Monday, 25 September 2017

அபிராமி அந்தாதி ...19



                                                                                 அபிராமி அந்தாதி ...19  

                                        
                                                             
வெளிநின்ற நின் திருமேனியைப் பார்த்து விழியும் நெஞ்சும்
களிநின்ற வெள்ளம் கரைகண்டதில்லை கருத்தினுள்ளே
தெளிநின்ற ஞானம் திகழ்கின்றது என்ன திருவுளமோ?
ஒளிநின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே


வெளிநின்ற நின் திருமேனியைப் பார்த்து -

 நான் வேண்டியவுடன் வானவெளியில் வந்து நின்ற உனது திருமேனியைப் பார்த்து (நான் வேண்டியவுடன் அம்மை அப்பனாக மாதொருபாகனாக திருமணக் கோலத்துடன் தோன்றிய நின் திருமேனியைப் பார்த்து)

"வெளி நின்ற" எனும் சொல் பல பொருள் தரும்; ஆகாய வெளி நின்ற எனும் பொருள்; ஸ்தூலமாய் வெளி வந்து காட்சி தருகின்றவள் எனும் பொருள்; அனைத்துமாய் இருப்பவள் வெளி வந்து தனித்து காட்சி தருபவளாய்...எனும் பொருள்; வெளியாகவே நிற்பவள் எனும் பொருள்; இன்னும் பலவாறு கூறலாம்.

விழியும் நெஞ்சும் -

 பெரும்பேறு பெற்ற என் விழிகளும் நெஞ்சமும்

களிநின்ற வெள்ளம் கரைகண்டதில்லை - 

அடைந்த ஆனந்தம் என்னும் வெள்ளம் கரையின்றிப் பெருகி நின்றது.

கருத்தினுள்ளே தெளிநின்ற ஞானம் திகழ்கின்றது - 

உலக இன்பங்களில் மனம் மகிழ்ந்தால் அப்போது கருத்தழியும்; மனம் மயங்கும்; தெளிவு கெடும். உன்னைக் கண்டதால் விழிகளிலும் நெஞ்சிலும் பெருகும் மகிழ்ச்சி வெள்ளம் அத்தகைய விளைவுகளை ஏற்படுத்தவில்லை. கருத்தில் தெளிவான ஞானம் திகழ்கின்றது.

கடந்த பாடலில் தன்னை அழைத்துச்செல்ல கொடுங்கோபத்துடன் காலன் வரும் வேளையில் அன்னை தனது திருமணக்கோலத்துடன் காட்சியளித்து அருள வேண்டும் என்று வேண்டிக் கொண்டாரல்லவா?? அவ்வாறு வேண்டியதுமே அன்னையின் திருக்கோலம் அவருக்குக் காட்சியளித்து விட்டது... வான வெளியில் அன்னையின் திருமேனியைக் கண்டதும் அவர் விழிகளிலும் மனத்திலும் ஆனந்த வெள்ளம்கரைகடந்து ஓடுகின்றது.. அவரது சிந்தையுள்ளோ தெளிவான ஞானம் தென்படுகின்றது.. இது அவருக்கு வியப்பை ஏற்படுகின்றது... கவனியுங்கள்...
நாம் அரிதானதொரு காட்சியைக் கண்டு விட்டாலோ அல்லது நமது மனது ஆனந்தத்தால் நிறையும்படியானதொரு நிகழ்வு நடந்து விட்டாலோ, சிந்தை தெளிவானதாக இருப்பதில்லை... ஆனந்தத்தில் குதித்துக் கொண்டே இருக்கும்... சிரித்துக்கொண்டே இருப்போம்.. அவ்வமயத்தில் நாம் செய்கின்ற செயல்களைப் பின்னர் ஆற அமர்ந்து நினைவு படுத்திப் பார்த்தால், நமக்கே அது முட்டாள்த்தனமாவும், சிறுபிள்ளைத்தனமாகவும் தெரியும்..
ஆனால்இ ங்கு ன்னையின் திருமேனியைக் கண்டதும் அபிராமிப் பட்டரின் கண்கள் ஆனந்த வெள்ளத்தை அடைகின்றன. அவரது மனதும் ஆனந்த வெள்ளத்தில் திளைக்கின்றது... "விழியும் நெஞ்சும் களி நின்ற வெள்ளம் கரை கண்டதில்லை" என்கிறார்... கரையற்று ஓடும் காட்டாற்றைப் போன்ற ஆனந்த வெள்ளம் அது... மனமும் விழிகளும் இப்படிப் பட்ட ஆனந்தத்தில் திளைக்கும் வேளையில், அவரது சிந்தையுள்ளோ தெளிவான ஞானம் திகழ்கின்றது... இதென்ன அதிசயம்.. ? என்று அபிராமிப் பட்டர் வியக்கிறார்.. உனது திருவுளமே இதற்குக் காரணம் அம்மா... உனது திருவுள்ளம் அத்தனை அளப்பரிய ஆற்றல் கொண்டதம்மா என்கிறார்..

