Thursday 28 September 2017

அபிராமி அந்தாதி - 20 வெள்ளி அபிராமி அந்தாதி - 20



                                                                அபிராமி அந்தாதி - 20 
                                                                             


உறைகின்ற நின் திருக்கோயில்-நின் கேள்வர் ஒரு பக்கமோ,
அறைகின்ற நான் மறையின் அடியோ முடியோ, அமுதம்
நிறைகின்ற வெண் திங்களோ, கஞ்சமோ; எந்தன் நெஞ்சகமோ,
மறைகின்ற வாரிதியோ?- பூரணாசல மங்கலையே!



அன்பர் தொகுத்து அளித்துள்ள விளக்கவுரை 

அம்பிகை எங்கெங்கு இருக்கிறாள்? விடை தேடிப் புறப்படுகிறார் பட்டர்.
இந்த அம்பிகை" ஸ்ரீநகரத்தில் சிந்தாமணி கிரகத்தில்" மட்டுமா இருக்கிறாள்?’’
இந்த கேள்வி நமக்கு மட்டுமில்லை. அபிராமி பட்டருக்கும் வந்தது. ‘‘தாயே! உன் உறைவிடம் எது? இறைவனது வாம பாகம் மட்டும்தானா? வேதத்தின் அடியா? வேதாந்தங்களா? அல்லது அமிர்தத்துடன் பிறந்த அந்த பூரணச் சந்திரனா? பின் ஏன் உன்னை சந்திர மண்டலத்தில் தியானிக்க வேண்டும் என்கின்றனர்? நீ இருக்கும் இடம் தாமரை மலரா அல்லது அடியேனின் இதயக் கமலமா? அமுதம் நிறைந்த கடலா? மணித்வீப மத்யே என்கின்றார்களே! இப்படி பலவிதமாக சொன்னால் என் போன்ற எளியவர்களுக்கு எப்படிப் புரியும்? நீயே சொல்லம்மா’’ என்கிறார்.
அவள் இருப்பிடம் எதுவாக இருந்தால் என்ன? அவளை சதாசர்வகாலமும் நம் மனதில் இருந்தி தியானித்தால் அவள் நம் மனதில் வந்து நிச்சயம் அமர்ந்து விடுவாள். அதைத்தான் லலிதா ஸஹஸ்ரநாமம், ‘பக்தமானஸ ஹம்ஸிகா’ - பக்தர்கள் மனதில் நீந்தும் அன்னப்பறவை என்று குறிப்பிடுகிறது.
அபிராமபட்டர் அம்மையின் திருக்கோலங்களை எண்ணிப் பார்க்கிறார். அம்பிகையோ எங்கும் உறைபவள். அவள் எங்கும் நிறைந்த பரிபூரணையாக இலங்குகிறாள். அவள் கொள்ளும் திருஉருவங்களுக்கு கணக்கு வழக்கேயில்லை. ஏதாவது ஒருவகைப்படுத்தி பார்க்கலாம் என்ற திருமுயற்சியில் இறங்குகிறார்.
சிலவற்றைச் சொல்லி ' இதுலோ! அதுவோ ' என்று வினவி பூரிப்பு அடைகிறார்.
அபிராமபட்டர் எப்போதும் 'அப்பனை ' சொல்லியே அன்னையைப் பற்றி கூறுவார். இதை நாம் நன்கு உணர வேண்டும்.காப்புச் செய்யுள், ' தாரமர் ' என்று ஆரம்பிப்பதிலிருந்தே இதை நாம் அறிகிறோம்.
உலக மாதாவும், பிதாவும் ஆகிய இவர்களுக்கு உயிரும் உடம்பும் ஒன்றுதான். 

