Friday, 13 March 2015

                                               மயில் வகுப்பு 


                                                    
  



முருகனின் மயில் பிரணவ மந்திர ரூபம்.

   ஆன தனி மந்திர ரூப நிலை கொண்டது ஆடு மயில் ..

... என்பார் அருணகிரியார் சோலைமலைத் திருப்புகழில்.
('வாதினையடர்ந்த' - பாடல் 1318).

விந்து சக்தியாகிய சகல ஒலிக்கும்/ஒளிக்கும் மூலகாரணமாகிய மஹாமாயையே மயில். மாயை அகல வேண்டும் என்றால் நாம் மயிலை போற்ற
வேண்டும். அது மாயையை நீக்கிவிடும். வினை ஓடிவிடும் கதிர் வேலால்.
மாயை நீங்கும் மயிலால்.                                    


விந்து தத்துவம்தான் மயில் உருவத்தில் தன் ஆற்றலை வெளிப்படுத்தியது, 


மயிலின் பெருமையை ,மகத்துவத்தை மயில் விருத்தங்களில் 

" இமையகிரி குமரிமகன் ஏறுநீ லக்ரீவ   ரத்னக் கலாப மயில்...,படைநிருதர் கடகம் உடை பட நடவு பச்சைப்   பசுந்தோகை வாகை மயில்,...கல்லாரகிரி உருக வரு கிரண மரகத   கலாபத்தில் இலகு மயில்....,முருகன் உமை குமரன் அறுமுகன் நடவு விகட தட   மூரிக் கலாப மயில், .....வேலும் மயிலும் துணைஎன்கிற மகாமந்திரத்தின் பொருளாகநின்று அதை ஜெபிக்கும்அடியார்களுக்குவேண்டிய வரங்களைக் கொடுக்கும் வெற்றி மயில்,.....

கொடிய நிசிசரர் உதரம் எரி புகுத விபுதர் பதி  குடி புகுத நடவு மயில்...துரக கஜ ரத கடக விகட தட நிருதர் குலதுஷ்டர் நிஷ்டூர மயில்,...வரை அசைய உரகபிலம் அசைய எண் திசை அசைய   வையாளி ஏறு மயில் "என்று பலவாறாக 
முன்னரே படித்து அனுபவித்தோம்.

ராக மாலிகையில்  அமைந்துள்ள இந்த மயில் வகுப்பு விந்து தத்துவமான மயிலின் ஆற்றலைக் கூறுவது.அதோடு பாகவதம்.ராமாயணம்,மன்மத தகனம் முதலிய புராண நிகழ்வுகளிலும் பங்குகொண்டுதன்சக்தியைவெளிப்படுத்தியது,ஆணவம்கொண்டராகு,கேது,கருடன்,பிரம்மாவின் வாகனமாக வும்,கொடியாகவும் விளங்கும் அன்னம் முதலியோரின் கொட்டத்தை அடக்கி அமைதியை நிலை நாட்டியது மற்றும் பல தத்துவ உபதேசங்களை வெளிப்படுத்தியதை அருளாளர் திருப்புகழ் அடிமை நடராசன் சார் மிக அருமையுடன் விளக்குகிறார். பார்ப்போம். 


புராணக்கதைகள் பல இடம் பெற்றிருப்பதால் விளக்கஉரைநீண்டுள்ளதுஅன்பர்கள்பொறுமையாக படித்து அனுபவிக்க  வேண்டுகிறோம்.                                                                                                    
                                      பாடல்

ஆதவனும் அம்புலியும் மாசுறவி ழுங்கியுமிழ்
    ஆலமரு வும்பணியி ரண்டும் அழுதே

ஆறுமுகன் ஐந்துமுகன் ஆனைமுகன் எங்கடவு
    ளாமெனமொ ழிந்தகல வென்று விடுமே  ...... 1

ஆர்கலிக டைந்தமுது வானவர்அ ருந்தஅருள்
    ஆதிபக வன்துயில்அ நந்தன் மணிசேர்

ஆயிரம் இருந்தலைக ளாய்விரிப ணங்குருதி
    யாகமுழு துங்குலைய வந்த றையுமே  ...... 2

வேதமுழு தும்புகல் இராமன் ஒரு தம்பிமிசை
    வீடணன் அருந்தமையன் மைந்தன் இகலாய்

வீசும்அர வஞ்சிதறி யோடவரு வெங்கலுழன்
    மேல்இடி எனும்படிமு ழங்கி விழுமே  ...... 3

