Sunday, 2 August 2015

"அப்படிஏழும்" பாடல்



           திருப்புகழ்வழிபாடுபுத்தகத்தில்புதிதாகசேர்க்கப்பட்டுள்ள பாடல்கள் 

                                                    (476 முதல் 503 வரை)

                                                             பொது பாடல் 






                                                              பாடல்

அப்படி யேழு மேழும்வ குத்துவ ழாது போதினி
     னக்ரம்வி யோம கோளகை ...... மிசைவாழும்

அக்ஷர தேவி கோவின்வி திப்படி மாறி மாறிய
     னைத்துரு வாய காயம ...... தடைவேகொண்

டிப்படி யோனி வாய்தொறு முற்பவி யாவி ழாவுல
     கிற்றடு மாறி யேதிரி ...... தருகாலம்

எத்தனை யூழி காலமெ னத்தெரி யாது வாழியி
     னிப்பிற வாது நீயருள் ...... புரிவாயே

கற்பக வேழ மேய்வன பச்சிள ஏனல் மீதுறை
     கற்புடை மாது தோய்தரு ...... மபிராம

கற்புர தூளி லேபன மற்புய பாக சாதன
     கற்பக லோக தாரண ...... கிரிசால

விப்ரச மூக வேதன பச்சிம பூமி காவல
     வெட்சியு நீப மாலையு ...... மணிவோனே

மெத்திய ஆழி சேறெழ வெற்பொடு சூர னீறெழ
     விக்ரம வேலை யேவிய ...... பெருமாளே.

                                         சொல் விளக்கம் 

அப்படி ஏழும் ஏழும் வகுத்து வழாது போதினின் அக்ரம ...

அவ்வாறாகபதினான்குஉலகங்களும்*தவறிலாமல் படைத்து,தாமரை மலரில் அமர்ந்து முதன்மை ஸ்தானம் வகிப்பவரும்,

வியோம கோளகை மிசை வாழும் ...

அண்ட கோளத்திலும்வாழ்கின்றவரும்,

அக்ஷர தேவி கோவின் விதிப்படி மாறி மாறி ... 

சரஸ்வதிதேவியின் கணவனுமான பிரமதேவன் எழுதியுள்ள விதியின்படி,(பிறப்புக்கள்) மாறி மாறி,

அனைத்துஉருஆயகாயம்அதுஅடைவேகொண்டு

எல்லா உருவங்களையும் கொண்ட உடல்களை முறையே நான் எடுத்து,

இப்படி யோனி வாய் தொறும் உற்பவியா விழா .. 

இவ்வாறாக(எண்பத்துநான்குலக்ஷம்)கருக்குழிபேதங்களிலும் தோன்றிப் பிறந்தும், பின்னர் இறந்தும்,

உலகில் தடுமாறியே திரிதரு காலம் எத்தனை ஊழி காலம்எனத் தெரியாது ... 

இங்ஙனம்உலகில்தடுமாற்றம்அடைந்துஅலைகின்ற காலம் எத்தனை ஊழி காலம் என்று எனக்குத் தெரியாது.

வாழி இனிப் பிறவாது நீ அருள் புரிவாயே ...

(இறைவனே) நீவாழ்வாயாக. நான் இனிப் பிறவாமல் நீ அருள் புரிவாயாக.

கற்பகம் வேழம் ஏய்வன பச்சிள ஏனல் மீது உறை 

தென்னை,கரும்புஇவைகளுக்குஒப்பாக(நீண்டுவளர்ந்துள்ள) பசுமையானஇளந் தினைகள் உள்ள புனத்தில் வீற்றிருந்த

கற்புடை மாது தோய் தரும் அபிராம ... 

கற்பு நிறைந்த வள்ளிதழுவும் அழகனே,

கற்புர தூளி லேபன மல் புய ... 

பச்சைக் கற்பூரப் பொடி பூசிய,மல் யுத்தத்துக்கு ஏற்ற புயத்தை உடையவனே,

பாக சாதன கற்பகலோக தாரண கிரி சால ...

 இந்திரனுடைய(நினைத்ததைத் தரும்) கற்பக மரங்கள் உள்ள பொன்னுலகத்துக்குநிலைத்த வாழ்வைத் தந்தவனே, மலைக் கூட்டத்தில் விளங்குபவனே,

விப்ர சமூக வேதன பச்சிம பூமி காவல ...

அந்தணர் கூட்டத்தில்இருப்பவனே, வேதத்தில் உள்ளவனே, மேற் புறத்தில்உள்ளவிண்ணுலகின் காவலனே,

வெட்சியு(ம்) நீப மாலையும் அணிவோனே ... 

வெட்சியும் கடப்பமாலையையும் அணிபவனே,

மெத்திய ஆழி சேறு எழ வெற்பொடு சூரன் நீறு எழ ... 

நிரம்பியகடல் சேறுபட்டு எழவும், எழு கிரிகளும் சூரனும் பொடிபட்டு அழியவும்,

விக்ரம வேலை ஏவிய பெருமாளே. ... 

பராக்ரமம் பொருந்தியவேலைச் செலுத்திய பெருமாளே.

* பதினான்கு உலகங்கள்

கீழ் உலகங்கள் ஏழு:
அதலம், விதலம், சுதலம், தராதலம், மகாதலம், ரசாதலம், பாதாளம்.

மேல் உலகங்கள் ஏழு:
பூலோகம், புவலோகம், சுவலோகம், ஜனலோகம், தபோலோகம், மகாலோகம், சத்தியலோகம்.


உதவி .....கௌமாரம்  இனைய தளம் .நன்றிகள் பல


பாடல் வரிசை எண் 19                     புத்தக வரிசை எண் 326

ராகம்  கேதாரம்                     அங்க தாளம்           தகதிமி     தகிட    தக திமி 

                                                          5 1/2                   2           1 1/2        2

                                                                            பாடல்


                                                                     ஒரு பூஜை பாடல்

      
 முருகா  சரணம்                                                                                                                                                       



                                                                            
                                                                             

1 comment:

  1. கேட்கக் கேட்கத் தெவிட்டாத கேதார ராகப் பாடல்கள்!

    ReplyDelete