Thursday, 12 December 2013

திருப்புகழ் ஆன்மீகப் பெருவிழா 2013 : முதல்நாள் 13.07.2013

திருப்புகழ் ஆன்மீகப் பெருவிழா  2013ம் முதல்நாள் 


சென்னையில் சென்ற ஜூலை மாதம் 13,14 தேதிகளில் வெகு சிறப்பாக நடை பெற்ற ஆன்மீக விழாவில் கலந்து கொண்டவன் என்ற தனிப்பட்ட முறையில் எழுதி, என்னுடைய அனுபவங்களையும்,ஆனந்த நிலையையும் விழாவுக்கு வர இயலாத அன்பர்களூடன் பகிர்ந்து கொள்ளவும்  நிகழ்வுகளை ,பதிவு செய்யும்  நோக்கத்துடன் தான் அளிக்க விரும்புகிறேன்.தாமதத்துக்கு காரணம் ஒலி /ஒளி வடிவுடன் அளிக்க வேண்டும் என்ற ஆசைதான்.அருளாளர்கள்,ஐயப்பன்,மாலதி ஜெயராமன் பெரும் பாடுபட்டு தயாரித்துள்ள வடிவங்களுடன் அளிக்கிறேன் அவர்களுக்கு என் இதய பூர்வமான வணக்கங்கள் அனந்தம் .




விழாவுக்கு பல பாகங்களிலிருந்து அன்பர்கள் வந்து குவிந்தனர்.மூத்த வயதினர், உடல் ஊன முற்றவர்,குழந்தைகள் பல மொழியாளர் களை காண முடிந்தது.விழா நிகழ்ச்சியின் இடையில் சித்ரா மூர்த்தி கூறியதைப்போல். மற்ற கல்யாணம் போன்ற நிகழ்ச்சிகளில் மக்கள் கடமைக்காகவும், கட்டாயத்துக்காகவும் முறைக்காகவும் தான் கலந்து கொள்கிறார்கள் . கல்யாணத்தில் கவரை கொடுத்துவிட்டு,சாப்பிட்டுவிட்டு  பறந்து விடுகிறார்கள். ஆனால் நம் அன்பர்கள் குடும்பத்தோடு பல  இடர்ப்பாடுகளுடன்  இரண்டு தினங்களும் முழுமையாக கலந்துகொண்டு ஒப்பில்லா மன மகிழ்வுடனும் திருப்தியுடனும் விடை பெறுகிறார்கள். காரணம் முருகப்பெருமானின் மேலும் குருவினி டத்திலும் கொண்ட பக்திதான்.



விழா அடையாறு  அனந்தபத்மநாப சுவாமி ஆலய வளாகத்தில் அமைதியான சூழ்நிலையில் நடைபெற்றது. அங்கு தான் குருஜியின் 80 ஆண்டு நிறைவு விழா நடந்தது.குருஜி கடைசி யாக கலந்து கொண்ட பொது நிகழ்ச்சியும் அங்குதான்.வழிபாடுகள் நடப்பதும் அங்குதான்.நிகழ்ச்சியின் இடையில் அன்பர்கள் குழந்தைகளைப்போல் குருஜி இந்த இடத்தில் தான் சக்ர நாற்காலியில் அமர்ந்திருந்தார் போன்ற உரையாடல்களை கேட்க முடிந்தது.



அன்பர்கள் அரங்கத்துக்கு வருமுன் அனந்த பத்மநாப ஸ்வாமி  ஆலயத்துக்கு சென்று தரிசனம் செய்து விட்டுத்தான் அரங்கத்தில் பிரவேசித்தார்கள் என்று சொல்லவும் வேண்டுமோ ?ஆலயம் .திருவனந்தபுரததுக்கு அடுத்து அதே பாணியில் அமைந்த ஒரு வித்தியாசமான தலம் பெருமாளை மூன்று நிலைகளில் தான் தரிசனம் செய்யமுடியும்  மற்றும் விநாயகர்,கருடன்,ஆஞ்சநேயர்,நரசிம்மர்,அஷ்டபுஜங்கதுர்க்கை முதலிய மூர்த்திகளும் தங்க கவசம் அணிந்து திவ்யமாக தர்சனம் அருளுகிறார்கள்.ஆலயத்தின் வரலாறையும் ,சிறப்புகளையும் நிர்வாகி ஸ்ரீனிவாச ராவ் மூலம் கேட்டறிந்து,நாமும் தரிசனம் செய்வோம்.





