Thursday, 28 September 2017

அபிராமி அந்தாதி - 20 வெள்ளி அபிராமி அந்தாதி - 20



                                                                அபிராமி அந்தாதி - 20 
                                                                             


உறைகின்ற நின் திருக்கோயில்-நின் கேள்வர் ஒரு பக்கமோ,
அறைகின்ற நான் மறையின் அடியோ முடியோ, அமுதம்
நிறைகின்ற வெண் திங்களோ, கஞ்சமோ; எந்தன் நெஞ்சகமோ,
மறைகின்ற வாரிதியோ?- பூரணாசல மங்கலையே!



அன்பர் தொகுத்து அளித்துள்ள விளக்கவுரை 

அம்பிகை எங்கெங்கு இருக்கிறாள்? விடை தேடிப் புறப்படுகிறார் பட்டர்.
இந்த அம்பிகை" ஸ்ரீநகரத்தில் சிந்தாமணி கிரகத்தில்" மட்டுமா இருக்கிறாள்?’’
இந்த கேள்வி நமக்கு மட்டுமில்லை. அபிராமி பட்டருக்கும் வந்தது. ‘‘தாயே! உன் உறைவிடம் எது? இறைவனது வாம பாகம் மட்டும்தானா? வேதத்தின் அடியா? வேதாந்தங்களா? அல்லது அமிர்தத்துடன் பிறந்த அந்த பூரணச் சந்திரனா? பின் ஏன் உன்னை சந்திர மண்டலத்தில் தியானிக்க வேண்டும் என்கின்றனர்? நீ இருக்கும் இடம் தாமரை மலரா அல்லது அடியேனின் இதயக் கமலமா? அமுதம் நிறைந்த கடலா? மணித்வீப மத்யே என்கின்றார்களே! இப்படி பலவிதமாக சொன்னால் என் போன்ற எளியவர்களுக்கு எப்படிப் புரியும்? நீயே சொல்லம்மா’’ என்கிறார்.
அவள் இருப்பிடம் எதுவாக இருந்தால் என்ன? அவளை சதாசர்வகாலமும் நம் மனதில் இருந்தி தியானித்தால் அவள் நம் மனதில் வந்து நிச்சயம் அமர்ந்து விடுவாள். அதைத்தான் லலிதா ஸஹஸ்ரநாமம், ‘பக்தமானஸ ஹம்ஸிகா’ - பக்தர்கள் மனதில் நீந்தும் அன்னப்பறவை என்று குறிப்பிடுகிறது.
அபிராமபட்டர் அம்மையின் திருக்கோலங்களை எண்ணிப் பார்க்கிறார். அம்பிகையோ எங்கும் உறைபவள். அவள் எங்கும் நிறைந்த பரிபூரணையாக இலங்குகிறாள். அவள் கொள்ளும் திருஉருவங்களுக்கு கணக்கு வழக்கேயில்லை. ஏதாவது ஒருவகைப்படுத்தி பார்க்கலாம் என்ற திருமுயற்சியில் இறங்குகிறார்.
சிலவற்றைச் சொல்லி ' இதுலோ! அதுவோ ' என்று வினவி பூரிப்பு அடைகிறார்.
அபிராமபட்டர் எப்போதும் 'அப்பனை ' சொல்லியே அன்னையைப் பற்றி கூறுவார். இதை நாம் நன்கு உணர வேண்டும்.காப்புச் செய்யுள், ' தாரமர் ' என்று ஆரம்பிப்பதிலிருந்தே இதை நாம் அறிகிறோம்.
உலக மாதாவும், பிதாவும் ஆகிய இவர்களுக்கு உயிரும் உடம்பும் ஒன்றுதான். 

இதை மனதில் கொண்டு " நின் கேள்வர் ஒரு பக்கமோ " என்று பாடலை ஆரம்பிக்கிறார்.
' ஒன்றே உடம்பு அங்கு இடும்பங்கு இரண்டே.....' குமரகுருபரர் சொல்லுகிறார்.
அம்மையும், அப்பனும் ஒட்டியிருக்கும் திருக்கோலம் - அர்த்தநாரீசு ர மூர்த்தம். இதனையே ' ஒரு பக்கமாய பரம்பரன் தேவி ' - என்கிறது தக்கயாகப் பரணீ.
அன்னையை ' ஓங்காரம் ' என்னும் கூட்டில் இருக்கும் கிளி - என்பர். திருமூலர்
"ஓங்காரி என்பாள் அவள் ஒரு பெண் பிள்ளை
நீங்காத பச்சை நிறத்தையுடையவள்
ஆங்காரி ஆகியே ஐவரைப் பெற்றிட்டு
ரீங்காரத்துள்ளே இனிது இருந்தாளே" (திருமந்திரம் - 1073)

