Saturday 1 September 2018

அபிராமி அந்தாதி - 36


                                              அபிராமி அந்தாதி - 36

                                               பொருளே பொருள் முடிக்கும் போகமே (பாடல் 36)

பொருளே பொருள் முடிக்கும் போகமே அரும் போகம் செய்யும்
மருளே மருளில் வரும் தெருளே 
என் மனத்து வஞ்சத்து
இருள் ஏதும் இன்றி ஒளி வெளி ஆகி இருக்கும் உந்தன்
அருள் ஏது அறிகின்றிலேன்
 அம்புயாதனத்து அம்பிகையே


அன்பரின் விளக்கவுரை 

பொருளே பொருள் முடிக்கும் போகமே அரும் போகம் செய்யும்
மருளே மருளில் வரும் தெருளே 
 உலக மாந்தர்க்கு வேண்டிய பொருட்செல்வத்தை அன்னை
தந்தருளுகின்றாள். அன்னையே அப்பொருட்செல்வமாக நிற்கின்றாள். ஆனால் நல்வழியில் செல்லவேண்டிய மனமானது பொருட்செல்வம்
அதிகமானதும் போகத்தை நாடுகின்றது.. அன்னையே அப்போகமாகவும் நிற்கின்றாள். போகம் அதிகமாகும் போது மனம் மாயையில் சிக்கி மயங்குகின்றது... அச்சமயம் அன்னையே அம்மாயையாக நிற்கின்றாள். மயக்கத்தின் பின் தெளிவு உண்டாகிறது...

பொருட் செல்வம் கெட்டதன்று. அந்தப் பொருட் செல்வத்தால் உலகில் நன்மை விளைகின்றது. ஆனால் அந்தப் பொருட் செல்வத்தை அந்த நல்ல வழியில் பயன்படுத்துவது எல்லோராலும் இயலாததொன்று. அந்தப் பொருட் செல்வத்தைப் போகத்தின் பால் செலவழிக்கவே எல்லார் மனமும் விழைகிறது. 
அப்படிப் பெறப்படும் போகங்களும் கெட்டதல்ல. இடைவிடாத மகிழ்வு (ஆனந்தம்) என்பதே எல்லோருடைய குறிக்கோளும். தனக்குள்ளேயே அந்த ஆனந்தம் இருப்பதாக அறிந்தவர் கூறுகின்றார்கள். ஆனால் பெரும்பான்மையினர் அந்த மகிழ்ச்சியைப் போகங்களில் தானே தேடுகிறோம். அந்த போகங்கள் அவைகளாகவே கெட்டவை இல்லை. ஆனால் அவை மருளை ஏற்படுத்துகின்றன. மயக்கத்தில் ஆழ்ந்துவிட்டால் பின்னர் பிழைப்பது அரிது. அன்னையின் அருள் தானே வந்தால் அன்றி அந்தச் சுழலில் அகப்பட்டவர் அகப்பட்டவரே. ஆனால் அதே நேரத்தில் அந்த மயக்கமே அன்னையின் அருளை இழுத்து வருவதற்கும் பல நேரங்களில் காரணமாக இருக்கிறது. 

கீதையின் முதல் அத்தியாயம் 'அர்ச்சுன விஷாத யோகம் - அருச்சுனனின் மயக்கம் என்ற யோகம்'. அருச்சுனனின் மயக்கம் எப்படி யோகமாக இருக்க முடியும் என்பதற்குப் பெரியவர்கள் சொல்லும் பொருள் இது தான் - அந்த மயக்கம் வந்ததால் தான் அவனால் கண்ணன் சொல்லும் நல்வார்த்தைகளை உணர்ந்து தெளிவு பெற முடிந்தது. அங்கேயும் மயக்கத்தில் இருந்து தெளிவு பிறந்தது.

 அருணகிரியாரும் போகத்தில் ஆழ்ந்து அமிழ்ந்து மயக்கம் உற்று அந்த மயக்கத்தில் தன் உயிரை மாய்த்துக் கொள்ள விழைந்த போது தானே முருகனின் அருள் வந்து தெளிவு தந்தது. இப்படி பல எடுத்துக்காட்டுகளைச் சொல்லலாம். அதனால் மயக்கமும் நல்லதே என்பது விளங்கிற்று. அந்த மயக்கத்தில் இருந்து தோன்றும் தெளிவும் நல்லதே. அந்தத் தெளிவு நம் முயற்சியால் ஏற்படுவதன்று. அன்னையின் அருளால் ஏற்படுவது. நல்லவரைக் காப்பதென்னவோ எளிது. ஆனால் கெட்டவரைக் காப்பது தானே பெருமைகடவுள் என்பது அனைத்தையும் கடந்து உள்ளிருக்கிறதல்லவா. அப்படியானால் ஒவ்வொரு பொருளாகவும்..அதன் பண்பாகவும்..அந்தப் பண்பின் பயனாகவும்..அந்தப் பயணின் விளைவாகத் துய்க்கும் இன்பமாகவும்....அந்த இன்பத்தின் விளைவாக எழும் எண்ணமாகவும்...அந்தன் எண்ணத்தின் வழி கிடைக்கும் நல்வழியாகவும் இருப்பது கடவுளே. அதைப் பொருளை மட்டும் வைத்து அழகாக விளக்கியிருக்கிறார். இப்படி ஒவ்வொன்றையும் சொல்லிக் கொண்டிருக்க வேண்டாமே என்றுதான் "யாதுமாகி நின்றாய் காளி" என்றான் பாரதியார் 

