Wednesday, 5 August 2015

"குருதி தோலினால் " பாட்டு


            திருப்புகழ்வழிபாடுபுத்தகத்தில்புதிதாகசேர்க்கப்பட்டுள்ள பாடல்கள் 

                                                           (476 முதல் 503 வரை)

                                                                    பொது பாடல்


                                                                                                                                                  பாடல் 

குருதி தோலி னால்மேவு குடிலி லேத மாமாவி
     குலைய ஏம னாலேவி ...... விடுகாலன்

கொடிய பாச மோர்சூல படையி னோடு கூசாத
     கொடுமை நோய்கொ டேகோலி ...... யெதிராமுன்

பருதி சோமன் வானாடர் படியு ளோர்கள் பாலாழி
     பயமு றாமல் வேலேவு ...... மிளையோனே

பழுது றாத பாவாண ரெழுதொ ணாத தோள்வீர
     பரிவி னோடு தாள்பாட ...... அருள்தாராய்

மருது நீற தாய்வீழ வலிசெய் மாயன் வேயூதி
     மடுவி லானை தான்மூல ...... மெனவோடி

வருமு ராரி கோபாலர் மகளிர் கேள்வன் மாதாவின்
     வசன மோம றாகேசன் ...... மருகோனே

கருதொ ணாத ஞானாதி எருதி லேறு காபாலி
     கடிய பேயி னோடாடி ...... கருதார்வெங்

கனலில் மூழ்க வேநாடி புதல்வ கார ணாதீத
     கருணை மேரு வேதேவர் ...... பெருமாளே.

                                                           சொல் விளக்கம் 

குருதி தோலினால் மேவு குடிலில் ஏதம் ஆம் ஆவி குலைய ...

ரத்தம், தோல் ஆகியவற்றால் ஆக்கப்பட்ட குடிசையாகிய இவ்வுடலில்
கேடு அடைகின்ற இந்த உயிர் நிலை கெட்டு நீங்கும்படி,

ஏமனால் ஏவி விடு காலன் கொடிய பாசம் ஓர் சூல
படையினோடு ..

யம தர்மனால் அனுப்பப்பட்டு வருகின்ற காலன்என்ற தூதன் கொடுமை வாய்ந்த பாசக் கயிறு, ஒப்பற்ற சூலப் படைஇவைகளோடு வந்து,

கூசாத கொடுமை நோய்கொடே கோலி எதிரா முன் ...

கூச்சமில்லாமல், பொல்லாத துன்ப நோய்களைத் தந்து, வளைத்திருந்து
என்னை எதிர்ப்பதன் முன்பு,

பருதி சோமன் வான் நாடர் படி உளோர்கள் பால் ஆழி பயம்
உறாமல் வேல் ஏவும் இளையோனே ...

 சூரியன், சந்திரன்,விண்ணுலகோர், மண்ணுலகத்தினர், திருப்பாற் கடலில் பள்ளி கொண்டதிருமால் (ஆகிய இவர்கள்) பயம் நீங்க வேண்டி வேலைச் செலுத்தியஇளையவனே,

பழுது உறாத பா வாணர் எழுத ஒணாத தோள் வீர ...

குற்றம்சிறிதும் இல்லாத பாக்களைப் பாடும் திறமை வாய்ந்த கவி மணிகளாலும்எழுதுவதற்கு முடியாத (அழகை உடைய) தோள்களை உடைய வீரனே,

பரிவினோடு தாள் பாட அருள் தாராய் ... 

அன்புடன் நான் உன்திருவடியைப் பாடும்படியான திருவருளைத் தந்தருள்க.

மருது நீறு அதாய் வீழ வலி செய் மாயன் வேய் ஊதி ...

மருதமரம் வேரற்றுச் சிதறி விழும்படி தன் வலிமையைக் காட்டிய மாயவன்,புல்லாங் குழலை வாசிப்பவன்,

மடுவில் ஆனை தான் மூலம் என ஓடி வரு முராரி கோபாலர்
மகளிர் கேள்வன் ...

