Tuesday 24 July 2012

ARUNAGIRINATHARIN GANAPATHI


அருணகிரிநாதரின் கணபதி

திருப்புகழ் பாடல்  முருகனின் பாமாலையாயினும் அதில் வரும் கணபதி துதிகள் மிகவும் ரசிக்கத்தக்கதாகும். கணபதி, முருகனின் வாழ்க்கையில் இரண்டற கலந்தவனாயிற்றே.

கணபதியின் உருவத்தைத்தான் எப்படியெல்லாம் வர்ணிக்கிறார் அருணகிரிநாதர். அவரை நேரில் பார்த்தவராயிற்றே! ஆனை முகத்தினர், ஐந்து கரத்தினர், ஒற்றை மருப்பினர், தலையில் சிவனைப் போன்று பிறைச்சந்திரனை சூடியவர், பவள நிறத்தினர், பாம்பை இடுப்பில் தரித்தவர், பெட்டி போன்ற வயிற்றினர், மத்தள வயிற்றினர், முக்கண்ணர்.

ஐந்தாம் வேதமமாக போற்றப்படுவது மகாபாரதம். மகாபாரதம்தான் முதன் முதலாக எழுத்தாணிகொண்டு எழுதின நுலாகும். அதற்கு முன்னால் வந்த வேதம் எழுத்து வடிவில் இல்லை. ஒருவர் சொல்ல மற்றவரால் கேட்கப் பெற்று செவி வழியே ‘எழுதாக் கிளவியாகவே வேதங்கள் இருந்தன. ராமாயணமும் வால்மீகியால் எழுதி வைக்கப்படவில்லை. லவ குசலவர்களுக்கு, அவர் ராமாயணத்தை மனப்பாடம் செய்வித்து, ராமருக்கு முன்னால் அரங்கேற்றம் செய்தார். மாகாபாரதம் ஒரு பெரிய இதிகாசியம். லக்ஷம் ஸ்லோகங்கள் கொண்டது. இராமயணத்தைவிட நான்ங்கு மடங்கு பெரியது.  ஹோமரின் காவியப் படைப்பான இலியத் - ஒடிஸ்ஸே (Iliad- Odyssey) விட 10 மடங்கு பெரியது.  இதைவிட ஒரு தனிபெரும் சிறப்பு வியாசர் எழுதின மகாபாரதத்திற்கு உண்டு. அது என்னவென்றால் அதுதான் முதலில் ஏட்டில் எழுதின நூல் என்பதாகும்.  நான்கு வேதங்களையும் பாகுபடுத்தி உலகுக்கு கொடுத்த ஒரு மாமுனி சொன்ன விஷயங்களை காதால் கேட்டு அதனை ஏட்டில் எழுதினவர் சாமானியராக இருக்க முடியாது.  அப்படி எழுதியவர்தான் பிள்ளையார் என்று நாம் போற்றுகிறோம். மேரு (பொன்) மலையை ஏடாகக் கொண்டு, தம் தந்தத்தையே எழுத்தாணியாகப் பயன்படுத்தி விநாயகர் பாரதத்தை எழுதினார் என்பது வழக்கு. இது ஒரு மலைப்பான காரியாமாகும். அருணகிரியாருக்கும் இந்த விபரம் தெரிந்திருந்தோடுமட்டுமில்லாமல் வியந்தும் இருந்திருப்பார். அதனால்தான் பல இடங்களில் இந்த நிகழ்சியை நினவு கூறுகிறார். முத்தமிழை மேருமலையில் எழுதினார் என்று ‘கைத்தல’ பாட்டில் சொல்லியிருக்கிறார். அதன் தொடர்பான விபரங்கள் கிடைக்கவில்லை. ஆனால் மகாபராதம் எழுதினது யாவரும் அறிந்ததே.

