Sunday, 17 June 2012

அறிவருளும் ஆனைமுகவோன்
மாலோன் மருகன் என்றாலே நாம் குறிப்பிடுவது ஆறுமுகனைத்தான். ஏனோ அவன் அண்ணன் ஆனைமுகவனும் மாலின் மருகனே எனபதை அவ்வப்போது மறந்து விடுகிறோம். திருமாலுடன் கணபதி தொடர்பான சில கதைகள் உள்ளன. பிள்ளையாரின் பிள்ளைபிராயத்தில் அவர் திருமாலின் சக்கரத்தை வாயில் போட்டுக் கொண்டவுடன், அதை வெளிக் கொணர்வதற்காக மஹாவிஷ்ணு தோப்பிக்கரணம் போட்ட கதையை நாம் முன்னமேயே படித்தோம். அதைப் போலவே ஸ்யமந்தகோபாக்யானத்திலும் கண்ணன்-கணபதி லீலைகள் வருகின்றன.

அருணகிரிநாதரின் பாடல்களில் நமக்குக் கிடைத்தவற்றில் வெகு சிலதிலேயே இது சம்பந்தமான குறிப்புகள்  காணப்படுகின்றன. ஆனால் நமக்குத் தெரிந்த வரையில் அபூர்வமாகவும் வேறு எங்கும் கிடைக்காததாகவும் உள்ள செய்தி திருப்புகழில் வருகிறது. பாகவதத்தை அறிந்தவர்கள், தேவகி கணபதி பக்தையா என்பதையும் இங்கு சொல்லப்படும் தகவல் அதிலும் வருகிறதா என்பதை நம்முடன் பகிர்ந்து கொள்ளலாம்.

கண்ணன் லீலைகளை சுகருக்கும் சூர்தாசருக்கும் சமமாக நம் ஸ்வாமிகள் அனுபவித்திருக்கிறார்.  அவன் செய்த சில லீலைகளை சந்தத் தமிழில் அருணகிரி ஸ்வமிகள் வார்த்தைகளில் சுவைப்போமா?
  
உருவு பெருகு அயல் கரியது ஒர் முகில் எனு மருது நெறி பட முறைபட
உருவு பெருகு அயல் கரியது ஒர் முகில் எனு மருது நெறி பட முறைபட
மிக மாரி உமிழ நிரைகளின் இடர் கெட அடர் கிரி கவிகை இட வல மதுகையும்......குருவு மடியவ 930

மலை போன்ற உரலினுடன் தவழ்ந்து சென்று கரிய மேகம் போன்ற மருதமரம் முறிக்கப்பட்டு விழவும் கனத்த மழை பொழிந்து, பசுக்களின் துயர் நீங்கி, கோவர்த்தன மலையை குடையாகப் பிடிக்க வலிமையையும் (உடையவன் கண்ணண்)

பேசாதே போய் நின்று உறியில் தயிர் ஆ ஆ ஆ ஆ என்று குடித்து ...
அருள் பேராலே நீள் கஞ்சன் விடுத்த எதிர் வரு தூது பேழ் வாய் வேதாளம் பகடு ஐப் பகுவாய் நீள் மானாளும் .
சரளத்தோடு பேய் ஆ (னா) ள் போர் வென்று எதிரிட்டவன் ........................................    நேசாசாரா 626

எவருக்கும் தெரியாமல் போய் நின்று, உறியிலிருந்த தயிரை ஆஹா ஆஹா என்று பருகி,  அருள்  இல்லாத கம்சன் அனுப்பிய  தூதுவளாகிய, பெரிய வாயைக் கொண்ட பூதனை என்னும் பேயாகிய அரக்கியியை வென்று எதிர் நின்றவனாகிய கண்ணன்

காயாத பால் நெய் தயிர்க் குடத்தினை
ஏயா எண்ணாமல் எடுத்து இடைச்சிகள்
காணாதவாறு குடிக்கும் அப்பொழுது
உரலோடே கார் போலு மேனிதனைப் பிணித்து ஒரு
போர் போல் சோதை பிடித்து அடித்திட
காதோடு காது கையில் பிடித்து அழுது
இனிது ஊதும் வேயால் அநேக விதப் பசுந் திரள்
சாயாமல் மீள அழைக்கும் அச்சுதன்.........................................................................மாயாசொரூப 580

 காய்ச்சாத பால், நெய், தயிர்க் குடங்களை சற்றும் யோசிக்காமல் எடுத்து இடைச்சியர்கள் பார்க்காத வண்ணம் குடிக்க  அவனுடைய  நீலமேகம் போன்ற திருமேனியை உரலுடன்  கட்டி தாயாகிய யசோதை பிடித்து அடிப்பது போல் பாவனை பண்ண  அப்போது இரண்டு காதுகளையும் கைகளால் பிடித்துக் கொண்டு அழுதும் ,  இனிமையான நாதம் தரும் புல்லாங்குழலால் பல விதமான பசுக் கூட்டங்களை மேய்த்து அழைத்து வரும்ண்ணண்
இந்திர நீல வனத்தில் செம் புவி
அண்ட கடாகம் அளித்திட்டு அண்டர்கள்
எண்படு சூரை அழித்துக் கொண்டு அருள் ஒரு பேடி
இன்கன தேரை நடத்தி செம் குரு
மண்டல நாடும் அளித்துப் பஞ்சவர்
இன்புறு தோழ்மை உடைக் கத்தன்....................................................  .சிந்துர கூரமருப்பு 155

