திருப்புகழ் வழிபாடு புத்தகத்தில் புதிதாக சேர்க்கப்பாடல்கள்
(476 முதல் 503 வரை )
கதிர்காமம் திருத்தலம்
இத்தலம் இலங்கைத்தீவில் தென் கிழக்கு பாகத்தில் ஊவா மாகாணத்தில்மாணிக்க கங்கை என்னும் நதிக்கரை அமைந்துள்ளது.மூலவர்:ஸ்கந்த முருகன்
கதிர்காமம் கோயில் இலங்கையில் மிகவும் புகழ் பெற்ற புனித பாதயாத்திரை தலம். அங்கு அருள்பாலிக்கும் கந்தனை வழிபடச் செல்வதை கதிர்காம யாத்திரை என்பர். கிட்டதட்ட 2500 ஆண்டுகளுக்கு முன் தமிழ் மன்னனானஎல்லாளனுடனான போரில், சிங்கள மன்னனானதுட்டைகைமுனு இக்கோயிலில் நேர்த்திக்கடன் வைத்ததாகவும், போரில் வென்ற பின்னர், இக்கோயிலில் நேர்த்திக்கடனை நிறைவேற்றியதாகவும் மகாவம்சம்நூலில் குறிப்புகள் உள்ளன. அதேவேளை இக்கோயிலின் வரலாறு அதற்கும் முன்னதான நீண்ட வரலாற்றைக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சில குறிப்புக்கள்
கோயிலின் மூலவர் ஸ்கந்த முருகன்
ஆதிமூல அறைக்குள் பக்தர்கள் செல்ல முடியாது. திரையால் மூடி மறைக்கப்பட்டுள்ளது. இது பரமரகசியமான புனிதத்துவம்மிக்க இடம். காற்றோ, வெளிச்சமோ உட்புகாதமுறையில் சாளரமோ, துவாரங்களோ இல்லாமல் கட்டப்பட்டுள்ளது. இவ்வறைக்கும் மத்திய அறைக்குமிடையே சிறுகதவுண்டு. யாரும் இங்கே செல்லமுடியாது. பூசகர் மட்டும் பக்தி சிரத்தையுடன் செல்வார். பக்தர்கள் தத்தம் காணிக்கைகளை செலுத்துவதற்கு மத்திய அறைக்கு அப்பால் செல்லமுடியாது
பிரசித்தி பெற்ற கதிர்காம வருடாந்த பெருவிழாவின் போது, தாமிரத்திலோ தங்கத்தட்டிலோ எழுதப்பட்ட பரமரகசியமான மந்திர சக்திவாய்ந்த யந்திரத்தைக்கொண்ட வெண்துகிலால் மூடிய பேழையை யானை சுமந்து ஊர்வலம் வரும். விவரிக்க முடியாத சூட்சுமசக்தி எங்கும் நிலவுகிறது. பக்திமேலீட்டினால் சிலர் விழிநீர்மல்கப்பாடி ஆடுகின்றனர். இன்னும் சிலர் உருண்டும் புரண்டும் உடலை வாட்டி வதைத்துத் தம்பாவங்களுக்கெல்லாம் கழுவாய் தேடுகின்றனர்.
வரிசை எண் 6 புத்தக வரிசை எண் 154
ராகம் வசந்தா கண்ட சாபு தக தகிட 1 1 1/2
பாடல்
சரியையா ளர்க்குமக் கிரியையா ளர்க்குநற்
சகலயோ கர்க்குமெட் ...... டரிதாய
சமயபே தத்தினுக் கணுகொணா மெய்ப்பொருட்
டருபரா சத்தியிற் ...... பரமான
துரியமே லற்புதப் பரமஞா னத்தனிச்
சுடர்வியா பித்தநற் ...... பதிநீடு
துகளில்சா யுச்சியக் கதியையீ றற்றசொற்
சுகசொரூ பத்தையுற் ...... றடைவேனோ
புரிசைசூழ் செய்ப்பதிக் குரியசா மர்த்யசற்
புருஷவீ ரத்துவிக் ...... ரமசூரன்
புரளவேல் தொட்டகைக் குமரமேன் மைத்திருப்
புகழையோ தற்கெனக் ...... கருள்வோனே
கரியயூ கத்திரட் பலவின்மீ திற்சுளைக்
கனிகள்பீ றிப்புசித் ...... தமராடிக்
கதலிசூ தத்தினிற் பயிலுமீ ழத்தினிற்
கதிரகா மக்கிரிப் ...... பெருமாளே.
சொல் விளக்கம்
சரியையாளர்க்கும் அக் கிரியையாளர்க்கும் நல் சகல
யோகர்க்கும் எட்ட அரிதாய ...