அடுத்து நம் விழா அரங்கினில் நுழைந்ததும் ஒளி  வெள்ளம் நம்மை தாக்கியது.உதித்த செங்கதிர் ஆலயத்தின் மூர்த்திகள் அணிந்துள்ள தங்க கவசத்தின் மீது பாய்ந்து பின் அரங்கத்துக்குள் பிரவேசித்ததுதான் காரணமா அல்லது  மு ருகப்பெருமான்  எழுந்தருளி அன்பர்களுக்கு தரிசனம் தந்ததாலா அல்லது அன்பர்களின் வதனங்களில் மிதந்த பிரகாசத்த்தினாலா அல்லது அலங்கார மின் விளக்குகளாலா என்று என்று கூறுவது மிக கடினம்.எப்படியோ இடம் பிடித்து அன்னை அபிராமி எழுந்தருளுவதற்கு பரவசமாக காத்திருந்தார்கள்.எல்லோர் மனத்திலும் குருஜி இல்லையே என்ற இனம் புரியாத சோகம் நிலவுவதையும் உணர முடிந்தது.குருஜி அருவமாக அரங்கத்தில் எங்கேயோ அமர்ந்திருக்கிறார் என்று தாங்களே சமாதானமாகி சாந்தியாக இருந்தார்கள் என்பதுதான் உண்மை.





உரிய நேரத்தில் அபிராமி அந்தாதி அன்பர்கள் உள்ளத்தி னில் கங்கை பிரவாகமாக பெருக்கெடுத்தது.ஆயிரம் ஆயிரம் குரல்கள் ஒரே குரலில் ,ஒரே துதியில் ஒலித்து ஒரு மணி நேரம் அன்னையின் சந்நிதானத்துக்கு சென்று ,கலந்து உள் உருகி .விழி நீர் மல்கி.மெய்புலகம் அரும்பி,ஆனந்தமாகி,அறிவிழந்துமொழிதடுமாரி,பித்தராகி முடிவில் அபிராமி சமயம் நன்றே என்று தீர்மானித்தது.கொடியே இளவஞ்சிக்கொம்பே,நாயகியே, நான்முகியே,நாராயணியே சாம்பவியே,சங்கரி யே,சியாமளையே மாலி னியே வாராகியே,சூளினியே,மாதங்கியே,பைரவியே,என்று பலவாறு துதித்து நன்றே வருகினும்,தீதே விளைகினும் நான் அறிவது ஒன்றேயும் இல்லை.உனக்கே பரம் .எனக்கு உள்ளவெல்லாம் அன்றே உனதென்று அளித்து விட்டேன் என்று அர்ப்பணித்தார்கள்.பாபநாசம் சிவன் உன்னை அல்லால் என்ற கீர்த்தனையில் "நீயே மீனாட்சி ,காமாட்சி நீலாயதாட்சி என பல பெயருடன் எங்கும் நிறைந்தவள் என் மனக்கோயிலி லே எழுந்தருளிய தாயே " என்ற வரிகளை நினைவு கூர்ந்தோம். ஒரே குரலில் ஒலித்த அந்தாதியைக் கேட்போம்.

 இறை வணக்கத்துடன் நிகழ்ச்சிகள் 1தொடங்கின.நிகழ்ச்சிகளை தொகுத்து அளித்து முன்னும் பின்னும் மிக அருமையாக அறிமுகம்,ஆன்றோர்கள் பேசிய அரும் கருத்துக்களின் சாராம்சத்தை உடனுக்குடன் அளித்த  அன்பர்கள் சித்ரா மூர்த்தி,உமா பாலசுப்ரமணியம் அவர்களின்  அரிய பணியை இந்த சந்தர்ப்பத்தில்  பாராட்டியே ஆக வேண்டும்...அவர்களால் உட்காரமுடியவில்லை.மற்ற அன்பர்களோடு உரையாட முடியவில்லை.முக்கியமாக அன்பர்களோடு சேர்ந்து பாட முடிய வில்லை, ஆனால் அவர்கள் மட்டும் பாடக்கூடிய சந்தர்பத்தையும் பெருமான் அளித்தான்.பின்னர் பார்ப்போம்.கேட்போம்.

காஞ்சி ,சிருங்கேரி முதலிய ஆசார்யாள் இடமிருந்து வந்த ஆசிகளை அறிவித்தபின்  ஸ்ரீனிவாசராவ் சுவாமி தயானந்த சரஸ்வதிக்கும்,,ஜெயேந்திர பூரி  மகாஸ்வமிக்கும்  ஆலய மரியாதை  செலுத்தி கௌரவித்தார்.குத்து  விளக்கு  ஏற்றி விழா மங்களகரமாக தொடங்கியது.

