Saturday 27 June 2015




          திருப்புகழ்  வழிபாடு புத்தகத்தில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள பாடல்கள் 


                                                           (476 முதல் 503 வரை )


                                                 திருக்கோணமலை   திருத்தலம்




திருக்கோணமலை இலங்கையில் வட கீழ்ப்பாகத்தில் அமைந்துள்ள கடற்கரை தலம் தட்சிண கயிலாயம் என்றும் பெயர் பெற்றுள்ளது  ( மற்றவை  திருக்காளத்தி, திருச்சிராப்பள்ளி,)தல புராணமும் உள்ளது.
திருஞான சம்பந்தர் தன் ஞானக் கண்ணால் கோணமாமலையாரை கண்டு களித்து பாடியுள்ளார் 


                                                   திருப்புகழ்  பாடல்

                           வரிசை எண்  7        புத்தக வரிசை எண்  170  

ராகம் ஹம்ச வினோதினி அங்கதாளம் (9) தக திமி  தக திமி தகிட  தகிட தகதிமி
                                                                                          2                2          1/2        1/2         2

இப்பாடலுக்கு  பகுதி 5,6,7,8...3,4 வரிசையில் இசை அமைக்கப்பட்டுள்ளது 



1.விலைக்கு மேனியி லணிக்கோவை மேகலை
     தரித்த வாடையு மணிப்பூணு மாகவெ/
          மினுக்கு மாதர்க ளிடக்காம மூழ்கியெ ...... மயலூறி

௨.மிகுத்த காமிய னெனப்பாரு ளோரெதிர்
     நகைக்க வேயுட லெடுத்தேவி யாகுல
          வெறுப்ப தாகியெ யுழைத்தேவி டாய்படு ...... கொடியேனைக்

3.கலக்க மாகவெ மலக்கூடி லேமிகு
     பிணிக்கு ளாகியெ தவிக்காம லேயுனை
          கவிக்கு ளாய்சொலி கடைத்தேற வேசெயு ...... மொருவாழ்வே

4.கதிக்கு நாதனி யுனைத்தேடி யேபுக
     ழுரைக்கு நாயெனை யருட்பார்வை யாகவெ
          கழற்கு ளாகவெ சிறப்பான தாயருள் ...... தரவேணும்

5.மலைக்கு நாயக சிவக்காமி நாயகர்
     திருக்கு மாரனெ முகத்தாறு தேசிக
          வடிப்ப மாதொரு குறப்பாவை யாள்மகிழ் ...... தருவேளே

6.வசிட்டர் காசிபர் தவத்தான யோகியர்
     அகத்ய மாமுநி யிடைக்காடர் கீரனும்
          வகுத்த பாவினில் பொருட்கோல மாய்வரு ...... முருகோனே

7.நிலைக்கு நான்மறை மகத்தான பூசுரர்
     திருக்கொ ணாமலை தலத்தாரு கோபுர
          நிலைக்குள் வாயினில் கிளிப்பாடு பூதியில் ...... வருவோனே

8.நிகழ்த்து மேழ்பவ கடற்சூறை யாகவெ
     யெடுத்த வேல்கொடு பொடித்தூள தாஎறி
          நினைத்த காரிய மநுக்கூல மேபுரி ...... பெருமாளே.

                                      சொல் விளக்கம் 

விலைக்கு மேனியில் அணிக் கோவை மேகலை தரித்த
ஆடையும் மணி பூணும் ஆகவெ ...


தக்க விலை பெறும் பொருட்டு,உடலில் அழகிய வடங்களும், இடுப்பில் ஒட்டியாணமும் அணிந்து,ஆடையுடனும் ரத்தின ஆபரணங்களுடனும்

மினுக்கு மாதர்கள் இடக் காமம் மூழ்கியே மயல் ஊறி ...


மினுக்குகின்ற விலைமாதர்களிடம் காம மயக்கில் மூழ்கி, மோகத்தில்
அழுந்தி,

மிகுத்த காமியன் என பார் உ(ள்)ளோர் எதிர் நகைக்கவே
உடல் எடுத்தே ... 


பெரிய காம லோலன் என்று உலகில் உள்ளவர்கள்
என் எதிரே சிரிப்பதற்காகவே இந்த உடலை எடுத்து,


வியாகுல வெறுப்பு அதாகியெ உழைத்தே விடாய் படு
கொடியேனை ... 


