Thursday 21 March 2019

அபிராமி அந்தாதி.... 39


                                            அபிராமி அந்தாதி....  
39

                                                                                       


ஆளுகைக்கு உந்தன் அடித்தாமரைகள் உண்டு அந்தகன்பால்
மீளுகைக்கு உந்தன் விழியின் கடை உண்டு மேல் இவற்றின்
மூளுகைக்கு என் குறை நின் குறையே அன்று முப்புரங்கள்
மாளுகைக்கு அம்பு தொடுத்த வில்லான் பங்கில் வாணுதலே


அன்பரின் விளக்கவுரை 
ஆளுகைக்கு உந்தன் அடித்தாமரைகள் உண்டு - 

என்னை ஆள்வதற்கு உந்தன் திருவடித்தாமரைகள் உண்டு
வாழ்விலே, மேலாக வாழ்வதற்கு, ஆளுமையோடு வாழ்வதற்கு, அந்த அம்பிகையின் அடித்தாமரைகள் இருக்கின்றன. வாழ்விலே நம்மைக் கைதூக்கிவிடும் அந்த தேவியின் பாதங்கள்.

ஆளுக்கைக்கு அடித்தாமரையும் யமன் கையினின்று மீளுகைக்கு கடைக்கண்ணும் என்பதை ஆதிசங்கரர் ' ஜன்ம ஜலதௌ நிமக்னானாம் முரரிபு வராஹஸ்ய த்ஷ்ட்ராபவதி ' - என்கிறார். ( ஸௌ.ல. 3 )
உயிர்கள் சம்சாரக்கடலில் மூழ்கித் தவிக்கும் போது அம்பாளின் இருபாதங்களும் வராஹமூர்த்தியின் இருகோரைப்பற்கள் போல இருக்கின்றன என்கிறார். தண்ணீரில் மூழ்கிக் கிடந்த ' பாசிதூர்ந்த பார்மகளை ' வராஹ அவதாரம் எடுத்துத் தனது கோரைப் பற்களில் தாங்கி வெளிக் கொணர்ந்தது போல அம்பாளின் திருவடிகள் ஸம்ஸாரக் கடலில் மூழ்கிய ஜீவர்களைக் கரையேற்றுவன என்பது பொருள்.
அந்தகன்பால் மீளுகைக்கு உந்தன் விழியின் கடை உண்டு 

எமனிடமிருந்து மீள்வதற்கு உந்தன் கடைக்கண்ணின் கருணைப்பார்வை உண்டு

அந்த தேவியின் கடைக்கண் பார்வையோ, அந்தகனின் வாய்க்குள் சென்றவனைக்கூட மீட்டுவிடும் சக்தி வாய்ந்தவை. இப்படி வாழ வைக்கவும், சாவிலிருந்து மீட்கவும் அந்த தேவியின் அருள் காத்துக் கிடக்க, ஒருவன் கடைத்தேற முடியாமல் போனால், அது அவனுடைய குறையே அல்லவா? இதைத்தான், பட்டரும், 'என் குறையே அன்றி, நின் குறை அன்று' என்று பேசுகிறார்.

அம்பிகையின் விழிகளிலாவது நாம் பட்டோமா? அதுவும் இல்லை. அதுவும் நம் குறையே! இயமனின் பிடிப்பிலிருந்து மீண்டிட அவளது திருவிழிகளின் கடைக்கண் பார்வை போதும். அந்த அரும் பார்வையைப் பெற்றிடவும் நாம் முனைந்தோமில்லை. திருவடிகளைப் பற்றிச் சிந்திக்காததும் அவற்றைப் பற்றி நெஞ்சில் வந்திக்காததும் நம் குற்றம். நமது கர்மவினையும் ஆணவ மலமும், மாயையுமே காரணம். இவற்றை ஒழித்து, இவற்றினின்று விட்டு விலகித் தள்ளி நிற்க முடியும். ஆனால் நாம் முனைந்தோமா? இல்லை. அன்னையைப் பற்றி எண்ணினோமா? இல்லை.
கடைக்கண் பார்வை விழுந்தால் எமனை வெல்லலாம். எமனது குறிப்பை முன்னர் சில இடங்களில் சொன்னார். இங்கும் சொன்னார். இனியும் இயம்புவார். ஏன் தெரியுமா? எமனை மார்க்கண்டேயன் வென்ற திருத்தலம் திருக்கடவூர். எமனது இடரை அபிராமிபட்டர் வெல்லப்போகும் இடமும் அவ் ஊரே. அங்கே வாழ்பவள் அபிராமி ; அதனால்தான் அடிக்கடி அதனை அபிராமி பட்டர் நினைவு கூர்கிறார். இவ்வளவு கருணையுள்ளம் கொண்ட அன்னையினது கருணையைப் பெற்றிடாமை நம்ம குறைதான்னு சொல்றார்.
மேல் இவற்றின் மூளுகைக்கு என் குறை நின் குறையே அன்று 

இவை இருந்தும் உன் திருவடித்தாமரைகள் என்னை ஆளாமலும் உன் கடைக்கண் பார்வை என் மேல் விழாமலும் இருப்பதற்குக் காரணம் என் குறையே; அது உன் குறை இல்லை.

