புய வகுப்பு கல்யாணி ராகம்
பாடல் கடைசி பகுதி
அசைவற நினையும் அவர்பவம் அகலவெ மேல்வரு
கால தூதரை யுடையும் அப்படி
அங்கும் இங்கும் எங்கும் ஓடத் துரந்தன ...... 25
அகிலமும் எனது செயலல திலையென யானென
வீறு கூறி அறவுமி குத்தெழும்
ஐம்பு லன்தி யங்கி வீழத் திமிர்ந்தன ...... 26
அனலெழு துவசம் உடுகுலம் உதிரவி யோமமும்
ஏழு பாரும் அசலமும் மிக்கபி
லங்க ளுங்கு லுங்க ஆலித் ததிர்ந்தன ...... 27
அடல்நெடு நிருதர் தளமது மடிய வலாரிதன்
வானை ஆள அரசுகொ டுத்தப
யம்பு குந்த அண்ட ரூரைப் புரந்தன ...... 28
அடவியில் விளவு தளவலர் துளவு குராமகிழ்
கோடல் பாடல் அளிமுரல் செச்சைய
லங்கல் செங்க டம்பு நேசித் தணிந்தன ...... 29
அரியதொர் தமிழ்கொ டுரிமையொ டடிதொழு தேகவி
மாலை யாக அடிமைதொ டுத்திடு
புன்சொல் ஒன்று நிந்தி யாமற் புனைந்தன ...... 30
அழகிய குமரன் உமைதிரு மதலை பகீரதி
மாதர் வாழும் அறுவர் ப்ரியப்படு
கந்தன் எந்தை யிந்த்ர நீலச் சிலம்பினன் ...... 31
அநுபவன் அநகன் அனனியன் அமலன் அமோகன்அ
நேகன் ஏகன் அபினவன் நித்தியன்
அஞ்ச லென்ப்ரசண்ட வாகைப் புயங்களே. ...... 32
அருளாளர் திருப்புகழ் அடிமை நடராஜன் சாரின்
விளக்கஉரையை பார்ப்போம்.
இறை பணியாக வெளியிட்டுள்ள கௌமாரம்
இணைய தளத்துக்கு நன்றிகள் பல
அசைவற நினையும் அவர் பவம் அகலவே மேல் வருகால தூதரை அடையும் அப்படி
அங்கும் இங்கும் எங்கும் ஓடத் துரந்தன ...... 25
பதவுரை
சலனமின்றி ஏக சித்த தியானம் செய்பவர்களின் (எழுதிய படமென இருளறு சுடரடி இனைதொழு மெளனிகள்) பிறவித் துன்பம் நீங்க அவர்களை பிடிக்கவரும் எம தூதர்கள் சிதறி ஓடும்படி பல திசைகளிலும் அவர்களைத் துரத்தி வெற்றி கண்டன -
(முருகனின் வாகைப் புயங்களே).
எமபடர் தொடர்ந்து அழைக்கில் அவருடன் எதிர்த்து உள் உட்க இடி என முழங்கி வெற்றி பேசலாம் - கடைக்கண்ணியக் வகுப்பு.
அகிலமும் எனது செயலலது இலையென யான் எனவீறு கூறி அறவு மி குத்து எழும்
ஐம்புலன் தியங்கி வீழத் திமிர்ந்தன ...... 26
பதவுரை
அனைத்தும் எனது சொந்த முயற்சியே தவிர வேறு எவருடைய உதவியும் கிடையாது எனறு பெருமை பேசி நான் நான் எனும் இருமாப்புடன் மேலே கிளம்பி மிகவும் துள்ளுகின்ற பஞ்சேந்திரியங்கள் சோர்ந்து ஒடுங்கும்படி அவற்றின் மேலே விழுந்து அடிப்பன -
(முருகனின் வாகைப் புயங்களே).
அனல் எழு துவசம் உடுகுலம் உதிர வியோமமும்
ஏழு பாரும் அசலமும் மிக்கபி
கபிலங்களும் குலுங்க ஆலித்து அதிர்ந்தன .....27
பதவுரை
பெரும் சினத்துடன் வரும் கொடிய சேவல், நட்சத்திரக் கூட்டங்கள் சிதறி விழும்படி ஆகாய வெளியும் ஏழு உலகங்களும் மலைகளும் பெரிய பாதாள லோகங்களும் அதிரும்படி பெரும் குக்குரல் செய்து ஆரவாரித்தன. இப்படிப்பட்ட சேவல் கொடியை ஏந்தி இருப்பன -
(முருகனின் வாகைப் புயங்களே).