நின் கேள்வர் ஒரு பக்கமோ.
." உனது தோழரான ஈசனது ஒரு பக்கமோ? கேள்வர் எனும் பதமானது மிக நெருக்கமான தோழர்களைக் குறிக்கப்பயன்படுகிறது... அன்னைக்கும் அப்பனுக்கும் இடையேயான தோழமை அளப்பறியது அல்லவா? ஈசனை விடுத்து உமையும், உமையை விடுத்து ஈசனும் பிரிந்திருப்பது மிக மிக அரிது... பிரிந்திருந்தாலும் அவர்தம் மனத்தளவில் ஒன்றியிருப்பதே வாடிக்கை... அப்படிப்பட்ட ஈசனைத் தான் அம்மையின் கேள்வர் என்று அபிராமிப் பட்டர் குறிப்பிடுகின்றார்.
வேடிக்கையா இப்படி கூட சொல்லலாம்!!
எப்படி??
ஈசனை என்ன காரணத்தால் அபிராமிப் பட்டர் கேள்வர் என்று குறிப்பிட்டார் தெரியுமா? அன்னை சொல்வதையெல்லாம் சரி சரி என்று கேட்டுக்கொண்டிருக்கிறார் அல்லவா? அதற்காகத்தான் என்று... ஆம் அன்னையின் திருச்சொல்லை அப்பன் கேளாதிருந்திடுவாரோ?

அறைகின்ற நான்மறையின் அடியோ முடியோ 
 ஓதப்படுகின்ற நான்கு வேதங்களின் தொடக்கமோ? இல்லை அவற்றின் முடிவோ?

அமுதம் நிறைகின்ற வெண்திங்களோ - 
அமுதம் போல் குளிர்ந்த நிலவொளியை வீசும் வெண்மையான சந்திரனோ?

 அபிராமபட்டர் சொல்வது, அவர் எப்போதும் உள்ளத்திலே நினைத்து, நினைத்து உருகும் ' சந்திரமண்டலம் '.


சந்த்ர மண்டலமத்யகா - சந்த்ரமண்டலத்தின் மத்தியில் இருப்பவள்சிரஸில் உள்ள ஸஹஸ்ரார கமலத்தில் எப்போதும் பூர்ணகலைகளை உடைய சந்த்ரமண்டலம் இருப்பதாகச் சொல்லப்படும். அந்தச் சந்த்ரமண்டவத்தின் நடுவில் விளங்குபவள் தேவி.
சரபோஜி மன்னன் அவரைக் கேள்வி கேட்டபோதும் இந்நிலையில் தான்அவர் இருந்தார் என்று சொல்லவும் வேண்டுமா? என்ன!
சந்திரனை - ' அமுதகிரணண் ' என்பர். அம்பிகை அங்கே எழுந்தருளியிருப்பதனால் தான் அவள் அமுதம் நிறைந்தவளானாள்.

( சந்த்ர மண்டலமே - ஸ்ரீசக்ரம் என்பது ரகசியம்)
எனவே ' அமுதம் நிறைகின்ற வெண்திங்களோ ' - என்றார்.

'வெண்கஞ்சமோ ' -
 என்று சேர்த்து வெள்ளைத் தாமரையில் கலைமகளாகவும் இருந்து கல்விக்குத் தெய்வமாகத் திகழ்கிறாள் அன்னை என்றும் பொருள் சொல்லலாம். 704. ஸரஸ்வதி - ஞான அபிமான தேவியான ஸரவதியாக இருப்பவள். பின்னும் ' அருணாம்புயத்தும் ....... ' ( 58) என்ற பாடலில் அன்னையின் திருமேனியை ஒரு தாமரை காடாகவே வர்ணிக்கிறார்.

 எந்தன் நெஞ்சகமோ,
அபிராமபட்டர் அடுத்து ' உன்னைப் பற்றி நினைக்கவும், உன்னைத் தியானிக்கவும் எனக்கு ஒரு கருவியைக் கொடுத்திருக்கிறாயே! அந்த உள்ளமும் உன்னுடைய திருக்கோயில்தானே?

அடுத்து ' கஞ்சமோ "
 தாமரையோ - என்றார்.

மறைகின்ற வாரிதியோ 
எல்லாவிதமான செல்வங்களும் மறைந்திருக்கும் பாற்கடலோ?
"பூரணாசல மங்கலையே 
பூர்ணா - எங்கும்,எதிலும், எப்போதும் நிறைந்திருப்பவள். ப்ரஹ்மத்தின் வடிவான தேவிதான். ( காலம், தேசம், வஸ்து இவற்றால் கட்டுப்படாதவள் தேவி. ) அதாவது ' பார்க்குமிடம் எங்கும் ஒரு நீக்கமற நிறைகின்ற பரிபூரணானந்தமாக இருப்பவள்.
அசலை - அவள் எங்கும் இருப்பவள் அல்லவா ! அதனால் சலனம் இல்லாதவள். 
மங்கலை  - 
அவள் நித்திய மங்கலை. எப்போதும் மங்கலம் குறையாமல் இருப்பவள்.
"மங்கலாக்ருதி" - மங்கள ரூபமுடையவள்.
"ஸர்வ மங்கலா "- எல்லா மங்களங்களையும் உடையவள்.
அவைகள் அனைத்துக்கும் மூலமாக இருப்பவள்.

அபிராமி சரணம் சரணம்!!

வெள்ளைத் தாமரையில் கலைமகளாகவும் இருந்து கல்விக்குத் தெய்வமாகத் திகழும் சரஸ்வதி தேவியை அருட்கவி பாரதியரின் கூற்றில் ,அவள் எங்கெல்லாம் உறைந்து அருள் பாலிக்கிறாள் என்பதை பார்ப்போம்.