நீர் நிலையில் நின்ற (கஜேந்திரன் என்ற)யானையானது ஆதி மூலமே என்று ஓலமிட்டு அழைக்க, அதைக்காப்பாற்ற ஓடிவந்த முரன் என்ற அசுரனின் எதிரியாகிய முராரி, இடைக்குலத்து கோபிகை மகளிரின் கணவன்,

மாதாவின் வசனமோ மறா கேசன் மருகோனே ... 

தாயாகியகைகேயியின் சொல்லை மறுக்காமல் (காட்டுக்குச் சென்ற) கேசவனாகியதிருமாலின் மருமகனே,

கருத ஒணாத ஞான ஆதி எருதில் ஏறு காபாலி ... 

எண்ணுதற்குஅரிய ஞான மூர்த்தியும், ரிஷபத்தில் ஏறுபவரும், (பிரம்ம) கபாலத்தைக்கையில் ஏந்தியவரும்,

கடிய பேயினோடு ஆடி கருதார் வெம் கனலில் மூழ்கவே நாடிபுதல்வ ... 

கடுமை வாய்ந்த பேய்களுடன் ஆடுபவரும், தன்னை மறந்து
(சிவ பூசையைக் கைவிட்ட திரிபுரத்தில்) இருந்த அனைவரும் கொடிய
நெருப்பில் முழுகும்படி நாடியவரும் ஆகிய சிவபெருமானுடைய மகனே,*

காரண அதீத கருணை மேருவே தேவர் பெருமாளே. ...

காரணங்களுக்கு அப்பாற்பட்டவனே, கருணைப் பெருமலையே,
தேவர்களின் பெருமாளே.

*சிவபெருமானின் திருவிளையாடல்களைப் பட்டியலிடுகிற போதெல்லாம் அதில் கண்டிப்பாக இடம்பெறும் ஒரு விஷயம், அவர் திரிபுரங்களை எரித்தது!


இதைப்பற்றி திருப்புகழில் சில பாடல்கள் உள்ளன.உதாரணமாக 


முப்புர மெரிசெய்த அச்சிவ னுறைரதம்
     அச்சது பொடிசெய்த ...... அதிதீரா

திரிபுர மதனை யொருநொடி யதனி
     லெரிசெய்த ருளிய ...... சிவன்வாழ்வே

கொஞ்சம் விளக்கமாகப் பார்ப்போம்.

அதென்ன திரிபுரம்?  ‘திரி’ என்றால், திரிதல் என்ற செயலைக் குறிக்கிறது. அதாவது, ஓர் இடத்தில் நிற்காமல் எப்போதும் திரிந்துகொண்டே இருக்கிற புரம்தான் திரிபுரம்.  

உண்மையில் சிவன் எரித்தது ஒரு திரிபுரம் அல்ல, மூன்று திரிபுரங்களை. அதாவது, திரியும் மூன்று ஊர்கள், இவற்றை ‘முப்புரம்’ என்றும் அழைப்பார்கள்.

இந்த மூன்று ஊர்களும் மிக வலுவானவை. ஒன்று இரும்பால் ஆனது, இன்னொன்று வெள்ளியால் ஆனது, மூன்றாவது தங்கத்தால் ஆனது. அது மட்டுமில்லை, இவை மூன்றும்ஒருதெருவில்பக்கத்துப் பக்கத்துவீடுகளைப்போலக்கட்டப்படவில்லை,மூன்றுவெவ்வேறு தளங்களில்,அடுக்குமாடிக்கட்டிடம்போலக்கட்டப்பட்டிருந்தன. 

