Wednesday, 20 September 2017

அபிராமி அந்தாதி - 18


                                                                 அபிராமி  அந்தாதி - 18
                                                                                               

வவ்விய பாகத்து இறைவரும் நீயும் மகிழ்ந்திருக்கும்
செவ்வியும், உங்கள் திருமணக் கோலமும் , சிந்தையுள்ளே
அவ்வியம் தீர்த்து என்னை ஆண்டபொற் பாதமும் ஆகிவந்துவெவ்விய
காலன் என்மேல் வரும்போது-வெளி நிற்கவே
அர்தனாரீஸ்வரக் கோலத்தைப் பார்த்து மகிழ்ந்த பின்னர், பட்டர், பெருமாட்டியை, தங்களது திருமணக் கோலம் காட்டச் சொல்லுகிறார்

வவ்விய பாகத்து இறைவரும் நீயும்
இடப்பாகத்தைக் கொண்ட இறைவராம் சிவபெருமானும் நீயும் 
 மகிழ்ந்திருக்கும் செவ்வியும் -  மகிழ்ந்திருக்கும் செம்மையான 

                                                    தோற்றத்துடனும்,

உங்கள் திருமணக்கோலமும் - உங்கள் திருமணக் கோலத்துடனும்

சிந்தையுள்ளே அவ்வியம் தீர்த்து என்னை ஆண்ட 
பொற்பாதமும் ஆகி வந்து - 
தாயே உனது பொற்பாதங்களைக் காணும் முன்னர் என் மனது அசுத்தங்களால் நிறைந்திருந்தது... உனது அழகிய பொற்பாதத்தை நான் கண்ட பின்னர் அப்பாதங்களால் அடியெடுத்து வைத்து நீ என் மனத்துள் புகுந்தாய்... என் மனத்தில் இருந்த அசுத்தங்களெல்லாம் தீர்ந்து போயின.. நீ என்னை ஆண்டாய்........ அப்படி என்னை நீ ஆள்வதற்குக் காரணமான உனது பொற்பாதங்களையும் காலன் என்னைக் கவர மிகுந்த கோபத்தோடு வரும் வேளை நான் காண வேண்டும்... நீ காட்சி தந்தருள வேண்டும் 
வெவ்விய காலன் என் மேல் வரும் போது வெளி நிற்கவே - 
இங்கே அபிராமிப் பட்டர் தனது மரணவேளை எவ்வாறு இருக்க வேண்டும் என்பதைக் குறிப்பிடுகிறார்.. இவ்வமயம் அங்கேயும் காலன் காத்திருக்கின்றான்... அபிராமிப் பட்டர் குறிப்பிட்டது போல் இவ்விரவில் முழு நிலாத் தென்படாவிடில் காலன் கட்டிய கயிற்றால் பிறவியை முடித்துக்கொள்ள வேண்டிய நிலை பட்டருக்கு... ஆனால் அவருக்கோ அன்னை தன்னைக் காப்பாள் என்ற நம்பிக்கை இருக்கிறது.. .நூறு பாடல்கள் முடிந்தபின்னரும் அன்னையின் பதில் வராவிடில் தானே மரணத்தைத் தழுவிக்கொள்வதாக ஆணையிட்டுள்ள அபிராமிப் பட்டர் "வெவ்விய காலன்" தன் மேல் வரும்போது அன்னை இப்படிப் பட்டத் திருக்கோலத்தோடு தன்னருகே தோன்ற வேண்டும் என்று பட்டியலிடுகிறார்...
மார்கண்டேயன் காலனால் கட்டப்பட்டு கதறியபோது, அந்தக் காலனை உதைத்தது சிவபெருமானின் இடது கால்தான். அந்த இடது கால், அம்பிகைக்கு உரிய கால். அந்தத் திருவடிகளையே இப்போது த்யானம் செய்கிறார் பட்டர்.
மன்னனால் தண்டனை பெற்று, மரணத்தின் வாயிலில் நின்று பாடும் பாடல்கள் இவை என்பதை நாம் நினைவுறுத்திக் கொள்ளவேண்டும். இன்று நிலவு தோன்றாவிடில், மரணம் நிச்சயம் என்ற ஒரு சூழ்நிலையில் பாடப் பெறும் பாடல்கள் இவை. அந்த அம்பிகையே வந்து கருணை புரிந்தால் அன்றி, இந்த உடல் மாய்வது நிச்சயம் என்னும்படியான ஒரு நிலைமையிலே, பட்டர் பாடிக்கொண்டு இருக்கிறார். அவருக்கு, மரண பயம் நேர்கிறது

அம்மா! எனது மரண பயம் போக்கி அருள் செய்வாய் என்று விண்ணப்பிக்கிறார். உனது திருவடி எனது மனதில் பதிந்து போய்விட்டால், மரணம் என்பது விலகி ஓடி விடுமே என்று அந்த அபிராமியிடம் கேட்கிறார்.