வெள்ளைத் தாமரை பூவில் இருப்பாள்

வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்

கொள்ளை இன்பம் குலவு கவிதை
கூறு பாவலர் உள்ளத்திலிருப்பாள்

உள்ளதாம் பொருள் தேடியுணர்ந்தே
ஓதும் வேதத்தின் உள்நின்ரொளிர்வாள்

கள்ளமற்ற முனிவர்கள் கூறும்
கருணை வாசகத்துட் பொருளாவாள்

மாதர் தீங்குரல் பாட்டில் இருப்பாள்

மக்கள் பேசும் மழலையில் உள்ளாள்

கீதம் பாடும் குயிலின் குரலை
கிளியின் நாவை இருப்பிடம் கொண்டாள்

கோதகன்ற தொழிலுடைத்தாகிக்
குலவு சித்திரம் கோபுரம் கோயில்
ஈதனைத்தின் எழிலிடையுற்றாள்

இன்பமே வடிவாகிட பெற்றாள் 

சரஸ்வதி யைப் போற்றும் இந்நாளில் அவளை வணங்கி ,போற்றி  அருள் வேண்டுவோம்.



                                                                    பாடலை குருஜி  கற்பிக்கிறார் இசையுடன் 


                                                                                                  

                                                                  Utube  Link for ANDROID  and   IPAD   PHONE

                                                https://youtu.be/IcZ1914s8H8

                                                                              அன்பர்கள் இசைக்கிறார்கள் 


                                                                                                   


                                                             Utube  Link for ANDROID  and   IPAD   PHONE

                                               https://youtu.be/SkcyQ-uOitE


                                               முருகா சரணம் 





Monday, 25 September 2017

அபிராமி அந்தாதி ...19



                                                                                 அபிராமி அந்தாதி ...19  

                                        
                                                             
வெளிநின்ற நின் திருமேனியைப் பார்த்து விழியும் நெஞ்சும்
களிநின்ற வெள்ளம் கரைகண்டதில்லை கருத்தினுள்ளே
தெளிநின்ற ஞானம் திகழ்கின்றது என்ன திருவுளமோ?
ஒளிநின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே


வெளிநின்ற நின் திருமேனியைப் பார்த்து -

 நான் வேண்டியவுடன் வானவெளியில் வந்து நின்ற உனது திருமேனியைப் பார்த்து (நான் வேண்டியவுடன் அம்மை அப்பனாக மாதொருபாகனாக திருமணக் கோலத்துடன் தோன்றிய நின் திருமேனியைப் பார்த்து)

"வெளி நின்ற" எனும் சொல் பல பொருள் தரும்; ஆகாய வெளி நின்ற எனும் பொருள்; ஸ்தூலமாய் வெளி வந்து காட்சி தருகின்றவள் எனும் பொருள்; அனைத்துமாய் இருப்பவள் வெளி வந்து தனித்து காட்சி தருபவளாய்...எனும் பொருள்; வெளியாகவே நிற்பவள் எனும் பொருள்; இன்னும் பலவாறு கூறலாம்.

விழியும் நெஞ்சும் -

 பெரும்பேறு பெற்ற என் விழிகளும் நெஞ்சமும்

களிநின்ற வெள்ளம் கரைகண்டதில்லை - 

அடைந்த ஆனந்தம் என்னும் வெள்ளம் கரையின்றிப் பெருகி நின்றது.

கருத்தினுள்ளே தெளிநின்ற ஞானம் திகழ்கின்றது - 

உலக இன்பங்களில் மனம் மகிழ்ந்தால் அப்போது கருத்தழியும்; மனம் மயங்கும்; தெளிவு கெடும். உன்னைக் கண்டதால் விழிகளிலும் நெஞ்சிலும் பெருகும் மகிழ்ச்சி வெள்ளம் அத்தகைய விளைவுகளை ஏற்படுத்தவில்லை. கருத்தில் தெளிவான ஞானம் திகழ்கின்றது.