அவற்றில் முதல் தளம், இங்கே பூமியில் இருந்தது. இரண்டாவது தளம், வானத்தில் இருந்தது, மூன் றாவது தளம், மேல் உலகத்தில் இருந்தது! ‘இருந்தது’ என்ற சொல்லைவிட, ‘திரிந்தது’ என்ற சொல்தான் பொருத்தம். அந்த மூன்று ஊர்களும் எப்போதும் திரிந்து கொண்டே இருக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டிருந்தன. அந்தப் ‘புரங்கள்’ ஏன் அப்படித் திரிய வேண்டும்? காரணம் இருக்கிறது. அந்தப் புரங்களை யாராலும் ஊடுருவ முடியாது. யாராவது அவற்றை அழிக்க விரும்பினால், ஒரே அம்பால் மூன்று புரங்களையும் ஒட்டு மொத்தமாகத்தான் அழிக்க வேண்டும். 

அந்த நகரங்கள் மூன்றும் அருகருகே இருந்தாலோ, ஒன்றன்மீது ஒன்றுஇருந்தாலோ,எதிரிகள்எளிதில்குறிவைத்துஅழித்துவிடுவார்கள். ஆகவே, இப்படித் திரிந்து கொண்டே இருந்தால் அது சிரமம். மிக அபூர்வமாக, சுமார் ஆயிரம் வருடங்களுக்கு ஒருமுறை அந்தத் திரிபுரங்கள் ஒரே நேர்க்கோட்டில் வரும், அதுவும் சிறிது நேரம்தான். பிறகு மறுபடி விலகிச் சென்றுவிடும். அந்தச் சிறிய நேரத்துக்குள் யாரேனும் அந்த நகரங்களை அழிப்பது மிகவும் சிரமம். இப்படி அந்தப் புரங்களை வடிவமைத்துக் கொண்ட அசுரர்கள் ஆனந்தப்பட்டார்கள். 

தங்களை யாராலும் நெருங்க முடியாது என்று நம்பினார்கள், மற்ற பகுதிகளில் இருந்த அசுரர்களும் அடைக்கலம் தேடி அங்கே வந்தார்கள்; நல்லவர்களை இன்னும் தைரியமாகத் துன்புறுத்தத் தொடங்கினார்கள். வானவர் தொடங்கி மக்கள் வரை எல்லாரும் நடுநடுங்கினார்கள். அதன்பிறகு என்ன நடந்தது? வெவ்வேறு கவிஞர்கள் சொல்லும் விவரங்களைக் கேட்போம். 

அரக்கர்களுக்குச் சிவன்மீது என்ன விரோதம்? அந்தக் கதை இன்னொரு பாடலில் இருக்கிறது. அதை எழுதியவர் திருநாவுக்கரசர்

அந்த மூன்று திரிபுரங்களில் இருந்தவர்களை ‘நீசர்’ என்கிறார் திருநாவுக்கரசர். காரணம், அவர்கள் ‘நேச நீலக் குடி அரனே’ என்று சிவனை வணங்கவில்லை. வேறு வழியில் சென்றார்கள், அவரைப் பகைத்துக் கொண்டார்கள். அதற்குக் காரணம் நெடுமால், அதாவது விஷ்ணு செய்த மாயம்! அவர்தான் குறும்புக்காரர் ஆயிற்றே. அசுரர்கள் சிவனைப் புறக்கணிக்கும்படி தந்திரம் செய்தவர் அவர்தான். ஆகவே, ஈசனுக்கு அசுரர்கள் மீது கோபம் வந்தது, ஓர் அம்பை எய்தார், அந்த நீசர்கள் எரிந்து நாசமானார்கள்! 