மேதினிசு மந்தபெரு மாசுணம யங்கநக
    மேவுசர ணங்கொடுல கெங்கு முழுமெ  ...... 4

வேலியென எண்டிசையில் வாழும்உர கந்தளர
    வேஅழலெ னுஞ்சினமு டன்ப டருமே  ...... 5

போதினில் இருந்தகலை மாதினைம ணந்தவுயர்
    போதனை யிரந்துமலர் கொண்டு முறையே

பூசனைபு ரிந்துகொடி யாகிமகிழ் ஒன்றுதுகிர்
    போல்முடிவி ளங்கவரும் அஞ்சம் அடுமே  ......6

பூதரொடு கந்தருவர் நாதரொடு கிம்புருடர்
    பூரணக ணங்களொடு வந்து தொழவே

போரிடுவ வென்றுவெகு வாரணக ணங்களுயிர்
    போயினம் எனும்படிஎ திர்ந்து விழுமே  ...... 7

கோதகலும் ஐந்துமலர் வாளிமத னன்பொருவில்
    கோலவுட லங்கருகி வெந்து விழவே

கோபமொடு கண்டவிழி நாதர் அணி யும்பணிகள்
கூடிமனம் அஞ்சிவளை சென்று புகவே

கூவியிர வந்தம்உணர் வாழியென நின்றுபொரு
    கோழியொடு வென்றிமுறை யும்ப கருமே  ......8

கோலமுறு செந்தில்நகர் மேவுகும ரன்சரண
    கோகனதம் அன்பொடுவ ணங்கு மயிலே.  ...... 9

                                   

                              ......... பதவுரை .........  

ஆதவனும் அம்புலியும் மாசுற விழுங்கி உமிழ்


 வெயில் பரப்பும் சூரியனும் தண்மை வரிக்கும் சந்திரனும் களங்கம் அடைய வாயில் இட்டு மீண்டும் கக்கும் குணம் அடை
 ஆலமரு வும்பணியி ரண்டும் அழுதே

விடம் பொருந்திய இராகு கேது எனும் இரு பாம்பு உருவ கோள்களும் அலறி அழுது,

ஆறுமுகன் ஐந்துமுகன் ஆனைமுகன் எம் கடவுள் 

 ஆறுமுகப் பரமன், ஐம்முகச் சிவன், யானை முகக் கணபதிகள் எமது வழிபடு தெய்வங்கள்,

ஆம் என மொழிந் அகல வென்று விடுமே ..


நிச்சயமாக சொல்கிறோம் என்று கூறி வழி விலகி ஓட ,முனைப்பு அகல வென்று ,அவர்கட்கு உயிர் பிச்சை தரும்.

இராகு கேது வரலாறு:

விமல காசிபர் மகன் விப்ர சித்தி. அவன் சிமிக்கை என்பாளை மணந்து இராகு, கேது எனும் இருவரைப் பெற்றனர். திருமால் மோகினி உருவம் கொண்டு அமரர்க்கு அமுது பகிர்தளித்த காலத்தில் இராகு தேவ உருவம் கொண்டு சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே அமர்ந்து புத்தமிர்தம் வாங்கிப் புசித்தனர். மேலோர் உண்பதற்கு முன் உண்ணலும் உண்பதற்கு முன் கொள் அனுட்டானங்கள் இன்மையும் அசுர சாயலை உடைய இராகுவை சந்திர சூரியர் கண்டு திருமாலுக்கு அதை சமிக்கையால் உணர்த்தினர். உடனே அப்பெருமான் சட்டுவத்தால் அடித்து ராகுவின் தலையை நிலத்தில் தள்ளினார். 