கடந்த பாடலில் தன்னை அழைத்துச்செல்ல கொடுங்கோபத்துடன் காலன் வரும் வேளையில் அன்னை தனது திருமணக்கோலத்துடன் காட்சியளித்து அருள வேண்டும் என்று வேண்டிக் கொண்டாரல்லவா?? அவ்வாறு வேண்டியதுமே அன்னையின் திருக்கோலம் அவருக்குக் காட்சியளித்து விட்டது... வான வெளியில் அன்னையின் திருமேனியைக் கண்டதும் அவர் விழிகளிலும் மனத்திலும் ஆனந்த வெள்ளம்கரைகடந்து ஓடுகின்றது.. அவரது சிந்தையுள்ளோ தெளிவான ஞானம் தென்படுகின்றது.. இது அவருக்கு வியப்பை ஏற்படுகின்றது... கவனியுங்கள்...
நாம் அரிதானதொரு காட்சியைக் கண்டு விட்டாலோ அல்லது நமது மனது ஆனந்தத்தால் நிறையும்படியானதொரு நிகழ்வு நடந்து விட்டாலோ, சிந்தை தெளிவானதாக இருப்பதில்லை... ஆனந்தத்தில் குதித்துக் கொண்டே இருக்கும்... சிரித்துக்கொண்டே இருப்போம்.. அவ்வமயத்தில் நாம் செய்கின்ற செயல்களைப் பின்னர் ஆற அமர்ந்து நினைவு படுத்திப் பார்த்தால், நமக்கே அது முட்டாள்த்தனமாவும், சிறுபிள்ளைத்தனமாகவும் தெரியும்..
ஆனால்இ ங்கு ன்னையின் திருமேனியைக் கண்டதும் அபிராமிப் பட்டரின் கண்கள் ஆனந்த வெள்ளத்தை அடைகின்றன. அவரது மனதும் ஆனந்த வெள்ளத்தில் திளைக்கின்றது... "விழியும் நெஞ்சும் களி நின்ற வெள்ளம் கரை கண்டதில்லை" என்கிறார்... கரையற்று ஓடும் காட்டாற்றைப் போன்ற ஆனந்த வெள்ளம் அது... மனமும் விழிகளும் இப்படிப் பட்ட ஆனந்தத்தில் திளைக்கும் வேளையில், அவரது சிந்தையுள்ளோ தெளிவான ஞானம் திகழ்கின்றது... இதென்ன அதிசயம்.. ? என்று அபிராமிப் பட்டர் வியக்கிறார்.. உனது திருவுளமே இதற்குக் காரணம் அம்மா... உனது திருவுள்ளம் அத்தனை அளப்பரிய ஆற்றல் கொண்டதம்மா என்கிறார்..

என்ன திருவுளமோ? -
இப்படி கண்ணிலே கண்டதைக் கருத்திலே பதித்து, அகக் கண்ணில் கண்டு மகிழும் அனுபத்தைப் பெற்றவர் அபிராமபட்டர். அந்தத் திருமேனியைக் கண்டதால் தான் கரைகாணாக் களிவெள்ளம் பொங்கியது. அப்போது கருத்தானது - தெளிவான ஞானம் நிரம்பியதாயிற்று. இவ்வளவும் அம்பிகையின் அருளால் விளைந்தவை அல்லவா! அதனாலேயே " என்ன திருவுளமோ " - என்று அபிராமபட்டர்

ஒளிநின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே - 

அருள் ஒளியும் ஞான ஒளியும் வீசுகின்ற நவகோண சக்கரத்தில் நவசக்தியாய் என்றும் நிலைத்து வாழ்பவளே

பராசக்தியாகிய லலிதையின் யந்த்ரரூபமே ஸ்ரீசக்ரம். ஸ்ரீசக்ரம் 9 முக்கோணங்களால் ஆனது. அந்த ஒன்பது முக்கோணங்களும் அண்டமாகிய உலகத்துக்கும் பிண்டமாகிய உடலுக்கும் மூல காரணங்களான தத்துவங்களைக் குறிப்பவை. 'ஒளி நின்ற கோணங்கள் ஒன்பதும்' என்பது இந்த முக்கோணங்களைக் குறிப்பதாகவும் பொருள் கொள்ளலாம்.

நவசக்திகள்: -

வாமை, ஜேஷ்டை, ரெளத்ரி, காளி, கலவிகரணி, பலவிகரணி, பலப்பிரமதனி, சர்வபூததமனி, மனோன்மணி.

இப்படியும் கூறுவதுண்டு:-

தீப்தை, சூஷமை, குஜை, பத்ரை, விபூத்யை, விமலை, அமோகை, வித்யுதை, சர்வதோமுக்யை.

அம்பாளின் ஸ்ரீ சக்ர மகிமையை
சௌந்தர்ய லஹரியில் ஆதிசங்கரர் சொல்கிறார்.
( 95 - வது ஸ்லோகம் - ' புராராதே ' )
அம்மா! ஒன்பது சுற்றுப் பிரகாரங்களை ( வர்ணம்) உடைய வாசஸ்தானத்தின் உள்ளுக்குள்ளே அந்தப்புரத்தில் பரப்ரும்ம சொரூபியான பரமேஸ்வருடன் நீ சேர்ந்து இருக்கிறாய். அந்த அந்தப்புரத்திற்கு அருகில் வரவே எவருக்கும் யோக்யதை இல்லை.
அம்பிகையின் இல்லமான சிந்தாமணி க்ருஹத்தின் ஒன்பதாவது வாசலில் அணிமாசித்திகள் எப்போதும் இருந்து காவல் காப்பதாக ஐதீகம். அவர்களது உத்தரவு இன்றி யாரும் உள்ளே செல்ல முடியாது. இந்திராதி தேவர்கள் வந்தால் கூட இந்திரிய நிக்ரஹமில்லாத காரணத்தால் அவர்களை உள்ளேசெல்ல அனுமதிக்க மாட்டார்களாம் அணிமாசித்திகள்.
இந்த ஸ்ரீசக்ரத்தில் ஒன்பது பிரிவுகள் உள்ளன. ஒவ்வொரு பிரிவும் ஒவ்வொரு ஆவரணம் என்று அழைக்கப்படும். அந்த ஒன்பது ஆவரணங்களிலும் திரிபுரா, திரிபுரேசி, திரிபுரசுந்தரி, திரிபுரவாசினி, திரிபுராஸ்ரீ, திரிபுரமாலினி, திரிபுராஸித்தா, திரிபுராம்பிகா எனும் சக்ரேஸ்வரிகள் அந்தந்த பிரிவின் தலைவிகளாக அருள்கின்றன.
ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமத்தில் இந்த நாமாவளியில சொல்லிருக்கு இப்படி
"ஸ்ரீசக்ர ராஜ நிலையா "ஸ்ரீசக்கரத்தை தன் இருப்பிடமாகக் கொண்டவள்னு.

