Friday 13 September 2019

அபிராமி அந்தாதி 41

                                                                          அபிராமி அந்தாதி   41                                                                                                              



புண்ணியம் செய்தனமே மனமே புதுப் பூங்குவளைக்
கண்ணியும் செய்ய கணவரும் கூடி நம் காரணத்தால்
நண்ணி இங்கே வந்து தம் அடியார்கள் நடு இருக்கப்
பண்ணி நம் சென்னியின் மேல் பத்ம பாதம் பதித்திடவே


புண்ணியம் செய்தனமே மனமே - ஆகா. என்ன பாக்கியம். என்ன பாக்கியம். புண்ணியம் செய்திருக்கிறாய் மனமே.

அன்னையும் அத்தனும் அபிராமிபட்டரிடம் அன்பு கொள்ளக் காரணமாக இருந்தது எது? அவர் முன் செய்த புண்ணியம். அந்தப் புண்ணியம் அவர்களிடம் அன்பு செலுத்த, அந்த அன்பு, இவரை அடியார் நடுவுள் இருத்திற்று. இதனை மனத்துக்குள் சொல்லி மகிழ்கின்றார். புண்ணியம் செய்தனமே மனமே! என்று!!
தமக்குள் சொல்லி அநுபவிக்கும் தெய்வ இன்பம் இது. தெய்வத்தால் ஏற்படும் அநுபவங்களைப் பிறரிடம் சொல்லிக் கொள்வதில்லை. வியந்து தமக்குள் சொல்லிக் கொள்வதே வழக்கம் அந்தப் பண்புள்ள அபிராமிபட்டர், தம் மனத்துள் சொல்லிக் கொண்டார். அவர் மனத்துள் சொன்னது நம் மனத்துக்கும் உரியது. நம் மனமும் அபிராமியிடமும் அத்தனிடமும் அன்பு செலுத்தத் தொடங்கிவிட்டதல்லவா! அபிராமிபட்டரின் மனம் நம் மனத்துடன் பேசுகிறது. நாமும் புண்ணியம் செய்தோம். ' நாமும் ' என்று துணிந்து சொல்வோம். ஏனெனில்,அபிராமிபட்டர் " புண்ணியம் செய்தனமே " என்று நம்மையும் சேர்த்துப் பண்மைப்படுத்தியிருக்கிறார்.

புதுப் பூங்குவளைக் கண்ணியும் செய்ய கணவரும் கூடி - இப்போதே மலர்ந்த கருங்குவளைப்பூவைப் போன்ற கண்களை உடைய நம் 

அம்மையும் அப்பனுமாக இணைந்து இருப்பதே நிலையானது. அதுவே அருள் செய்யும் நிலை. 

நம் காரணத்தால் நண்ணி - நம்மை ஆண்டு அருள்வதற்காக விரும்பி


இங்கே வந்து 

இங்கே வந்து என்றது நல்லதும் தீயதும் நிறைந்து இன்பமும் துன்பமும் மாறி மாறி வரும் இந்த உலகத்தில் இருக்கும் நமக்காக அவர்கள் கீழிறங்கி வந்தார்கள் அவர்களின் கருணையால் என்று சொல்வதற்காக.


தம் அடியார்கள் நடு இருக்கப் பண்ணி 

அடியவர்கள் குழுவுடன் இணைந்து காலத்தைப் போக்கினால் பந்த பாசங்கள் நீங்கும்; பந்த பாசங்கள் நீங்கினால் மயக்கம் தீரும்; மயக்கம் தீர்ந்தால் நிலை தடுமாறா மனநிலை கிடைக்கும்; அந்த மனநிலை கிடைத்தால் இங்கேயே விடுதலை கிடைக்கும்; என்று ஆன்றோர் சொன்ன நிலை கிடைக்கும் படி அடியவர் கூட்டத்தின் நடுவில் இருக்கப் பண்ணினாள்.

ஸத்சங்கம் ' பற்றி, ' சான்றோர் இனத்திரு' என்பார் ஔவைப்பாட்டி.
" ஸத்ஸங்கத்வே நிஸ்ஸங்கத்வம் " னு ஆதிசங்கர பகவத் பாதாளும் சொல்லிற்கார்.
தாயுமானவரும், ' ' அன்பர் பணிசெய்ய எனை ஆளாக்கி விட்டுவிட்டால் இன்ப நிலை தானே வந்தெய்தும் பராபரமே! என்றார்
அதாவது ' அன்பர்களுடன் கூட அவர்களுக்குப் பணி செய்யும் பாக்கியம் எனக்கு கிடைத்து விட்டால் போதும். நான் மோட்சத்தை தேடிக் கொண்டு போக வேண்டிய அவசியம் இல்லை. அதுவே என்னைத் தேடிக்கொண்டு வந்து விடுமாம்.
மாணிக்க வாசகரும் ' உடையாள் உன்றன் நடு இருக்கும் ' என்று தொடங்கும்பாடலில் ' அடியார் நடுவுள் இருக்கும் அருளைப்புரியாய்...' என்று பாடுகிறார். 
நம் சென்னியின் மேல் பத்ம பாதம் பதித்திடவே -  அம்மையப்பர்களின் பொற்றாமரைத் திருவடிகள் நம் சென்னியில் நிலையாக  பதித்திடவே என்ன தவம் செய்தோமோ மனமே என்று வியக்கிறார்.
நாமும் அடியார் கூட்டத்துடன் ஒன்று கலந்து அன்னை அபிராமியையும் அவள் கணவனாரான அமிர்தகடேஸ்வரரையும் "நம் காரணத்தால் நண்ணி " அதாவது நெருங்கி அருளை பெறுவோமா!!
அபிராமி சரணம் சரணம்!!

முருகா சரணம் 

No comments:

Post a Comment