Friday 27 January 2017

தை அமாவாசை



                                                                          தை அமாவாசை 

                                          அபிராமி அந்தாதி,அபிராமி பதிகம் பாராயணம் 



                                                                                                             


இன்று தை அமாவாசையை யொட்டி நாடெங்கிலும்திருப்புகழ் அன்பர்களின் அபிராமி அந்தாதி,பதிகம் பாராயண  வைபவம் நடைபெறுகின்றன.இந்த சந்தர்ப்பத்தில் அந்த தெய்வீகப் பாடல்களை நமக்கு அருளச் செய்த அன்னை உபாசகர் அபிராம பட்டரை சற்று நினைவு கூர்ந்து அவர் தாள்களை வணங்குவோம்.

அபிராமி பட்டர் (இயற்பெயர்: சுப்ரமணிய ஐயர்) ஸ்ரீவித்யா நெறி நின்று, யோகமுறைப்படி பராசக்தியை வழிபட்ட ஒரு அந்தணர். இவர் அபிராமி அந்தாதியை இயற்றியவர். இவர் வாழ்ந்த காலம் பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதி முதல் பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதி வரை என கருதப்படுகிறது.

                                                                அபிராமி காட்சி

சோழவள நாட்டின் காவிரிக்கரையில் உள்ள சிவாலயங்களில் ஒன்று திருக்கடையூர். அபிராமிவல்லி அமிர்த கடேஸ்வரர் ஆலயமும் ஒன்றாகும். அபிராமி பட்டர் அன்றைய சோழநாட்டுப்பகுதியான திருக்கடையூரில் வாழ்ந்து வந்தார்.இசைத்துறையிலும் பாடல் புனைவதிலும் வல்லவராக இருந்தார். அம்பிகையை வழிபடும் சாக்த நெறியில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டார். ஒளி வடிவில் அம்பிகையைத் தரிசித்து பேரின்பம் கண்டார். ஆனால், இவரின் தெய்வீகநிலையை மற்றவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. பித்தன் என்று வசைபாடினர். அவர்களின் ஏச்சையும் பேச்சையும் அபிராமி பட்டர் ஒரு பொருட்டாக எண்ணவில்லை.

                                                                  பௌர்ணமி திதி

அக்காலத்தில் தஞ்சையைத் தலைநகராகக் கொண்டு மகாராஷ்டிர வம்சத்தைச் சேர்ந்த முதலாம் சரபோஜி மன்னர் (Serfoji I) ஆண்டு வந்தார் (கி. பி. 1675–1728). தெய்வ பக்தியும் மதப்பற்றும் மிகுந்தவர். அவர் ஒரு தை அமாவாசை தினத்தன்று காவிரி சங்கமத்தில் நீராட எண்ணித் தம் பரிவாரங்களுடன் காவிரிப்பூம்பட்டினம் சென்று தம் நேர்த்திக்கடனை நிறைவு செய்தபின், ஸ்ரீ அமிர்தகடேசுவரர், ஸ்ரீ அபிராமி அம்பிகையையும் தரிசனம் செய்துகொள்ளவேண்டும் என்ற ஆவல் மிகுதியால் திருக்கடவூரை அடைந்தார்.
அரசர் திருக்கோயிலுக்கு உள்ளே செனறபொழுது கோயிலில் அபிராமி பட்டர் அம்பிகையின் முன் இவ்வுலக நினைவு ஏதுமின்றி தியான நிலையில் அமர்ந்திருந்தார். மன்னரின் வருகையைக் கூட கவனிக்காமல் பட்டர் இருப்பதைக் கண்ட மன்னர் வியப்பில் அருகில் இருந்தோரை நோக்கி, “இவர் யார்?” என்று கேட்டார். அருகில் இருந்தவர்கள், “இவர் ஒரு பித்தர்; தம் குல ஆசாரங்களை எல்லாம் கைவிட்டுவிட்டு ஏதோ ஒரு துர்தேவதையை வழிபடுகின்றவர்” என்று கூறினார்கள்.ஆனால், சரபோஜி மன்னர் அவர்கள் சொன்னதை நம்பவில்லை.ஆகையால் திரும்பி வரும்போது பட்டரின் உள்ளுணர்வை அறிய விரும்பிய மன்னர், பட்டரே! இன்று என்ன திதி? என்று கேட்டார். அம்பிகையின் அருள்மிகு தோற்றத்தை ஆனந்தமாய்க் கண்டு பரவசமுற்றிருந்த நிலையில் இருந்த அபிராமி பட்டர் வாய் குழறி, “இன்று பௌர்ணமி” என்றார்.