சரியை மார்க்கத்தில்*இருப்பவர்களுக்கும், அந்தக் கிரியை மார்க்கத்தில் இருப்பவர்களுக்கும்,நல்ல எல்லாவித யோக நிலையில் இருப்பவர்களுக்கும் எட்டுதற்கு
முடியாததும்,
சமய பேதத்தினுக்கு அணுக ஒணா மெய்ப் பொருள் தரு பரா
சத்தியின் பரமான ...
வேறுபட்ட சமயங்களினால் நெருங்கமுடியாததுமான உண்மை ஞானத்தைத் தர வல்ல பராசக்தியினும்மேலானதானதும்,
துரிய மேல் அற்புதப் பரம ஞானத் தனிச் சுடர் வியாபித்த ...
யோகியர் தன்மயமாய் நிற்பதுவும், அதற்கும் மேம்பட்டதான துரியாதீத
நிலையானதும் ஆகி, பரம ஞானத் தனி ஒளியாகப் பரந்துள்ளதாய்,
நல் பதி நீடு துகள் இல் சாயுச்சியக் கதியை ...
சிறந்த இடமாய்,குற்றமில்லாததாய், இறைவனோடு இரண்டறக் கலக்கும் நிலையை,
ஈறு அற்ற சொல் சுக சொரூபத்தை உற்று அடைவேனோ ...
முடிவில்லாததும், புகழப்படுவதுமான பேரின்ப நிலையை, நான்
பொருந்தி அடைவேனோ?
புரிசை சூழ் செய்ப்பதிக்கு உரிய சாமர்த்ய சத் புருஷ ...
மதில்சூழ்ந்துள்ள வயலூருக்கு உரிய வல்லவனே, உத்தமனே,
வீரத்து விக்ரம சூரன் புரள வேல் தொட்ட கைக் குமர ...
வீரமும் வலிமையும் கொண்ட சூரன் புரண்டு விழ, வேலைச் செலுத்திய
திருக்கரத்தை உடைய குமரனே,
மேன்மைத் திருப் புகழை ஓதற்கு எனக்கு அருள்வோனே ...
மேன்மை பொருந்திய திருப்புகழை ஓதுவதற்கு எனக்கு அருள்செய்தவனே,
கரிய ஊகத் திரள் பலவின் மீதில் சுளைக் கனிகள் பீறிப்
புசித்து அமர் ஆடி ...
கருங்குரங்குகளின் கூட்டங்கள் பலா மரத்தின்
மீது இருந்து சுளைப் பழங்களைக் கீறிக் கிழித்து உண்டு சண்டை இட்டு,
கதலி சூதத்தினில் பயிலும் ஈழத்தினில் ...
வாழை மரங்களிலும்,மாமரங்களிலும் நெருங்கி விளையாடும் ஈழ நாட்டில் உள்ள
கதிர காமக் கிரிப் பெருமாளே. ...
கதிர்காம மலையில் வீற்றிருக்கும்பெருமாளே.
* நான்கு பக்தி மார்க்கங்கள் பின்வருமாறு:
1. சரியை: திருக்கோயிலில் அலகு இடுதல், மெழுகுதல், விளக்கு இடுதல், நந்தவனம்
வைத்தல், பூ எடுத்தல், மாலை அமைத்தல், இறைவனை வாழ்த்துதல், திருவேடம் கண்டு
பணிதல். இது 'தாத மார்க்கம் - சாலோகம்'.
2. கிரியை: பூஜை உபகரணங்களை அமைத்து நித்தியக் காரியம் செய்தல்.
இது 'புத்ர மார்க்கம் - சாமீபம்'.
3. யோகம்: புலன்களை அடக்கிப் பிராண வாயுவைச் சலனம் அற நிறுத்தி ஆறு
ஆதாரங்களின் பொருளை உணர்ந்து, சந்திர மண்டல அமிர்தத்தை உடல் முழுதும் நிரப்பி,
முழு ஜோதியை நினைத்திருத்தல். இது 'சக மார்க்கம் (தோழ நெறி) - சாரூபம்'.
4. ஞானம்: புறத் தொழில் அகத் தொழில் இன்றி, அறிவு மாத்திரத்தாலே செய்யும் வழிபாடு
ஞானம். இது 'சன்மார்க்கம் - சாயுஜ்யம்'.
சிவஞான சித்தியார் சூத்திரம்.
உதவி .....கௌமாரம் இனைய தளம் .நன்றிகள் பல.
குருஜியின் குரலில் ஒரு விருத்தம்
குருஜியுடன் இணைந்து அன்பர்கள் பாடியுள்ள பாடல்
வசீகரமான வசந்தா வருடுகிறது இதமாக இதயத்தை!
ReplyDelete