,அமைப்பின் தலைவர் பத்மா வெங்கடராமன்.நிகழ்த்திய வரவேற்புரையில் அமைப்பின் சீரிய பணிகளை விளக்கியபின், நம் குருஜி திருப்புகழ் பாடல்களை செறிந்த பொருளோடு கற்றுக்கொள்ளுவதை மிகவும் விரும்பினார் என்றும்,அதற்கு துணையாக பல மகாநாடுகளும், கருத்தரங்கங்களும் நடைபெற்று வருவதாகவும்,அந்த வகையில் இந்த ஆன்மீக விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும்  கூறி எல்லோரையும் வரவேற்றார்.

அன்பர்கள் ஆவலுடன் காத்திருந்த அனுக்ரஹ பாஷனையில் சுவாமி தயானந்த சரஸ்வதி ,நம்  குருஜியை முதற்கண் நினைவு கூர்வது நம் தலையாய கடமை என்றும் அவரது சேவை ஈடு இணையற்றது என்றும்,சங்கீத மும்மூர்த்திகளுக்கு ஒப்பானவர் என்றும் புகழாரம் சூட்டினார்.பின்னர்  ஆறுமுகம் ஆறுமுகம் என்று தொடங்கும் பாடலை சுட்டி காட்டி,அதில் 96 தத்துவங்கள் அடங்கியுள்ளது என்றார் எதிர்பாராதநிலையில் பாடலை பாட அழைத்தார். அன்பர்கள் சித்ராவும் ,உமாவும் பாடி மகிழ் வித்தார்கள்.சுவாமிகளின் உரையை விரிவாக கேட்போம்.

அடுத்து ஜெயேந்திர  பூரி மகாஸ்வாமி தன்னுடைய பாஷ்யத்தில் ' நாம் எல்லோரும் புகழுக்கு விரும்புகிறோம்,எதிர்பார்க்கிறோம்.ஆனால் அது நிலையானதல்ல.ஆனால் இறைவன் புகழ் பாடும் திருப்புகழ் தான் உயர்ந்தது,நிலையானது .மற்றும் பல தீய குணங்களை கொண்ட அருணகிரி நாதரை தடுத்தாட்கொண்ட முருகன் , தீய எண்ணங்களை கொண்ட நம்மையும் தூயவன்  ஆக்குவான் மிருகங்களை மாற்ற முடியாது.மனிதர்களை மாற்ற முடியும்.இறைவனை பல வடிவங்களில் வழிபடுகிறோம். ஆனால்  பிரம்மத்துக்கு உருவம் இல்லை. அந்த ப்ரம்மத்தையே   சுஸ்வரமாக   சுப்ரமண்யம் என்று நாமம் கொண்டுள்ளான்...... என்று அருளாசி வழங்கினார்..கேட்டு அனுபவிப்போம்.


பின்னர் புதிதாக நம் இசை வழிபாடு நூலில் சேர்க்கப்பட்டுள்ள 28 பாடல்கள் அடங்கிய  இசை குறுந்தகடு சுவாமி தயானந்த சரஸ்வதி வெளியிட்டார்.நூலின் கன்னட பதிப்பை  ஜெயேந்திர பூரி மகாராஜ் வெளியிட்டார்.


அடுத்து கருத்தரங்க நிகழ்ச்சிகளில் முதலாவதாக டாக்டர் திருமதி சுத் சேஷையன்  "திருப்புகழில் முருகனின் தன்மைகளும் மேன்மைகளும் "என்ற தலைப்பில்  ஏறுமயில்  பாட்டுக்கு பலகோணங்களில் பல் வேறு விளக்கங்களை அளித்தார்.கேட்டு அனுபவிப்போம்

https://www.youtube.com/watch?v=68vqwhfZgns


காலை நிகழ்ச்சிகளின் முடிவில்  அமைப்பின் செயலர் திருமதி பத்மா சுப்ரமணியன் முறையாக நன்றி நவின்றார்.


https://www.youtube.com/watch?v=6KCFqmT-Qf4



அன்பர்கள் மனத்தில் பொதுவாக நம் இளைய தலை முறையினர் திருப்புகழ் கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டுவதில்லை என்றும்,நம் அமைப்பின் நிகழ்ச்சிகளில் அதிகமாக ஈடுபடுவதில்லை ..என்றும் பரவலான எண்ணம் உண்டு. ஏன் சிலர் மனத்தி ல் எதிர்காலம் என்ன ஆகுமோ என்ற வேண்டாத பயமும் உண்டு.இதை முறியடிக்க அஞ்சேல் என அறைகூவலுடன் வந்து அரங்கில் குதித்தனர் இளம் தளிர்கள்.ஒரு வழி பாட்டையே நடத்தி அன்பர்களை அசத்தி தாம் வாழையடி வாழையாய் வந்த திருக்கூட்டம் என நிருபித்தனர்.ஏனெனில்.அவர்கள் முருகப்பெருமானால் ஆசியுடன் அனுப்பப்பட்டவர்கள்.ஆர்வத்துடன் கேட்போம்.முருகனின் பரிபூர்ண அருளுக்கு வேண்டுவோம்.