அரசரும் அவருடைய பரிவாரமும் சென்ற பின்னர், தியானம் கலைந்தெழுந்த அபிராமி பட்டர் நிகழ்ந்ததை உணர்ந்து பெரிதும் வருந்தினார். ஏற்கெனவே ஊரும், உலகமும் தம்மைப் பித்தன் என்று சொல்லி எள்ளி நகையாடுவதை மெய்ப்பிப்பது போலவே நடந்த இந்த நிகழ்ச்சியால் மனம் வருந்தி, அரசர் வரும் வேளையில் கவனக்குறைவால் ஏற்பட்ட தவறிலிருந்து அம்பிகையே தன்னைக் காத்தருளவேண்டும் என்று வேண்டிக்கொண்டு அபிராமி சந்நிதி முன் ஒரு ஆழமான ஒரு குழியை வெட்டி, அதில் விறகை அடுக்கி தீமூட்டினார். அதற்கு மேல் ஒரு விட்டமும், நூறு கயிறுகளாலான உறியையும் கட்டி, அதில் ஏறி அமர்ந்து கொண்டார். அம்பிகை எனக்குக் காட்சி கொடுத்து இந்தப் பழியை நீக்காவிட்டால் என் உயிரை விடுவேன்” என்று சபதம் செய்து விட்டு, அபிராமி அந்தாதியைப் பாட ஆரம்பித்தார்.

"உதிக்கின்ற செங்கதிர்" என்று ஆரம்பிக்கும் இந்த அந்தாதிப் பாடல்களில் ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும் உறியின் ஒவ்வொரு கயிறையும் அறுத்துக் கொண்டே வந்தார்.அப்போது எழுபத்தொன்பதாவது பாடலாகிய,

               “விழிக்கே அருளுண்டு அபிராம வல்லிக்கு வேதம்சொன்ன
                வழிக்கே வழிபட நெஞ்சுண்டு எமக்கவ் வழிகிடக்கப்
                பழிக்கே சுழன்றுவெம் பாவங்க ளேசெய்து பாழ்நரகக்
                குழிக்கே அழுந்தும் கயவர்தம் மோடென்ன கூட்டினியே”
 
என்ற பாடலை பாடிய உடன், ஸ்ரீ அபிராமியம்பிகை பட்டருக்கு வெளிப்பட்டுத் தோன்றிக் காட்சி கொடுத்தருளினாள்.தன் தாடங்கம் என்னும் தோடினை எடுத்து வானவீதியில் தவழ விட்டாள். அந்த தாடங்கம் வானில் மிதந்து பலகோடி நிலாக்கள் ஒன்றுகூடினாற் போல் ஒளியைப் பொழிந்து பெளர்ணமியைப் போல பிரகாசித்து ஜொலித்து. அவள் பட்டரிடம், நீ வாய் தவறி மன்னனிடம் கூறிய சொல்லையும் மெய்யே என நிரூபித்தேன். நீ தொடங்கிய அந்தாதியை தொடர்ந்து பாடு, என்றாள். அம்பிகை அருள்பெற்ற அபிராமிப்பட்டர் பரவசமுற்றார். அதோடு, தம் அனுபூதிநிலையை வெளிப்படுத்தும் அந்தாதிப் பாடல்களைப் பாடி நிறைவு செய்தார்.

மன்னர் அபிராமி பட்டரிடம் மன்னிப்பு கோரினார்.அரசர் பட்டருக்கு ஏராளமான மானியம் கொடுத்துத் தலைமுறைத் தலைமுறையாக அனுபவித்துக் கொள்ளும்படி வேண்டினார்.

இந்தப்பாடல்கள் தமிழ் இலக்கியத்தில் "அபிராமி அந்தாதி" என்றப்பெயரில் வந்தன, அந்தாதி என்றால் (அந்தம்-முடிவு, ஆதி-துவக்கம்) முதல் பாடல் எந்த வார்த்தையில் முடிந்ததோ அதே வார்த்தையில் அடுத்தப்பாடல் தொடங்க வேண்டும். அபிராமி அந்தாதியில் மொத்தம் நூறு பாடல்கள் உள்ளன. 

இவையனைத்தும் ஒரே இரவில் பாடப்பெற்றது. அபிராமி அந்தாதியில் இன்னொரு சிறப்பம்சம் என்னவென்றால் முதல் வரி 'உதிக்கின்ற'என்ற வார்ததையுடன் ஆரம்பிக்கும் முதல் பாடல் அதே வார்த்தையை கடைசி வார்த்தையாகக் கொண்டு நூறாவது பாடல் முடிவடைகிறது.

நம் குருஜி அபிராமி அந்தாதி,அபிராமி பதிகம் பாடல்களுக்கு இசை அமைத்து ,அன்பர்களுக்கு கற்பிக்கும் முறையில் வழங்கியுள்ளார்.
அவை திருப்புகழ் நவமணி (DVD ..1B ) யில் இடம் பெற்றுள்ளன. அதன் மூலம் உலகில் உள்ள அன்பர்கள் இன்று இசைத்து வருகிறார்கள்.

பாடல்களை வீடியோ வடிவில் அளிக்கிறோம்.


                                                                 அந்தாதி பகுதி ..1

(U..TUBE  LINK)

https://www.youtube.com/watch?v=HN3D5f94InU


                                                                                                            



அந்தாதி பகுதி ....2

(U..TUBE  LINK)

https://www.youtube.com/watch?v=Ip7q-4sivS4



                                                                                                                   

                                                                                பதிகம் 

(U..TUBE  LINK)

https://www.youtube.com/watch?v=TXEcTCmdMp0



                                                                                                                   
                                                                                           முருகா சரணம்                                                                                                             

No comments:

Post a Comment