Friday 23 January 2015

தை அமாவாசை..... அன்னை அபிராமி தரிசனம்

                                


                                               

                                             
                                                 
தை அமாவாசையன்று அபிராமி பட்டருக்கு அம்மை அருளிய விழா திருக்கடவூரில் சிறப்பாக நடைபெறுகின்றது. அன்று அம்பிகை மலர் அலங்காரத்தில் அருட்காடசி தருகின்றாள். அப்போது கொடி மரம் அருகே அர்ச்சகர்கள் ஒவ்வொரு அந்தாதியையும் பாடி அம்பிகைக்கு தீபாரதனை லாட்டுகின்றனர். 79ம் பாடல் பாடும் போது முழு நிலவு தோன்றியதை உணர்த்தும் வகையில் வெளியில் மின் விளக்கினை எரியச் செய்கின்றார்கள். இந்த வைபவத்தை காண ஆயிரக் கணக்கான பக்தர்கள் திரளுகின்றனர்.
அன்னையின் முகமண்டலமே பூரண சந்திரன் போல்ஜொலிக்க காதின் தாடங்கம் மற்றொரு பூரணசந்திரனாக விளங்க அந்த அமாவாசை இருளானது, அனைவரின் மனத்து அறியாமை இருட்டையும் போக்கி அனைவரையும் பேரனந்தப் பேரின்பத்தில் ஆழ்த்தியது. தாம் கண்ட அந்த அதிசய ஆனந்ததைப் பட்டரும், “கூட்டியவா என்னை” என்ற 80 வது பாடலில் சொல்லி மேலும் இருபது பாடல்களைப் பாடி அந்தாதியைப் பூர்த்தி செய்தார். அன்று முதல் அவர் அபிராமி பட்டர் என அழைக்கப் பட்டதோடு அவர் சந்ததியினருக்கு பாரதியார் என்ற பட்டமும் மன்னரால் வழங்கப் பட்டது.
“விழிக்கே அருளுண்டு அபிராம வல்லிக்கு வேதம் சொன்ன
வழிக்கே வழிபட நெஞ்சுண்டே எமக்கவ்வழி கிடக்கப்
பழிக்கே சுழன்று வெம்பாவங்களே செய்து பாழ்நரகக்
குழிக்கே அழுந்தும் கயவர் தம்மோடென்ன கூட்டினியே!
———————அபிராமி அந்தாதி பாடல் 79
கூட்டியவா, என்னைத் தன் அடியாரில் கொடிய வினை
ஓட்டியவா, என் கண் ஓடியவா தன்னை உள்ளவண்ணம்
காட்டியவா கண்ட கண்ணும் மனமும் களிக்கின்றவா
ஆட்டிய வா நடம் ஆடகத் தாமரை ஆரணங்கே!”
அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும் அம்மையின் திருவடிவம் அவர் கண்ணிலும் நெஞ்சிலும் எப்போதும் எப்படி நிறைந்திருந்தது அவரே பாடுகின்றார் இவ்வாறு
பார்க்கும் திசைதொறும் பாசாங்குசமும் பனிச்சிறைவண்டு
ஆர்க்கும் புதுமலர் ஐந்தும் கரும்பும் என் அல்லல் எல்லாம்
தீர்க்கும் திரிபுரையாள் திருமேனியும் சிற்றிடையும்
வார்க்குங் கும முலையும் முலைமேல் முத்து மாலையுமே.
பொருள்: என்னுடைய துன்பங்களை எல்லாம் தீர்த்து அருளுகின்ற என் அன்னை திரிபுர சுந்தரியின் திருக்கரங்களில் ஏந்தியிருக்கின்ற பாசம், அங்குசம், பஞ்ச பாணங்கள், கரும்புவில், ஒளி பொருந்திய திருமேனி, சிற்றிடை, தனங்கள் ஆகியவை எப்போதும் அடியேன் பார்க்கும் திசைகளிலெல்லாம் தெரிகின்றன.
உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம் உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம் மாதுளம் போது மலர்க்கமலை
துதிக்கின்ற மென்கொடி குங்குமத் தோயமன்ன
விதிக்கின்ற மேனி அபிராமி எந்தன் விழுத்துணையே (1)
என்று பாடத்தொடங்கி ஒவ்வொரு பாடலுக்கும் ஒவ்வொரு சங்கிலியாக தறித்துக் கொண்டு வந்தார்.
விழிக்கே அருளுண்டு அபிராமவல்லிக்கு; வேதஞ் சொன்ன
வழிக்கே வழிபட நெஞ்சுண்டு எமக்கு; அவ்வழி கிடக்கப்
பழிக்கே சுழன்று வெம்பாவங்களே செய்து பாழ் நரகக்
குழிக்கே அழுந்தும் கயவர் தம்மோடு என்ன கூட்டினியே (79) என்று பாடும் போது
அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி, லோக மாதா, ராஜ ராஜேஸ்வரி, ஜகத் ஜனனி, லலிதாம்பா, தயாபரி , கருணைக் கடலாம் எம் அம்மை பட்டர் முன் கரங்களில் அங்குசம், பாசம், மலர் அம்பு , கரும்பு வில்லுடன் தோன்றி திருதரிசனந் தந்தருளி பட்டருக்காக தனது தடாகங்களில் ஒன்றை கழற்றி வானிலே வீச மன்னரும் மற்றையோரும் அஞ்சும்படி தை மாத முழு அமாவாசை நாளில் பதினாறு கலைகளோடு கூடிய பூரண சந்திரன் தோன்றினான். இங்ஙனம் அமாவாசை நாளில் பூரண சந்திரன் தோன்றும்படி அம்மை அபிராமியின் அருளால் அதிசயம் நடத்திக் காட்டினார் அபிராமி பட்டர்.
அரசன் அவ்வதிசயத்தைக் கண்டு அவரிடத்தில் தனது தவறுக்கு மன்னித்தருளுமாறு வேண்டி அவரிடம் மிக்க அன்பும் அச்சமும் மதிப்பும் உடையவராய் அவருக்கு மான்யமும், தாமிர சாசனமும் கொடுத்து போற்றினார்.
அபிராமி பட்டர் இயற்றிய 100 பாடல்களும் அருந்தமிழ் செம்பாடல்கள் அந்த பாடல்களை அகங்கனியப் பாடி வழிபட்டால் உடல் குழையும், என்பெல்லாம் னெக்குருகும் விழி நீர் ஊற்றென வெதும்பி யூற்றும் நெஞ்சக் கனகல்லும் நெகிழ்ந்துருகும்
அந்த அபிராமி அந்தாதியை பட்டர்.
ஆத்தாளை எங்கள் அபிராம வல்லியை அண்டமெல்லாம்
பூத்தாளை, மாதுளம்பூ நிறத்தாளைப் புவியடங்கக்
காத்தாளை, அங்குசம் பாசம் குசுமன் கரும்பும் அங்கை
சேர்த்தாளை முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கில்லையே !
என்று நாம் அனைவரும் உய்ய நூல் பயனாக கடைப் பாடலாகப் பாடி முடிக்கின்றார்.
அதானால்தான் திருக்கடையூர் தலத்தில் அம்மையின் தடாகங்கள் சிறப்பு, பதினாறு கலைகளுடன் பூரண நிலவானது அன்னையின் தடாகங்கள், கார்த்திகை சோமவார சங்காபிஷேகம், தை அமாவாசை மற்றும் சிறப்பு பூஜை நாட்களில் தங்க கவசத்துடன் அம்மைக்கு மூன்று அடுக்குகள் கொண்ட தடாகங்கள் அணிவிக்கப்படுகின்றன. சமயம் கிடைக்கும் போது சென்று தரிசியுங்கள்.
இவர் மேலும் அபிராமி அம்மையின் மேல் பதிகமும் பாடியுள்ளார் அந்த பதிகத்திலிருந்து ஒரு அருமையான இரு பாடல்கள்
கலையாத கல்வியும் குறையாத வயதுமோர் கபடுவாராத நட்பும்
கன்றாத வளமையும் குன்றாத இளமையும் கழுபிணியிலாத உடலும்
சலியாத மனமும் அன் பகலாத மனைவியும் தவறாத சந்தானமும்
தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும் தடைகள்வா ராத கொடையும்
தொலையாத நிதியமும் கோணாத கோலுமொரு துன்பமில் லாதவாழ்வும்
துய்ய நின் பாதத்தில் அன்பும் உதவிப்பெரிய தொண்டரொடு கூட்டுகண்டாய்
அலையாழி அரிதுயிலு மாயனது தங்கையே ! ஆதி கடவூரின் வாழ்வே!
அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி! அருள்வாமி அபிராமியே.!
* * *
சகல செல்வங்களும் தரும் இமய கிரிராச தனையை மாதேவி நின்னைச்
சத்யமாய் நித்யமுள்ளத்தில் துதிக்கும் உத் தமருக்கு இரங்கி மிகவும்
அகிலமதில் நோயின்மை கல்வி தன தான்யம் அழகு புகழ் பெருமை இளமை
அறிவு சந்தானம் வலி துணிவு வாழ்நாள் வெற்றி ஆகு நல்லூழ் நுகர்ச்சி
தொகை தரும் பதினாறு பேறும் தந்தருளி நீ சுகானந்த வாழ்வளிப்பாய் சுகிர்த
குணசாலி! பரிபாலி! அநுகூலி திரி சூலி! மங்கள விசாலி!
மகவு நான் நீ தாய் அளிக்கொணாதோ? மகிமை வளர் திருக்கடவூரில்
வாழ் வாமி! சுபநேமி! புகழ்நாமி! சிவசாமி மகிழ் வாமி! அபிராமி! உமையே!

அந்தாதி என்பது 96 சிற்றிலக்கிய வகைகளில் ஒன்று இறுதி எழுத்து, சொல், அசை, சீர் ,அடி ஏதேனும் ஒன்று அதற்கடுத்த முதல் பாடலின் முடிவாக வருவது அந்தாதி

உதவி .....அருளாளர் குமார் ராமநாதன்  முகநூல் வழி

இந்த நன்னாளில் திருப்புகழ் அன்பர்கள் அன்னை அபிராமியை துதித்து அபிராமி அந்தாதி /பதிகம் பாடல் கலை இசைத்து அருள் வேண்டுகிறார்கள்

இந்த சந்தர்ப்பத்தில் அன்பர்களின் ஆன்மீக விழாவில் இடம் பெற்ற அபிராமி அந்தாதியின்  இசை நிகழ்வை கேட்போம்

https://www.youtube.com/watch?v=gNOr0g1Bbyk

முருகா சரணம் 

No comments:

Post a Comment