054) என்று கூறியிருப்பதையும் ஒப்பிட்டு மகிழ்வோம். '
 ஆனந்த ரூபமயிலே ' என்பது தாயுமானவர் திருமொழி.
அதுவல்லவோ நமக்கு வேண்டும்!! ஆனந்தமும் அவளே. அந்த ஆனந்தத்தினை அறியும் அறிவும் அவளே. அவளே அமுதமுமாய் இருக்கிறாள். அமுதம் என்பது மரணத்தை நீக்கக்கூடியது. அவளும் அப்படிதான். அவளது ஸ்வரூபமும் நமது மரண பயம் போக்கி, நமக்கு ஆனந்தம் அளிக்கிறது.


புலன்களுக்கு இன்பம் சேர்பவை அறிவுக்கு இன்பம் சேர்பவையாய் இருக்காது. அறிவுக்கு இன்பம் சேர்ப்பவை புலன்களுக்கு இன்பம் சேர்பவையாய் இருக்காது. இரண்டும் சேர்ந்து கிடைப்பது அபூர்வம்.

அமுதம் உடலையும் உயிரையும் இணைப்பது. அதனால் தான் நாம் உண்ணும் உணவுக்கு அமுது என்று பெயர்.
அபிராமி "அமுதமாய்" இருக்கிறாள்.
நஞ்சு உண்ட திருவிளையாடலை, சிவபெருமான் செய்தாலும் அம்மையே அதனை உணடாள் என்றும் சொல்வது உண்டு. சிலப்பதிகாரத்தில் வேட்டுவ வரி என்ற பகுதியில்,
" விண்ணோர் அமுதுண்டும் சாவ ஒருவரும், உண்ணாத நஞ்சுண்டிருந்தருள் செய்குவாய் "
அதாவது அமுதம் உண்டாலும் தேவர்களுக்கும் இறப்பு உண்டு. அவர்கள் அஞ்சி நடுங்கிய நஞ்சை தான் உண்டு என்றும் அழிவில்லாதவளாக விளங்குபவள் அன்னை. மேலும் அதிலேயே " நஞ்சுண்டு கறுத்த கண்டி " என்பர்.அம்பிகைதான் அழியாப் பரம்பொருள்.அவள் தான் உண்மையான அமுதம், அவளை உட்கொண்டவர்கள் மரணமிலாப் பெருவாழ்வைப் பெறுவார்கள். 
வான் அந்தம்  ஆன வடிவுடையாள் 
அம்பிகை எப்படிப் பட்ட வடிவு உடையவள்? அவள் அனைத்தினுக்கும் தானே முடிவானவள். அவள் தான் " அந்தம் " அவள் தான் எல்லாவற்றிற்கும் முடிவு என்கிறார் பட்டர்.
பறவைகள் சிறகடித்து பறக்கும் வானம், மழை மேகம் வட்டமிடும் வானம், மின்னல் கோலம் போடும் வானம்...சூரியன், நிலவு, கோள்கள், நட்சத்திரங்கள், பரந்து விரிந்த இந்த பால் வெளி  ....விரிந்து கொண்டே போகும் இந்த வானம் ஒரு அற்புத காட்சி... ஆனால் வானத்துக்கு எல்லையே இல்லை 
அபிராமியின் அழகுக்கு பறந்து விரிந்து அந்த வானம் கூட ஒரு எல்லை இல்லை. எல்லை இல்லாத இந்த பரந்த வெளி கூட அவளின் அழகுக்கு இணை இல்லை.
மறை நான்கினுக்கும் தான் அந்தமான சரணார விந்தம்.



வேதம் நான்கினுக்கும் முடிவாய் விளங்குவது உன் தாமரைத் தாள்கள்


சரணாரவிந்தம் - சரணம் அடையும் பாதங்கள் . விந்தம் என்றால் மூலப்பொருள். நாத விந்து கலாதி நமோ நம என்பது அருணகிரி வாக்கு.
அப்படி பட்ட அபிராமியின் பாதம், சரணார விந்தம், இருக்கும் இடம் எது தெரியுமா ?