அமுதுண்டு இறவாத தன்மை எய்திய அத்தலை இராகு எனவும், உடல் கேது எனவும் பெயர் பெற்றனர். உடன் பிறந்தவன் பெயர் கேது. அதே பெயர் தலையுடன் ஒன்றிப் பிறந்த கேதுவுக்கும் உரியதாயிற்று.

அதன் பின் இராகுவும் கேதுவும் பெரும் தவம் செய்து திருமால் அருளால் கரும்பாம்பு - செம்பாம்பு உருவாயினர். தம்மைக் காட்டித் தந்த காரணத்தால் மகத்தான பகை கொண்டு சந்திர சூரியர் ஆட்சியை மறைப்பதுவே தொழிலாகக் கொண்டனர். சாயாக் கிரகங்களான இவர்களது தொல்லை தாங்காத சந்திர சூரியர் அவர்கள் தம்மை பிடிக்க வரும் காலத்தில் சண்முக நாமம் ஜெபிக்கின்றனர்.

 ஜெபத்தின் முடிவில் விந்துத் தத்துவம் மயில் உருவமாக  வெளிப்படுகிறதுஅதைக் கண்டதும் பல்லில் விஷமுடைய பாம்புகட்கு அச்சம் மனதில் அதிகரிக்கின்றது. உடனே, ஆறுமுகச் சிவனார் என் தெய்வம், ஐந்துமுகச் சிவனார் எம் இறைவர், கணபதி எம் கடவுள், வாய்மையே எங்கள் வார்த்தை - என வினயமோடு விளம்பி ஒதுங்கிச் செல்ல, அவைகட்கு உயிர் பிச்சை அளித்து வாகை மாலை சூடும் மயில் என்றபடி.

ஆறுமுகன் சடாக்சரன், ஐந்து முகன் பஞ்சாட்சரன், ஆனைமுகன் ஏகாட்சரன் என்க. அதன்படி சூரிய சந்திர கிரண காலங்களில் ஷடாச்சர, பஞ்சாட்சர, ஏகாட்சர ஜெபம் செய்தால் கிரகண பீடை நீங்கும்

                          ......... பதவுரை .........  

ஆர்கலி கடைந்து அமுது வானவர் அருந்த அருள் 

. நிறைந்த பாற்கடலைக் கடைந்து அமரர் அமுது உண்ண உதவிய


ஆதி பகவன் துயில் அநந்தன் மணி சேர் ...

திருமால் துயில் கொள்ளும் படுக்கையான ஆதிஷேடனின் மாணிக்கங்கள் உடைய


ஆயிரம் இரும் தலைகளாய் விரி பணங்குருதி ஆக ...
 வன்மை உள்ள 1000 தலைகளில் இருந்து மலரும் 1000 படங்களும் குருதி குளம்பு மயமாக

முழுதும் குலைய வந்து அறையுமே
 ..
 அப்பாம்பின் உடல் முழுதும் நெறிய வந்து மோதும்.

ஆயுள் நீட்டிக்க உதவுவது அமுதம். கடல் கடைந்து அதை அமரருக்கு அருளியவர் ஆதிமூலர். அப்பெருமானது அயர்வு அகற்றி அரி துயில் கொள்ள அவருக்கு தனது உடலை உதவுகிறான் ஆதிசேடன்.அது மட்டுமல்லாமல்

  - நடந்தால் குடையாக , அமர்ந்தால் சிங்காசனமாக , நின்றால் திருவடியாக  நீள் கடவுள் என்றும் புனையான், மணிவிளக்கான் பூம்பட்டான், புங்கும் அணையான் திருமாலுக்கு அரவு - என்று பொய்கையார் கூறும்

புனிதத் திருப்பணி அளவிலாது செய்தலின் ஆதிசேடன் அநந்தன் எனும் பெயர் எய்தினான். இத்துடன் பூமியைத் தாங்கும் புனித நலமும் பெற்றான். இதனால் உலகம் அவனை உவந்து புகழ்ந்தது. முதிர்ந்த புகழ்ச்சி கர்வத்தை அளித்தது. அந்த முனைப்பு அகில தலத்தையும் அமைதி இன்றி கலங்கச்செய்தது  

அந்நிலையில் அமைதியைவிளைவிக்க விந்துதத்துவமயில் பாம்பின் உடல் முழுவதும் நெறிய வந்து மோதியது 

                        ......... பதவுரை .........  