அபிராமபட்டர் சிறந்த தேவி பக்தர். ஸ்ரீ வித்யா உபாஸகர். ஸ்ரீசக்ர பூஜையை தவறாது செய்து வந்தவர். ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் தவறாது பாராயணம் செய்து வந்தவர். இப்பேற்ப்பட்ட அநுபூதிமான்களுக்கு அடுத்த பிறவி கிடையாது இதுவே அவர்களுக்கு கடைசிப்பிறவி.
நாமும் பட்டர் சொன்னபடி அன்னையை மனசுக்குள்ளே வரிச்சிண்டு தியானம் பண்ணுவோமா!!


அபிராமி சரணம் சரணம்!!


                                                        பாடலை குருஜி  கற்பிக்கிறார் இசையுடன் 

                                                                                                   

                                                              Utube  Link for ANDROID  and   IPAD   PHONE


                                 https://www.youtube.com/watch?v=bhqGV1m5bIs&feature=youtu.be

                                                                        அன்பர்கள் இசைக்கிறார்கள் 

                                                                                                      

                                                           Utube  Link for ANDROID  and   IPAD   PHONE

                                        https://youtu.be/zeZM1ELIlPw

                                                                          அன்னை அபிராமி சரணம் 

                                                                                          முருகா சரணம் 

Wednesday, 20 September 2017

அபிராமி அந்தாதி - 18


                                                                 அபிராமி  அந்தாதி - 18
                                                                                               

வவ்விய பாகத்து இறைவரும் நீயும் மகிழ்ந்திருக்கும்
செவ்வியும், உங்கள் திருமணக் கோலமும் , சிந்தையுள்ளே
அவ்வியம் தீர்த்து என்னை ஆண்டபொற் பாதமும் ஆகிவந்துவெவ்விய
காலன் என்மேல் வரும்போது-வெளி நிற்கவே
அர்தனாரீஸ்வரக் கோலத்தைப் பார்த்து மகிழ்ந்த பின்னர், பட்டர், பெருமாட்டியை, தங்களது திருமணக் கோலம் காட்டச் சொல்லுகிறார்

வவ்விய பாகத்து இறைவரும் நீயும்
இடப்பாகத்தைக் கொண்ட இறைவராம் சிவபெருமானும் நீயும் 
 மகிழ்ந்திருக்கும் செவ்வியும் -  மகிழ்ந்திருக்கும் செம்மையான 

                                                    தோற்றத்துடனும்,

உங்கள் திருமணக்கோலமும் - உங்கள் திருமணக் கோலத்துடனும்

சிந்தையுள்ளே அவ்வியம் தீர்த்து என்னை ஆண்ட 
பொற்பாதமும் ஆகி வந்து - 
தாயே உனது பொற்பாதங்களைக் காணும் முன்னர் என் மனது அசுத்தங்களால் நிறைந்திருந்தது... உனது அழகிய பொற்பாதத்தை நான் கண்ட பின்னர் அப்பாதங்களால் அடியெடுத்து வைத்து நீ என் மனத்துள் புகுந்தாய்... என் மனத்தில் இருந்த அசுத்தங்களெல்லாம் தீர்ந்து போயின.. நீ என்னை ஆண்டாய்........ அப்படி என்னை நீ ஆள்வதற்குக் காரணமான உனது பொற்பாதங்களையும் காலன் என்னைக் கவர மிகுந்த கோபத்தோடு வரும் வேளை நான் காண வேண்டும்... நீ காட்சி தந்தருள வேண்டும் 
வெவ்விய காலன் என் மேல் வரும் போது வெளி நிற்கவே - 
இங்கே அபிராமிப் பட்டர் தனது மரணவேளை எவ்வாறு இருக்க வேண்டும் என்பதைக் குறிப்பிடுகிறார்.. இவ்வமயம் அங்கேயும் காலன் காத்திருக்கின்றான்... அபிராமிப் பட்டர் குறிப்பிட்டது போல் இவ்விரவில் முழு நிலாத் தென்படாவிடில் காலன் கட்டிய கயிற்றால் பிறவியை முடித்துக்கொள்ள வேண்டிய நிலை பட்டருக்கு... ஆனால் அவருக்கோ அன்னை தன்னைக் காப்பாள் என்ற நம்பிக்கை இருக்கிறது.. .நூறு பாடல்கள் முடிந்தபின்னரும் அன்னையின் பதில் வராவிடில் தானே மரணத்தைத் தழுவிக்கொள்வதாக ஆணையிட்டுள்ள அபிராமிப் பட்டர் "வெவ்விய காலன்" தன் மேல் வரும்போது அன்னை இப்படிப் பட்டத் திருக்கோலத்தோடு தன்னருகே தோன்ற வேண்டும் என்று பட்டியலிடுகிறார்...
மார்கண்டேயன் காலனால் கட்டப்பட்டு கதறியபோது, அந்தக் காலனை உதைத்தது சிவபெருமானின் இடது கால்தான். அந்த இடது கால், அம்பிகைக்கு உரிய கால். அந்தத் திருவடிகளையே இப்போது த்யானம் செய்கிறார் பட்டர்.
மன்னனால் தண்டனை பெற்று, மரணத்தின் வாயிலில் நின்று பாடும் பாடல்கள் இவை என்பதை நாம் நினைவுறுத்திக் கொள்ளவேண்டும். இன்று நிலவு தோன்றாவிடில், மரணம் நிச்சயம் என்ற ஒரு சூழ்நிலையில் பாடப் பெறும் பாடல்கள் இவை. அந்த அம்பிகையே வந்து கருணை புரிந்தால் அன்றி, இந்த உடல் மாய்வது நிச்சயம் என்னும்படியான ஒரு நிலைமையிலே, பட்டர் பாடிக்கொண்டு இருக்கிறார். அவருக்கு, மரண பயம் நேர்கிறது

