புய வகுப்பு
ராக மாலிகையில் அமைந்துள்ள இந்த வகுப்பு பெருமானின் பொற் புயங்களின் மகிமையை விவரிக்கின்றன.
அருளாளர் திருப்புகழ் அடிமை நடராசன் சாரின் விளக்க உரை கேட்போம்.
இறை பணியாக வெளியிட்டுள்ள கௌமாரம்இணை தளத்துக்கு நன்றிகள் பல
யமுனா கல்யாணி ராகத்தில் அமைந்துள்ள
முதல் பகுதியைப்பார்ப்போம்
இந்த வகுப்பிற்கு அச்சாரமாய் அமைந்தது திருப்புகழில் காணப்படும் கீழ் கண்ட வரிகளே.
சந்தாரம் சாத்தும் புய இயல்
கந்தா எனும் ஏத்தும்படி
மங்காதிங் காக்கும் - திருப்புகழ் (பொதுப்பாடல்கள்)
முற்றிய பன்னிரு தோளும்
செய்ப்பதியும் வைத்து உயர் திருப்புகழ் செப்பு என
பக்கரைவி சித்ர - திருப்புகழ்
இன மயிலோன் புய வகுப்பையும் திருப்புகழையும் பாட அருளியதால் தோன்றிய பாடல் இது. அலங்காரத்தில் முன்பு செய்த பழிக்குத் துணை பன்னிரு தோளும் என மந்திர ஆணை வந்திருந்ததால் இவ்வகுப்பின் பாராயண பயன் சஞ்சித வினையின் நீக்கம் என்பதில் ஐயம் இல்லை.
பாடல்
வசைதவிர் ககன சரசிவ கரண மகாவ்ருத
சீல சால வரமுநி சித்தரை
அஞ்சல் அஞ்சல் என்று வாழ்வித் துநின்றன ...... 1
மணிவட மழலை உடைமணி தபனிய நாணழ
காக நாடி வகைவகை கட்டும
ருங்கு டன்பொ ருந்து ரீதிக் கிசைந்தன ...... 2
வருணித கிரண வருணித வெகுதரு ணாதப
சோதி யாடை வடிவுபெ றப்புனை
திண்செ ழுங்கு றங்கின் மேல்வைத் தசைந்தன ...... 3
வளைகடல் உலகை வலம்வரு பவுரி வினோதக
லாப கோப மயில்வத னத்துவி
ளங்கும் அங்கு சங்க டாவிச் சிறந்தன ...... 4
வரைபக நிருதர் முடிபக மகர மகோததி
தீயின் வாயின் மறுகவி திர்த்தயில்
வென்றி தங்கு துங்க வேலைப் புனைந்தன ...... 5
மதியென உதய ரவியென வளைபடு தோல்வி
சால நீல மலிபரி சைப்படை
கொண்டு நின்று ழன்று சாதிக்க முந்தின ...... 6
மனகுண சலன மலினமில் தூியஅ தீதசு
காநு பூதி மவுனநி ரக்ஷர
மந்தி ரம்பொ ருந்தி மார்பிற் றிகழ்ந்தன ...... 7
வகைவகை குழுமி மொகுமொகு மொகென அநேகச
மூக ராக மதுபம்வி ழச்சிறு
சண்ப கஞ்செ றிந்த தாரிற் பொலிந்தன ...... 8
பதவுரை
வசைதவிர்ககன சரசிவ கரண மகாவ்ருத
சீல சால வரமுநி சித்தரை
அஞ்சல் அஞ்சல் என்று வாழ்வித் துநின்றன ......
குற்றம், பழிச் சொல் ஆகியவற்றை அறவே நீக்கியவர்களும், விண்ணில் சஞ்சரிபவர்களும் ஆன, சிவ தியானம் நிறைந்த, சிறந்த ஒழுக்கம் வாய்ந்த புண்ணிய ஆத்மாக்களும், அளவற்ற வரங்களைப் பெற்றவர்களும் ஆன, தவசிகளான சித்த புருசர்களை பயப்படாதீர்கள், அச்சம் வேண்டாம் என அடைக்கலம் கொடுத்து, அவர்களுக்கு சிறஞ்சீவி வாழ்வு கொடுத்து துணையாக நின்றன -
(முருகனின் வாகைப் புயங்களே).
