Wednesday 15 January 2014

தைபூசம் திருப்புகழ் இசை வழிபாடு: 17-01-2014

தை பூச நன்னாளின் சிறப்புகளை துருவிய போது கிடைத்த அரிய தகவல்கள்:

தைப்பூசத்தன்று தான் உலகம் தோன்றியதாக கூறப்படுகிறது. உலக சிருஷ்டியில் தண்ணீரே முதலில் படைக்கப் பெற்றது. அதிலிருந்தே பிரம்மாண்டம் உண்டானது எனும் ஐதீகத்தை உணர்த்துவதற்காகவே, கோயில்களில் தெப்ப உற்சவம் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
அன்னை பார்வதி தேவி யின் திருக்கரங்களினால் புனித வேல் முருகப்பெருமானுக்கு வழங்கிய தினம் இந்த நாள் தான்,பயம்,வெறுப்பு,பேராசை ஆணவம் போன்ற தீய சக்திகளின் உருவகங்களான சூரபத்மன்,சிங்கமுகன்,தாரகாசுரன் முதலியவர்களை அழித்து உலகில் சாந்தியையும் அறிவொளியையும் நிலைக்க புனித வேலை திருக்கரங்களில் ஏந்திய தினம் 

சிவனின் அம்சமே முருகப் பெருமான் என்பதை, 'ஈசனே அவன் ஆடலால் மதலை ஆயினன் காண்என்று கந்த புராணம் சுட்டுகிறது. அதனால்தான் சிவனுக்கும், முருகனுக்கும் உரிய நாளாகக் கொண்டாடப்படுகிறது... தைப்பூச திருநாள்! என்றாலும், முருகன் ஆலயங்களில்தான் இந்நாள் பெரும் சிறப்புப் பெறுகிறது!

ஆண்டுதோறும் தை மாதத்தில் பௌர்ணமியோடு கூடி வருகின்ற பூசம் நட்சத்திரத்தில் தைப்பூசம்

ஆதிசேஷனின் அம்சமான பதஞ்சலி முனிவரும், புலியின் கால்களை உடைய புலிக்கால் முனிவரும் (வியாக்ரபாதர்) தில்லையில் கூத்தப் பெருமானின் நடனத்தைக் காண தவம் புரிந்தனர். அதன் காரணமாக முதன் முதலாக சிவன் தில்லையில் நடனமாடிய நாள், தைப்பூச நாள் என்பது ஒரு சிறப்பாக குறிப்பிடப்படுகிறது.


தைப்பூச நாளில் திருநெல்வேலியில் உள்ள தாமிரபரணியில் நீராடுவது மிகவும் சிறப்புடையதாகக் கருதப்படுகிறது. காரணம்... இந்த நதிக்கரையில் தவம் மேற்கொண்ட உமையம்மைக்குத் தைப்பூச நாளில்தான் ஈஸ்வரன் வரம் அருளினான் என்பது புராணம். இந்நாளில் அவன் புத்திரன் முருகனின் திருவினைகளும் ஏராளம். அதில் ஒன்று... முருகன் - வள்ளி - தெய்வானை முக்கோண காதல்.

முருகப் பெருமான் வள்ளியை மணம் செய்ததால்... தெய்வானை ஊடல் கொண்டதாகவும், இருவரும் முற்பிறவியில் சகோதரிகள் எனவும், தன்னை அடைய வேண்டி இருவருமே தவம் புரிந்ததால் கற்பு மணம், களவு மணம் மூலம் இருவரையும் மணந்ததாகவும் எடுத்துக் கூறித் தெய்வானையைச் சமாதானப்படுத்திய நிகழ்வைக் குறிப்பதே தைப்பூசம் என்று கூறுபவர்களும் உண்டு

கடலூர் மாவட்டம், வடலூர், தைப்பூச விழாவில் சிறப்பிடம் பெறுகிறது. சன்மார்க்க சங்கம், சத்திய தரும சாலை, சத்திய ஞான சபை, சித்தி வளாகம் போன்ற அமைப்புகளை நிறுவி பசிப்பிணி போக்கி, பக்தி நெறியைப் பரப்பிய அருளாளர் ராமலிங்க அடிகளார் 1874-ம் ஆண்டு தைப்பூச நன்னாளில் இறைவனுடன் கலந்தார். ஆண்டுதோறும் தைப்பூச நன்னாளில் வடலூரில் ஏழு திரைகள் விலகி ஜோதி தரிசனம் நிகழும். ஒவ்வொரு திரைக்கும் ஒவ்வொரு சக்தி என்பது நம்பிக்கை. (கண்ணாடிக் கதவுகளில்) கறுப்புத்திரை என்பது மாயா சக்தி, நீலத்திரை - கிரியாசக்தி, பச்சைத் திரை - பராசக்தி, சிவப்புத் திரை - இச்சா சக்தி, பொன்வண்ணத் திரை - ஞானசக்தி, வெண்மைத் திரை - ஆதிசக்தி, கலப்புத்திரை - சிற்சக்தி!

அருட்பெருஞ்சோதியாகிய இறைவனை அன்று தரிசிக்கிறோம் என்பது கருத்து. தைப்பூச நாளில் விடியற்காலையில் மேற்கே சந்திரனும் கிழக்கே சூரியனும் காணப்பெறும். அந்த நேரத்தில்தான் ஞான சபையில் அருட்பெருஞ்ஜோதியைக் காட்டியருளினார் அடிகள்!

இத்தகைய சிறப்புகள் வாய்ந்த தைபூச விழா உலகெங்கும் பல விதங்களில் கொண்டாடப்பெறுகிறது.நம் அன்பர்கள் அமைப்பில் பெருமானைப்போற்றி வழிபாடுகள் நடை பெறுகின்றன.நம்முடைய வழிபாடு வழக்கம்போல் 17-1-2014  வெள்ளிக்கிழமை அன்று மாலை 4.00 மணி அளவில் தொடங்கி  நடை பெறுகிறது

நடை பெறும் இடம்: 

BAJAN SAMAJ COMPLEX

90 FEET ROAD GARODIA NAGAR GHATKOPAR EAST

MUMBAI-400077 .

அன்பர்கள் முன்னதாகவே வந்து பூஜைமுதல் கலந்து கொண்டு முருகன் அருள் பெற வேண்டுகிறோம்.

அழைப்பிதழ் இணைக்கப்பட்டுள்ளது.



No comments:

Post a Comment