அம்மா! எனது மரண பயம் போக்கி அருள் செய்வாய் என்று விண்ணப்பிக்கிறார். உனது திருவடி எனது மனதில் பதிந்து போய்விட்டால், மரணம் என்பது விலகி ஓடி விடுமே என்று அந்த அபிராமியிடம் கேட்கிறார்.

இங்கு ஒன்று கவனிக்க வேண்டும். பட்டர், அம்பிகையிடம், 'எனது மரணத்தை போக்கு' என்று கேட்கவில்லை. என்ன கேட்கிறார்? கவனித்துப் பாருங்கள் : 'அம்மா, அந்த அந்தகன், அந்தக் காலன் என்னை இழுத்துப் போக வரும்போது, நீ வந்து என் வாயிலில் வந்து நிற்க வேண்டும். எனது மரண பயத்தைப் போக்க வேண்டும்' என்று மட்டுமே கேட்கிறார்.
மரணம் என்பது எல்லோருக்கும் நேர்வதுதான். ஆனாலும், அம்பிகையின் அருள் இருந்தால், அந்த மரணம் நேரும் பொழுது, பயமின்றி, சோர்வின்றி, இவ்வுடல் நீத்துச் செல்லலாம் என்பதை அழகாக பட்டர் நமக்குக் காட்டுகிறார்.
எப்படிப் பட்ட தோற்றமாம்? கடந்த பாடலில் சொன்னாரல்லவா ஈசனது இடப்பாகத்தை நீ கவர்ந்து கொண்டாய் என்று? அவ்வீசனும் நீயும்

மகிழ்ந்திருக்கும் செம்மையான தோற்றத்துடன் வா.... என்றழைக்கிறார். ஏன்? காலன் வரும் வேளை மனித மனது இன்பத்துடன் இருப்பதில்லை... ஊழ் பிடித்த இவ்வூணுடலை விட்டு வெளியேறும் வேளை நாம் அதன் மீது கொண்ட பந்தத்தால் ஈர்க்கப் பட்டு அவதியுறுகிறோம்.. அழுகிறோம்... ஆனால் தாயே... நான் அழக்கூடாது... அதற்கு என்ன செய்ய வேண்டும்.


நீ அந்த ஈசனோடு மகிழ்ந்திருக்கும் திருக்கோலத்தோடு

அருள் செய்... நான் மகிழ்வேன்... என்னை அக்காலன் கவர்ந்து செல்லட்டும் என்கிறார்.. மேலும்

உங்களது திருமணக் கோலத்தோடு காட்சியளியுங்கள் என்கிறார்... அம்மை மற்றும் அப்பனின் திருமணக் கோலத்தைக் காணக் கண்கோடி வேண்டுமல்லவா? மதுரை மாநகரில் நடைபெறும் சொக்கநாதார் - மீனாட்சியின் திருமணக் கோலத்தைக் கண்டு வாருங்கள் அவ்வின்பம் என்னவென்பது உங்களுக்குப் புரியும்...