பாரத கதையை முழுவதும் எழுதுவதற்காக விநாயகரைவியாசர் சென்று பார்த்தார். அவரை வணங்கி,  'பெருமானே... நான் அறிந்த பாரதத கதையை உலக மக்களுக்கு எடுத்துரைக்க விரும்புகிறேன். அதனால், நான் கூறும் நிகழ்ச்சிகளை எனக்கு எழுதித் தரும்படி கேட்டுக் கொள்கிறேன்' என்றார். அதற்கு விநாயகர் ‘நான் தயார். நீங்கள் சொல்லச் சொல்ல நான் எழுதித் தருகிறேன். ஆனால் நீங்கள் நி றுத்தாமல் சொல்ல வேண்டும். என் எழுத்தின் வேகத்திற்கு உங்களால் சொல்ல முடியுமா?’ என்றார்.
விநாயகர் கூறிய நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டார் வியாசர். 'நீங்கள் கூறியபடியே மகாபாரதத்தை எழுதலாம். ஆனால், எழுதும்பொழுது, எழுதும் வார்த்தைகளின் பொருள் உணர்ந்து எழுத வேண்டும்' என்று வியாசரும், விநாயகருக்கு நிபந்தனை போட்டார். அதற்கு அவரும் சம்மதித்தார். மகாபாரத நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றாக வியாசர் சொல்லச் சொல்ல... விநாயகரும் எழுதத் தொடங்கினார்.வியாசர் நடுவில் யோசித்து, யோசித்துச் சிக்கலான பதங்கள் அடங்கின ஸ்லோகங்களை சொல்லிவிடுவார். அந்த ஸ்லோகத்தை மேலெழுந்தவாரியாகப் பார்க்கிறபோது, பதம் பதமாக அர்த்தம் புரிந்தாலும், சேர்த்துப் பார்த்தால் ஒன்றும் அர்த்தமே ஆகாமல் ஒரே குழப்பமாயிருக்கும். வியாஸர் அந்தப் பதங்களை எப்படி ஸந்தி பிரித்துச் சொல்லுகிறாரோ, அப்படியே வைத்துக் கொள்ளாமல் எழுத்துக்களை முன் பின்னாக மாற்றி வேறு விதத்தில் பதங்களை அமைத்துக் கொண்டால்தான் அர்த்தம் புரியும். இந்த மாதிரி ஆயிரம் ஸ்லோகத்துக்கு ஒன்றாக கடினமான பதங்களும் அர்த்தங்களையும் கொண்ட ஸ்லோகங்களை வியாசர் சொல்ல, விநாயகர் மெளனமாய் அதன் பொருளை உணர்ந்து எழுதி வந்தார். அந்த நேரத்தில் அடுத்து சொல்ல வேண்டிய ஸ்லோகங்களை மனதில் கவனம் செய்து விடுவாராம் வியாச பெருமான்.  இதனால் மஹாபாரதத்தில் ஆயிரத்துக்கு ஒரு ஸ்லோகம்  லேசில் அர்த்தம் புரியாமல் இருக்கும். இவற்றுக்கு 'பாரத குட்டு'என்றே பேர்! லக்ஷம் ஸ்லோகம் கொண்ட பாரதத்தில் இப்படி நூறு 'குட்டுக்கள்' இருக்கின்றன.  குட்டு என்றால் ரஹஸ்யம், மர்மமான புதிர். ‘அவன் குட்டு உடைந்து விட்டது’ என்று தமிழிலும் சொல்லுவோம் அல்லவா! வியாசர் மகாபாரதம் எழுதிய குகையும், பிள்ளையார் எழுதியவாறு அமர்ந்த கோலத்தில் இருப்பதையும் தரிசிக்கும் வண்ணம் ஒரு கோயில், பத்ரிநாத்துக்கு வடகிழக்கில் உள்ள "மானா" என்னும் கிராமத்தில் உள்ளது. இப்போதும் அந்தக் கோவிலையும், வியாசர் இருந்த குகையையும் தரிசிக்கலாம்.   என் சிறு பிராயத்தில் கட்டுரை எழுதுவதற்கு பாட்டிமார் ‘வியாசம் எழுது’ ( Composition, Essay) எனச் சொல்வதுண்டு.

முதல் எழுத்தாளரான விநாயகரை நினைவு கூறும் வகையில் அருணகிரியார் சொல்லியிருக்கும் விபரங்களை இங்கு சற்றுப் பார்க்கலாமா?

