Tuesday, 18 August 2015

"மக்கள் தாயர்க்கு " பாடல்



       திருப்புகழ் வழிபாடு புத்தகத்தில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள பாடல்கள் 


                                                           (476 முதல் 503 வரை)


                                                                    பொது பாடல்


                                                      பாடல் 

மக்கள்தா யர்க்குமரு கர்க்குமா மர்க்குமனை
     விக்கும்வாழ் நர்க்குமிக ...... மனதூடே

மைத்தவே லைக்குநெடி துற்றமா யத்துயரம்
     வைத்துவா டச்சமனு ...... முறமேவித்

திக்குநா டிக்கரிய மெய்க்கடா விற்றிருகி
     திக்கஆ விக்களவு ...... தெரியாமுன்

சித்தமோ வித்துயிலு மற்றுவா ழச்சிறிது
     சித்ரபா தக்கமல ...... மருள்வாயே

இக்குவே ளைக்கருக முக்கணா டிக்கனலை
     யிட்டுயோ கத்தமரு ...... மிறையோர்முன்

எச்சரா திக்குமுற நிற்குமா யற்குமுத
     லெட்டொணா வித்தைதனை ...... யினிதீவாய்

பக்கஆர் வத்துடனுள் நெக்குநா டிப்பரவு
     பத்தர்பா டற்குருகு ...... முருகோனே

பக்கம் யானைத்திருவொ டொக்கவா ழக்குறவர்
     பச்சைமா னுக்கினிய ...... பெருமாளே.

                                                      சொல் விளக்கம் 

மக்கள் தாயர்க்கும் மருகர்க்கும் மாமர்க்கும் மனைவிக்கும்
வாழ்நர்க்கும் மிக மனதூடே ... 

நான் பெற்ற மக்களுக்கும், என்தாயாருக்கும், மருமகப் பிள்ளைகளுக்கும், மாமன்மார்களுக்கும்,மனையாளுக்கும், உடன் வாழ்பவர்களுக்கும், மிகவும் மனத்தில்வருத்தம் தந்து,

மைத்த வேலைக்கு நெடிது உற்ற மாயத் துயரம் வைத்துவாட ...

 கரு நிறம் கொண்ட கடலைக் காட்டிலும் பெரிதாயுள்ள மாயை
காரணமாக வரும் துன்பத்தை உண்டாக்கி மனம் சோர்வு அடைய,

சமனும் உற மேவி திக்கு நாடிக் கரிய மெய்க் கடாவில்திருகி ... 

யமனும் இருக்கும் இடத்தைத் தேடி அடைந்து, கரு நிறமானஎருமைக் கடாவின் மீது முறுக்குடன் வந்து

திக்க ஆவிக்கு அளவு தெரியா முன் ... 

என் சொற்களைக் குழறவைக்க, என் உயிர் உடலில் தங்கும் கால அளவு தெரிவதற்கு முன்பாக
(அதாவது நான் சற்று நேரத்தில் இறப்பதற்குமுன்),

சித்தம் ஓவித் துயிலும் அற்று வாழ சிறிது சித்ர பாதக் கமலம்
அருள்வாயே ..

 மனம் நீங்கி ஒடுக்கம் உற்று, நனவும் கனவும் அற்றுநான் வாழ்வதற்கு, நீ சற்று உனது அழகிய திருவடித் தாமரைகளை
அருள்வாயாக.

இக்கு வேளைக் கருக முக்கண் நாடிக் கனலை இட்டு ...

கரும்பு வில்லைக் கொண்ட மன்மதனை, கருகும்படி மூன்றாவதாகிய
(நெற்றிக்) கண் கொண்டு அவனது (காமத்தை மூட்டும்) செயலை
ஆராய்ந்து (அவன் மீது) நெருப்பை ஏவி,

யோகத்து அமர் இறையோர் முன் ... 

யோகத்தில் அமர்ந்தசிவபெருமானுடைய முன்னிலையில்,

எச்சராதிக்கும் உற நிற்கும் மாயற்கு முதல் எட்டொணா
வித்தை தனை இனிது ஈவாய் ... 

இயங்குகின்ற உயிர்கள் முதலியயாவற்றிலும் பொருந்தி நிற்பவராகிய மாயோனாகிய திருமால்முதலானோர்களுக்கும் எட்ட முடியாத ஞானப் பொருளை நன்குஉபதேசித்தவனே,

பக்க ஆர்வத்துடன் உள்நெக்கு நாடிப் பரவும் பத்தர் பாடற்கு
உருகும் முருகோனே ... 

உன்பால் ஆசையுடன் உள்ளம் நெகிழ்ந்துவிரும்பிப் போற்றும் பக்தர்களின் பாடல்களுக்கு மனம் உருகும் முருகனே.

பக்கம் யானைத் திருவோடு ஒக்க வாழ ... 

உனது (இடது)பக்கத்தில் தேவயானையாகிய லக்ஷ்மியின் மகளோடு பொருந்திவாழ்கின்றவளும்,

குறவர் பச்சை மானுக்கு இனிய பெருமாளே. ...

அந்தக்குறவர்களால் வளர்க்கப்பட்ட பச்சை நிறம் கொண்ட மான்
போன்றவளுமாகிய வள்ளிக்கு இனிய பெருமாளே.


உதவி .....கௌமாரம்  இனைய தளம் .நன்றிகள் பல

                                                            பாடல் 

பாடல் வரிசை எண்   24                                         புத்தக வரிசை எண் 407

ராகம்  ஆனந்த பைரவி                                         ஆதி தாளம்        கண்ட நடை 

                                                                                                               

                                                                     குருஜியின் குரலில் ஒரு விருத்தம் 

                                                 https://www.youtube.com/watch?v=BzQYG9y6RH8&hd=1

                                                                                                பாடல்

                                                                               


                                                                        மற்றொரு பாடல்


                                                                       
                                                                       
முருகாசரணம்

       






                                               













1 comment:

  1. அலை பாயும் மனத்திற்கு அருமருந்தாய் ஆனந்தம் அளிக்கும் ஆனந்த பைரவி!

    ReplyDelete