சுப்பிரமணிய புஜங்கம் ..20
प्रशान्तेन्द्रिये नष्टसंज्ञे विचेष्टे कफोद्गारिवक्त्रे भयोत्कम्पिगात्रे ।
प्रयाणोन्मुखे मय्यनाथे तदानीं द्रुतं मे दयालो भवाग्रे गुह त्वम् ॥ २०॥
ப்ரசாந்தேந்த்ரியே நஷ்டஸம்க்ஞே விசேஷ்டே
கபோத்காரி வக்த்ரே பயோத்கம்பி காத்ரே |
ப்ரயாணோன்முகே மய்யநாதே ததானீம்
த்ருதம் மே தயாளோ பவாக்ரே குஹத்வம் ||
‘என்னுடைய கடைசி காலத்துல நீ என் முன்னாடி வந்து தர்சனம் கொடுத்து என்னை காப்பாத்த வேண்டும்’ ன்னு சொல்றார். நமக்கு கடைசி காலம் என்னிக்கின்னு நமக்கு தெரியாது. நாம ரொம்ப சாஸ்வதமா இருக்கப் போறோம்னு நம்பிண்டு இருக்கோம். ஆனா நம் உயிர் பகவான் கையில தான் இருக்கு. அப்படி அந்த உயிர் பிரியறதுக்கு முன்னாடி, ‘ஜீவஸ்ய தத்துவ ஜிக்ஞாஸா’ ன்னு, இந்த ஜன்மா கொடுத்ததோட காரணமே, இதோட தத்வம் என்னன்னு விசாரிச்சு, உண்மையை உணர்ந்து காம, க்ரோத, மோகமெல்லாம் போய், பரம சாந்தமாகி உண்மையை அறிந்த பின்ன இந்த உடம்பிலேர்ந்து உயிர் பிரிந்தால், அதுக்கு மரணம்-ன்னு பேர் கிடையாது. அதற்கு பேர் அமிர்தம்-ன்னு பேரு, அந்த அமிர்தத்வத்தை அடையறதுக்காகத் தான் இந்த ஜன்மா. அப்படி நமக்கு உயிர் பிரியறதுக்கு முன்னாடி உண்மையை உணர்வதற்கு நாம முயற்சி பண்ணிண்டிருக்கணும். அந்த மாதிரி ஞானம் ஏற்படுவதற்கு முன்னாடி உயிர் பிரியாமல், அந்த கடைசி நேரத்துலேயாவது பகவத் தர்சனம் கிடைக்கணும். ஜன்மா முழுக்க நாம் பகவானை த்யானம் பண்ணிண்டு, பஜனம் பண்ணிண்டு இருந்தா தான் அந்த கடைசி நிமிஷத்துல பகவானோட ஞாபகம் வரும். அப்படி முருகா, நீ வந்து என்னை காப்பாத்தணும் என்கிறார்.
அந்த இறுதி கட்டத்தில் நாம் இருக்கும் போது, அந்த நிலைமை என்னங்கறதை வர்ணிக்கிறார்.
‘ப்ரசாந்தேந்த்ரியே’ –
இந்திரியங்கள் எல்லாம் அடங்கி போயிடறது. கண்ணு பார்க்கறது கிடையாது, காது கேட்கறது கிடையாது, கடைசி நேரத்துல.
‘நஷ்டஸம்க்ஞே’
ஞாபக சக்தியும் போயிடறது.
‘விசேஷ்டே’ – கை, கால்லாம் ஒரு சேஷ்ட்டையும் பண்ண மாட்டேங்கறது. அடங்கி போயிடறது
‘கபோத்காரி வக்த்ரே’ – தொண்டையில கபம் அடைச்சுக்கிறது. பகவானோட நாமத்தை கூட, முருகான்னு சொல்றதுக்கு கூட தொண்டை வர மாட்டேங்கறது.
‘பயோத்கம்பி காத்ரே’ – எமபடர்கள் கனவுல வந்து பயமுறுத்தறா. அதனால உடம்பெல்லாம் நடுங்கறது.
‘ப்ரயாணோன்முகே’ அந்த நீண்ட யாத்திரை, உள்முகமா தயார் ஆகிடறோம், இந்த உடம்பை விடப் போறோம், யம லோகத்துக்கு போகப் போறோம், அந்த மாதிரி நிலைமையில
‘மய்யநாதே’ – அனாதையான என்னிடத்தில், பிள்ளைக்கிட்ட சொல்ல முடியுமா , பொண்டாட்டிகிட்ட சொல்ல முடியுமா, யாருமே அந்த நிலையில் நாதன் கிடையாது . பகவான் ஒருத்தர் தான் நாதன்ங்கற அறிவு இருந்தாதான், அந்த நேரத்துல பகவான் வந்து காப்பாத்துவார்,
‘ததானீம்’ – அந்த நேரத்தில்
‘த்ருதம்’ – வெகு விரைவாக ‘
மே அக்ரே’ – எனக்கு முன்னாடி வந்து முருகா
‘பவ த்வம்’ – நீ காட்சி தர வேண்டும்.
அருணகிரி நாதப் பெருமான் நிறைய பாடல்கள்ல இந்த மாதிரி ‘எம பயத்திலிருந்து தன்னை மீட்கணும்’ என்று இறைஞ்சுகிறார்.
நீலச் சிகண்டியிலேறும் பிரான் எந்த நேரத்திலுங்
கோலக் குறத்தியுடன் வருவான்
படிக்குந் திருப்புகழ் போற்றுவன் கூற்றுவன் பாசத்தினாற்
பிடிக்கும் பொழுது வந்தஞ்லென்பாய்
மாகத்தை முட்டி வரு நெடுங்கூற்றவன் வந்தாலென் முன்னே
தோகைப் புரவியிற்றோன்றி நிற்பாய்
கனைத்தெழும் பகடது பிடர் மிசைவரு
கறுத்த வெஞ்சின மறலிதன் உழையினர்
கதித்தடர்ந்தெறி கயிறடு கதைகொடு பொருபோதே
கலக்குறுஞ் செயல் ஒழிவற அழிவுறு
கருத்து நைந்து அலமுறு பொழுதளவை கொள்
கணத்தில் என் பயமற மயில் முதுகினில் வருவாய
உரையும் சென்றது நாவும் உலர்ந்தது விழியும் பஞ்சு போல் ஆனது..
கண்டு அயல் உழலுஞ் சிந்துறு பால்கடை நின்றது கடைவாயால் ஒழுகுஞ் சஞ்சல மேனி குளிர்ந்தது முறிமுன் கண்டு கைகால்கள் நிமிர்ந்தது உடலும் தொந்தியும் ஓடி வடிந்ததுபரிகாரி வர ஒன்றும் பலியாது இனி என்றபின்உறவும் பெண்டிரும் மோதி விழுந்து அழ
மறல் வந்து இங்கு எனது ஆவி கொளும் தினம் இயல் தோகை மயிலும் செங்கைகள் ஆறிரு திண்புய வரை துன்றும் கடிமாலையும்
இங்கித வனமின் குஞ்சரி மாருடன் என்றன் முன் வருவாயே...முருகா
முருகா என்றன் முன் கார்மா மிசை காலன் வரின் களபத்தேர் மாமிசை வந்து எதிர் படுவாய் முருகா முருகா கடிதே வரவேணும்..முருகா..
சுப்பிரமணிய புஜங்கத்தை கற்போம்