பழமொழி எழுதிய கணபதி................................................................................................................. 523 ஒருபது மிருபது 
பழமொழி - பழமையான மொழியாகிய மஹாபாரதம்

பகைகொள் துரியோதனன் பிறந்து
படைபொருத பார தந்தெரிந்து
பரியதொரு கோடு கொண்டு சண்ட வரைமீதே
பழுதற வியாசன் அன்றி இயம்ப
எழுதிய விநாயகன் சிவந்த
பவள மத யானை........................................................................................................................... 1016 குகையில் நவநாதர்

 துரியோதனன் தன் படைகளுடன் போர் செய்த பாரத வரலாற்றை தனது ஒற்றை தந்தத்தால் மேருமலை மீது குற்றமே இல்லாத ( பழுதற ) முனி வியாசன் முன்பு ஒருநாளில் சொல்ல அந்தப் பாரதத்தை எழுதிய விநாயக மூர்த்தி சிவந்த பவள நிறத்தையும்  மதயானை முகத்தையும் கொண்ட கணபதி

பாயு மா மத தந்தி முகம் பெறும்
ஆதி பாரதம் என்ற பெரும் கதை
பார மேருவில் அன்று வரைந்தவன் ..............................................88 மாயவாடை

மதம் கொண்ட யானையின் முகத்தைக் கொண்ட முதல்வரும், பாரதம் என்ற பெரிய கதையை பாரமான மேரு மலையில் அந்நாள்  எழுதிய வருமான கணபதி

 ………….முனி பகரவட சிகரிமிசை
 பரியதனி யெயிறுகொடு குருநாடர்
கதைமுழுது மெழுதுமொரு களிறுபிளி………………….. 1095 வதைபழக

வியாச முநிவர் சொல்லிவர, வடக்கே உள்ள மேருமலையின் மீது, பருத்த ஒற்றைக் கொம்பைக் கொண்டு, குருநாட்டவர் பாண்டவர்கள் கதை முழுதும் எழுதிய ஒப்பற்ற ஒரு களிறு.
ஒரு கொம்பினாலே
எழுது என மொழியப் பண்டு பாரதம்
வட கன சிகரச் செம் பொன் மேருவில்
எழுதிய பவளக் குன்று ...................................................................................................................................956  அலகில

ஒற்றைக் கொம்பால் வியாச முனிவர் எழுதும்படி வேண்ட, முன்பு, பாரதக் கதையை வடக்கே உள்ள செம்பொன் மயமான மேரு மலையில், (வட கன சிகரச் செம் பொன் மேருவில்)  எழுதிய பவள மலையைப்போன்ற கணபதி (பவளக் குன்று - பவளத் திருமேனி எங்கிறார் அருணகிரி. துப்பார் திருமேனி என்பார் ஔவையார் வாக்குண்டாம் எனத் துவங்கும் பாடலில்)
சேவல் விருத்தம் காப்பு பாடலில் ‘வங்கோடு ஒன்றை ஒடித்துப் பாரதம் எழுதி  என விநாயகரை விளித்திருப்பதும் அருணகிரியாரின் ஆவல் புரிகின்றது.
ஏதோ பாரதம் எழுதுவதற்காகத்தான் விநாயக பெருமான் தன் தந்தத்தை ஒடித்தார் என நினைத்தால் அப்படியில்லை என்கின்றார் அருணகிரிநாதர்.

பாரதத்தை மேரு வெளீ வெளீ திகழ்
கோடு ஒடித்த நாளில் வரை (இ) வரை (இ) பவர் என சீர்சிறக்கும் மேனி (1315) பாடலில்.

கஜாமுகாஸ்வரனை அழிப்பதற்காக ஒடித்த தந்தத்தினால்தான் மகாபரதமும் எழுதப்பட்டது (கோடு ஒடித்த நாளில் வரை ) என்பது இங்கு சொல்லப்படும் ஒரு அரிய தகவல்

அருணகிரிநாதர் வாக்கின் வன்மை அதைப் படிப்வர்களுக்குத்தான் தெரியும்.  இதோ ஒரு சான்று
கும்ப கர அதிப அழகான குடம் போன்ற கபோலத்தை உடையவரும், மோகரத கரமுக மகிழ்ச்சியை விளைவிக்கும் துதிக்கையை உடையவரும், சாமர கர்ண  சவரி போன்ற விசாலமான காதுகளை உடையவரும், விசால கபோல விதான மத அகன்ற கன்னத்தில் மத நீர் பெருக்கை உடையவரும் தெத்த ஒரு கொம்பை உடையவரும், மகோதர பெரு வயிறு உடையவரும், முஷிக வாகன  மூஷிகத்தை வாகனமாக உடையவரும், சிந்துர பத்மமுக செந்தாமரை போன்ற முகத்தை உடையவரும், சிவசுத கணபதி சிவ குமாரனாகிய கணபதி, விக்ந விநாயக   விக்னங்களை அகற்றும் விநாயகர் தெய்வம் என கணபதியை சிறப்பித்தும் பாடலான மயில் விருத்தத்தின் காப்பு பாடலை நாட்டை ராகத்தில் ஒத்த குரலில் பாடும் பொழுது அங்கு விநாயகன் பிரத்யக்ஷமாவான் என்பதில் என்ன சந்தேகம்?