அப்பேர்ப்பட்ட மூன்று ஊர்களை, சிவன் எய்த ஒரே ஓர் அம்பு அழித்துவிட்டதா! அப்படியானால் அந்த அம்பு எப்படிப்பட்ட சிறப்புடையதாக இருக்க வேண்டும்! அந்த விவரமும் பல பாடல்களில் உண்டு. திருவாசகத்தில் மாணிக்கவாசகர் எழுதும்  பாடல்களைப் பார்ப்போம்

இந்தப் பாடலில் வரும் ‘உந்தி பற’ அல்லது ‘உந்தீ பற’ என்பது ஒரு பழைய விளையாட்டு. இளம் பெண்கள் கூட்டமாகச் சேர்ந்து இப்படிப் பாடியபடி விளையாடுவார்கள். இங்கே அவர்கள் சிவனின் புகழைப் பாடுகிறார்கள். சிவனின் வில் வளைந்தது, அதனால் பூசல் எழுந்தது, முப்புரங்களும் வருத்தமடைந்தன, ஒரே நேரத்தில் அவை வெந்து சாம்பலாகிவிட்டன. அதற்காக இறைவன் பயன்படுத்தியது இரண்டு அம்புகள்கூட இல்லை. அவர் கையில் ஒரே ஓர் அம்புதான் இருந்தது என்கிறார் மாணிக்கவாசகர். அடுத்த வரியில், ஒரு சஸ்பென்ஸ் வைக்கிறார், ‘அந்த ஓர் அம்பையும் அவர் பயன்படுத்தவில்லை!’

என்னது? ஓர் அம்பைக்கூட அவர் பயன்படுத்தவில்லையா? பிறகு எப்படித் திரிபுரங்கள் எரிந்தன? அந்த சஸ்பென்ஸ் அப்படியே இருக்கட்டும். அதற்குப் பதில் தேடுமுன், அடுத்த பாடல்களையும் பார்த்துவிடுவோம். அங்கே மிக சுவாரஸ்யமான கதை இருக்கிறது. சிவன் திரிபுரங்களை அழிப்பதற்காகத் தேரில் காலடி வைக்கிறார். அவரது வலிமையைத் தாங்க முடியாமல் அந்தத் தேரின் அச்சு முறிந்துவிடுகிறது.ஆனாலும்,அவருடையசெயல்தடைபடவில்லை. திரிபுரங்களை அழித்துவிட்டார் அவர். அதில் இருந்த எல்லாரும் அழிந்துபோனார்கள், மூன்றே மூன்று பேரைத்தவிர! யார் அந்த மூன்று பேர்? அவர்களை மட்டும் சிவன் ஏன் அழிக்கவில்லை? இதற்குப் பதிலாக, சுந்தரரின் இந்தப் பாடலைப் பாருங்கள்.


"மூன்று புரங்களும் ஒன்றாகச் சேர்ந்த நேரத்தில் நீ அங்கே நெருப்பைத் தூவினாய், அப்போது அங்கே இருந்த மூன்று பேர் மட்டும் உன்னை உணர்ந்து, உன்னிடம் சரணம் அடைந்தார்கள். அவர்கள் பொன்னான மேலுலகத்தை ஆளும்படி நீ அருள் செய்தாய்! அந்த மூன்று பேர், சுதன்மன், சுசூலன், சுபுத்தி.  திரிபுரங்களும் எரிந்தபோது, இந்த மூன்று சிவபக்தர்கள் மட்டும் அதிலிருந்து பிழைத்தார்கள், சிவன் அருளால் சிறந்து நின்றார்கள். 

அது சரி, அந்த சஸ்பென்ஸ் என்ன ஆனது? சிவன் அந்த அம்பைப் பயன்படுத்தாமல் முப்புரங்களை எரித்தது எப்படி?

திரிபுரங்களை வீழ்த்தச் சென்ற சிவன் கையில் இருந்த வில்லும் அம்பும் சாதாரணமானதா? அவற்றைத் திருநாவுக்கரசர் வர்ணிக்கும் அழகைப் பாருங்கள்: நிலை இலா ஊர் மூன்று ஒன்ற, நெருப்பு, அரி, காற்று அம்பாகச் சிலையும் நாண் அதுவும் நாகம் கொண்டவர்.நிலை இல்லாத ஊர் என்றால், திரிகின்ற ஊர், அதாவது, திரிபுரம், முப்புரம். அந்த மூன்றும் ஒரே இடத்தில் ஒன்றியபோது, சிவன் தன் கையில் ஓர் அம்பை எடுத்தார். அது மூன்று பேர் சேர்ந்த அம்பு: நெருப்பு, காற்று மற்றும் திருமால்! ‘முப்புரம் எரி தூவ’ என்று மேலே சுந்தரர் சொல்லியிருப்பதை இங்கே பொருத்திப் பாருங்கள், சிவன் எடுத்த அம்பின் நுனியில் அக்னிதேவனே இருந்தார். 