பிற்பகல் நிகழ்ச்சியில்முதலில் அமுதசுரபி ஆசிரியரும் சிறந்த ஆன்மீகவாதியும்,இலக்கியவாதியுமான டாக்டர் திருப்பூர் கிருஷ்ணன் "அருணகிரிநாதர் -வாழ்வும்,பணியும்,பக்தியும் "என்ற தலைப்பில் நம் நெஞ்சில் என்றும் நிலைக்குமாறு அதி அற்புதமான உரை நிகழ்த்தினார்.அருணகிரி ஏன் முருகப்பெருமானை தேர்ந்தெடுத்தார் ?ராமர், கண்ணனைப்போல் எதிரிகளை வ தம் செய்யாமல் சூரபத்மனை சேவலாகவும் மயிலாகவும் மாற்றி தன்னுடன் ஆட்கொண்டார்..நாம் இரண்டையும் முருகனுடன் வணங்குகிறோம்.முருகன் தமிழ் இலக்கியங்களில் மிகப்பழமையான குறுந்தொகை,திருமுருகாற்றுப்படை நூல்களில் இடம் பெற்றுள்ளான்.இந்து மதம் கடவுளை எப்படி வேண்டுமானாலும் வணங்கலாம்.ஏன் நாத்திகர்களுக்கும் இடம் உண்டு.திருப்புகழ் தமிழ் வேத மந்திரம்.என்ற முன்னுரையுடன் அருணகிரியாரின் சரித்திரத்தை மிக விரிவாககூறி,நம் அமைப்பு ஒரு பேரலையை உருவாக்கி செயல்படுவதாகவும் ,நாம் அதை விட்டு விடக்கூடாது என்றும் வேண்டுகோள் விடுத்தார்.அந்த சொல் பிரவாகத்தை கேட்போம்.



அடுத்து  " திருப்புகழில் ஞான மார்க்க அறிவுரைகள் "என்ற தலைப்பில் திருமதி இளம்பிறை மணிமாறன்  மிக எளிய முறையில் விளக்கினார்.அருணகிரியார் தன் சகோதரியிடமிருந்து கேட்கத்தகாத  வார்த்தைகளை கேட்டும் ஞானம் பிறக்கவில்லை.விரக்தி தான் மேலிட்டு கோபுர உச்சியிலிருந்துமுருகா என அழைத்து,குதித்ததும் பெருமான் தடுத்தாட்கொண்டதும் தான் ஞானம் பிறந்தது.பெருமான் வயலூருக்கு அழைத்தார்.முத்தைத்திரு பாடியவுடன் திருப்புகழ் என பெயர் சூட்டியது பெருமான்தான்.....பெருமானும் அருணகிரியாரும் சேர்ந்து பாடிய பாடல் ஒன்று உண்டு .அதுதான் "பக்கரை விசித்திர மணி"அதில் ....திருப்புகழ் விருப்பமொடு செப்பு   வரை பெருமான் அருளியது.பின் எனக்கு அருள் கை மறவேனே தொடர்ந்தது அருணகிரியார். திருச்செந்தூர் ஆலயத்தை நிர்மாணித்தது துறவிகள் போன்ற அறிய செய்திகளை கூறி.,ஞான மார்க்கம் சில குறிப்பிட்ட பாடல்களில் மட்டுமில்லை ஒவ்வொரு பாடலுமே மார்க்கத்தை அறிவுறுத்தும் பாடல் தான் என்று மிக எளிய முறையில் பதிய வைத்தார்.கூர்ந்து கேட்போம். சித்ரா மூர்த்தியின் அழகான பின்னுரையையும் அனுபவிப்போம்.


ஜெயேந்திர பூரி மகாஸ்வாமிகள் அருளாசி வழங்கியதை அடுத்து திரு K .N .கிருஷ்ணமூர்த்தி நன்றி நவிலலுடன் முதல் நாள் நிகழ்ச்சிகள் இனிதே முடிவுற்றன  









  குருவாய்  வருவாய் அருள்வாய் குகனே 

-மும்பை வெங்கடராமன்



"Thiruppugazh Anmeegap Peruvizha 2013" photos are available at Smt. Malathi Jayaraman's following "GOOGLE PLUS" link: 

https://plus.google.com/photos/110776979289306679547/albums/5901078130212387473 

and 

https://plus.google.com/photos/110776979289306679547/albums/5901235897638280721 


No comments:

Post a Comment