(ககன சர - பிரமனின் மானச புத்திரர்களான வால கல்யர் எனும் 60,000 தவ சிரேஷ்டர்கள். அவர்கள் கட்டை விரல் பரிமாணமே உடையவர்கள். சூரியனின் அதி தீவரமான ஒளி பூ உலகின் மேல் பாய்வதால் எவராலும் தாங்க முடியாது என்று ஆதித்தனின் பவனியின் போது அவனின் தேரைச் சுற்றி சுற்றி வந்து கேடயம் போல தொழில்படுவார்கள். அவர்கள் காற்றையே உணவாகக் கொள்வார்கள். ஆகாயத்தில் சஞ்சரிக்கும் இந்த சீலம் மிக்க தேவ ரிஷிகள் சூரிய வெப்பத்தால் இன்னல் உறாதபடி முருகனின் ஒரு கரம் அவர்களைக் காப்பாற்றி சிறஞ்சீவி பதவியைக் கொடுக்கிறது).
திருமுருகாற்றுபடை: விண் சலன் மரபின் (ஐயர்க்கு ஏந்தியது ஒரு கை).
பரிமேல் அழகர் உரை - ஞாயிற்றின் வெம்மையை பல்லுயிரும் பொருத்தல் ஆற்றா எனக் கருதி தமது அருளால் சுடரோடு திரிந்து அவ்வெம்மையை பெறுக்கின்ற முனிவரைப் பாதுகாக்கவே ஒரு கை.
மணிவட மழலை உடைமணி தபனிய நாணழ
காக நாடி வகைவகை கட்டும
ருங்கு டன்பொ ருந்து ரீதிக் கிசைந்தன ...... 2
......... பதவுரை .........
ரத்ன சரம் மெல்லிய ஓசை எழுப்பும் இடுப்பில் கட்டிய மணி மாலையும் (மொழி புகலும் உடை மணியும்) பொன்னொளி வீசும் அரை ஞாண் இவைகளை மிகவும் விரும்பி வித விதமாகக் கட்டியுள்ள இடுப்பில் சேரும் முறைக்கு ஒத்ததாக விளங்கின -
(முருகனின் வாகைப் புயங்களே).
திருமுருகாற்றுபடை: உக்கம் சேர்த்தியது ஒரு கை.
பரிமேல் அழகர் உரை - ஒரு கையும் ஒரு தொழிலைச் செய்தலின் ஏனைய கை தொழில் இன்றி மருங்கில் கிடந்தது.
வருணித கிரண வருணித வெகுதரு ணாதப
சோதி யாடை வடிவுபெ றப்புனை
திண்செ ழுங்கு றங்கின் மேல்வைத் தசைந்தன ...... 3
......... பதவுரை .........
விவரித்துச் சொல்லத் தக்க ஒளி வீசும் சிவந்த நிறம் மிக்க உதய சூரியனின் பிரகாசத்தைக் கொண்ட உடையை அழகுடன் அணிந்துள்ள வலிமையான செழிப்பான தொடையின் மேல் வைக்கப்பட்டு அசைந்தன -
(முருகனின் வாகைப் புயங்களே).
திருமுருகாற்றுபடை: நலம் பெறு கலிங்கத்து குறங்கின் மிசை அசையிய ஒரு கை.
வளைகடல் உலகை வலம்வரு பவுரி வினோதக
லாப கோப மயில்வத னத்துவி
ளங்கும் அங்கு சங்க டாவிச் சிறந்தன ...... 4
......... பதவுரை .........
சமுத்திரத்தால் சூழப்பட்ட பூமியை வலமாக சுற்றி சுற்றி மண்டலமிட்டு வந்த அதிசயச் செயலைக் கொண்டதும் தோகை மிகுத்துள்ளதும் ஆன உக்ரமான மயிலின் முகத்தில் ஒளி வீசும் யானைத் தொட்டியை செலுத்தி மேன்மையாக விளங்கின -
(முருகனின் வாகைப் புயங்களே).
திருமுருகாற்றுபடை: அங்குசம் கடாவ ஒரு கை
கோப மயில் - கொடும் கோபச் சூர் மயிலாக மாறியதால் கோப மயில் என்கிறார்.
போரில் செலுத்தும் போது மயிலுக்கு அங்குசம் உண்டு என்பதை கந்த புராணம், கடுகு சமர் அங்சம் சேர் கை என்கிறது.
வரைபக நிருதர் முடிபக மகர மகோததி
தீயின் வாயின் மறுகவி திர்த்தயில்
வென்றி தங்கு துங்க வேலைப் புனைந்தன ...... 5
......... பதவுரை .........