தந்தையை வலம் வந்து அவர்கள் அளித்த மாதுளம் கனியை ( மாங்கனி அல்ல, மாதுளம்) பெற்றுக்கொண்டு அதனால் முருகன் கோபித்துக்கொண்டு பழநி மலையை அடைந்தது நாம் கேட்டதும் மட்டுமில்லாமல் நமது பிள்ளைகளுக்கும் நமது பெயரன்,  பெயரத்திகளுக்கும் சொல்லிக்கொடுத்த கதையை அருணகிரி ஸ்வாமிகள் விட்டு விடுவாரா என்ன? அதை என்ன மாதிரியெல்லாம் விவரித்திருக்கிறார், ஒன்றா இரண்டா?
பவளக்குன்று தாதையை அன்று சூழ வலம் வரும் அளவில் ....................................................956 அலகில
ஐங்கரனை ஒத்த மனம்.
இதற்கும் மாதுளம் கனி பெற்றதுக்கும் என்ன சம்பந்தம் என ஐயம் ஏற்படும். இருந்த இடத்திலேயே இருந்து உலகை சுற்றி வந்தவர் விநாயக பெருமான் ( ஐங்கரன்). அது போன்றது மனம். இருந்த இடத்திலேயே இருந்து உலகை சுற்ற வல்லது. அதனால் மனதை ஐங்கரனுக்கு ஒப்பிடுகிறார். வாக்கிற்கு அருணகிரி என்று சும்மவா சொன்னார்கள்.

வாரணமுகன் தந்து தாதையை வலம் சுழல .......................................................................(பூத வேதாள வகுப்பு)
விநாயகன் முதற் சிவனை வலம் வருமளவில் ..........................................................................(.மயில் விருத்தம்)
களபமுகன் ஆதரிதிசயை வலமாய் மதிக்க வருமுன்……………………………….………(சேவல் விருத்தம்)
எந்தை இடம் உறை நாயகங் கவுரி சிவகாமி
ஒளிர் ஆனையின்கரமில் மகிழ்மாதுளங்கனியை
ஒருநாள் பகிர்ந்த உமை…………………………………………………………………………1241  சிவஞான புண்டரிக

எந்தன் ஈசனின் இடதுபாகத்தில் இருக்கும் சிவாகமியும் யானைமுகத்தவனுக்கு கரத்தில் மாதுளங்கனியை மகிழ்ச்சியுடன் அளித்தவளுமான உமை. மாம்பழம் என்றுதானே நமக்குக் கதை சொல்லியிருக்கிறார்கள். இல்லை, மாங்கனி என்கிறார்.

படியில் பெருமித தக உயர் செம் பொன்
கிரியைத் தனி வலம் வர அரன் அந்தப்
பலனைக் கரி முகன் வசம் அருளும் பொற்பு அதனாலே
பரன் வெட்கிட உளம் மிகவும் வெகுண்டு
அக் கனியைத் தர விலை என அருள் செந்தில்
பழநிச் சிவகிரி தனில் உறை கந்தப் பெருமாளே……........................................................176 புடவிக்கு அணி

செம் பொன் மலையாகிய மேருவை  தனித்து நீ (முருகன்) வலம் வர,   சிவபெருமான் பழத்தை (உன் அண்ணன்) யானைமுகன் கணபதிக்குக் கொடுத்ததினாலே நீ கோபம் கொண்டு (உளம் மிகவும் வெகுண்டு) அந்த சிவன் வெட்கம் கொள்ளும்படியாக (பரன் வெட்கிட) பழநி மலையில் அமர்ந்தவனே .

அருணகிரியாருக்கு இஷ்ட தெய்வம் முருகன். அவனுக்கு பழம் தரவில்லை என்பதினால் சிவன் வெட்கபட வேண்டியதாயிற்று என்பது அருணகிரி நாதரின் தாபம்.