என்ன திருவுளமோ? -
இப்படி கண்ணிலே கண்டதைக் கருத்திலே பதித்து, அகக் கண்ணில் கண்டு மகிழும் அனுபத்தைப் பெற்றவர் அபிராமபட்டர். அந்தத் திருமேனியைக் கண்டதால் தான் கரைகாணாக் களிவெள்ளம் பொங்கியது. அப்போது கருத்தானது - தெளிவான ஞானம் நிரம்பியதாயிற்று. இவ்வளவும் அம்பிகையின் அருளால் விளைந்தவை அல்லவா! அதனாலேயே " என்ன திருவுளமோ " - என்று அபிராமபட்டர்

ஒளிநின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே - 

அருள் ஒளியும் ஞான ஒளியும் வீசுகின்ற நவகோண சக்கரத்தில் நவசக்தியாய் என்றும் நிலைத்து வாழ்பவளே

பராசக்தியாகிய லலிதையின் யந்த்ரரூபமே ஸ்ரீசக்ரம். ஸ்ரீசக்ரம் 9 முக்கோணங்களால் ஆனது. அந்த ஒன்பது முக்கோணங்களும் அண்டமாகிய உலகத்துக்கும் பிண்டமாகிய உடலுக்கும் மூல காரணங்களான தத்துவங்களைக் குறிப்பவை. 'ஒளி நின்ற கோணங்கள் ஒன்பதும்' என்பது இந்த முக்கோணங்களைக் குறிப்பதாகவும் பொருள் கொள்ளலாம்.

நவசக்திகள்: -

வாமை, ஜேஷ்டை, ரெளத்ரி, காளி, கலவிகரணி, பலவிகரணி, பலப்பிரமதனி, சர்வபூததமனி, மனோன்மணி.

இப்படியும் கூறுவதுண்டு:-

தீப்தை, சூஷமை, குஜை, பத்ரை, விபூத்யை, விமலை, அமோகை, வித்யுதை, சர்வதோமுக்யை.

அம்பாளின் ஸ்ரீ சக்ர மகிமையை
சௌந்தர்ய லஹரியில் ஆதிசங்கரர் சொல்கிறார்.
( 95 - வது ஸ்லோகம் - ' புராராதே ' )
அம்மா! ஒன்பது சுற்றுப் பிரகாரங்களை ( வர்ணம்) உடைய வாசஸ்தானத்தின் உள்ளுக்குள்ளே அந்தப்புரத்தில் பரப்ரும்ம சொரூபியான பரமேஸ்வருடன் நீ சேர்ந்து இருக்கிறாய். அந்த அந்தப்புரத்திற்கு அருகில் வரவே எவருக்கும் யோக்யதை இல்லை.
அம்பிகையின் இல்லமான சிந்தாமணி க்ருஹத்தின் ஒன்பதாவது வாசலில் அணிமாசித்திகள் எப்போதும் இருந்து காவல் காப்பதாக ஐதீகம். அவர்களது உத்தரவு இன்றி யாரும் உள்ளே செல்ல முடியாது. இந்திராதி தேவர்கள் வந்தால் கூட இந்திரிய நிக்ரஹமில்லாத காரணத்தால் அவர்களை உள்ளேசெல்ல அனுமதிக்க மாட்டார்களாம் அணிமாசித்திகள்.
இந்த ஸ்ரீசக்ரத்தில் ஒன்பது பிரிவுகள் உள்ளன. ஒவ்வொரு பிரிவும் ஒவ்வொரு ஆவரணம் என்று அழைக்கப்படும். அந்த ஒன்பது ஆவரணங்களிலும் திரிபுரா, திரிபுரேசி, திரிபுரசுந்தரி, திரிபுரவாசினி, திரிபுராஸ்ரீ, திரிபுரமாலினி, திரிபுராஸித்தா, திரிபுராம்பிகா எனும் சக்ரேஸ்வரிகள் அந்தந்த பிரிவின் தலைவிகளாக அருள்கின்றன.
ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமத்தில் இந்த நாமாவளியில சொல்லிருக்கு இப்படி
"ஸ்ரீசக்ர ராஜ நிலையா "ஸ்ரீசக்கரத்தை தன் இருப்பிடமாகக் கொண்டவள்னு.

அபிராமபட்டர் சிறந்த தேவி பக்தர். ஸ்ரீ வித்யா உபாஸகர். ஸ்ரீசக்ர பூஜையை தவறாது செய்து வந்தவர். ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் தவறாது பாராயணம் செய்து வந்தவர். இப்பேற்ப்பட்ட அநுபூதிமான்களுக்கு அடுத்த பிறவி கிடையாது இதுவே அவர்களுக்கு கடைசிப்பிறவி.
நாமும் பட்டர் சொன்னபடி அன்னையை மனசுக்குள்ளே வரிச்சிண்டு தியானம் பண்ணுவோமா!!


அபிராமி சரணம் சரணம்!!


                                                        பாடலை குருஜி  கற்பிக்கிறார் இசையுடன் 

                                                                                                   

                                                              Utube  Link for ANDROID  and   IPAD   PHONE


                                 https://www.youtube.com/watch?v=bhqGV1m5bIs&feature=youtu.be

                                                                        அன்பர்கள் இசைக்கிறார்கள் 

                                                                                                      

                                                           Utube  Link for ANDROID  and   IPAD   PHONE

                                        https://youtu.be/zeZM1ELIlPw

                                                                          அன்னை அபிராமி சரணம் 

                                                                                          முருகா சரணம் 

No comments:

Post a Comment