துன்பமும் வெறுப்பும் கொண்டு உழைத்து களைப்புக்கொள்ளும் கொடியவனாகிய என்னை,

கலக்கமாகவே மலக் கூடிலே மிகு பிணிக்குள் ஆகியே
தவிக்காமலே ... 


கலக்க நெஞ்சினனாய், (ஆணவம், கன்மம், மாயை
என்ற) மும்மலக் கூடாகிய இந்த உடலில் நிரம்ப நோய்களுக்குள்ளாகி
தவிக்க வைக்காமல்,


உனை கவிக்கு(ள்)ளாய் சொ(ல்)லி கடைத்தேறவே செயும்
ஒரு வாழ்வே ... 


உன்னை பாட்டில் அமைத்து ஈடேறச் செய்யும்ஒப்பற்ற அருள் செல்வமாகிய வாழ்வைத் தந்து,

கதிக்கு நாதன் நி (நீ) உனைத் தேடியே புகழ் உரைக்கு
நாயெனை அருள் பார்வையாகவெ ... 


நற்கதியை தருகின்ற நாதன்
நீ, உன்னைத் தேடி உனது திருப்புகழை உரைக்கும் நாய் போன்ற
சிறியேனை உன் அருள் பார்வையால்


கழற்குள் ஆகவே சிறப்பான தாய் அருள் தரவேணும் ... 


உன்திருவடியைக் கூடுவதற்காகவே சிறந்ததான தாய் அன்பை எனக்கு
அருள் புரிய வேண்டும்.


மலைக்கு நாயக சிவக்காமி நாயகர் திரு குமாரன் என
முகத்து ஆறு தேசிக ... 


எல்ல மலைகளுக்கும் தலைவனே, சிவகாமிஅம்மையின் தலைவராகிய சிவபெருமானின் அழகிய குமாரனே, ஆறுதிரு முகங்களை உடைய குருமூர்த்தியே,
வடிப்ப மாது ஒரு குறப் பாவையாள் மகிழ் தரு வேளே ...


வடிவழகுள்ள மாதாகிய குறப் பெண் வள்ளி மகிழும் வேளே,

வசிட்டர் காசிபர் தவத்தான யோகியர் அகத்ய மா முநி
இடைக் காடர் கீரனும் வகுத்த பாவினில் பொருள் கோலமாய்
வரு முருகோனே ... 


வசிஷ்டர், காசியப்பர், தவத்தில் சிறந்த யோகிகள்,
அகத்திய மாமுனிவர், இடைக்காடர், நக்கீரர் ஆகியோர் அமைத்த
பாடல்களில் பொருள் உருவாய் வரும் முருகோனே,


நிலைக்கு நான் மறை மகத்தான பூசுரர் திருக்கொணா மலை
தலத்து ... 


அழியாது நிலைத்து நிற்கும் நான்கு வேதங்களைப் பயின்ற
சிறந்த அந்தணர்கள் திருக்கோணமலை* என்னும் தலத்தில்

ஆரு(ம்) கோபுர நிலைக்குள் வாயினில் கிளிப்பாடு பூதியில்
வருவோனே ... 


விளங்கும் கோபுர நிலையின் வாசலில் கிளிப்பாடு பூதி*
என்னும் இடத்தில் எழுந்தருளி வருபவனே,


நிகழ்த்தும் ஏழ் பவ கடல் சூறையாகவே எடுத்த வேல்
கொ(ண்)டு பொடி தூளதா எறி ... 


நிகழ்கின்ற ஏழு பிறப்பு என்னும்கடல் வற்றிப் போய் அழிய,திருக்கரத்தில் எடுத்த வேலைக் கொண்டு(பகைவர்களைப்) பொடிப்பொடியாகப் போகும்படிச் செலுத்தி,

நினைத்த காரியம் அநு(க்) கூலமே புரி பெருமாளே. ...


நினைத்த காரியங்களெல்லாம் நன்மையாகக் கைகூடும்படி அருளும்
பெருமாளே
.

* கிளிப்பாடு பூதி என்பதுதிருக்கோணமலைக் கோயில் கோபுர நிலையில் உள்ள ஓரிடத்துக்குப் பெயர்


உதவி .....கௌமாரம்  இனைய தளம் .நன்றிகள் பல.



                           குருஜியுடன் இணைந்து  அன்பர்கள்  பாடியுள்ள  பாடல்


முருகா சரணம் 

1 comment:

  1. அம்சமான ஹம்சவிநோதினி! அருமையான பாடல்!

    ReplyDelete