Saturday 24 June 2017

அபிராமி அந்தாதி வரிசை ...6 அபிராமி அந்தாதி வரிசை ....பாடல் 6


                                     அபிராமி  அந்தாதி வரிசை ...6
                       

                                                                                                     


பாடல் 


சென்னியது உன் திருவடித்தாமரை சிந்தையுள்ளே
மன்னியது உன் திருமந்திரம் சிந்துர வண்ணப் பெண்ணே!
முன்னிய நின் அடியாருடன் கூடி முறை முறையே
பன்னியது உந்தன் பரமாகமப் பத்ததியே!

அன்பரின் விளக்கவுரை 

சென்னியது உன் திருவடித்தாமரை 

தேவியின் திருவடிப் பெருமையோடு இந்தப் பாடலைத் துவங்குகிறார் அபிராமி பட்டர். அந்த அழகிய திருவடித் தாமரைகளை நான் என் தலைமேல்அல்லவாவைத்திருக்கிறேன் என்று தொடங்குகிறார்.
எப்படிப்பட்டத் திருவடிகள் அவை?

சிந்துர வண்ணம் 
வேதமே தாங்கி நிற்கும், வேதத்தின் உச்சியில் இருப்பவை அல்லவா அந்தத் திருவடிகள்!
லலிதா சஹஸ்ரனாமமும் சொல்லுகிறதே . "ஸ்ருதி சீமந்த சிந்தூரி, க்ருத பாதாப்ஜ தூளிகா" என்று. அந்த வேதமாதா, அவளது காலடியிலே விழுந்து விழுந்து நமஸ்காரம் செய்கிறாள். அப்படி அவள் விழுந்து விழுந்து வணங்குவதனாலேயே, அவளுடைய தலை வகிட்டிலிருக்கும் சிந்தூரம், அந்த ராஜராஜேஸ்வரியின் பாதங்களில் பட்டு, பட்டு, அந்த ராஜ மாதங்கியின் காலடிகள் சிவந்து விட்டனவாம்! சிவந்து, சிகப்பான தாமரை மலர்கள் போல இருக்கின்றனவாம்!


சென்னியது உன் திருவடித்தாமரை 
அப்படிச் சிவந்த அந்தத் திருவடித் தாமரைகளைத் தனது தலையிலே தரித்துக் கொண்டிருப்பதாகப் பேசுகிறார் அபிராமி பட்டர்.

ஆதிசங்கரரும்கூட, சௌந்தர்ய லஹரியில்,84 வது சுலோகம். அன்னையின் திருவடிகள், வேதங்களின் தலை போன்றதான உபநிடதங்களின் உச்சியில் விளங்குவதாக வர்ணிக்கிறார்.
அம்பாளுடைய சரண கமலங்களைத் துதிக்கிறபோது "வேதங்கள் தங்கள் சிரசுக்கு ஆபரணமாக எந்த உன் பாதங்களைத் தாங்குகின்றனவோ, அந்தப் பாதங்களை என்சிரசிலும்கூட வைப்பாய் அம்மா" என்கிறார்.
இப்படிக் கேட்பது நியாயமில்லையே என்றால், 'நியாயம் - அநியாயம் என்பவை காரிய - அகாரியங்களை எடை போடுகிறபோதுதான். தயை என்பதோ இப்படி குணங்களை எடைபோட்டுப் பார்ப்பதில்லை. நீயோ தயையே வடிவமானவள். எனவே, அந்த தயையால் என் தலைமீதும்கூட உன் திருவடிகளை வைப்பாய்" என்கிறார் (தயயா தேஹி சரணௌ) பகவத் பாதாள்.
தேவர்கள் அகம்பாவம் அடைந்தபோது, அதைப் போக்கி அவர்களுக்கு ஞானம் தருவதாக அம்பிகை தோன்றியதைக் கேநோபநிஷத் சொல்கிறது. இங்கே ஆசார்யாள் அதை மனஸில் கொண்டே சொல்வதாகத் தெரிகிறது. அகம்பாவ நிவிருத்தி தானே ஞானத்துக்கு வழி என்று அந்த உபநிஷத்திலிருந்து தெரிகிறது. அதற்கு ஏற்றாற்போல் இங்கேயும் அகம்பாவமே இல்லாமல் ரொம்பவும் அடங்கி 'மமாபி' "எனக்கும்கூட திருவடி ஸ்பரிசத்தை அநுக்கிரகிப்பாயம்மா" என்கிறார்.
உலகம் அனைத்தையும் தாங்குவது அந்த இறைவனின் திருவடிதான். அந்தத் திருவடிகள்தாம் அனைத்தையும் தாங்குகின்றன.
அதனால்தான், திருவடிகளுக்குப் பெருமை அதிகம்.

