திருப்புகழ் வழிபாடு புத்தகத்தில் புதிதாசேர்க்கப்பட்டுள்ள பாடல்கள்
(476 முதல் 503 வரை )
நம்குருஜியினால்திருப்புகழ் வழிபாடு புத்தகத்தில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள 28 பாடல்களின் தொகுப்பு இசையோடு குறுந்தகடாக சென்னையில் 2013 ல் நடை பெற்ற ஆன்மீக பெரு விழாவில் வெளியிடப்பட்டு ,பிரதிகள் அன்பர்களுக்கு விநியோகிக்கப்பட்டது.ஆனால் மேற்கொண்டு பிரதிகள் மற்ற அன்பர்களுக்கு கிடைக்க வாய்ப்பில்லாமல் போனது.
இதற்கு இடையில் அப்பாடல்கள் முழுவதும் இடம் பெற்ற ஒரு வழிபாடு 17.102010 விஜய தசமி அன்று சென்னையில் குருஜியின் தலைமையில் நடைபெற்றது.அதை அருளாளர் சென்னை G.V. நீலகண்டன் சென்னை வலைத்தளத்தில் அளித்துள்ளார்கள். அதன் குறியீடு
http://www.4shared.com/audio/
மேலும் அப்பாடல்கள் தனித்தனியாக audio வடிவில் ,பல அருளாளர்களின் கடும் உழைப்பினால் உருவான "திருப்புகழ் நவமணி " DVD எண் 1 ல் இடம் பெற்றுள்ளன.
எங்களது பங்காக பாடல்களை ஒவ்வொன்றாக VEDIO வடிவில் அன்பர்களுக்கு அளிக்க பேராவல் கொண்டு,தொடங்குகிறோம்..பாடல்கள் மூலம்,பொருள்,விளக்கங்களுடன் இடம் பெரும்.
பாடல் 1
தலம் ........திருச்செந்தூர்
எ ண் வரிசை 1 புத்ததக எண் 18.
ராகம் .சுத்த தன்யாசி அங்கதாளம் தகிட தகதிமி தகதிமி தகதிமி
71/2 1/2 2 2 2
பாடல் பகுதி 5 ல் தொடங்கி பகுதி 6,7,8 பின் பகுதி 3,4 டன் முடிவு பெறும்
1. உருக்கம் பேசிய நீலியர் காசுகள்
பறிக்குந் தோஷிகள் மோகவி காரிகள்
உருட்டும் பார்வையர் மாபழி காரிகள் ...... மதியாதே
2. உரைக்கும் வீரிகள் கோளர வாமென
வுடற்றுந் தாதியர் காசள வேமனம்
உறைக்குந் தூரிகள் மீதினி லாசைகள் ...... புரிவேனோ
3. அருக்கன் போலொளி வீசிய மாமுடி
யனைத்துந் தானழ காய்நல மேதர
அருட்கண் பார்வையி னாலடி யார்தமை ...... மகிழ்வோடே
4. அழைத்துஞ் சேதிகள் பேசிய காரண
வடிப்பந் தானென வேயெனை நாடொறும்
அதிக்கஞ் சேர்தர வேயரு ளாலுட ...... னினிதாள்வாய்
5. இருக்குங் காரண மீறிய வேதமும்
இசைக்குஞ் சாரமு மேதொழு தேவர்கள்
இடுக்கண் தீர்கன னேயடி யார்தவ ...... முடன்மேவி
6. இலக்கந் தானென வேதொழ வேமகிழ்
விருப்பங் கூர்தரு மாதியு மாயுல
கிறுக்குந் தாதகி சூடிய வேணிய ...... னருள்பாலா
7.திருக்குந் தாபதர் வேதிய ராதியர்
துதிக்குந் தாளுடை நாயக னாகிய
செகச்செஞ் சோதியு மாகிய மாதவன் ...... மருகோனே
8. செழிக்குஞ் சாலியு மேகம ளாவிய
கருப்பஞ் சோலையும் வாழையு மேதிகழ்
திருச்செந் தூர்தனில் மேவிய தேவர்கள் ...... பெருமாளே.
