Thursday, 9 July 2015திருப்புகழ்வழிபாடுபுத்தகத்தில்புதிதாகசேர்க்கப்பட்டுள்ள பாடல்கள் 

                                                              (476 முதல் 503 வரை )


                                          கோடிநகர்  திருத்தலம் (கோடிக்கரை)

                                                             (குழகர் கோயில் )

   ஈஸ்வரன் அம்ருத கடேஸ்வரர்   அம்பிகை மையார் தடங்கண்ணி 

இத்தலம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் வேதாரண்யம் ரயில் நிலையத்துக்கு அடுத்த அகத்தியான் பள்ளி ரயில் நிலையத்துக்கு தெற்கே 5 மெயில் தூரத்தில் அமைந்துள்ளது .ஒரு முகமாக உறையும் முருகப்பெருமான் மீது அருணகிரியார் பாடியுள்ள ஒரே திருப்புகழை நம் குருஜி கையாண்டுள்ளார்.

                                                        பாடல்

வரிசை எண் 14                                           புத்தக வரிசை எண்  223

ராகம் கேதாரகௌளை          தாளம்  ஆதி  2 களை     எடுப்பு  1/4 இடம்


                                               பாடல் 

நீலமுகி லானகுழ லானமட வார்கள்தன
     நேயமதி லேதினமு ...... முழலாமல்

நீடுபுவி யாசைபொரு ளாசைமரு ளாகியலை
     நீரிலுழல் மீனதென ...... முயலாமற்

காலனது நாவரவ வாயிலிடு தேரையென
     காயமரு வாவிவிழ ...... அணுகாமுன்

காதலுட னோதமுடி யார்களுட னாடியொரு
     கால்முருக வேளெனவு ...... மருள்தாராய்

சோலைபரண் மீதுநிழ லாகதினை காவல்புரி
     தோகைகுற மாதினுட ...... னுறவாடிச்

சோரனென நாடிவரு வார்கள்வன வேடர்விழ
     சோதிகதிர் வேலுருவு ...... மயில்வீரா

கோலவழல் நீறுபுனை யாதிசரு வேசரொடு
     கூடிவிளை யாடுமுமை ...... தருசேயே

கோடுமுக வானைபிற கானதுணை வாகுழகர்
     கோடிநகர் மேவிவளர் ...... பெருமாளே.

                                       சொல் விளக்கம்


நீல முகில் ஆன குழல் ஆன மடவார்கள் தன நேயம்அதிலே தினமும் உழலாமல் ...

 கரிய மேகம் போன்ற கூந்தலைஉடைய மாதர்களின் மார்பகத்தின் மேலுள்ள ஆசையால் நாள் தோறும்அலைச்சல் உறாமல்,


நீடு புவி ஆசை பொருள் ஆசை மருள் ஆகி அலை நீரில்உழல் மீன் அது என முயலாமல் ...

பெரிய மண்ணாசை, பொருள்கள்மேலுள்ள ஆசை இவற்றில் மயக்கம் கொண்டு, அலை மிகுந்த கடல் நீரில்அலைச்சல் உறுகின்ற மீனைப் போல உழலும் பொருட்டு முயற்சிசெய்யாமல்,

காலனது நா அரவ வாயில் இடு தேரை என காயம் மருவுஆவி விழ அணுகா முன் ...

 யமனுடைய (என்னை) விரட்டும் பேச்சுஎன்கின்ற பாம்பின் வாயில் அகப்பட்ட தேரை போல உடலில்பொருந்தியுள்ள உயிர் அவன் கையில் அகப்பட்டு விழும்படி, அந்தக்காலன் என்னை அணுகுவதற்கு முன்பாக,


காதலுடன் ஓதும் அடியார்களுடன் நாடி ஒரு கால் முருகவேள் எனவும் அருள் தாராய் ...

அன்புடன் உன்னை ஓதுகின்றஅடியார்களுடன் விரும்பி ஒரு முறையாவது முருக வேள் என்று நான்புகழுமாறு திருவருளைத் தந்தருளுக.


சோலை பரண் மீது நிழலாக தினை காவல் புரி தோகை குறமாதினுடன் உறவாடி ...

(வள்ளி மலைக் காட்டிலுள்ள) சோலையின் இடையே பரண் மீது நிழலில் நின்று, தினைப் புனத்தைக் காவல் செய்யும்மயில் போல் சாயலை உடைய குறப் பெண்ணாகிய வள்ளியுடன் உறவுகொண்டாடி,


சோரன் என நாடி வருவார்கள் வன வேடர் விழ ...

கள்வன்என்று உன்னைத் தேடிவந்தவர்களானகாட்டுவேடர்கள்எல்லாம்மாண்டுவிழ,


சோதி கதிர் வேல் உருவு(ம்) மயில் வீரா ...

 மிக்க ஒளி வீசும்வேலைச் செலுத்திய மயில் வீரனே,


கோல அழல் நீறு புனை ஆதி சருவேசரொடு கூடிவிளையாடும் உமை தரு சேயே ...

 அழகுள்ளதும், வினைகளைஅழிப்பதில் நெருப்புப் போன்றதும் ஆகிய திருநீற்றை அணிந்துள்ளமூலப் பொருளாகிய சிவபெருமானோடு கூடி விளையாடுகின்ற உமா
தேவியார் பெற்ற குழந்தையே,


கோடு முக ஆனை பிறகான துணைவா குழகர் கோடி நகர்மேவி வளர் பெருமாளே. ...

தந்தத்தை முகத்தில் கொண்டயானையாகிய கணபதிக்குப் பின்னர் தோன்றிய தம்பியே, குழகர் என்னும்திருநாமத்துடன் (சிவபெருமான்) வீற்றிருக்கும் கோடி* என்னும் தலத்தில்விரும்பி வீற்றிருக்கும் பெருமாளே.


உதவி .....கௌமாரம்  இனைய தளம் .நன்றிகள் பல                                                 குருஜியின் குரலில் ஒரு விருத்தம்
                   குருஜியுடன் இணைந்து  அன்பர்கள்  பாடியுள்ள  பாடல்


                                                                                                                                               

 முருகா சரணம் 

1 comment:

  1. கேட்பவரைக் குதூகுலிக்க வைக்கும் கேதாரகௌளை! (ராகம் மோகனம் என தவறாகக் குறிப்பிடப்பட்டுள்ளது).

    ReplyDelete