Tuesday 16 June 2015










........ பாடல் .........

கருப்புவிலில் மருப்பகழி தொடுத்துமதன் விடுத்தனைய
     கடைக்கணொடு சிரித்தணுகு
          கருத்தினால் விரகுசெய் ...... மடமாதர்

கதக்களிறு திடுக்கமுற மதர்த்துமிக வெதிர்த்துமலை
     கனத்தவிரு தனத்தின்மிசை
          கலக்குமோ கனமதில் ...... மருளாமே

ஒருப்படுதல் விருப்புடைமை மனத்தில்வர நினைத்தருளி
     யுனைப்புகழு மெனைப்புவியில்
          ஒருத்தனாம் வகைதிரு ...... அருளாலே

உருத்திரனும் விருத்திபெற அநுக்கிரகி யெனக்குறுகி
     யுரைக்கமறை யடுத்துபொருள்
          உணர்த்துநா ளடிமையு ...... முடையேனோ

பருப்பதமு முருப்பெரிய அரக்கர்களு மிரைக்குமெழு
     படிக்கடலு மலைக்கவல
          பருத்ததோ கையில்வரு ...... முருகோனே

பதித்தமர கதத்தினுட னிரத்னமணி நிரைத்தபல
     பணிப்பனிரு புயச்சயில
          பரக்கவே இயல்தெரி ...... வயலூரா

திருப்புகழை யுரைப்பவர்கள் படிப்பவர்கள் மிடிப்பகைமை
     செயித்தருளு மிசைப்பிரிய
          திருத்தமா தவர்புகழ் ...... குருநாதா

சிலைக்குறவ ரிலைக்குடிலில் புகைக்களக முகிற்புடைசெல்
     திருப்பழநி மலைக்குளுறை
          திருக்கைவே லழகிய ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

கருப்பு வி(ல்)லில் மருப் பகழி தொடுத்து மதன் விடுத்து
அனைய கடைக் க(ண்)ணொடு சிரித்து அணுகு கருத்தினால்
விரகு செய் மடமாதர் ... கரும்பு வில்லில் வாசனை உடைய மலர்க்
கணைகளைத் தொடுத்து மன்மதன் செலுத்தியது போல் கடைக் கண்
நோக்குடன் சிரித்து நெருங்கி, எண்ணத்தினால் தந்திரச் செயல்கள்
புரிகின்ற இளம் மாதர்களின்,

கதக் களிறு திடுக்கம் உற மதர்த்து மிக எதிர்த்து மலை
கனத்த இரு தனத்தின் மிசை கலக்கும் மோகனம் அதில்
மருளாதே ... கோபமுள்ள யானையும் திடுக்கிடும்படி செழிப்புற்று
மிகவும் எதிர்த்து, மலை போல் பருத்துள்ள இரண்டு மார்பகங்களின்
மேல் கலந்து கொள்ளும் மோக வெறியில் மயங்காமல்,

ஒருப் படுதல் விருப்பு உடைமை மனத்தில் வர நினைத்து
அருளி உனைப் புகழும் எனைப் புவியில் ஒருத்தனாம் வகை
திரு அருளாலே ... மனம் ஒருமை அடைதலில் விருப்பம் கொள்ளும்
எண்ணம் என் மனதில் உண்டாகும்படி உனது திரு உள்ளத்தில்
நினைத்து அருள் செய்து, உன்னைப் புகழ்ந்து பாடும் என்னை
நிகரில்லாத புலவனாகும் வகையை உன்னுடைய திருவருளால்,

உருத்திரனும் விருத்தி பெற அனுக்கிரகி எனக் குறுகி
உரைக்க அ(ம்) மறை அடுத்து பொருள் உணர்த்தும் நாள்
அடிமையும் உடையேனோ ... ருத்திர மூர்த்தியும் விளக்கம் பெற
வேண்டி, எனக்கு உபதேசித்து அருளுக என்று உன்னை அணுகிக்
கேட்க, நீ அவருக்கு உபதேசித்த அந்த ரகசியப் பிரணவப் பொருளை
அடியேனுக்கும் உணர்த்தும்படியான நாள் ஒன்றை அடியேனும்
பெறுவேனோ?

பருப்பதமும் உருப் பெரிய அரக்கர்களும் இரைக்கும் எழு
படிக் கடலும் அலைக்க வ(ல்)ல பருத்த தோகையில் வரு
முருகோனே ... (கிரெளஞ்ச) மலையையும், பெரிய உருவம் உள்ள
அரக்கர்களையும், ஒலித்து எழுகின்ற, பூமியிலுள்ள ஏழு
கடல்களையும் அலைத்துக் கலக்க வல்ல பருமையான மயிலில்
மீது வரும் முருகனே,

பதித்த மரகதத்தினுடன் இரத்னமணி நிரைத்த பல பணிப்
ப(ன்)னிரு புயச் சயில பரக்கவே இயல் தெரி வயலூரா ...
பதிக்கப்பட்ட மரகதத்துடன் ரத்தின மணிகள் வரிசையில்
அமைக்கப்பட்ட பலவகையான அணிகலன்களை அணிந்துள்ள,
மலை போன்ற பன்னிரண்டு புயங்களை உடையவனே, விரிவாகவே
இலக்கியத் தமிழைத் தெரிந்த வயலூர் முருகனே,

திருப்புகழை உரைப்பவர்கள் படிப்பவர்கள் மிடிப் பகைமை
செயித்தருளும் இசைப் பிரிய திருத்த மாதவர் புகழ்
குருநாதா ... திருப்புகழை உரைப்பவர்களுடையவும்
படிப்பவர்களுடையவும் வறுமையும் பகைமையும் தொலைந்து
வெற்றி தந்தருளும் இசைப் பிரியனே, ஒழுக்கமுடைய சிறந்த
தவத்தினர் புகழ்கின்ற குருநாதனே,

சிலைக் குறவர் இலைக் குடிலில் புகைக் கள முகில் புடை
செல் திருப் பழநி மலைக்குள் உறை திருக்கை வேல்
அழகிய பெருமாளே. ... வில் ஏந்திய குறவர்களுடைய ஓலைக்
குடிசையிலும், புகை போன்ற கருமையுடைய மேகங்கள் அருகில்
தவழ்ந்து செல்லுகின்ற அழகிய பழனி மலையிலும் வீற்றிருக்கும்,
திருக்கையில் வேல் ஏந்தும் அழகிய பெருமாளே

No comments:

Post a Comment