சொல் விளக்கம்
உருக்கம் பேசிய நீலியர் காசுகள் பறிக்கும் தோஷிகள் மோக
விகாரிகள் ... உருக்கமான மொழிகளைப் பேசும் தந்திரம் உள்ளவர்,
பிறரிடமிருந்துப் பொருள் கவரும் குற்றம் உள்ளவர், மோக விகாரம்
கொண்டவர்,
உருட்டும் பார்வையர் மா பழிகாரிகள் மதியாதே உரைக்கும்
வீரிகள் ... உருட்டிப் பார்க்கும் பார்வையர், மிக்க பழிகாரிகள்,
மதிக்காமல் பேசும் அகங்காரம் உள்ளவர்,
கோள் அரவாம் என உடற்றும் தாதியர் ... கொல்ல வருகின்ற
பாம்பு போல வருத்துகின்ற தாசிகள்,
காசளவே மனம் உறைக்கும் தூரிகள் மீதினில் ஆசைகள்
புரிவேனோ ... கிடைத்த பொருளுக்குத் தக்கபடி மனத்தை அழுந்தச்
செலுத்தும் துன்மார்க்கம் உள்ளவர்கள் (இத்தகையோர்) மேலே விருப்பம்
வைப்பேனோ?
அருக்கன் போல் ஒளி வீசிய மா முடி அனைத்தும் தான்
அழகாய் நலமே தர ...
சூரியனைப் போல் ஒளி வீசும் பெருமை மிக்க
இரத்தின கிரீடங்கள் யாவும் காண்பவர்களுக்கு அழகாக விளங்கும்
நன்மையே வழங்க,
அருள் கண் பார்வையினால் அடியார் தமை மகிழ்வோடே
அழைத்தும் சேதிகள் பேசிய காரண ...
அருள் கண் பார்வை
கொண்டு அடியார்களை மகிழ்ச்சியுடன் அழைத்தும், அவர்களுடன்
விஷயங்களைப் பேசியும் இருந்த மூலப் பொருளே,
வடிப்பம் தான் எனவே எனை நாள் தொறும் அதிக்கம் சேர்
தரவே அருளால் உடன் இனிது ஆள்வாய் ..
. திருந்திய குணம்உள்ளவன் தான் இவன் என்று என்னை தினமும் மேன்மேலும்
சிறப்புறும் வண்ணம் உனது திருவருளால் இப்பொழுதே
இனிமையுடன் ஆண்டருள்வாயாக.
இருக்கும் காரணம் மீறிய வேதமும் இசைக்கும் சாரமுமே
தொழு தேவர்கள் இடுக்கண் தீர் கனனே
... ரிக்கு வேதமும்,காரணங்களைக் கடந்து நிற்கும் தனிச் சிறப்புடைய (தமிழ்) வேதமும்
(தேவாரமும்), அவற்றுள் மறைந்து கிடக்கும் உட்கருத்துக்களைக்
கூறும் வேதசாரமாகிய ஆகமங்களும் தொழுகின்ற தேவர்களின்
துன்பம் தீர்க்கின்ற பெருமை வாய்ந்தவனே,
அடியார் தவமுடன் மேவி இலக்கம் தான் எனவே தொழவே
மகிழ் விருப்பம் கூர் தரும் ஆதியுமாய் .
.அடியார்கள் தவநெறியில் நின்று இவரே நமது குறிப் பொருள் என்று தொழவே,
மகிழ்ந்து விருப்பம் மிகக் கொள்ளும் முன்னைப் பழம் பொருளாய்
நிற்பவனே,
உலகு இறுக்கும் தாதகி சூடிய வேணியன் அருள் பாலா ..
.
உலகங்களை எல்லம் சம்ஹாரம் செய்பவரும், ஆத்தி மலரைச் சூடிய
சடையை உடையவருமாகிய சிவபெருமான் அருளிய குழந்தையே,
திருக்கும் தாபதர் வேதியர் ஆதியர் துதிக்கும் தாள் உடை
நாயகன் ஆகிய
முன்று காலங்களையும் காண வல்ல தவ
சிரேஷ்டர்கள் வேதியர் முதலானோர் வணங்கும் திருவடிகளை
உடைய பெருமானாகியவரும்
செகச் செம் சோதியும் ஆகிய மாதவன் மருகோனே .
..
உலகுக்குப் பேரொளியாய் விளங்குகின்றவரும் ஆகிய திருமாலின்
மருகனே,
செழிக்கும் சாலியும் மேகம் அளாவிய கருப்பம் சோலையும்
வாழையுமே திகழ்
செழிப்புள்ள நெற் பயிரும் மேகத்தை எட்டி
வளர்ந்துள்ள கரும்புச் சோலையும் வாழை மரங்களும் பொலிகின்ற
திருச்செந்தூர் தனில் மேவிய தேவர்கள் பெருமாளே.
.
திருச்செந்தூரில் வீற்றிருக்கும், தேவர்களின் பெருமாளே.
பாடல் இசை வடிவில்
முருகா சரணம்
r
செந்தூர் குமரன் புகழ் கூறும் சுகமான சுத்த தன்னியாசி !
ReplyDelete