Monday 31 December 2012

வந்தது முருகன் தானே!



1984 மே மாதம். நானும் என் மனைவியும் எங்கள் 4 வயது பையனுடன் கொல்கத்தா சென்றிருந்தோம். பக்கத்தில் இருந்த DARGILING  செல்ல எண்ணினோம். எனது தமையனார் தனக்கு தெரிந்தவர் மூலம் DARGILING ல் ஹோட்டல் புக் செய்திருந்தார். எங்களை கொல்கத்தாவில் இருந்து Luxury பஸ்ஸில் ஏற்றிவிட்டார். இரவு கொல்கத்தாவில் இருந்து புறப்பட்ட நாங்கள் மறு நாள் காலை Silguri  சென்றடைந்தோம். சில்குரியில் இருந்து இன்னொரு பஸ் பிடித்தோம்.

மலைப்பாங்கான வளைவுப் பாதையில் மெதுவாகச் சென்ற பஸ் Dargiling  அடையும் போது  மாலை 4 மணி  ஆகி விட்டது. சூரியன் மறையத் தொடங்கும் நேரம். பஸ் ஸ்டாண்டில் இருந்து ஏற்ற இறக்கப் பாதைகளில் சென்று குறித்த ஹோட்டல் அடைந்தோம். அங்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஹோட்டல் மேனேஜர் ரூம் reservation  மெசேஜ் கிடைக்கவில்லை; ஒரு ரூமும் காலி இல்லை என்றார். தமயனாரிடம் விசாரிக்கலாம் என்றல் communication வசதிகள் இன்றைய அளவு  இல்லாத காலம். அக்கம் பக்கத்து ஹோட்டல்களிலும் ரூம் காலி இல்லை. இருட்டத் தொடங்கி விட்டது;  சம்மராய் இருந்தாலும் குளிர்  கூடிக்கொண்டே இருந்தது ; என்ன செய்வதென்று தெரியாத நிலை. 

தெரியாத ஊரில் இரவு நேரத்தில் மனைவி குழந்தையுடன் நடுத்தெருவில்; மனம் முருகனை "வடிவேலும் மயிலும் துணை " என்று வேண்டிக்கொள்ள, மனைவியோ கண்ணீர் மல்கி வாய்விட்டு "முருகா முருகா " என்று அலற ஆரம்பித்துவிட்டாள். அப்போதுதான் நடந்தது அந்த அதிசயம்!. நடுத்தர வயதில் நெடிய ஒரு இளைஞன்  எங்களை அணுகினான்; "நீங்கள் ரூம்  வேண்டித்தானே அலைகிறீர்கள்? சிறிது தொலைவில் எனக்கு தெரிந்த ஹோட்டல் ஒன்று இருக்கிறது ; என்னுடன் வந்தால் அந்த ஹோட்டல் மேனேஜரிடம் சொல்லி ரூமுக்கு ஏற்பாடு பண்ணுகிறேன்" என்றான். யாருமே அறியாத ஊரில் முன்பின் தெரியாத ஒருவனை எப்படி நம்புவது? வேறு வழியும் தெரியவில்லை . முருகன் மேல் பாரத்தைப்போட்டுவிட்டு அவன் பின் நடந்தோம். மனமும் நாவும் "முருகா  முருகா" என்று கூறுவதை நிறுத்தவில்லை.

சிறிது நேரம் நடந்த பிறகு ஒரு சிறு ஹோட்டல் முன்  நின்றோம். அந்த இளைஞன் " இதுதான் நான் கூறிய ஹோட்டல்; விசாரித்து கொள்ளுங்கள்" என்றான்.அந்த மேனேஜரிடம்  எங்கள் நிலையை கூறினேன்; ஒரு ரூம் தருமாறு வேண்டிக்கொண்டேன். அவர் " சரியான  நேரத்தில் வந்தீர்கள் ; இப்போது தான் ஒரு ரூம் காலி ஆயிற்று; உங்களுக்குத்  தருகிறேன்" என்றார். நாங்கள் அடைந்த  மகிழ்ச்சிக்கு எல்லை இல்லை".

நன்றி சொல்ல எண்ணி  அந்த இளைஞன் பக்கம் திரும்பினேன்; அவனைக்  காணவில்லை ; மேனேஜரிடம்  விசாரித்தேன் ; அவர் " அந்த இளைஞன் அப்போதே சென்று விட்டான் ; அவன் யாரென்று எங்களுக்கு தெரியாது ; அவன் இந்த ஊர்வாசியும் அல்ல " என்றார். பிரமித்து  வாயடைத்து  நின்றோம் ;  மனைவி  அந்த இளைஞன் உருவில் வந்தது நாங்கள் வேண்டிகொண்ட முருகன்  என்று உறுதியாகக்  கூறினாள். அது சத்தியம் என்றது என் மனது. முருகா!! என்னே உனது கருணை !

நீங்களே சொல்லுங்கள்! வந்தது முருகன் தானே ?

" எங்கே நினைப்பினும் அங்கே என் முன் வந்து எதிர் நிற்பனே"

- S.KRISHNAMOORTHY, THANE
 

No comments:

Post a Comment