‘திருப்புகழ் பாடுக என்று அடி எடுத்து கொடுத்தவராயிற்றே அந்த பிள்ளையார். அவரை எவ்வளவு அடைமொழிகள் கொடுத்து விளிக்கிறார் என்று சற்று பார்க்கலாமா? அத்தி முகத்தன், அருளாழி, ஐந்துகரத்தான்கரிமாமுகக்கடவுள், ஒற்றை மருப்பன், கரடக் கற்பகன், கற்பகம், கரிமா முகக்கடவுள், குட்டிக்கரிமுகன், கொச்சைக் கணபதி, சிந்தாமணி, ஞான சொரூபன், ஞானமூர்த்தியாகிய தொப்பைக் கடவுள், தெய்வ யானை, தெருச் சந்திகளில் வீற்றிருப்பவர், தொப்பையப்பன், பரம கணபதி, பவளக்குன்று,பேழை வயிறன், மத்த வேழ முகத்தோன், மத்தள வயிறன், மூஷிகாரூடன், மொக்கும் திருவாயன், வாரணமுகன் , விக்கன சமர்த்தன், விக்ந விநாயகன், விக்நபதி யானை, வித்தக அத்தி, வேத கற்பகம், வேத விநாயகர், வேழமுகவோன்

முருகனை சொல்லும் பொழுது அருணகிரி நாதர் விநாயகரை எப்படியெல்லாம் கூப்பிடுகின்றார் என்று பார்த்தால்...... அத்திக்கு இளையோன், அமர்புரிக் கணபதிக்கு இளையோன், அரன் மைந்தன், ஆனைமுகவற்கு நேர் இளையவன், கணபதி பிறகு வருமொரு  காரணண், கரதலம் பற்றப் பெற்ற ஒருத்தன், கரிணி முகவரது இளையோன், கரிமுகன் துணை, களபமுகன், களிற்றுக்கு இளைய களிறு, களிறு முகன் எம்பி (என்தம்பி – எம்பி)  கற்பகனி இளையோன், குஞ்சரமுகற் கிளைய, குணம் மெய்க் களிறுக்கு இளையோன், கொடிய பகடு முடிய முடுகியவன், தொப்பை அப்பற்க்கு இளையோன், தொப்பைக் கணத்துக்குப் பிரசித்தவன், மதகரி பிறகு வருவபன், விநாயகப் பிரிய வேலாயுதன், வேத கற்பக சகோத்ர பெருமாள், வேழம் இளைஞன்..அப்பப்பா

முருகனை மால் மருகா, சிவ சுதா, சிவ பாலா,  கவுரிநாயக, உமையருள் பாலா என்பது போல் பிள்ளையாரை கணபதிசகச, (371) அடல் அனுச (795) என்றும் சொல்லும் பாங்கு அருணகிரியாருக்கே உரித்தானது.

திருப்புகழில் கணபதியைப் பற்றி சில அறிய தகவல்களையும்  அளித்திருக்கிறார்.

கணபதியும் சந்திரசேகரர். தலையில் பிறைசந்திரனை அணிதிருப்பவர். சிவனைப்போல் தலையில் கங்கையை சூடியிருப்பார். கலச கரன் -  துதிக்கையில் ரத்ன கலசத்தை ஏந்தியிருப்பவர். அவர் சத்யப்பிரியன். தாய் தந்தையை சுற்றி வந்ததற்காக அவர்கள் கொடுத்த பரிசு மாதுளம் பழம். அவர் நிறம் பவளத்தை ஒத்தது. பாம்பை இடுப்பில் அணியாக அணிந்திருப்பவர். கைலையில் தனது தம்பியாகிய முருகக்கடவுளை தன் கைப்பிடித்து அழைத்துச் செல்லும் காட்சியை மிக அழகாக வர்ணித்திருக்கிறார் நம் அருணகிரி நாதர். முன் தம் கர தலம் பற்றப் பெற்ற ஒருத்தன் ஜக தாதை  (முன்பு தனது கையைப் பற்றி அழைத்துச் செல்ல, நடை கற்ற ஒருவனாகிய (முருகன்) உலகுக்குத் தந்தை அவன். 312 கனக்ரவுஞ்).