க்ரவுஞ்சம், எழு கிரிகள் பிளவு பட, அசுரர்களின் முடிகள் சிதறுண்டு விழ, மகர மீன்கள் நிறைந்துள்ள பெரும் கடல் நெருப்பிடையே கலங்க, அசைத்து கூர்மையும் வெற்றியும் நிலைபெற்றுள்ள பரிசுத்தமான வேலாயுதத்தை அலங்காரமாக ஏந்தி நின்றன -
(முருகனின் வாகைப் புயங்களே).
மதியென உதய ரவியென வளைபடு தோல்வி
சால நீல மலிபரி சைப்படை
கொண்டு நின்று ழன்று சாதிக்க முந்தின ...... 6
......... பதவுரை .........
சந்திரன் போலவும் இளம் சூரியன் போலவும் வட்ட வடிவமுடன் ஒளி வீசுவதாய் தோலால் செய்யப்பட்டு அகன்றுள்ளதாய் கருமை நிறத்துடன் உள்ள கேடயம் எனும் ஆயுதத்தை ஏந்தி நின்று சுழற்றி சுழற்றி வெற்றியை அடைய முற்பட்டு விளங்கின -
(முருகனின் வாகைப் புயங்களே).
முருகன் அந்தண்மறை வேள்விக் காவற்காரன் ஆதலால் இடர் புரிய வரும் அசுரர்களை கேடயத்தைச் சுழற்றி சுழற்றி விரட்டுகிறான்.
திருமுருகாற்றுபடை: மந்திர விதியின் மரபுளி வழா ஒற்குமே
ஒருமுறை காசிபர் திதியால் இயற்றப்பட்ட யாகத்தைக் கெடுக்க தேவர்களால் அனுப்பபட்ட மாலயன், மாரன் எனும் அசுரர்களை இளையனார் வேலூரில் அழித்தார்.
கந்தர் கலி வெண்பா: அதிர் கேடகம் சுழற்றும் அங்கைத் தலமும்
மனகுண சலன மலினமில் துரியஅ தீதசு
காநு பூதி மவுனநி ரக்ஷர
மந்தி ரம்பொ ருந்தி மார்பிற் றிகழ்ந்தன ...... 7
......... பதவுரை .........
மனத்தின் ஓட்டம் குணம் மாறி மாறி இருப்பது, ஒரு நிலை இல்லாமல் ஓடுவது போன்ற மாசு அற்றதாய் யோகியர்கள் தன் மயம்க நிற்கும் நான்காவது நிலைக்கும் மேற்பட்ட துரியாதீதமாகிய, - எனதும் யானும் வேறாகி எவரும் யாரும் யானாகும் நிலை - துன்பம் கலப்பு இல்லாத இன்பத்தை அனுபவிக்கும் ஞான மயமான மவுன மந்திரம், மனம், வாக்கு, காயம், தொழில்கள் அற்றுப் போக செய்யும் மந்திரம் (உரை மாள செயல் மாண்டு சித்தம் அவிழ), எழுத்து கணக்குக்கு அப்பாற்பட்டது மான மந்திரம் (இதுவே நிர் வசன பிரசங்கம் என்பார்) பொருந்தி மார்பில் சின் முத்திரையுடன் விளங்கின (பசுவாகிய ஆட்காட்டி விரல் பதியாகிய பெருவிரலுடன் சேர்ந்து பாச விரல்கள் மூன்றும் தனித்து விலக நிற்கும் தோற்றம்) -
(முருகனின் வாகைப் புயங்களே).
திருமுருகாற்றுபடை: ஒரு கை மார்புடன் விளங்க
தேசு பெற நீ வைத்த சின்முத்திரை அங்குசம் செங்கைக்குள்ளே அடக்கி சின்மயானந்த சுக வெள்ளம் படிந்து - தாயுமான மெளன குரு
வகைவகை குழுமி மொகுமொகு மொகென அநேகச
மூக ராக மதுபம்வி ழச்சிறு
சண்ப கஞ்செ றிந்த தாரிற் பொலிந்தன ...... 8
......... பதவுரை .........
கூட்டம் கூட்டமாகத் திரண்டு மொகு மொகு என்ற ஒலியுடன் பலவிதமான இசையுடன் வண்டுகள் விருப்பத்துடன் மேலே வந்து விழ மல்லிகைப் பூ நெருக்கமாகக் கட்டப்பட்ட மாலை மீது விளங்கின -
(முருகனின் வாகைப் புயங்களே).
பாடல்களை குருஜியின் குரலில் கேட்போம்
பாடலின் மற்ற பகுதிகள் தொடரும்
முருக சரணம்
No comments:
Post a Comment