தவள நிறக்கானம் தம்  ஆடரங்கு ஆம்  

சுடுகாடு சாம்பல் பூத்து இருக்கும். அதற்கு தவள நிறம் என்று பெயர். அந்த காட்டை நடன அரங்கமாய் கொண்டு நடனம் இடுபவன் சிவன். அந்த சிவனின் தலையில் அவளின் பாதம் இருக்கிறது.
அன்பின் உச்சம்...மனைவி தாயாகத், தெய்வமாகத் தெரியும் அன்பின் உச்சம்.
அன்பின் உச்சம்...கணவன் குழந்தையாகத் தெரியும் பரிவு.
அன்பின் உச்சம் ... நெற்றியில் மட்டும் அல்ல, பாதத்திலும் முத்தமிட தோன்றும்....
"பாகு கனி மொழி மாது குற மகள் பாதம் வருடிய மணவாளா" என்பார் அருணகிரி நாதர். எனக்காக இந்த காடு மேடு எல்லாம் அலைந்தாயா என்று அவளின் குற வள்ளியின் பாதங்களை வருடி விட்டாராம் முருகன்.
நாள் எல்லாம் ஓடி ஆடி களைத்து போன மனைவியின் பாதம் பிடித்துப் பாருங்கள்...அன்பின் இன்னொரு பரிணாமம் தெரியும்....
தவள நிறக்கானம் தம் ஆடரங்காம்

எம்பிரான் மயானத்தில்ஆடுகிறவர். எல்லாம் படுசூரணமாகி எங்கும் சாம்பல் நிரம்பி வெண்ணிறம் பெற்ற காடாகிய சுடலையில் ஆடுகிறவர் அவர். அந்த வெண்ணிறக் காட்டை, தாம் நடனம் ஆடும் அரங்கமாகக் கொண்டவர். எல்லாம் நீறாகி அந்த வெள்ளிய சூழ்நிலையில் ஆடும் நடனத்தைப் பாண்டரங்க நடனம் என்பர்.
உலகம் எல்லாம் அழியினும் தாம் அழியாமல் நிற்பவர் என்பதை அந்த ஆடல் காட்டுகிறது. இத்தகைய பெருமான் இறைவியை வணங்குகிறார்.
இதனையே ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமத்தில் ( 232)
மஹேச்வர மஹாகல்ப மஹாதாண்டவ ஸாஷிணீ
மஹேச்வரனுடைய மஹாப்ரளய காலத்திய மஹாதாண்டவத்திற்கு ஸாஷியாயிருப்பவள்.
( நடனம் : ஆண்கள் - தாண்டவம், பெண்கள் - லாஸ்யம்)
மஹேச்வரன் மஹாதாண்டவம் செய்யும் போது தேவியும் நடனம் செய்வதாகக் கூறப்பட்டிருக்கிறது. இருவரும் நடனம் செய்யும் போது அம்பாளின் வேண்டுகோளின் பேரில் இருவரும் பரம கருணையுடன் லோகங்களைத் திரும்பவும் ஸ்ருஷ்டி செய்வதற்காக அனுக்ரஹம் எனப்படும் ஐந்தாவதுதொழில் தொடங்குகிறது.
மூககவி - " ஹர நடன சாஷீ விஹரதாத் " என்பர்.
தந்தையின் கருணை : உலகினைக் காப்பாற்ற நஞ்சு உண்டது.
தாயின் கருணை : அகிலாண்டமும் தன்னுள் அடக்கி இருக்கும் கணவன் உண்ட நஞ்சை அமுதாக்கியது.
தாய், தந்தையின் கருணை : லோகங்களைத் திரும்பவும் ஸ்ருஷ்டி செய்வது.
அபிராமிபட்டர் தேவியின் சரணார விந்தத்தின் பெருமையை, தன் துணைவன் ( உலகத்தில் எல்லாம் தலைசிறந்து விளங்கும் அழிவற்ற பரமானந்தமான சிவபெருமான்) தன் தலைக்கு மாலையாக அணிந்துள்ளான் என்றுகூறுவது, அவர் அன்னையிடம் கொண்ட பக்திக்கு சிகரமாய் அமைந்துள்ளது.