இங்கு ஒன்று கவனிக்க வேண்டும். பட்டர், அம்பிகையிடம், 'எனது மரணத்தை போக்கு' என்று கேட்கவில்லை. என்ன கேட்கிறார்? கவனித்துப் பாருங்கள் : 'அம்மா, அந்த அந்தகன், அந்தக் காலன் என்னை இழுத்துப் போக வரும்போது, நீ வந்து என் வாயிலில் வந்து நிற்க வேண்டும். எனது மரண பயத்தைப் போக்க வேண்டும்' என்று மட்டுமே கேட்கிறார்.
மரணம் என்பது எல்லோருக்கும் நேர்வதுதான். ஆனாலும், அம்பிகையின் அருள் இருந்தால், அந்த மரணம் நேரும் பொழுது, பயமின்றி, சோர்வின்றி, இவ்வுடல் நீத்துச் செல்லலாம் என்பதை அழகாக பட்டர் நமக்குக் காட்டுகிறார்.
எப்படிப் பட்ட தோற்றமாம்? கடந்த பாடலில் சொன்னாரல்லவா ஈசனது இடப்பாகத்தை நீ கவர்ந்து கொண்டாய் என்று? அவ்வீசனும் நீயும்

மகிழ்ந்திருக்கும் செம்மையான தோற்றத்துடன் வா.... என்றழைக்கிறார். ஏன்? காலன் வரும் வேளை மனித மனது இன்பத்துடன் இருப்பதில்லை... ஊழ் பிடித்த இவ்வூணுடலை விட்டு வெளியேறும் வேளை நாம் அதன் மீது கொண்ட பந்தத்தால் ஈர்க்கப் பட்டு அவதியுறுகிறோம்.. அழுகிறோம்... ஆனால் தாயே... நான் அழக்கூடாது... அதற்கு என்ன செய்ய வேண்டும்.


நீ அந்த ஈசனோடு மகிழ்ந்திருக்கும் திருக்கோலத்தோடு

அருள் செய்... நான் மகிழ்வேன்... என்னை அக்காலன் கவர்ந்து செல்லட்டும் என்கிறார்.. மேலும்

உங்களது திருமணக் கோலத்தோடு காட்சியளியுங்கள் என்கிறார்... அம்மை மற்றும் அப்பனின் திருமணக் கோலத்தைக் காணக் கண்கோடி வேண்டுமல்லவா? மதுரை மாநகரில் நடைபெறும் சொக்கநாதார் - மீனாட்சியின் திருமணக் கோலத்தைக் கண்டு வாருங்கள் அவ்வின்பம் என்னவென்பது உங்களுக்குப் புரியும்...


தன் அடியவர்களின் உயிரைக் குறிவைத்து காலன் வந்தால் ஆட்கொண்டதிருப்பாதத்தை  முன்வைத்து அம்பிகை அப்பனுடன் முன்தோன்றி எமபயம் விலக்கி முக்தியை கொடுத்து அருள்வாளாம் 
உரிய காலத்தில்ஆட்கொள்ள வசதியாக முக்திக்கான தகுதியையும் 
முன்கூட்டியே அம்பிகை தந்தும் வைத்திருக்கிறாளாம்.
முக்திக்கான தகுதி எது?
கோணல்கள் இல்லாத மனது. நேரமெல்லாம் அம்பிகையையே
நினைக்கிற நேரிய மனது. வழிபாட்டின் முக்கியப்பயனே மனக்கோணல்கள் நீங்குவதுதானே 
ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமத்தில் " ம்ருத்யுமதனீ - பக்தர்களுக்கு மரணபயம் இல்லாமல் செய்பவள். மரணம் சரீரத்திற்கு மட்டும் தான். ஆத்மாவிற்கு இல்லை. தயிரை கடைந்து வெண்ணெய் எடுப்பது மாதிரி மரணம் என்ற பயத்தை போக்குகிறாள்.
"ஸர்வமிருத்யு நிவாரணீ" - எல்லாவிதமான மரணங்களையும் ( அகால மரணம், வயதானால் ஏற்படும் மரணம்) தடுப்பவள்.
"காலஹந்தரீ" - காலனை அழிப்பவள். ( ம்ருத்யுவை) .
"ம்ருத்யு தாருகுடாரிகா" - மரணம் என்ற பயத்தை வெட்டும் கோடாலியாக இருப்பவள்.
அப்படி அந்த சீமாட்டியின் திருமணக் கோலம் கண்டு விட்டால், மனமும் செம்மையாகி விடும். "மனமது செம்மையானால், மந்திரம் ஜபிக்க வேண்டாம்' என்றபடி, மனமது செம்மையாகிவிட்டால், அதன் அகங்காரமும் அழிந்துவிடும். பின்னர், அந்த அபிராமியின் பாதாரவிந்தங்களையே மனம் பற்றி நிற்க ஆரம்பித்துவிடும். அப்படி என்னை உன் பொற்பாதங்கள் ஆண்டுவிடுமானால், என்னை முடிக்க அந்த காலன், அந்தகன் வரும்போது, எனக்கு ஒரு துன்பமும் ஏற்படாது என்று சொல்லுகிறார் பட்டர்.


                                                        பாடலை குருஜி  கற்பிக்கிறார் இசையுடன் 



                                                                                          
                                                           Utube  Link for ANDROID  and   IPAD   PHONE

                                                                 https://youtu.be/EhzhRIXlkxQ

                                                                                          
                                                               Utube  Link for ANDROID  and   IPAD   PHONE

                                                                  https://youtu.be/ILcRcgb9s6U

                                                                                   முருகா  சரணம் 

No comments:

Post a Comment