இதை மனதில் கொண்டு " நின் கேள்வர் ஒரு பக்கமோ " என்று பாடலை ஆரம்பிக்கிறார்.
' ஒன்றே உடம்பு அங்கு இடும்பங்கு இரண்டே.....' குமரகுருபரர் சொல்லுகிறார்.
அம்மையும், அப்பனும் ஒட்டியிருக்கும் திருக்கோலம் - அர்த்தநாரீசு ர மூர்த்தம். இதனையே ' ஒரு பக்கமாய பரம்பரன் தேவி ' - என்கிறது தக்கயாகப் பரணீ.
அன்னையை ' ஓங்காரம் ' என்னும் கூட்டில் இருக்கும் கிளி - என்பர். திருமூலர்
"ஓங்காரி என்பாள் அவள் ஒரு பெண் பிள்ளை
நீங்காத பச்சை நிறத்தையுடையவள்
ஆங்காரி ஆகியே ஐவரைப் பெற்றிட்டு
ரீங்காரத்துள்ளே இனிது இருந்தாளே" (திருமந்திரம் - 1073)

நின் கேள்வர் ஒரு பக்கமோ.
." உனது தோழரான ஈசனது ஒரு பக்கமோ? கேள்வர் எனும் பதமானது மிக நெருக்கமான தோழர்களைக் குறிக்கப்பயன்படுகிறது... அன்னைக்கும் அப்பனுக்கும் இடையேயான தோழமை அளப்பறியது அல்லவா? ஈசனை விடுத்து உமையும், உமையை விடுத்து ஈசனும் பிரிந்திருப்பது மிக மிக அரிது... பிரிந்திருந்தாலும் அவர்தம் மனத்தளவில் ஒன்றியிருப்பதே வாடிக்கை... அப்படிப்பட்ட ஈசனைத் தான் அம்மையின் கேள்வர் என்று அபிராமிப் பட்டர் குறிப்பிடுகின்றார்.
வேடிக்கையா இப்படி கூட சொல்லலாம்!!
எப்படி??
ஈசனை என்ன காரணத்தால் அபிராமிப் பட்டர் கேள்வர் என்று குறிப்பிட்டார் தெரியுமா? அன்னை சொல்வதையெல்லாம் சரி சரி என்று கேட்டுக்கொண்டிருக்கிறார் அல்லவா? அதற்காகத்தான் என்று... ஆம் அன்னையின் திருச்சொல்லை அப்பன் கேளாதிருந்திடுவாரோ?

அறைகின்ற நான்மறையின் அடியோ முடியோ 
 ஓதப்படுகின்ற நான்கு வேதங்களின் தொடக்கமோ? இல்லை அவற்றின் முடிவோ?

அமுதம் நிறைகின்ற வெண்திங்களோ - 
அமுதம் போல் குளிர்ந்த நிலவொளியை வீசும் வெண்மையான சந்திரனோ?

 அபிராமபட்டர் சொல்வது, அவர் எப்போதும் உள்ளத்திலே நினைத்து, நினைத்து உருகும் ' சந்திரமண்டலம் '.


சந்த்ர மண்டலமத்யகா - சந்த்ரமண்டலத்தின் மத்தியில் இருப்பவள்சிரஸில் உள்ள ஸஹஸ்ரார கமலத்தில் எப்போதும் பூர்ணகலைகளை உடைய சந்த்ரமண்டலம் இருப்பதாகச் சொல்லப்படும். அந்தச் சந்த்ரமண்டவத்தின் நடுவில் விளங்குபவள் தேவி.
சரபோஜி மன்னன் அவரைக் கேள்வி கேட்டபோதும் இந்நிலையில் தான்அவர் இருந்தார் என்று சொல்லவும் வேண்டுமா? என்ன!
சந்திரனை - ' அமுதகிரணண் ' என்பர். அம்பிகை அங்கே எழுந்தருளியிருப்பதனால் தான் அவள் அமுதம் நிறைந்தவளானாள்.

( சந்த்ர மண்டலமே - ஸ்ரீசக்ரம் என்பது ரகசியம்)
எனவே ' அமுதம் நிறைகின்ற வெண்திங்களோ ' - என்றார்.