அதனால் தான் திரிபுரத்தில் எங்கும் நெருப்பு பரவியது. இப்படிப்பட்ட வலுவான அம்பை எய்ய ஒரு மிக வலுவானவில்வேண்டுமல்லவா? 

அபிராமி அந்தாதி’யில் அதைச் சொல்கிறார் அபிராமிபட்டர்

"‘தங்கச் சிலை கொண்டு தானவர் முப்புரம் சாய்த்து"

இங்கே ‘தங்கச் சிலை’ என்றால், சிற்பம் அல்ல, தங்கத்தால் ஆன மலை, அதாவது மேரு மலை! சிவன் மேரு மலையை வில்லாக ஏந்திக்கொண்டார், நாணாக வாசுகி என்ற பாம்பைக் கட்டினார். அதில் அம்பைப் பொருத்தி இழுத்தார். இந்தக் காட்சி, ஓர் அருமையான பாடலில் இருக்கிறது. அதைப் பாடியவர் திருநாவுக்கரசர்


"கடல் சூழ்ந்த நாகையில் திகழும் காரோணத்தில் கற்றவர்கள் எல்லாரும் பயிலும்படி வீற்றிருக்கும் நெற்றிக் கண் கொண்ட எங்கள் தெய்வமே, உன்னுடைய பகைவர்களின் புரத்தை அழிப்பதற்காக நீ வில் தாங்கினாய். அது உன்னுடைய இடது கரம். ஆனால், உன் இடப்பக்கத்தில் இருப்பது வேல் போன்ற பெரிய கண்களைக் கொண்ட உமாதேவி அல்லவா? ஆகவே, வில்லைப் பிடித்தது நீ அல்ல, உமாதேவிதான்! அதேசமயம், நீ உன் வலது கையால் நாணை இழுத்தாய், அந்தக் கை உன்னுடைய கைதான்! இப்படி உமாதேவியும் நீயும் சேர்ந்துதான் திரிபுரத்தை அழித்தீர்கள், எங்களைக் காத்தீர்கள், உங்களுடைய கருணையை நான் எப்படி உரைப்பேன்?"

இதுபோல் கவிஞர்கள் கேள்வி எழுப்புவார்கள் என்று நினைத்துதானோ என்னவோ, சிவன் இழுத்த அம்பைச் செலுத்தவில்லையாம்.
 "இந்தத் திரிபுரங்களை அழிக்க இதுபோன்ற வில், அம்பெல்லாம் தேவையா?"
என்று நினைத்தாரோ என்னவோ, கொஞ்சம் சிரித்தாராம்! அவ்வளவுதான், திரிபுரங்களும் அழிந்துவிட்டன! 

                                                                     பாடல்  

பாடல் வரிசை எண்   21                                                        புத்தக வரிசை எண்  359

ராகம்  அடானா                    அங்க தாளம்         தகிட      தகிட      தக தகிட 
                                                              5 1/2               1 1/2       1 1/2         2 1/2


                                             இதே ராகத்தில் மற்றொரு பாடல்

 
                                                                                                                                                   

முருகா  சரணம்
1 comment:

  1. திரிபுரம் பற்றியதோர் அரிய அருமையான விளக்கம்! அபாரமான அடானா ராக பாடல்! இன்னொரு அடானா ராகப் பாடல் "தொந்தி சரிய" எங்கள் வகுப்பில் தோடி ராகத்தில் கற்பித்துள்ளனர்.

    ReplyDelete