Sunday 1 December 2019

அபிராமி அந்தாதி - 44


                                                அபிராமி அந்தாதி - 44


                                                                                       



அபிராமி அந்தாதி - 44
தவளே இவள் எங்கள் சங்கரனார் மனை மங்கலமாம்அவளே அவர் தமக்கு அன்னையும் ஆயினள் ஆகையினால்இவளே கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியும் ஆம்துவளேன் இனி ஒரு தெய்வம் உண்டாக மெய்த் தொண்டு செய்தே:

அன்பரின் விளக்கவுரை 
தவளே இவள் எங்கள் சங்கரனார் மனை மங்கலமாம் - 
நமக்குத் தாயான இவளே எங்கள் சங்கரனாரின் மனை மங்கலம் - இல்லத்திற்கு நன்மையைச் சேர்ப்பவள்.
பரமசிவத்துக்கு வீடு என்பது அவருடைய மனதே. அதில் அம்பாள் வீற்றிருந்து அவரைத் தொழில்படுத்துகிறாள். சங்கரன் என்ற சொல்லுக்கு ஹிதத்தைச் செய்கிறவன்.
மகிழ்ச்சியைக் கொடுப்பவன் என்று அர்த்தம்.
அபிராமியும் தவமிருந்து நல்ல கணவனை வரித்துப் பெருமை கொண்டாள். அவள் " மாதவள் " - இத் தொடரைப் பதிமூன்றாம் பாடலில் பயன்படுத்தியுள்ளார். பார்வதியாய் இருந்தபோதும், காமாட்சியாய் இருந்தபோதும், தாட்சாயிணியாய் வாழ்ந்த போதும் அவள் சிவனை அடையத் தவம் செய்தாள். எனவே சிறப்பாகத் தவளே எனப்பட்டாள். " அஞ்சொல் மொழியாள் அருந்தவப் பெண் பிள்ளை " . ( 1109) " ஆருயிர் ஆயும் அருந்தவப் பெண் பிள்ளை" ( 1110) என்றெல்லாம் திருமூலர் சக்தி செய்த தவங்களாகக் குறிப்பிடுகிறார்.  
சங்கரனாரது மனையானது ' மங்கலம் ' பெற்றிடவும்,மாட்சி உற்றிடவும், அவர் மனையில் பானைபிடித்தவள் பாக்கியசாலியாக இருத்தல் வேண்டும். அதற்குப் பார்வதி அன்னையைத் தவிர வேறு யார்க்கும் உரிமையும்கிடையாது; தகுதியும் கிடையாது. ஏனெனில் பரமேசுவரனைத் திருமணம் செய்து கொள்ளப் பார்வதிதேவி தவம் செய்தாள். ' அவரே கணவராக வேண்டும் ' என்று தனது ஏழாவது வயதில் தவக்கோலம் மேற்கொண்டு, அவரைப் பெறத்தவம் இயற்றித் தவள் என்ற சிறப்பினைப் பெற்றாள்.   
அம்பிகை உயர் தவம் செய்து, " மாதவள் " என்ற மாண்பினைப் பெற்று, சங்கரனாரின் மனைமங்கலமானாள். இந்த மனைமங்கலம் எவ்வாறு மாட்சிபெற்றுச் சிறப்புடன் நடக்கிறது ? அவர் ஈட்டி வந்ததைக் கொண்டு, தனது தவலிமையினால் எல்லோர்க்கும் உணவளிக்கின்ற தகைமை கொண்டவளே காமாட்சி அன்னை. " ஐயன் அளந்தபடி இருநாழிகொண்டு அண்டமெல்லாம் உய்ய அறம் செய்யும் அன்னை " என்று ஐம்பத்தேழாவது பாடலிலே அம்பிகையின் மனைமங்கல மாட்சியை அபிராமிபட்டர் சொல்லப்போகிறார். வீட்டுக்குள்ளே இருப்பவர்க்கு மட்டும் உணவளிக்கும் எல்லைகட்டிய வாழ்வு மட்டும் ஒரு பெண்ணுக்கு உகந்ததாகாது. அந்த எல்லை தாண்டி அவள் அறங்கள் புரிய வேண்டும். ஒன்றல்ல ; இரண்டல்ல - முப்பத்திரண்டு அறங்களைப் புரியவேண்டும். அவளே மனைமாட்சியினள்.காஞ்சிவாழ் காமாட்சியை முப்பத்திரண்டு அறம்புரியும் அன்னையாகச் சொல்வர். 

அவளே அவர் தமக்கு அன்னையும் ஆயினள் -
அவளே ஆதிபராசக்தி என்னும் உருவில் சங்கரனாருக்கு அன்னையும் ஆயினள்.
தவம் இயற்றிச் சிவனைத் திருமணம் கொண்டவள், இவருக்கு அன்னையும் ஆகின்றாள். குடும்பத்தில், வாழ்வின் ஒரு கட்டத்தில், மனைவியானவள் மக்களைப் பெற்று அவர்களைப் பராமரிக்கும் அன்னையாவது போல், அவள் கணவனையும் குழந்தையாக எண்ணிச் சீராட்டுகின்ற தன்மையாய், கணவனும் குழந்தையாக மாறி, அவளைத் தாயாக்குகின்றான். மனைக்கிழத்தியும் கணவனைக் குழந்தையாகப் போற்றும் தாயாகின்றாள் - என்பது உலகியல் உண்மை.  
திருமூலர் சித்தரில் தலையானவர். அவர்,
 "சக்தியானவள்.
வாயும் மனமும் கடந்த மனோன்மணி
பேயும் கணமும் பெரிதுடைப் பெண்பிள்ளை
ஆயும் அறிவும் கடந்த அரனுக்குத்
தாயும் மகளும் தாரமும் ஆமே. ( திருமந்திரம். 1178)  "


ஆகையினால் இவளே கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியும் ஆம் - 
ஆதலால் இவளே கடவுளர் எல்லாருக்கும் மேலான தலைவியானவள்
அப்பைய தீஷீதர் தனது ஸ்ரீ துர்கா சந்திரகலா ஸ்துதியில்
" யத் பூஜநஸ்துதி நமஸ்க்ருதி பி.ப்பவந்தி
ப்ரீதா : பிதாமஹரமேச ஹராஸ்த்ர யோபி :
தேஷாமபி ஸ்வககுணைர் தததீம் வபூம்ஷி
தாமீச்வரஸ்ய தருணீம் சரணம் பரபத்யே - என்கிறார்.
("அம்பிகையை பூஜிப்பதையும், ஸ்தோத்தரிப்பதையும், மீண்டும்,மீண்டும் நமஸ்காரம் செய்வதையும் கண்டு, பிரம்மா,விஷ்ணு,சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் மிகவும் ப்ரீதி அடைகிறார்கள். பிரும்மாதி தேவர்களுக்கு அம்பிகையே சத்துவம்,தமஸ், ரஜஸ் ஆகிய தனது முக்கோணங்களால் சரீரங்களை அளித்தாள். )
துவளேன் இனி ஒரு தெய்வம் உண்டாக மெய்த் தொண்டு செய்தே -
 இனி மேல் வேறு தெய்வங்களைத் தொழுது தொண்டு செய்து அயர்சி அடையமாட்டேன்.
நாமும் அந்த ஆதிபராசக்தி தேவியை, சங்கரனாரின் மனை மங்கலமாக திகழும் அபிராமியை, உலகோர் அனைவருக்கும் அமுது செய்விக்கும் அன்னையின் பாதங்களில் சரணாகதி அடைவோமா!!
அபிராமி சரணம்!!
அபிராமி சரணம்!!

No comments:

Post a Comment