இந்திரனது காவலில் இருந்த இருண்ட காண்டவ வனத்தில் அரக்கர்களை எரி ஊட்டியும்,  பூதலம் முதல் அண்ட கோளத்தில் இருந்தவர்களை அரக்கர்களின் துன்புறுத்தலிலிருந்தும் காப்பாற்றியும், தேவர்களின்  அளவிடமுடியாத துன்பத்தை நீக்கி, அவர்கள் நாட்டைத் திரும்பித் தந்து அருளியும்,  அர்ச்சுனனுடைய அழகிய தேரை சாரதியாய் நடத்தியவன்,  பாண்டவர்களுக்குத அவர்களின் நாட்டை  தந்து அப்பாண்டவர் ஐவரின் இன்புறு நட்பைப் பூண்டிருந்த தலைவன்


ஆன் நிரை துரந்து மா நிலம் அளந்து
ஓர் ஆல் இலையில் அன்று துயில் மாயன்
ஆயர் மனை சென்று பால் தயிர் அளைந்த
ஆரண முகுந்தன் .....................................................................................................வேனின் மதனைந்து -970

பசுக் கூட்டங்களை ஓட்டிச்சென்று  மேய்த்தவன், பெரிய பூமியை ஓர் திருவடி கொண்டு அளந்ததவன், ஓர் ஆலிலையில் ஊழி அன்று துயில் கொண்ட மாயன் . இடையர் வீடுகளில் போய் பாலையும், தயிரையும் சேர்தது மகிழ்ச்சியுடன் உண்டவன், வேதம் போற்றும் முகுந்தன்

மருது பொடிபட உதைத்திட்டு ஆய்ச் சேரி
மகளிர் உறிகளை உடைத்துப் போட்டவர்
மறுக ஒரு கயிறு அடித்திட்டு ஆர்ப்புற அழுது ---------------------------------- பொருத 1183

மருத மரமாகி வந்த சகடனைப் பொடியாகுமாறு உதைத்தவன். ஆயர் சேரியில் இருந்த மகளிருடைய உறிகளை உடைத்துப் போட்டவன். ஒரு கயிற்றினால் அடிபட்டு கட்டுண்டு அழுதவன்.


உறி தாவும் ஒரு களவு கண்டு தனி கோபத்து
ஆய்க் குல மகளிர் சிறு தும்பு கொ (ண்) டு மோதிச் சேர்த்திடும்
உரலொடு தவழ்ந்த நவநீதக் கூற்றனும்  ................................................... பரதவித 1173

திருட்டுத்தனமாக உறி மீது தாவியதைக் கண்டு மிகுந்த கோபம் கொண்டவர்களாகிய ஆயர் குலப் பெண்கள் சிறு கயிறு கொண்டு கட்ட, கட்டி வைத்த உரலோடு தவழ்ந்த வெண்ணெய் திருடியவன் என்று பேசப்படுபவனாகிய கண்ணன்

இவ்வாறு இன்னும் பலப்பல பாடலகளில் நாம் கண்ணனின் லீலைகளைக் காணலாம்.அத்துடன் அவனுடைய அவதார   நோக்கமான தர்மத்தை பரிபாலனத்தினூடே எதிர்வரும் தடைகளை  நீக்க பல அசுரர்களை தான் பிறந்த சில தினங்களிலிருந்தே அழிக்க வேண்டி வந்து விட்டது.

பகாசுரன், அகாசுரன், தேனுகாசுரன், சகடாசுரன் முதலியவர்களை வதம் செய்தது, பூதனை பால் குடித்து கொன்றது இப்படியாக  சின்னக் குழந்தையாக வீர சாகசங்கள் எல்லாம் செய்ய திறனைக் கண்ணணுக்குக் கொடுத்தது யார் என்கிறீர்களா? எல்லாம் அந்த விநாயகப் பெருமான்தான்.   அட என்ன புதுக் கதை என வியக்கிறீர்களா? நாங்கள் என்னப் புதுக்கதை சொல்லப்போகிறோம், அந்த அருணகிரிநாத ஸ்வாமிகள் சொன்னதைத்தாம் சொல்கிறோம்

அப்படியா, என்ன சொல்லிருக்கிறார் என்று பார்க்கலாமா?