வேதம் முழுதும் புகல் இராமன் ஒரு தம்பி மிசை


... எல்லா வேதங்களும் துதிக்க இராமபிரானின் ஒப்பற்ற தம்பியாகிய இலட்சுமணன் மேல்

வீடணன் அரும் தமையன் மைந்தன் இகலாய் ..


அருமையான விபீடணனின் தமையனாகிய இராவணனது மகனாகிய இந்திரஜித்து பகை மிகுந்து

வீசும்அரவம்சிதறிஓடவருவெம்கலுழன்மேல்


.. விட்ட நாக கணை சிதறுண்டு ஓடி ஒழிய உவந்து வந்த உக்ரமான கருடன் மேல்

இடி எனும்படிமு ழங்கி விழுமே


... இடி என்று சொல்லும்படி பெரும் முழுக்கம் செய்து மேல் வந்து மோதும்

(இராமன் தம்பி மேல் விபீடணன் அண்ணன் மகன் அரவாஸ்திரம் விட்டான். அதனால் இராமன் முதல் அனைவரும் அளவிலா கவலை அடைந்தனர். இதை அறிந்த விண்ணவர் வேண்ட வெளியேறினான் கருடன். அவன் வருகையைக் கண்டதும் பாம்பு அஸ்திரம் அச்சம் மிகுந்து இருந்த இடம் தெரியாதபடி ஓடி ஒளிந்தது. அதன் பின் லட்சுமணன் உயிரப்புடன் எழுந்தான், இராமனாதியர் மகிழ்ந்தனர். பல்லாண்டு இமையவர் பாடினர். இந்நிலையை நினைத்து கர்வமடைந்தான் கருடன். இந்த கர்வம் உலகம் அனைத்திற்கும் துன்பத்தை தந்தது. கதறியது உலகம். குறிப்பறிந்த பிரணவம்  மயிலாகி வந்தது. கர்ஜித்து மோதியது. கருடனை அவ்வளவில் செருக்கை அடக்கியது. திருந்தினான் கருடன். உய்ந்தது உலகம்

             ......... பதவுரை .........  

மேதினி சுமந்த பெரு மாசுணம் மயங்க 

... 
உலகைத் தாங்கிய பெரிய பாம்பான ஆதிசேடனுடைய அறிவு நிலை குலைய

நக மேவு சரணம் கொடு உலகெங்கும் உழுமெ


நகங்களை உடைய பாதங்களைக் கொண்டு உலகம் முழுவதையும் கிளறி உழுதலைச் செய்யும்.

(வனைந்த உலகங்கள் அனைத்தையும் காக்க வலம் வருகின்றது மயில். அதன் பாதங்களில் உள்ள வலிமையான நகங்கள் நிலத்தை ஏர் போல் உழுகின்றன. அந்த அதிர்ச்சியால் ஆதி சேடனின் தலைகள் அதிர்கின்றன என்றும் உயிர்கள் நிலத்தில் வித்து இட்டு விளைவு மிக வழி செய்கின்றது .


                                ......... பதவுரை .........  

வேலி என எண் திசையில் வாழும் உரகம் தளரவே 


உலகிற்கு இட்ட வேலி போல் எண் திசையிலும் வாழ்கின்ற எட்டு நாகங்களும் உடலும் உள்ளமும் பெரும் தளர்ச்சி அடையும்படி,

 அழல் எனும் சினமுடன் படருமே


 மூங்கிலில் எழும் காட்டுத் தீ என  எண்ணும்படியான கோபக் கொதிப்புடன் பவனி வரும்.