சிவபிரான் கொடுத்த லிங்கத்தை இராவணன் இலங்கையில் ஸ்தாபிக்க எடுத்ததுச்செல்லும் பொழுது தேவர்களின் வேண்டுகோளின் படி விநாயக பெருமான் ஒரு சிறுபிள்ளையாக வந்து கோகர்ணத்தில் அந்த சிவலிங்கத்தை நிரந்தரமாக இருக்க செய்த நிகழ்சியை பைந்தார் கொடு பல ராவணன் அன்பொடு பணி சிவலிங்கமதைப் பார்மிசை வைத்த விநாயகன்’ என சேவல் விருத்த காப்புப் பாடலில் சொல்லி நமக்கு அந்த நிகழ்ச்சியை நினைவு படுத்துகிறார்.  கரிமுக (409) பாடலில் கஜமுகாசுரனணை அடக்கியது (கஜமுகத் தவுணனைக் கடியானை ) சொல்லப்படுகிறது.

அந்த விநாயகர் எவ்வளவு பாராகிரமமானவராக இருக்க வேண்டும், தனது துதிக்கையினால் உறிஞ்சி நீரை உமிழும் பொழுது வடவாக்கினி தீ கூட தணிந்து விடும் என்றால்!   (விலாழி யினிலாழி அகல் வானில் அனல் ஆரவிடு வேழம்)

பல பாடல்களில் விநாயகர் பெருமானுக்கு உகந்த உணவாக பலவற்றைச் சொல்கிறார். பொரி, அவல்,  கற்கண்டு, வெல்லப் பாகு, பயறு , துவரை, எள், சுகியன், வடை, கரும்பு, வாழை, பழுத்த பலவிதமான பழ வகைகள்,  கடலை, பொரி, அவரை, கரும்பு, இளநீர். சாப்பிடும் ஆகாரங்களை நான்கு விதமாக  பிரிப்பார்கள், காத்யம் ( மென்று சாப்பிடுவது), லேக்யம் ( விழுங்குவது), பேயம் (குடிப்பது), சோஷ்யம் (கடித்து சாப்பிடுவது) என்று. இந்த நான்கு விதமான ஆகாரங்களையும் சாப்பிடுவார் என பட்டியலில் பார்த்தால் புலப்படும்.   
முருகனுக்கு மட்டும்தான் தேன் தினைமாவு பிடிக்குமா என்ன? விநாயகருக்கும் பிடிக்கும் என்கிறார் அருணகிரிநாதர்
இலகு கடலை கற்கண்டு தேனொடும்
இரதம் உறு தினைப் பிண்டி பாகுடன்
இனிமையில் நுகர் உற்ற எம்பிரான் ........................................................................... 956 அலகு இல் அவுணரை 

கடலை, கற்கண்டு, தேன் இவைகளுடன் ருசிகரமான தினை மாவு, (இரதம் உறு தினை) வெல்லப் பாகு (பிண்டி பாகு) இவற்றைக் கலந்து மகிழ்ச்சியுடன் உண்ணுபவர் விநாயகர் என அறியப்படுகிறது

விநாயகபெருமானுக்கும் தினைமாவை வரும் பிள்ளையார் சதுர்த்தியிலிருந்து நைவேத்தியம் செய்ய ஆரம்பிப்போமா?

எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற்போல் இருக்கும் விநாயகர் துதி இரண்டு திருப்புகழில் வருவதை குறிப்பிடாமல் இருக்க முடியாது.
குஞ்சர மாமுக விக்கிந ப்ரபு
அங்குச பாச கர ப்ரசித்தன் ஒர்
கொம்பன் மகோதரன் முக்கண் விக்ரம கணராஜன்
கும்பிடுவார் வினை பற்று அறுப்பவன்
எங்கள் விநாயகன் நக்கர் பெற்று அருள்
குன்றைய ரூபக கற்பக பி (ள்) ளை இளையோனே……………………………… 353 அஞ்சனவேல்

யானையின் அழகிய முகத்தைக் கொண்ட விக்ன விநாயக பெரியோன்,
அங்குசம்,) பாசம் இரண்டும் கையில் கொண்ட பிரசித்தி பெற்றவன்,
ஒற்றைக் கொம்பன், பெரு வயிற்றன், (சூரியன், சந்திரன், அக்கினி ஆகிய) முக்கண்ணன்,
வலிமை வாய்ந்தவன், கணபதி,
துதிப்பவர்களுடைய வினைகளையும் ஆசையையும் தீர்ப்பவன்,
எங்கள் விநாயக மூர்த்தி, திகம்பரரான சிவபெருமான் பெற்றருளிய
மலை போன்ற உருவத்தை உடையவன்,
ஆகிய கற்பக விநாயகப் பிள்ளைக்குத் தம்பியே  உனனை வேண்டுகிறோம்