'வெண்கஞ்சமோ ' -
 என்று சேர்த்து வெள்ளைத் தாமரையில் கலைமகளாகவும் இருந்து கல்விக்குத் தெய்வமாகத் திகழ்கிறாள் அன்னை என்றும் பொருள் சொல்லலாம். 704. ஸரஸ்வதி - ஞான அபிமான தேவியான ஸரவதியாக இருப்பவள். பின்னும் ' அருணாம்புயத்தும் ....... ' ( 58) என்ற பாடலில் அன்னையின் திருமேனியை ஒரு தாமரை காடாகவே வர்ணிக்கிறார்.

 எந்தன் நெஞ்சகமோ,
அபிராமபட்டர் அடுத்து ' உன்னைப் பற்றி நினைக்கவும், உன்னைத் தியானிக்கவும் எனக்கு ஒரு கருவியைக் கொடுத்திருக்கிறாயே! அந்த உள்ளமும் உன்னுடைய திருக்கோயில்தானே?

அடுத்து ' கஞ்சமோ "
 தாமரையோ - என்றார்.

மறைகின்ற வாரிதியோ 
எல்லாவிதமான செல்வங்களும் மறைந்திருக்கும் பாற்கடலோ?
"பூரணாசல மங்கலையே 
பூர்ணா - எங்கும்,எதிலும், எப்போதும் நிறைந்திருப்பவள். ப்ரஹ்மத்தின் வடிவான தேவிதான். ( காலம், தேசம், வஸ்து இவற்றால் கட்டுப்படாதவள் தேவி. ) அதாவது ' பார்க்குமிடம் எங்கும் ஒரு நீக்கமற நிறைகின்ற பரிபூரணானந்தமாக இருப்பவள்.
அசலை - அவள் எங்கும் இருப்பவள் அல்லவா ! அதனால் சலனம் இல்லாதவள். 
மங்கலை  - 
அவள் நித்திய மங்கலை. எப்போதும் மங்கலம் குறையாமல் இருப்பவள்.
"மங்கலாக்ருதி" - மங்கள ரூபமுடையவள்.
"ஸர்வ மங்கலா "- எல்லா மங்களங்களையும் உடையவள்.
அவைகள் அனைத்துக்கும் மூலமாக இருப்பவள்.

அபிராமி சரணம் சரணம்!!

வெள்ளைத் தாமரையில் கலைமகளாகவும் இருந்து கல்விக்குத் தெய்வமாகத் திகழும் சரஸ்வதி தேவியை அருட்கவி பாரதியரின் கூற்றில் ,அவள் எங்கெல்லாம் உறைந்து அருள் பாலிக்கிறாள் என்பதை பார்ப்போம்.


வெள்ளைத் தாமரை பூவில் இருப்பாள்

வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்

கொள்ளை இன்பம் குலவு கவிதை
கூறு பாவலர் உள்ளத்திலிருப்பாள்

உள்ளதாம் பொருள் தேடியுணர்ந்தே
ஓதும் வேதத்தின் உள்நின்ரொளிர்வாள்

கள்ளமற்ற முனிவர்கள் கூறும்
கருணை வாசகத்துட் பொருளாவாள்

மாதர் தீங்குரல் பாட்டில் இருப்பாள்

மக்கள் பேசும் மழலையில் உள்ளாள்

கீதம் பாடும் குயிலின் குரலை
கிளியின் நாவை இருப்பிடம் கொண்டாள்

கோதகன்ற தொழிலுடைத்தாகிக்
குலவு சித்திரம் கோபுரம் கோயில்
ஈதனைத்தின் எழிலிடையுற்றாள்

இன்பமே வடிவாகிட பெற்றாள் 

சரஸ்வதி யைப் போற்றும் இந்நாளில் அவளை வணங்கி ,போற்றி  அருள் வேண்டுவோம்.



                                                                    பாடலை குருஜி  கற்பிக்கிறார் இசையுடன் 


                                                                                                  

                                                                  Utube  Link for ANDROID  and   IPAD   PHONE

                                                https://youtu.be/IcZ1914s8H8

                                                                              அன்பர்கள் இசைக்கிறார்கள் 


                                                                                                   


                                                             Utube  Link for ANDROID  and   IPAD   PHONE

                                               https://youtu.be/SkcyQ-uOitE


                                               முருகா சரணம் 





No comments:

Post a Comment