இடையர்சிறு பாலை திருடிகொடு போக
இறைவன்மகள் வாய்மை   அறியாதே
இதயமிக வாடி யுடையபிளை நாத
கணபதியெ னாம . முறைகூற
அடையலவர் ஆவி வெருவஅடி கூர
அசலுமறி யாமல்  அவரோட   -
அகல்வதென டாசொல் எனவுமுடி சாட
அறிவருளும் ஆனை ...... முகவோனே. ................................................ விடமடைசு  5

இடையர் சிறு பாலை திருடி கொ (ண்) டு போக
இறைவன் மகள் வாய்மை அறியாதே
இதயம் மிக வாடி உடைய பி (ள்) ளை நாத எனு நாமம் முறை கூற
அடையலவர் ஆவி வெருவ அடி கூர அசலும் அறியாமல் அவர் ஓட
அகல்வது எனடா சொல் எனவும் முடி சாட
அறிவு அருளும் ஆனை முகவோனே

தாயாகிய தேவகி கவலைப்படுகிறாளாம் கண்ணணுக்கு கம்சனால் ஏவி விடப்படவர்களால் ஏதாவது கேடு வந்து விடுமே என்று. எனை ஆண்டருளும் பிள்ளைபெருமானே கணபதியே என விநாயகர் பெருமானைத் துதிக்கக் கணபதி பெருமானும் பாலகிருஷ்ணணை ஆபத்திலிருந்து காப்பாற்றினார் என்பது அருணகிரிநாதர் சொல்லும் தகவல் இந்த விநாயகர் துதியில். இது திருமுருக கிருபானந்தவாரியாரின் விளக்கம்.

அரசன் உக்ரசேனனுடைய மகள் தேவகி  பின்னால் நடக்கவிருக்கும்   உண்மையை அறிய மாட்டாதவளாக (இறைவன் மகள் வாய்மை அறியாதே ) (அதாவது கண்ணனால் கம்சன் ஏவிவிட்ட அசுரர்கள் கொல்லப் படுவார்கள் என்ற உண்மை தெரியாமல்)   மனம் வாட்டம் உற்று, (இதயம் மிக வாடி) என் மகனை ஆண்டருளும் பிள்ளைப் பெருமாளே, கணபதியே என்னும் நாமங்களை வரிசைப்படக் கூற (உடைய பி(ள்)ளை நாத எனு நாமம் முறை கூற) அவள் முறையீட்டுக்கு இரங்கி, இடையர்களுடைய  பாலை கண்ணன்  திருடிக் கொண்டு போக  (அதாவது கோபியர்களின் மனத்தைக் கண்ணன் தன் வசமாக்க),  பகைவர்கள்  தங்கள் உயிர்களுக்கு அஞ்சும்படி நீ அடி எடுத்து வர, (நீ வரும் ஒலியைக் கேட்டு) அயலார் அறியாமல் அவர்கள் ஓட, போவது ஏனடா சொல் எனக் கூறி (அகல்வதெனடாசொல் எனவுமுடி சாடஅவர்களைத் தாக்கும்  உணர்வை (கண்ணபிரானுக்கு) அருளிய யானைமுகத்துக் கணபதியே  என்பது துதி  (கோபியர்கள் கண்ணனை நோக்கி செல்கிறார்கள். பகைவர்கள் கண்ணனை விட்டுச் செல்கிறார்கள் என்பது உட்கருத்து)
இறைவன் மகள் தேவகி என்பது வாரியார் ஸ்வாமிகள் விளக்கம்.

இன்னொருவித கதை வரலாறும் இருக்கிறது இந்த பாடலில்

மதங்காபுரத்து அரசன் மகள் கோமளம். அவள் கணபதியை ஆராதிப்பவள். கணபதி பூசைக்கு வேண்டிய பாலை இடைச்சேரி என்ற பக்கத்து ஊரில் இருக்கும் அளகன் என்ற இடையனின் பெண் தினம் கொண்டு வந்து கொடுப்பாள். இறைவனுக்காகச் பால்தாங்கி வரும் பெண் அலங்கரித்து வரவேண்டும் என்பதற்காக கோமளம் தனது நகைகளை அணிந்துவர கொடுப்பாள். அப்படி அலங்கரித்துக்கொண்டு பாலை எடுத்துக்கொண்டு காட்டின் வழியே வரும் ஒரு சமயம் கள்வர்களால் வழிமறிக்கப்பட்டாள். நகைளைக் கவர்ந்து சிறுமிப்பெண்ணை ஒரு குகையில் அடைத்து வைத்தனர்.

பூசை நேரத்திற்கு பால் வராததினால் கோமளம் வருந்தி சிறுமிக்கு ஏதாவது ஆகிவிட்டதோ என மனம் பதைத்து தான் ஆராத்திக்கும் கணபதியை வேண்ட அவரும், கள்வர்கள் நகைகளை பங்கு போட்டுக்கொண்டிருக்கும் சமயம் அவர்களை தாக்கி அதட்ட அவர்களும் குற்றத்தை ஒப்புக்கொண்டு நகைகளோடு சிறுமியை விடுவித்தனர். அப்படி பக்தர்களுக்காகக் காக்கும் கடவுள் விநாயக பெருமான். அதைத்தான் அருணகிரி ஸ்வாமிகள் இங்கு சொல்கிறார் என்பார் குகஸ்ரீ என்கின்ற ரசபதி. (தகவல் உதவி ஸ்ரீ அய்யப்பன்)

அந்த அறிவருளும் ஆனைமுகவோன் நம்மையும் காக்கட்டும்
  
சாந்தா and சுந்தரராஜன்

No comments:

Post a Comment