Friday, 19 December 2014

திருப்புகழ் இசை வழிபாடு

 
                                          திருப்புகழ் இசை வழிபாடு 
                               புனே தேஹு ரோடு  ஆலயத்தில் 

                             நாள் - 25.12.2014 வியாழக்கிழமை 

                          தேஹு ரோடு ஆலய முகப்பு தோற்றம்

கடந்த எட்டு  
ஆண்டுகளாக புனே தேஹு  ரோடு  சுப்ரமணிய  சுவாமி ஆலய அழைப்பின் பேரில் திருப்புகழ்  இசை வழி பாடு தொடந்து நடைபெற்று வருவது அன்பர்கள் அறிந்ததே.இந்த ஆண்டின் ஒன்பதாவது விழா 25.12.2014 வியா ழக்கிழமை காலை 9.15 மணி அளவில் நடைபெறும்.மும்பை,புனே அன்பர்கள் பெருமளவில் முன்னதாகவே வந்து அபிஷேகம் அர்ச்சனை பூஜைகளில் கலந்து கொண்டு முருகனின் திருவருளை அடைய வேண்டுகிறோம்.

ஆலய முகவரி

No788 Shitala Nagar.."Murugan Hill"

Behind Central Restaurant

Dehu Road .

Pune  412101

Telephone..020-27671485....Manager  Cell  8275598205

சென்ற 2012ம்  ஆண்டு  நடை பெற்ற வழிபாட்டு நிகழ்ச்சியில் மும்பை அன்பர் ராதாகிருஷ்ணன் .தேஹு ரோடு நாயகன் பேரில் பக்தியுடன் கவிதை நயத்துடன்,காப்பு,குருவணக்கம்,நூல் பலன் என்ற மரபோடு பாமாலை தொடுத்து பொருளுடன் பாடி பெருமானின் பாதகமலங்களில் சமர்ப்பித்து அன்பர்களை பரவசபடுத்தியதை நினைவு கூறுகிறோம்.

கவிதையை மீண்டும் வெளியிடுகிறோம்.

".தாயாய்  உருவெடுத்து தண்டமிழ்த் தேன் பாலூட்டி
சேயாய்  எனை அணைத்து  சீரிணக்கம் செய்வித்து
மாயாப் பிறவிதனை மாற்றழிக்க நெறிசெய்தென்
ஆயாகி நின்றானை ஐங்கரனை வாழ்த்துவனே //            1.

குருவணக்கம்

வால  வயதினிலே நல்லதமிழ் பயிற்றுவித்து
சால சீர்செய்த சற்குருமார் பொற்பதமும்
சீல மிகு குருஜி இராகவனின் வழிநடத்தும்
பாலமணி ராஜி பதமும் பணிவேனே                               2.

நூல்

தலம் பலவும் சென்றுநான் சேவித்தேன் -ஆறுபடைத்
தலம் பலவும் கண்குளிரக் கண்டுகொண்டேன் என்றன்மனம்
பலம்பெறவே கைதொழுது  நிற்கின்றேன்  நற்றேவர்
நலம்  பரவும் சந்நிதியே தேஹுரோடின் நாயகனே //                  3.

பார் காக்கும் காவலனின் பன்னிருகைக் கோமகனின்
சீர்போற்றி நல்லடியார் பாடிமகிழ் வேளையிலே
கார்போல் கருணைமழை பொழிவித்து எங்கள் மனத்
தேர்மேல் வலம் வருவாய் தேஹுரோடின் நாயகனே //             4.

புவிநாடி வலம்வரு நல புள்ளிமயில் வாகனனைக்
கவிபாடிச்  சிறு துதியால் வணங்குகிறேன் பார்புகழும்
தவஞானியார் பலரும் தொழுதேத்தும் பெருங்கோவே
சிவஞானம் தெளிவிப்பாய் தேஹுரோடின் நாயகனே   //           5.

பூவினுளே சிறப்புளது புண்டரிகம் செம்மைதமிழ்ப்
பாவினுளே பொற்புளது அருணகிரி திருப்புகழே - என்றன்
நாவினுளே நின்றுளது நல்லடியார் பாதமலர்
தேவருளே தேவன் நீ  தேஹுரோடின் நாயகனே   //                     6.

இருமலிலும் சருமலிலும்  காய்ந்து  எந்தன் உளம அலையும்
பொருமலையும் பெருமலையும் போக்கி அருள்புரிவாய் - வான்
தருமலையும் தனிமலையும் சேர்ந்தணைந்த இப்புவியில்
திருமலை போல் தொல்மலிசீர்த் தேஹுரோடின் நாயகனே //      7.

பலன்

அண்டமெலாம் தொழுதேத்தும்   தேஹுரோடின் நாயகனைத்
தெண்டனிடு வோர்க்குச் சித்திக்கும் சிவபதமே
மண்டு துயரிலா வாழ்வும் மாண்பு திருசேர்  வாழ்வும்
பெண்டுபிள்ளை யுடன்வாழ்வும் மகிழ்வோடு  பெறுவாரே "  

 அன்பர் ராதாகிருஷ்ணன் இந்த ஆண்டும் மீண்டும் ஓர் அற்புத  கவிதையை சமர்ப்பிக்க  வேண்டுகிறோம்

முருகா சரணம்!

No comments:

Post a Comment