"என் மனத்து வஞ்சத்து இருள் ஏதும் இன்றி ஒளி வெளி ஆகி இருக்கும் உந்தன் அருள் ஏது அறிகின்றிலேன்  

"மானிடராய்ப் பிறந்தவர் போகம் யோகம் இரண்டையும் சமமாகக் கொள்ள வேண்டும் என்ற கருத்தில். இரண்டையும் சமமாகக் கருதாதவர்கள் அறியாமை இருளில் அகப்பட்டுக் கொள்கிறார்கள்.  

அ பிராமி நம் முன் தோன்றி, "ஒரு வரம் தருகிறேன், என்ன வேண்டும் கேள்" என்றால், நம்மில் எத்தனை பேர் உடனே "தாயே, இனிப் பிறவாமை வேண்டும்" என்று கேட்போம்? இறந்தபின் பிறவாமை கிடைத்தால் நமக்கென்ன தெரியவா போகிறது? பிறந்து விட்டோம்; அண்ணன் தம்பி மாமன் மச்சான் இவர்களை விட நாமும் நம் தலைமுறையும் வசதியாக வாழ்ந்தால் போதும் என்றுதான் நம் மனம் உடனே நினைக்கும்; அதைத்தான் வரமாகக் கேட்கும்.  

என் பிள்ளைகளை வாழ வை தாயே' என்றுதான் கேட்டிருப்போம் இல்லையா? பாசங்களின் பிடி அப்படிப்பட்டது. சட்டி சுட்டதடா எனும் மனப்பக்குவம் மிகவும் அரியது. போகத்தில் தவறில்லை. போகம் மனித இயல்பு. நெறி. மருள். அதை உணர்ந்து தெளிவு பெறுவது என்பது சாதாரண முதிர்ச்சியில்லை. இதைத்தான் 'மனத்து வஞ்சத்து இருள்' என்றார் பட்டர்

 ஒளி வெளி ஆகி இருக்கும் உந்தன் அருள் ஏது அறிகின்றிலேன்" 

உனது அருள் என்னும் பேரொளியால் என் மனத்தில் இருந்த வஞ்சனை என்னும் இருள்... அல்லது என் மனத்தை வஞ்சித்த மாயை என்னும் இருள்... இல்லாது போனது... அப்படிப்பட்ட உனது பேரருள் என்ன என்பதுஎனக்குப் புரியவில்லையே அம்மா என்று வியக்கிறார் பட்டர்.  

'அம்புயாதனத் தம்பிகையே' என்பதற்குக் கூட பல வித விளக்கங்கள் சொல்லலாம்.

 அம்பிகை என்பதற்கு தாய் என்று பொருள். அம்புய+ஆதனத்து+அம்பிகையே எனப் பிரித்து தாமரையை இருக்கையாக (ஆதனம்:ஆசனம்) உடைய தாயே எனலாம். அதே சொற்பிரிவில் தாமரையை யோக நிலையாக (ஆசனம்) உடையவளே எனப் பொருள் கொள்ளலாம். அம்புய+தனத்து+அம்பிகையே எனப் பிரித்து தாமரை போல் பரந்த, மென்மையான அல்லது குவிந்த மார்பை உடைய தாயேன்னு கூப்பிடுகிறார்.
லலிதா சஹஸ்ரநாமம், சௌந்தர்யலஹரி பாடல்களில் தாமரையை இருப்பிடமாகக் கொண்டவள் என்று அடிக்கடி வருகிறது. நான்கு இதழ் தாமரையில் இருப்பவளே, ஆறு இதழ் தாமரையில் இருப்பவளே, எட்டு இதழ், பத்து இதழ், பதினாறு இதழ் என்று வரிசையாக ஆயிரம் இதழ் தாமரையில் இருப்பவளே வரை லலிதா சஹஸ்ரநாமத்தில் தொடர்ந்து வணங்கப்படுகிறாள் திரிபுரசுந்தரி.

                                                      பாடலை குருஜி  கற்பிக்கிறார் இசையுடன்

                                                                       காம்போதி ராகம் 

                                    


                                                                                           
                                                  அன்னை அபிராமியே சரணம் 

                                                               முருகா சரணம் 

No comments:

Post a Comment