அதுதான்அனைத்தையும் தாங்குகிறதுஅதில்தான்அனைத்தும் தங்குகிறது
அதிலிருந்துதான் பாவங்களைப் போக்கும்கங்கை ஊற்றெடுத்தது

ஸ்ரீராமனின் திருவடிகளைத் தாங்கியபாதுகைகளுக்குத்தான்ராமாயணத்தில் பரதன் முடி சூட்டினான்ஸ்ரீராமனின் சார்பாக14 ஆண்டுகள் நாட்டை ஆண்டான்.
நாராயணனின் திருவடிதான்மூவுலகையும் அளந்தது
நாராயணனின் திருவடிதான்தேவர்களை துன்புறுத்திய மாஹபலியைபாதாள உலகிற்கு அனுப்பியது.
காலத்தை கடந்து வாழும் ஈசனின் திருவடிகளைப் பற்றியமார்க்கண்டேயனை பற்ற வந்த காலதேவனைஉதைத்து காப்பாற்றியது ஈசனின் பாதியாய்இருந்த அன்னையின் திருவடியே

உடலில் உள்ள அனைத்து நரம்புகளின் தொகுதிகளும் பாதத்தில்தான் இணைந்துள்ளன என்று யோக சாத்திரம் கூறுகிறது
ஞானிகளின் திருவடிகளை வணங்குவதன் மூலம் ஆன்மீக சக்தி,அருள் சக்தி வணங்குபவர்களுக்கு பாய்கிறது. அது அவர்களுக்கு, நம்பிக்கையையும்,நன்மையையும், மனதிற்கு நிம்மதியையும் அளிக்கிறது.
தன்னுள்ளே இறைவனை உணர்ந்தவர்கள் திருவடிகள்சக்தியுடையவை. அனைத்தையும் அளிக்கக்கூடியவை.ஆதனால்தான் திருவடி தாமரைகள் என்று அழைக்கிறோம்.
அதை வணங்குபவர்கள் உள்ளம் ஆதவனைக் கண்டதாமரை மலர் போல் மலரும்.
பெற்றோர்களின் திருவடிகளை வணங்குபவன்வாழ்வு சிறக்கும்.
இறைவனின் பாதுகைகளின் மகிமையை விளக்கி ஒரே இரவில் 1000 ஸ்லோகங்களை ஸ்ரீ நிகமாந்த மகாதேசிகன் அருளிச் செய்துள்ளார்
அப்படிபட்ட திருவடி தாமரைகளை உடைய அபிராமியின் பொற்பாதங்கள் தன் தலையில் எப்போதும்இருந்து அருள் செய்யட்டும் என்கிறார் அபிராமி பட்டர் .

 சிந்தையுள்ளேமன்னியது உன் திருமந்திரம்

நாமஸ்மரணம், மனதைக் கட்டுக்குள் வைக்கும். அன்னையை அறிய, முதலில் அவளது நாமத்தை விடாது தியானம் செய்ய வேண்டும். “அம்மா, உனது சிவந்த மேனியை எனது நெஞ்சில் வைத்து, உனது நாமத்தை இடைவிடாது தியானித்துக் கொண்டிருக்கிறேன்” என்று சொல்லுகிறார்.
மனிதர்களின் உள்ளம் எப்போதும் யானையின் துதிக்கை போல் ஆடிக்கொண்டே இருக்கும்.கடலில் அலைகள் வருவதும் போவதுமாய் மனதில் எண்ணங்கள் தோன்றிக் கொண்டே இருக்கும்.
உறங்கும் வரை மனம் உள்ளும் புறமும்வந்து போய்க்கொண்டே இருக்கும்.
அதன் போக்கைக் கட்டுப்படுத்த வேண்டுமென்றால்யானையின் துதிக்கையில் ஒரு சங்கிலியைக் கொடுத்துவிட்டால் அது அதை ஆட்டிக்கொண்டே இருக்கும். தலையில் மண்ணை அள்ளிப்போடும் செயலை விட்டுவிடும்
அதுபோல் மனதிற்கும் அபிராமியின் நாமத்தைஉச்சரிக்க செய்துவிட்டால் அது வேறு எதையும் நாடாது.