தன் அடியவர்களின் உயிரைக் குறிவைத்து காலன் வந்தால் ஆட்கொண்டதிருப்பாதத்தை  முன்வைத்து அம்பிகை அப்பனுடன் முன்தோன்றி எமபயம் விலக்கி முக்தியை கொடுத்து அருள்வாளாம் 
உரிய காலத்தில்ஆட்கொள்ள வசதியாக முக்திக்கான தகுதியையும் 
முன்கூட்டியே அம்பிகை தந்தும் வைத்திருக்கிறாளாம்.
முக்திக்கான தகுதி எது?
கோணல்கள் இல்லாத மனது. நேரமெல்லாம் அம்பிகையையே
நினைக்கிற நேரிய மனது. வழிபாட்டின் முக்கியப்பயனே மனக்கோணல்கள் நீங்குவதுதானே 
ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமத்தில் " ம்ருத்யுமதனீ - பக்தர்களுக்கு மரணபயம் இல்லாமல் செய்பவள். மரணம் சரீரத்திற்கு மட்டும் தான். ஆத்மாவிற்கு இல்லை. தயிரை கடைந்து வெண்ணெய் எடுப்பது மாதிரி மரணம் என்ற பயத்தை போக்குகிறாள்.
"ஸர்வமிருத்யு நிவாரணீ" - எல்லாவிதமான மரணங்களையும் ( அகால மரணம், வயதானால் ஏற்படும் மரணம்) தடுப்பவள்.
"காலஹந்தரீ" - காலனை அழிப்பவள். ( ம்ருத்யுவை) .
"ம்ருத்யு தாருகுடாரிகா" - மரணம் என்ற பயத்தை வெட்டும் கோடாலியாக இருப்பவள்.
அப்படி அந்த சீமாட்டியின் திருமணக் கோலம் கண்டு விட்டால், மனமும் செம்மையாகி விடும். "மனமது செம்மையானால், மந்திரம் ஜபிக்க வேண்டாம்' என்றபடி, மனமது செம்மையாகிவிட்டால், அதன் அகங்காரமும் அழிந்துவிடும். பின்னர், அந்த அபிராமியின் பாதாரவிந்தங்களையே மனம் பற்றி நிற்க ஆரம்பித்துவிடும். அப்படி என்னை உன் பொற்பாதங்கள் ஆண்டுவிடுமானால், என்னை முடிக்க அந்த காலன், அந்தகன் வரும்போது, எனக்கு ஒரு துன்பமும் ஏற்படாது என்று சொல்லுகிறார் பட்டர்.


                                                        பாடலை குருஜி  கற்பிக்கிறார் இசையுடன் 



                                                                                          
                                                           Utube  Link for ANDROID  and   IPAD   PHONE

                                                                 https://youtu.be/EhzhRIXlkxQ

                                                                                          
                                                               Utube  Link for ANDROID  and   IPAD   PHONE

                                                                  https://youtu.be/ILcRcgb9s6U

                                                                                   முருகா  சரணம் 

Sunday, 17 September 2017

சுப்ரமண்ய புஜங்கம் 7



                                                                         சுப்ரமண்ய புஜங்கம்  7

                                                                                              


மஹாம்போதிதீரே மஹாபாபசோரே

முனீந்த்ரானுகூலே ஸுகந்தாக்யசைலே |

குஹாயாம் வஸந்தம் ஸ்வபாஸா லஸந்தம்

ஜனார்திம் ஹரந்தம் ச்ரயாமோ குஹம்தம் ||


அன்பர் தொகுத்து அளித்துள்ள விளக்கவுரை 

மஹாம்போதி தீரே’ 

‘அம்போதின்னா’ 


-கடல், பெரிய கடலின் கரையில்,

 ‘மஹாபாபசோரே'

நம்முடைய பாபங்கள் எப்படி போச்சுன்னு நமக்கே தெரியாத மாதிரி நம்முடைய பாபங்களை எல்லாம் திருடிடறார் முருகப் பெருமான்.

முனீந்த்ரானுகூலே’

 முனிவர்களுக்கு  அனுகூலமாக இருக்கக் கூடிய, முனிவர்கள் தவம் செய்ய ரொம்ப சௌகர்யமா இருக்கக்கூடிய 

 ‘ஸுகந்தாக்யசைலே’ 

ஆக்யம்-னா பெயர்ன்னு அர்த்தம். 


அனுகூலமாக்க இருக்கும் அந்த மலையில்

 ‘குஹாயாம் வஸந்தம்’ 

ஒரு குஹையில் முருகப் பெருமான் வசிக்கிறார்.

 ‘ஸ்வபாஸா லஸந்தம்’ 
குஹை கோடி ஸூர்ய ப்ரகாசமா இருக்கு. ஏன்னா அந்த குஹைக்குள்ள தன்னுடைய ஒளியினாலேயே பிரகாசிக்கக் கூடிய  ஸ்வாமி குஹன். அவர் பேரும் குஹன். குஹைக்குள்ள வசிக்கிற அந்த  குஹனை

 ‘ஜனார்திம் ஹரந்தம்’ 

ஜனங்களுடைய ‘ஆர்த்தி’ன்னா கஷ்டம், கஷ்டங்களை போக்கும்,

 ‘தம்  குஹம்’ 

அந்த முருகப் பெருமானை

 ‘ஸ்ராயமஹ’

 நாங்கள் ஆஸ்ரயித்திருக்கிறோம்’ 

இந்த ஸ்லோகத்தில் ஹ்ருதய குகையில் வசிக்கும் ஆயிரம் சூரியர்களின் ஔியோடு விளங்கும் முருகப் பெருமானை எவர்கள் தரிசிக்கிறார்களோ , அவர்கள் எல்லா பாவங்களிலிருந்தும் விடுபட்டு பவக்கடலையும் தாண்டுவார்கள். இந்த ஞான மார்க்க முனிவர்களுக்கு அனுகூலமாக திகழ்பவர்.

முனிவர்கள் என்பவர்கள் யார்? மௌனமாக இருந்து அந்த மௌனத்திலே லயித்து அதி ரஹசியமான பொருளை உணர்பவர்கள்..
உணர்ந்த பின்பு உலக மக்களுக்காக வாழ்பவர்கள்....ஆதி சங்கரர், அருணகிரி போன்ற மஹான்கள் செய்யும் காரியங்களுக்கு அனுகூலமாக இருப்பவர்..