கடைசி இரண்டு அடிகளுக்கு வேறு வகையிலும் பொருள் சொல்வதுண்டு.
 இவை இருந்தும் உன் திருவடித்தாமரைகள் என்னை ஆளாமலும் உன் கடைக்கண் பார்வை என் மேல் விழாமலும் இருப்பதற்குக் காரணம் என் குறையாக இருக்கலாம்; ஆனால் அது உன் குறையும் கூட (ஏனெனில் நான் உன் பிள்ளை; உன் அடியவன்/அடியவள். என்னைக் காப்பது உன் கடன்.
முப்புரங்கள் மாளுகைக்கு அம்பு தொடுத்த வில்லான் பங்கில் வாணுதலே 


 முப்புரங்கள் அழியும் படி அம்பு தொடுத்த வில்லை உடைய சிவபெருமானின் இடப்பாகத்தில் வாழும் ஒளி பொருந்திய நெற்றியை உடையவளே!

அஷ்டமீசந்த்ர விப்ராஜ தளிக ஸ்தல சோபிதா - அஷ்டமியில் தோன்றும் அரைவட்ட சந்திரனைப்போல் பிரகாசிக்கும் நெற்றியுடன் சோபிக்கிறவள். இதையே - வாணுதல் ( வாள் - நுதல்) என்கிறார் அபிராமபட்டர்.


16. முகசந்த்ர - கலங்காப - ம்ருகநாபி - விசேஷகா - சந்த்ர மண்டலத்தில் களங்கம் காணப்படுவது போல தேவியின் முகமாகிற சந்த்ர மண்டலத்தில் நெற்றியின் கஸ்தூரி திலகம் களங்கம் போல் அழகு கூட்டுகிறது
இந்த அந்தாதியில் எம்பெருமானை "அம்பு தொடுத்த வில்லான்" என்கிறார். எல்லோரும் அறிந்த கதைதான். திரிபுரம் எரித்த கதை.
தாரகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி என்னும் மூன்று அசுரர்கள் இரும்பு,வெள்ளி, பொன் ஆகிய மூன்று உலோகங்களால் ஆன கோட்டைகளை ஆண்டு கொண்டிருந்தனர். அக் கோட்டைகள் வானில் பறக்க வல்லவை. அம்மூன்று கோட்டைகளும் ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒன்றாய்க் கூடும். " மூன்றும் ஒன்றாய்ச் சேருங்கால் ஒரே அம்பினால் அவற்றை எய்தால் மட்டுமே அழிய வேண்டும் " என்னும் வரங்கள் அவர்கள் பெற்றிருந்தனர்.
மூன்று கோட்டைகளையும் பறக்க விட்டு அவற்றைக் கீழே இறக்கி ஆங்காங்குள்ள ஊர்களையும் உயிரினங்களையும் அழித்து வந்தனர். தேவர்கள் அஞ்சிச் சிவனிடம் வேண்டினர். அடுத்த முறை மூன்று மலைகளும் ஒன்று சேர்ந்து வானில் உலா வந்தன. சிவபிரான் மேரு மலையை வில்லாக்கித் திருமாலை அம்பாகவும், அக்கினியை அம்பின் முனையாகவும் கொண்டு நின்றார். கையில் வில், வாள், அம்புடன் நின்றனன்.
திருமாலும், அக்கினியும், மேருவும் தம்மால் கோட்டைகளைச் சிவன் அழிப்பார் என இறுமாந்தனர். அதுகண்டு அத்தன் சிரித்தான். முப்புரங்கள் அழிந்தன .
அந்த ஈசனின் இடப்பாகம் அமர்ந்த வாள் போன்ற நுதல் கொண்ட எம் அன்னையே அல்லவா முப்புரங்களும் அழிபடக் காரணமாயிருந்தவள்!


                                                      பாடலை குருஜி  கற்பிக்கிறார் இசையுடன்



                                                                                         


அபிராமி சரணம் சரணம்!
முருகா சரணம் 



U Tubes published  by us are available in the following link

No comments:

Post a Comment