அடல்நெடு நிருதர் தளம் அது மடிய வலாரி தன்
வானை ஆள அரசு கொடுத்து
அபயம் புகுந்த அண்டர் ஊரைப் புரந்தன ...... 28
பதவுரை
வலிமை மிக்க அசுரர்களின் சேனைகள் இறந்து ஒழிய, இந்திரன் தனது விண்ணுலகை ஆள, அரசாட்சியைத் தந்து தம்மிடம் சரண் அடைந்த தேவர்களின் அமராவதியை காப்பாற்றின -
(முருகனின் வாகைப் புயங்களே).
வானாடு அரசாளும்படி வாவா வா என்று அழைத்து வானோர் பரிதாபம் தவிர்த்த பெருமாளே.
அடவியில் விளவு தளவு அலர் துளவு குரா மகிழ்
கோடல் பாடல் அளிமுரல் செச்சை
அலங்கல் செங்கடம்பு நேசித்து அணிந்தன ......29
பதவுரை
காட்டில் வளருகின்ற விளா இலைகள், முல்லை மலர், துளசி, குராமலர், மகிழ மலர், வெண் காந்தள், பாதிரிப் பூ, வண்டுகள் ரீங்காரம் செய்கின்ற வெட்சி மாலை, சிவந்த கடப்ப மாலை, முதலியவற்றை விரும்பி சூடிக் கொண்டன -
(முருகனின் வாகைப் புயங்களே).
அரியது ஓர் தமிழ் கொடுஉரிமையொடு அடிதொழுதே கவி
மாலையாக அடிமை தொடுத்திடு
புன்சொல் ஒன்று நிந்தியாமல் புனைந்தன ...... 30
பதவுரை
ஒப்பற்ற தமிழில் வழி வழி அடிமை எனும் உரிமையோடு திருப்பாதங்களை வணங்கி பாடல் தொகுதியான இந்த அடியேன் புனைந்த அற்பமான வார்த்தைகளை இகழாமல் ஏற்றுக் கொண்டன -
(முருகனின் வாகைப் புயங்களே).
முடிய வழி வழி அடிமை எனும் உரிமை அடிமை முழுதும் உலகறிய மழலை மொழி கொடுபாடும் ஆசு கவி ... மாலை சூடுவதும்
... சீர் பாத வகுப்பு
மல்லேபுரி பன்னிருவாகுவில் என் சொல்லே புனையும் சுடர் வேலவனே
... அனுபூதி
ஈன்பு அடியேன் உரைத்த புன் சொல் அது மீது நித்தமும் தண் அருளே தழைத்து வரவேணும்
... என சுவாமிமலைத் திருப்புகழில் விடுத்த வேண்டுகோளை முருகப்பெருமான் ஏற்றுக்கொண்டார் என்பதை உணர்ந்து மேற்கண்ட வரிகள் பாடப்பட்டன.
அழகிய குமரன் உமை திரு மதலை பகீரதி
மாதர் வாழும் அறுவர் ப்ரியப்படு
கந்தன் எந்தை இந்த்ர நீலச் சிலம்பினன் ...... 31
பதவுரை
அழகு மிக்க குமாரக்கடவுள், பார்வதி தேவியின் செல்வப் புதல்வன், கங்கையும் ஆறு கார்த்திகை மாதர்களும் அன்பு செலுத்தும் கந்தசுவாமி, எனக்கு தந்தையானவன், இந்திரன் வளர்த்த நீலோற்பன பூமலரும்திருத்தணிகைமலையான்,
அநுபவன் அநகன் அனனியன் அமலன் அமோகன்அநேகன் ஏகன் அபினவன் நித்தியன்
அஞ்சல் என ப்ரசண்ட வாகைப் புயங்களே. ...... 32
பதவுரை
ஆன்மாக்களுக்கு இன்ப துன்ப உணர்வை நுகரச் செய்பவன், பாவம் அற்றவன், ஜீவாத்மாவை விட்டு வேறுபடாத பரமாத்மா, மலம் நீங்கிய தூயவன், இச்சையற்றவன், பல பொருளாக காட்சி தருபவன், ஒரே நித்தியப் பொருளானவன், புதியவன், அழிவற்றவன் - ஆகிய முருகப்பெருமானின் 'பயப்படாதே' என குறிப்பு காட்டும் வெற்றி விளங்கும் வீர பன்னிரு புயங்களே ... கரங்களே.
குருஜியின் குரலில் பாடலைக்கேட்போம்
முழு பாடலையும் கேட்போமே
மற்ற வகுப்புக்கள் தொடரும்
முருகா சரணம்
No comments:
Post a Comment