Thursday 1 June 2017

அபிராமி அந்தாதி வரிசை ....பாடல் 3



                 அபிராமி அந்தாதி  வரிசை ....பாடல்   3


                                                     திருக்கடையூர் ஆலயம் 

             thirukkadaiyur festival thai amavasai க்கான பட முடிவு




                                                                     பாடல் 



" அறிந்தேன் எவரும் அறியா மறையை, அறிந்து கொண்டு
செறிந்தேன் நினது திருவடிக்கே, திருவே, வெருவிப்
பிறிந்தேன் நின் அன்பர் பெருமை எண்ணாத கரும நெஞ்சால்,
மறிந்தே விழும் நரகுக்குறவாய மனிதரையே"


                                                    அன்பரின் விளக்கவுரை 

"நினது பெருமையை, யாரும் அறிய முடியாத நினது பெருமையை அறிந்தேன். உனது திருவடியிலேயே கலந்து விட்டேன். நினது அன்பர்கள் பெருமையை எண்ணாத, தீவினை மிக்க, நரகத்தில் வீழ்ந்து படும் மனிதரை விட்டு விலகி விட்டேன்" என்று பாடுகிறார் பட்டர்.
இங்கே, அன்பர் கூட்டத்தின் பெருமை பேசப்படுகிறது.
"அன்பர் பணி செய்ய எனை ஆளாக்கி விட்டு விட்டால்,
இன்ப நிலை தானே வந்தெய்தும் பராபரமே" என்று பேசுகிறார் தாயுமானவர்.
"அங்கமெல்லாம் குறைந்தழுகும் தொழுனோயராயினும், அவர் கண்டீர் நாம் வணங்கும் கடவுளாரே" என்று, சிவன் அடியார்கள் பற்றி பேசுவார் அப்பர் பெருமான்.
சங்கர பகவத் பாதரும், பரம் பொருளை அடையும் மார்கம் பற்றி பஜ கோவிந்தத்தில் பேசும் பொழுது,
" சத்சங்கத்வே, நிஸ்ஸங்கத்வம்
நிஸ்ஸங்கத்வே, நிர்மோகத்வம்
நிர்மோகத்வே நிச்சல தத்வம்
நிச்சல தத்வே ஜீவன் முக்திஹி"
என்று பேசுகிறர். ஜீவன் முக்தி பெரும் வழியின் முதல் படி, "சத்சங்கமே" , "அன்பர் கூட்டம் கலத்தலே" என்று சொல்லுகிறார்.
அன்பர் கூட்டத்திற்கு அப்படி என்ன பெருமை? அது ஏன் அவ்வளவு முக்கியமானதாகப் பேசப்படுகிறது?
இறைவனுக்கு, தனது அடி சேரும் அடியார்களை விட, தன் அன்பர்களின் அடி சேரும் அடியார்க்கும் அடியாரே மிகவும் ப்ரியமானவர்களாம். தன்னைப் பிழைத்தவர்களைக் கூட அவன் மன்னித்து விடுவான். ஆனல், தன் அடியார்களைப் பிழைத்தவர்களை அவன் ஒருபோதும் மன்னிப்பதே இல்லை.
அந்தப் பரமனின் அடியவனான அம்பரீஷனை அழிக்க ஒரு பூதத்தை ஏவி விட்ட துர்வாசருக்கு அந்த நாராயணன், அனைவருக்கும் அபயம் அளிப்பவன், அபயம் கொடுக்கவில்லை. துர்வாசரை, அந்த அம்பரீஷனிடமே திருப்பி அனுப்பி வைத்தான்.
அந்தப் பரமனும் சரி, இந்த அபிராமியும் சரி. அன்பர் கூட்டதை ஏன் அவ்வளவு உயர்வாகக் கொண்டாடவேண்டும்?
ஸ்ரீ முக்கூர் லஷ்மி நரசிம்மாச்சார்யார், தனது திருப்பாவை விளக்க உரையிலே, சற்று வேடிக்கையாகவே சொல்லுவார் : "ஆயர்பாடியிலே கண்ணன் குழந்தையாக இருக்கிறான். அந்தக் குழந்தையை அழித்து விட, ஒடி வருகிறது ஒரு வண்டிச் சக்கரம். சகடாசூரன் தான் வருகிறான் வண்டிச் சக்கரமாக. வந்த அந்த சக்கரத்தை எது தடுத்து நிறுத்தியது? அந்தக் கண்ணனின் பாதங்கள் தானே! அந்தப் பாதம் பட்ட உடனேயே, சகடாசூரன் தூள் தூளாகிவிட்டான். அப்படி, அந்த பகவானையே காப்பாற்றியது எது? அந்த பாதம் அல்லவா? அப்படி அவ்வளவு பெருமை பெற்ற அந்தப் பாதங்களையே பற்றி இருப்பவர்கள் அல்லவோ பெருமை வாய்ந்தவர்கள்? அதனால் தான் அந்த மாயனும், இந்த பாதத்திலே அப்படி என்ன சுவை இருக்கிறது என்று கண்டு பிடிக்கத்தானோ என்னவோ, தனது கால் கட்டை விரலை எடுத்து வாயில் வைத்து சுவைத்துக் கொண்டு இருக்கிறான்!! "
அப்படி, அந்த பகவானையும் விட உயர்ந்தது, அவனது கமலப் பாதங்கள். அந்தப் பாதங்களையே பற்றி இருக்கும் அடியார்கள் அல்லவோ மிகவும் உயர்ந்தவர்கள். அப்படி மிகவும் சிறந்தவர்களாக இருப்பதனால்தான் அந்த அன்பர் கூட்டம் கலந்து இருத்தலே அந்த இறைவனுக்கும் உகந்ததாக இருக்கிறது.
அப்படிப் பட்ட அந்த அன்பர்களின் பெருமையை எண்ணாமல் இருக்கும் மனிதர்கள் அற்பர்கள் அன்றி வேறு யார்?
"அன்பர் கூட்டத்தோடு சேராமலும், அந்தப் பரமனை விடவும் உயர்ந்ததான பாகவதர்களைப் பற்றி நினையாமலும் இருக்கும் பாவம் செய்த மனிதர்களின் கூட்டிலிருந்து, அன்னையே, நான் பிரிந்து, கிளம்பி வந்துவிட்டேன்" என்று சொல்லுகிறார் பட்டர்.