( "எண்திசைகளைவரைஅறுத்தோம்நாம்...தாங்குகின்றோம் நாம், இல்லாவிட்டால் உலகம் நிலை குலையும்"... என்ற பாம்புகளின் செருக்கை (கர்வம்)அடக்கிய செய்தி இது).

                      ......... பதவுரை .........  

போதினில் இருந்த கலை மாதினை மணந்த


 ... வெண் கமலத்தில் வீற்றிருந்த கலை மகளை மணந்து கொண்ட,


போதனை யிரந்துமலர் கொண்டு முறையே


உயர்ந்த புத்தியுள்ள பிரமனைக் குறை இரந்து (சொல்லி)மலர் 

பூசனைபு ரிந்துகொடி யாகிமகிழ் ஒன்று
மலர் பறித்து விதிப்படி அர்ச்சித்து வழிபட்டு அதன் பயனாக அப்பிரமனுக்குக் கொடியாக விளங்கி, மகிழ்ச்சி பொருந்தும்

துகிர் போல் முடி விளங்க வரும் அஞ்சம் அடுமே

பவளம் போல் உச்சிக் கொண்டை விளங்க வெளி வருகின்ற அன்னத்தைத் தண்டிக்கும்.

உலகத்தையே  படைக்கும் பிரம்மாவுக்கே வாகனமாகவும் ,கொடியும் ஆனேன் எனும் செருக்கு மிகுந்து  "நீ எனக்கு எம்மாத்திரம்"என்று எதிர்த்த அன்னத்தை, நம் மயில் சத்திய லோகம் வரை சென்று தண்டித்தது.

                              ......... பதவுரை .........  

பூதரொடு கந்தருவர் நாதரொடு கிம்புருடர்

பூத கணங்களுடன் கந்தர்வர்கள் நவநாத சித்தர்கள் கிம்புருடர்கள்
பூரண கணங்களொடு வந்து தொழவே

பதிணென் கணங்களுடன் வந்து வணங்க
போரிடுவ என்று வெகு வாரண கணங்கள்

அவர்களிடம் போர் செய்து தடை விளைவிப்பம் என்று கருதி அளவிலா யானைகள்

உயிர்போயினம் எனும்படி எதிர்ந்து விழுமே

உயிர்ப்பு ஒழிந்தோம் என பிளிறும்படி அவைகளை எதிர்த்த மோதும்.
(வாழ வல்ல கந்தர்வர் இசை வழிபாட்டில் பூத கணத்தவர்கள் கலந்து கொள்வர். பதநாதம், அபரநாதம், பரஅபரநாதம் எனும் மூன்று நாதங்களிலும் லயித்திடுவார்கள் நவ நாதர்கள். அவர்களுடன் மனித முகமும் கொண்ட கிம்புருடர்கள் எப்போதும் நயந்து நிற்பர். பின் நின்றவர் பதிணென் வகை தேவஜாதியர். இவர்களைவரிசைப்படஇந்தஅடிநினைவுறுத்தும் அழகை உணர்க.

அமல முருகனை இவர்கள் வழிபட ஆரம்பிக்கும் போதெல்லாம் ஐம்புலக்களிறுகளின் எதிர்ப்பை எழுப்பி வழிபடுதலைத் தடை படுத்தும்

.
அச்சமயம் நோக்கி விந்துத் தத்துவமான மயில் வெளியாகும். வீரிடும்படி புலக்களிறுகளை மோதி பக்தர்களைக் காக்கும்                                                                 ......... பதவுரை .........  