இந்த ஸ்லோகத்தை படித்தவுடன் ஞாபகத்திற்கு வருவது சீர்பாத வகுப்பிலே 

' சதகோடி சூரியர்கள் உதயமென யுக முடிவின் இருள் அகல ஒரு ஜோதி வீசுவதும்  என்ற வரிகள்..

அடுத்து வீரவாள் வகுப்பில் வரும் வரிகளான 
' யாருமே அற்றவன் என் மீதோர் ஆபத்துற வராமலே சுற்றிலும் இருந்து காத்திடுமே என்ற வரிகள்..

இருவினைப் பிறவிக் கடல் மூழ்கி இடர்கள் பட்டு அலையப் புகுதாதே, 

இதயந்தனிலிருந்து க்ருபையாகி இடர்சங்கைகள் கலங்க அருள்வாயே முருகா..

பணியும் அடியார் சிந்தை மெய்ப் பொருள் அது ஆக நவில் சரவணபவா ஒன்றும் வல் கரமாகி வளர் பழநிமலை மேல்  நின்ற சுப்ரமண்யா சரணம்..

முருகன் , குமரன், குகன் என்று மொழிந்து உருகும் செயல் தந்து உணர்வு என்று அருள்வாய் முருகா....

                                                                   முருகா சரணம் 

Monday, 11 September 2017

புதிய வரிசை எண் 491 வழிபாடு புத்தக எண் வரிசை 311




                                     குரு மஹிமை இசை புதிதாக சேர்க்கப்பட்ட பாடல்கள் 

                                                                              (476--503)


                                                         புதிய வரிசை எண்  491 வழிபாடு புத்தக எண்  வரிசை  311

                                                          "பசையற்ற உடல்வற்ற" என்று தொடங்கும் பாடல் 

                                                                   பாடலும் பொருளும் காண குறியீடு

                                                            http://www.kaumaram.com/thiru/nnt0752_u.html

                                                                    தலம் -  விருத்தாசலம்.  சில தகவல்கள் 

 இத்தலம் விருத்தாசலம் நகருக்குள்ளேயே உள்ளது. எளிதில் செல்லலாம். 


இறைவன் - விருத்தகிரீசுவரர், பழமலைநாதர், முதுகுந்தர் - இறைவி - விருத்தாம்பிகை, பாலாம்பிகை, இளைய நாயகி. 


 1000 - 2000 வருடங்கள் பழமை. 


 சுவாமி இங்கு சுயம்பு மூர்த்தியாக எழுந்து அருளி உள்ளார். 

 திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் இவர்களால் தேவாரம் பாடல் பெற்ற தலம். 


பௌர்ணமி கிரிவலம் விசேஷம். 


 தல விருட்சம் வன்னிமரம் 1700 வருடங்கள் பழமையானது. 

இத்தலத்தின் தீர்த்தம் மணிமுத்தாறு ஆகும். 


 ஆழத்து விநாயகர் 18 படி கீழே சென்று வணங்க வேண்டும். 


 சைவ சமயத்தில் 28 ஆகமங்கள் உண்டு. ஆகமங்களின் பெயரோடு சிவ லிங்கங்களை முருகப் பெருமான் பிரதிஷ்டை செய்து பூஜை செய்து உள்ளார். 


வள்ளி தெய்வானை சமேதராய் உள்ள முருகப் பெருமானின் சந்நிதியில் விசேஷ சக்கரங்கள் உள்ளன. 


 இக்கோயிலில் எல்லாமே ஐந்து. மூர்த்திகள், இறைவனின் திருநாமங்கள், ஐந்து விநாயகர், ஐந்து கோபுரம், ஐந்து பிரகாரம், ஐந்து கொடிமரம், ஐந்து உள் மண்டபம், ஐந்து வெளி மண்டபம், ஐந்து தேர், தலத்தின் பெயர்கள் ஐந்து, ஆகும். 


 சிவபெருமான் அளித்த 12000 பொன்னை பரவையாருக்காக சுந்தரர் மணிமுத்தாற்றில் இட்டு, திருவாரூர் குளத்தில் எடுத்தது இத்தலம் தான். 


இத்தலம் காசியை விட வீசம் அதிகம் விருத்த காசி என்று அழைக்கப்படுகிறது. காசியை விட முக்தி அளிப்பவர் இத்தலத்து சிவபெருமான்.


                                                                                   பாடல் இசையுடன் 

                                                                       17.10.2010 விஜய தசமி வழிபாடு 


                                                                                                      

                                                                    Utube  Link for ANDROID  and   IPAD   PHONE

                                                                         https://youtu.be/-k4lcIWbycI


                                                                                               

                                                               U tube  Link for ANDROID  and   IPAD   PHONE 

                                                                      https://youtu.be/ID-BaIwWAmA

                                                                        
                                                                                         அருள் வேண்டல் 

                                                        ( கல்பாத்தி யில் 18.8.2017 அன்று நடைபெற்ற                                                                                                  வழிபாட்டின் ஒரு பகுதி )


                                                                                                            

                                                                    U tube  Link for ANDROID  and   IPAD   PHONE 

                                                                         https://youtu.be/axteg4X6I-M


                                                                                           முருகா சரணம்