நின் அடியாருடன் கூடி 
உலகில் கடைத்தேற, தேவியின் தியானம் இருந்தால் மட்டும் போதாது. இந்த மனது பிய்த்துக்கொண்டு ஓடி, கண்ட விஷய சுகங்களிலும் ஈடுபடும் இயல்புடையது. அப்போதெல்லாம், அந்த அம்பிகையின் பக்தர் குழாத்தின் சங்கம், கூட்டுறவு நமக்கு இருந்தால், அந்த சங்க மகிமையால் நமது உள்ளம் பண்படும். அவர்கள் அன்னையைப் பற்றிப் பேசும்போதெல்லாம், நமது மனமும், விஷய சுகம் நீக்கி, அன்னையின் அழகினிலே, அவளது பாதாரவிந்தங்களிலே ஈடுபடும்.
இந்த உலகில் கடைத்தேற வேண்டுமென்றால்நல்லோர் கூட்டுறவு வேண்டும் .
பத்து நல்லவரோடு ஒரு தீயவன் சேர்ந்தால் அவன் நல்லவனாகிவிடுவான்.அதேபோல் 10 தீயவனோடு சேர்ந்தால்ஒரு நல்லவன் சேர்ந்தால் அவன் தீயவனாகிவிடுவான்
.எனவே இதை உணர்ந்துதான் அபிராமியின் அடியார்களோடு தன்னை எப்போதும் இணைத்துக்கொண்டுவிட்டேன் என்று பட்டர் கூறுகிறார
இதனால்தான், “சத்சங்கத்வே, நிச்சங்கத்வம்” என்றார் ஆதி சங்கர பகவத் பாதர். இதனை உணர்ந்துதான், அபிராமி பட்டரும், “அம்மா, உனது அத்யந்த பக்தர்களோடு, என்னை நான் இணைத்துக்கொண்டு விட்டேன்” என்று கூறுகிறார்

முறை முறையேபன்னியது உந்தன் பரமாகமப் பத்ததியே

“அம்மா, நான் நித்யம் வழிபடுவதும், கற்பதும் உனது ஆகம வழிமுறைகளில் சொன்னவிதமே” என்றும் சொல்லுகிறார்.

மாணிக்கவாசகரும், “ஆகம உருவாய் நின்று நமக்கருகில் வருபவன்” என்று பொருள்பட, சிவபுராணத்தில் “ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க” என்று பேசுகிறார்.

இப்படி, அன்னையின் திருவடிகளைத் தாங்கியும், அன்னையின் நாமத்தை விடாது தியானம் செய்தும், அவலது அடியாருடன் கூடி இருந்தும், அவளது ஆகம வழி சென்றும் அவளை வழிபடுவதாக அபிராமி பட்டர் கூறும் இந்த வழிகளில் நாமும் சென்று, அந்த அபிராமி அன்னையின் அருளைப் பெறுவோம்.

சொல் விளக்கம் 

'பன்னியது' மீண்டும் மீண்டும் படிப்பது என்ற பொருள் தரும். பல முறை (பன்முறை) படிப்பது 'பன்னுவது'. 

'பத்ததி' என்றால் 'வழிமுறை', 'தொடர்ச்சி', 'தொகுப்பு' என்ற பொருள்களைத் தரும்.


அபிராமி சரணம் சரணம் 



                                                                               குருஜி கற்பிக்கிறார் 

                                                                             
       

Utube  Link for ANDROID  and   IPAD   PHONE


https://youtu.be/lRGObsbmOGE        

                                                               
                                                                      அன்பர்கள் 


                                                                                                                                                 


   Utube  Link for ANDROID  and   IPAD   PHONE


  https://www.youtube.com/watch?v=KkLAw_S_0V0

                           
                                                அன்னை அபிராமியே சரணம் 
                                                             முருகா சரணம்                                                     

No comments:

Post a Comment