கோதகலும் ஐந்துமலர் வாளி மதனன்பொருவில்


... குற்றம் அகன்ற ஐந்து மலர்களை உடைய மன்மதனது நிகரற்ற
கோல உடலம் கருகி வெந்து விழவே

அழகிய உடல் வெந்த தீய்ந்து போகும் வண்ணம்,
கோபமொடு கண்டவிழி நாதர் அணியும் பணிகள்(பாம்புகள் )

உக்ர நோக்கம் செய்த அருள் நாத வடிவினரான சிவனார் அணிந்துள்ள ஆபரணங்கள் ஆகிய பாம்புகள்
கூடி மனம் அஞ்சி வளை சென்று புகவே

ஒருங்கு சேர்ந்து உள்ளம் பயந்து வளையில் ஓடி ஒளியும்படி
கூவி இரவு அந்தம் உணர் வாழி என நின்று

கொக்கரக்கோ எனும் பெரும் குரல் எழுப்பி கூவி இரவின் முடிவை உணர்த்தி உயிர்கள் அதனால் வாழ்க என் கூறி நிமிர்ந்து நின்று
பொரு கோழியொடு வென்றி முறையும் பகருமே

 அறியாமையை மோதும் சேவலுடன் தனது வெற்றி முறைகளை விரிவாக எடுத்துச் சொல்லும்.

ஆணவ இருள் விலகும் காலம் அண்மையில்  உள்ளது. அகக் கண் திறந்து சிவ சூரியனை தரிசிக்க சித்தமாய் இருங்கள். வாழும் வழி இது என்று சேவலான நாதத் தத்துவம் செய்தி உரைத்து ஆசியும் செய்கிறது.

அதே சமயத்தில் வித்தக ஞான விமல சூரியனை இதோ கொணர்கிறேன் நான் என்று விந்துத் தத்துவமான மயில் தன் வெற்றி விருதையும் நினைவுறுத்துகிறது என்பது இங்கு போந்த பொருள்.

குற்றமற்ற மலர்களைக் கொடுங் கணைகளாக்கி தன்னைக் கோலம் செய்வதிலேயே நோக்குடைய மாமதம் பிடித்த மன்மதன் பலம் சாம்பலாகும்படி உறுத்து நோக்கியது யோக சிவம். அதன் பின் திருமேனி அணிகளான பாம்புகள், சேவல் குரல் கேட்டு ஓடி வலையில் ஒளிந்தன

பாம்பு உருவ குண்டலிகள் அருள் நாதம் எழும் சமயம் அஞ்சி இடம் விட்டு அகலும் என்ற குறிப்பை நினைவு  கூறலாம்.

                    ......... பதவுரை .........  

கோலமுறு செந்தில் நகர் மேவு குமரன்


 அழகிய திருச்செந்தூரில் விரும்பி எழுந்தருளிய குமரப்பரமேஸ்வருடைய


சரண கோகனதம் அன்பொடு வணங்கு மயிலே


திருவடித் தாமரைகளை அன்புடன் வணங்கும் மயிலே.

மயிலேறும் குமரன் மலரடிக்கே அடைக்கலம்.


                      திரு நடனம் புரியும் மயில்.

இவ்வளவு ஆற்றலும் ,வலிமையையும் வாய்ந்த மயில் சங்கீதத்திலும் ,நடனத்திலும் குறைந்ததா என்ன?


சங்கீதத்திற்கு ஆதாரமான, 'சட்ஜம்', 'ரிஷபம்', 'காந்தாரம்', 'மத்யமம்','பஞ்சமம்', 'தைவதம்' எனப்படும் ஆறு சுரங்களும் முருகப்பெருமானின்
ஆறுதிருமுகங்களிலிருந்துதோன்றியவைகளாகும். 

ஏழாவது சுரமாகிய'நிஷாதம்' முருகப் பெருமானின் வாகனமாகிய மயிலிலிருந்து தோன்றியது.

சமீபத்தில் திருவனந்தபுரத்தில் நடந்த வழிபாட்டில் அன்பர்களின் பாடலுக்கு ஏற்ப மயில் திரு நடனம் புரிந்ததாக செய்திகள் வந்துள்ளன.

இப்போது ஆடும் பரியாகிய மயிலின் திரு நடனத்தை குருஜி இசைக்கும் மயில் வகுப்பு பாடலுடன் ரசிப்போம்.
உதவி..அருளாளர் ஐயப்பன் 





மற்ற வகுப்புக்கள் தொடரும் 

முருகா சரணம்.











No comments:

Post a Comment