திருப்புகழ்வழிபாடுபுத்தகத்தில் புதிதாகசேர்க்கப்பட்டுள்ள பாடல் கள்
(476 முதல் 503 வரை)
பெருங்குடி திருத்தலம்
இத்தலத்தின் தற்போதைய இருப்பிடம் விளங்கவில்லை என்று கூறும் அருளாளர் செல்வராய பிள்ளை மேலும் இப்பெயர் கொண்ட இடம் சைதாப்பேட்டை ,மதுரை ,திருவாரூர்,வலங்கைமான் திருநெல்வேலி ராதாபுரம் Sub dist பகுதிகளில் உள்ளன என்றும் உரைக்கிறார்.
மற்றும் அருளாளர் கோபால் சுந்தரம் "பெருங்குடி சென்னைக்கு அருகே பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள தலம்." என்று குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும் விபரம் தெரிந்த அன்பர்கள் தெரிவிக்க வேண்டுகிறோம்.
பாடல்
தலங்களில் வருங்கன இலங்கொடு மடந்தையர்
தழைந்தவு தரந்திகழ் ...... தசமாதஞ்
சமைந்தனர் பிறந்தனர் கிடந்தன ரிருந்தனர்
தவழ்ந்தனர் நடந்தனர் ...... சிலகாலந்
துலங்குந லபெண்களை முயங்கினர் மயங்கினர்
தொடுந்தொழி லுடன்தம ...... க்ரகபாரஞ்
சுமந்தன ரமைந்தனர் குறைந்தன ரிறந்தனர்
சுடும்பினை யெனும்பவ ...... மொழியேனோ
இலங்கையி லிலங்கிய இலங்களு ளிலங்கரு
ளிலெங்கணு மிலங்கென ...... முறையோதி
இடுங்கனல் குரங்கொடு நெடுங்கடல் நடுங்கிட
எழுந்தருள் முகுந்தனன் ...... மருகோனே
பெலங்கொடு விலங்கலு நலங்கஅ யில்கொண்டெறி
ப்ரசண்டக ரதண்டமிழ் ...... வயலூரா
பெரும்பொழில் கரும்புக ளரம்பைகள் நிரம்பிய
பெருங்குடி மருங்குறை ...... பெருமாளே.
சொல் விளக்கம்
தலங்களில் வரும் கன இ(ல்)லம் கொ(ண்)டு மடந்தையர் ...
பூமியில் உள்ள இடங்களில் இருக்கிற பெரிய வீட்டில் வாழ்ந்து
கொண்டிருந்த மாதர்களின்
தழைந்த உதரம் திகழ் தச மாதம் சமைந்தனர் ...
பூரித்துள்ளவயிற்றில் செம்மையாக பத்து மாதங்கள் வளர்ந்து இருந்தனர்.
பிறந்தனர் கிடந்தனர் இருந்தனர் தவழ்ந்தனர் நடந்தனர் ...
பின்னர் (குழந்தையாகப்) பிறந்தனர், படுக்கையில் கிடந்தனர்,
உட்கார்ந்தனர், அதன் பின் தவழ்ந்து சென்றனர், பிறகு நடக்கலுற்றனர்.
சில காலம் துலங்கு ந(ல்)ல பெண்களை முயங்கினர்மயங்கினர் ...
பின்பு சில காலம் கழிந்ததும், விளக்கமுற்ற நற்குணமுள்ள
பெண்களோடு பொருந்தி இருந்தனர், அவர்கள் மீது மோக மயக்கம்
கொண்டனர்.
தொடும் தொழிலுடன் தம(து) க்ரக பாரம் சுமந்தனர் ..
. தாம்மேற் கொண்ட தொழிலைச் செய்து, தமது இல்லற வாழ்க்கையைச்
சுமந்தனர்.
அமைந்தனர் குறைந்தனர் இறந்தனர் ...
அவ்வாழ்க்கையிலேயேஉடன்பட்டு இருந்தனர். (தமது தொழில், பொலிவு, வலிமை இவைஎல்லாம்) குன்றியவுடன் முடிவில் இறந்தனர்.
சுடும் பினை எ(ன்)னும் பவம் ஒழியேனோ ...
(இப்பிணத்தைச்)சுட்டு எரிக்கவும் இனி என்று மற்றவர்களின் வாயால் சொல்லக்கூடியஇப்பிறப்பை ஒழிக்க மாட்டேனோ?
இலங்கையில் இலங்கிய இ(ல்)லங்களுள் இலங்கு அருள் இல்
எங்கணும் இலங்கு என முறை ஓதி ...
இலங்கையில் திகழ்ந்திருந்தவீடுகளுள் முழுமையான அன்பு இல்லாத எல்லா இடத்திலும்,அக்கினியே, பற்றி எரிவாயாக என்று நீதியை எடுத்துரைத்து,
இடும் கனல் குரங்கொடு நெடும் கடல் நடுங்கிட எழுந்தருள்
முகுந்தன் நன் மருகோனே ...
நெருப்பை வைத்த குரங்காகியஅனுமனோடு, பெரிய கடலும் நடுக்கம் கொள்ளுமாறு கோபத்துடன்எழுந்தருளிய ராமனாகிய திருமாலின் மருகனே,
பெலம் கொ(ண்)டு விலங்கலும் நலங்க அயில் கொண்டு எறி
ப்ரசண்டகர தண் தமிழ் வயலூரா ...
பலத்துடன், கிரெளஞ்சமலையும் தூளாகும்படியாக வேல் கொண்டு எறிந்த மிக்க வீரம்கொண்டவனே, தண்ணிய தமிழ் விளங்கும் வயலூரானே.
பெரும் பொழில் கரும்புகள் அரம்பைகள் நிரம்பிய பெருங்குடிமருங்கு உறை பெருமாளே. ...
பெரிய சோலைகளும் கரும்பும்வாழையும் நிறைந்த பெருங்குடிக்கு* அருகில் வீற்றிருக்கும் பெருமாளே.
உதவி .....கௌமாரம் இனைய தளம் .நன்றிகள் பல
பாடல் வரிசை எண் 17 புத்தக வரிசை எண் 290
ராகம் ஸாரமதி தாளம் கண்ட சாபு 1 1/2 எடுப்பு அதீதம்
பாடல்
முருகா சரணம்
பரவசமூட்டும் பெருங்குடி தலப் பாடல் சுகமான சாரமதி ராகத்தில்! சமீபத்தில் ஸ்ரீமதி நித்யா கற்பித்த பாடல்! இன்னொரு பாடல் மணி மாமா பல நாட்கள் முன்பு கற்பித்தது! எத்தனை முறை பாடினாலும் சலிக்காத சாரமதி!
ReplyDelete