விபீஷணன், ராவணனுக்கு, எவ்வளவோ நல்லது சொல்லிப் பார்த்தான். ராவணன் செவிகளில் அவை ஏறவே இல்லை. விபீஷணன், அந்த அற்பனாகிய, பாவியாகிய ராவணனை விட்டுப் பிரிந்து, இராமனின் தாளிணகளைச் சேர ஓடி வந்துவிட்டான். அது போல, இங்கே, பட்டரும், இப்படிப்பட்ட அற்பர்களை விட்டுப் பிரிந்தேன் என்கிறார்!
"மறை" என்பதற்கு, 'வேதம்' என்று பொருள். அதனை, 'மறை' என்று ஏன் குறிப்பிட்டார்கள்? ஒரு தகுதியான மாணவனுக்கு, தகுந்த உபாத்யாயரால் உபதேசம் செய்யப்பட்டு மட்டுமே அது கற்கப் பட்டதால், அது மறை பொருள். வேதத்தின் உட்பொருள் ஆய்ந்து பார்ப்போருக்கு மட்டுமே விளங்குவதால் அது மறை பொருள்.
'எவரும் அரியா மறை' என்பது எது? இங்கே அந்த அபிராமியை அடையும் நெறியையே குறிப்பிடுகிறார் பட்டர் என்று தோன்றுகிறது. அந்த சாக்த நெறியை, அந்த அபிராமியை அடையச் செய்யும் அந்த சிறந்த வழியை முழுக்க அறிந்தவர் யார்தான் இருக்க முடியும்? "இதோ நான் இருக்கிறேன்' என்கிறார் பட்டர். அந்த மறை காட்டும் முதற்பொருளான அபிராமியையே அடைந்து விட்டேன் - அந்த அம்பிகையின் பாத கமலங்களையே அடைந்து விட்டேன் - அந்த மறையின் முதலாகவும் முடிவாகவும் இருக்கும் அந்த பாத கமலங்களையே அடைந்து விட்டேன் என்று பேருவகை கொள்கிறார் பட்டர்.
அவளது அருளினால் அல்லவோ 'எவரும் அறியா மறையை' அவரால் அறிந்து கொள்ள முடிந்தது?
இங்கே " செறிந்தேன் உனது திருவடிக்கே" என்னும் இடத்தில் வரும் ஏகாரம் மிக அழகானது!
சில பேர் நிறையப் படிப்பார்கள். அறிந்து கொள்வார்கள். ஆனால், அறிந்து கொண்டபடி நடப்பார்களா என்றால், கிடையாது. அப்படி இருப்பவர்களது அறிவினால் என்ன பயன்? அறிந்த அறிவின்படி நடந்து கொள்ள வேண்டும்.
இங்கே, அபிராமி பட்டரும், "யாவரும் அறிய முடியாத மறையை அறிந்து கொண்டேன், அப்படி அறிந்த அறிவின் முடிவாக, நீயே கதி என்று தேர்ந்தேன், உனதடியே வந்து சேர்ந்து விட்டேன். வேறு எந்த தெய்வத்தையும் நாடிச் செல்லவில்லை. உனதடி மட்டுமே துணை என நாடி வந்துவிட்டேன்" என்று சொல்லுகிறார். திருவள்ளுவரும் அழகாகச் சொல்லுவாரே :
"கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாஆள் தொழார் எனின்"
என்று!
படிப்பதனால், கற்பதனால், என்ன பயன்? அனைத்தையும் அறிந்த அந்த இறைவனின் தாள் தொழுவது அல்லவோ கற்பதன் பயன்?
இங்கோ, பட்டர், "எவரும் அறிய மாட்டா அந்த மறையை" அல்லவா அறிந்து கொண்டிருக்கிறார்! அந்த அறிவின், பயன், அந்த அறிவைக் கொடுத்தவளின் தாளிணைகளை அடைவதே அல்லவா!
பக்தர்களுக்கு மிகச் சிறந்த செல்வமாக இருப்பவள் அந்த தேவியே அல்லவா? லலிதா சஹஸ்ரநாமமும், தேவியின் திருநாமங்களில் ஒன்றாக, "மஹாலஷ்மி" என்று குறிக்கிறது. அதனால்தான், அபிராமியை, இங்கு பட்டர், "திருவே" என்று அழைத்தார் போலும்!!
அந்த முழு முதற் பொருள், நம் வினைகளையும் தீர்த்து, நம்மையும் ஆண்டு கொண்டு, நம்மையும் தன் பாதாரவிந்தங்களில் சேர்த்துக்கொள்ள நாம் ப்ரார்த்தனை செய்வோம்.


அபிராமி சரணம் சரணம்.

                                                                           குருஜி கற்பிக்கிறார் 
                                                                                                       

                                                                                                             A
                                                                                  அன்பர்கள் 

                                                                 

                                                                        அபிராமி சரணம் சரணம்.

                                                                                        முருகா சரணம்                                              

No comments:

Post a Comment