...மூஷிகம் உந்திய ஐங்கர கண ராயன்
மம விநாயகன் நஞ்சு உமிழ் கஞ்சுகி
அணி கஜானன விம்பன் ஒர் அம்புலி
மவுலியான் உறு...........................................................................................................................................40 கமலமாது

மூஷிக வாகனத்தில் ஏறியவரும்,  ஐந்து கரத்தாரும்,  கணங்களுக்குத் தலைவரும்,  எங்கள் விநாயகரும்,  விஷத்தைக் கக்கும் சர்ப்பத்தை இடுப்பில் ஆபரணமாகத் தரித்த யானை முகத்தை உடையவரும், பிறைச் சந்திரனைத் தலைமுடியில்  தரித்திருப்பவருமான விநாயக மூர்த்தி எங்களை காக்க.

இப்படியாக கணபதியை தோத்திரம் செய்திருப்பதை பார்தால் அருணகிரிநாதர் கணபதிப் பிரியரோ என எண்ணத் தோன்றும்.
இப்படி தோத்திரம் செய்தால் என்ன கிடைக்கும். அந்த செந்தில் அதிபதி சிந்திப்பவர்களின் சிந்தையில் புகுந்து வாழ்வான் என்கிறார் அருணகிரிநாத ஸ்வாமிகள்.
அடல் மிகு கட தட விகடித மத களிறு அனவரதமும் அகலா
மாந்தர்கள் சிந்தையில் வாழ்வாம் படி செந்திலில் அதிபதி.....................................( தேவேந்திர சங்கவகுப்பு)

நாமும் அவ்வாறே செய்வோம்.

கௌண்டிண்யன்

2 comments:

  1. Sri Sundara Rajan and Smt. Rajan have made an excellent commentary on Ganesha. We all know that Ved Vyasa, another Avatar of Vishnu, who classified Vedas sought the services of Maha Ganapati for writing his epic Mahabharata. It is a wonderful experience to know the divine infinite qualities of Ganapati from the songs of Arunagirinathar. I have known that apart from Muruga, Arunagirinathar has lauded the glory of Perumal and his various incarnations. It is only from this write up, I come know that Arunagirinathar has made such an elaborate descriptions on the power and knowledge of Maha Ganapati also. In order to get the fruit of knowledge, Ganesa has circumambulated the whole world by remaining at a simple location. In his song Aingaranai Othamanam, Arunagirinathar compares our mind with Ganapati because mind too travels the whole world by being from a single location. Let us seek the blessings of Ganesa to steady the mind and direct it towards Muruga. We look forward to more such valuable articles from Rajans.
    V.S. Krishnan

    ReplyDelete
  2. ஓம் ! சிவசரவணபவ !


    அன்புடன்.
    ஹரிஹரன்

    விநாயகரின் திருவிளையாடல்களை அருணகிரியார் அனுபவிக்கும் விதம் தருவது ஒருவகை இன்பம்.. திரு சுந்தரராஜன் அவர்கள் வருணித்த விதம்
    தருவது பேரின்பம். மிக மிக அருமையான தொகுப்பு.

    வள்ளி நாயகிக்காக காடும், புனலும் அலையோ அலையோ என்று அலைந்து மரமாக, வேடனாக, கிழவனாக வேடமிட்டும் அவள் இசையாதலால் முருகன் அண்ணாவை நினைத்தவுடன்

    " ...............சுப்பிரமணிபடும்
    அப்புனமதனிடை இபமாகி
    அக்குறமகளுடன் அச்சிறு முருகனை
    அக்கண மணமருள் " பெருமாளயிற்றே விநாயகர்.

    மேலும் வள்ளி அம்மையாரை அச்சப்படுத்த வரும்போது மும்மதம் கொண்ட இரு கோட்டு முதுகளிறாக ( காட்டு ஆனையாக) அவதாரம்! இந்த வடிவு முருகன் தோற்றத்துக்குப் பிறகு நிகழ்ந்ததால், கணபதிக்கு முருகன் மூத்தோன் ஆகிறான் !

    " ஒருவகை வடிவினில் இருவகைத் தாகிய
    மும்மதன் தனக்கு மூத்தோனாகி "
    ( திருஎழுகூற்றிருக்கை---திருப்புகழ் 113 )


    ஓம் ! சிவசரவணபவ !
    ---ஹரிஹரன் ( முலுண்டு, மும்பை.)

    ReplyDelete