 ஆதிசங்கரரும், இந்தக் கருத்தினை ஸௌந்தர்ய லஹரீ 86 - வது ஸ்லோகத்தில் ( ம்ருஷா க்ருத்வா கோத்ரஸ்கலான மத வைலஷ்ய நமிதம்....)

கவிநயத்துடன் வெகு அழகாகசொல்லியுள்ளார்.
அதாவது அம்பாளிடத்து சரஸம் செய்வதாக எண்ணி அவளுக்குக் கோபம் உண்டாகும்படியாக அவளது பிறந்த் வீட்டினை இகழ்ந்த பரமன், அதனால் கோபம் கொண்ட அம்பிகையை சமாதானம் செய்யும் விதமாக மன்னிப்புக் கேட்டு அவளது பாதங்களில் நமஸ்கரிப்பதாகவும், அப்போது சிவனது நெற்றி அன்னையின் பாதங்களில்பட்டு, அவள்காலில் இருக்கும் பாத சிலம்புகள் ஒலியெழுப்புவதாகவும் சொல்கிறார் பகவத்பாதாள்.


 அம்பிகையின் மலர்பாதங்கள் இறைவன் தலைமேல் இருப்பது சொல்லப்பட்டு இருகிறது. இது தவறா? 


இல்லை இது போல ஜயதேவரும் கீத கோவிந்தத்தில் கண்ணனின் மீது ராதையின் கால்கள் படுவதாக எழுதி விட்டு பிற்கு அடித்துவிட்டார். பின்னர் ஆற்றுக்கு சென்று குளித்துவிட்டு வந்து பார்த்தால் கண்ண்னே வந்து அதே வரிகளை எழுதி விட்டு அது சரியானதே அது தான் தனக்கு பிடித்தது என்று காண்பித்தார். அதுபோல்தான் இதுவும்.


எம்பிரான் முடிக் கண்ணியதே -

 என் தலைவனாம் ஈசன் முடிமேல் அணியும் மாலைகளாகும்.



மற்றும்   "முடிக்கு அண்ணியதே" என்ற கோணத்தில்  
எம்பிரானின் முடிக்கற்றையுடன் அருகில் அம்மையும் ஆடுவாள் எனவும்  கொள்ளலாம் 

அந்தரி பாதம் என் சென்னியதே என்று அன்புடன் உரிமை கொண்டாடுகிறார் அல்லவா! 
பட்டர் சொன்னபடி எம்பெருமாட்டியை, ஆனந்தம் தருபவளை, நிறைந்த அமுதம் தருபவளை நாமும் நமக்கு அதையெல்லாம் அருளுமாறு அபிராமியின் சரணாரவிந்தங்களை பற்றிக் கொள்வோமா!!
அபிராமி சரணம் சரணம்!!


                                                                                 பாடல் இசை வடிவில் 

                                                                                         சாவேரி ராகம் 

                                                                                   குருஜி கற்பிக்கிறார் 


                                                                                                         
                   

                                                                     Utube  Link for ANDROID  and   IPAD   PHONE


                                                     https://youtu.be/4-P6FtpC5s8

                                                             
                                                                                  அன்பர்கள் இசைக்கிறார்கள் 


                                                                                                       

                                                                                 
                                                                   Utube  Link for ANDROID  and   IPAD   PHONE

                                                                                                                                                                                                                                                       https://youtu.be/BnUEMgtJ1o0  

                                                                                                                                                                                                                                                       முருகா சரணம் 

No comments:

Post a Comment