பஞ்சாமிர்த வாழ்த்து பாடல்
ஆறுமுகமங்கலத்தில்
மதலையொன்று பிறந்ததே
ஆறுமுகப்
பெருமானின் திருப்புகழ் பாடவென்றே
பேறு
பெற்ற பெற்றோரும் ‘இராகவா’ என்றே
கூறிக்கொஞ்சினர்
பால்மணம்
மாறாத பாலகனை.
மாறுபடும்
நோய் தீர்த்த மருந்தொன்றும் இருந்ததே
ஏறுமயில்
வாகனன் ஏகனவன் கடைக்கணியலே
ஆறுமோ
ஆவலென பேரன்பு கொண்டவன் மனதில்
நீறுபடு
மேனியவன் பக்திக்கொரு வித்திட்டானே! 1
வித்தொன்று
மா மரமாகி வளர்ந்து வந்ததே
சத்வகுணத்துடன்
பக்தியும் பண்பும் தழைத்ததே
சித்தத்தை
சுத்திக்கும் இசையும் வளர்ந்ததே
அத்தனுடன்
அன்னை போல் லயமும் கலந்ததே.
உத்தமான
உளமதில் சத்திய ஒளி உதித்ததே
சித்திர
கவித்துவ திருப்புகழை சரண் அடைந்ததே
தித்திக்கும்
கதலிப்பழம்போல்
அதுவும் இனித்ததே
இத்தரணி
சுவைக்க இச்சையுற்றது அந்நெஞ்சமே! 2
நெஞ்சக்
கனகல்லும் நெய்யாய்
நெகிழ்ந்துருகியதே
வஞ்சிக்குமரனருளால்
திருப்புகழ் பக்தியிசை ஆனதே
கொஞ்சும்
பண்ணுடன் சந்தமும் பின்னிப் பிணைந்ததே
மிஞ்சுவாரார்
என இவர் புகழ் எங்கணும் பரவியதே.
நெஞ்சையள்ளும்
இசையினில் உள்ளம் நிலைத்ததே
பஞ்சனைய
மனதில் பக்திக் கனலும் மூண்டதே
பஞ்சம்
பிணி துயர் நீக்கும் திருப்புகழ் நிதிதனை
அஞ்சலி
செய்வோர் அனைவரும் அள்ளித்தந்ததே! 3
அள்ளித்
தந்தது அனைத்தையும் பருகினர் அப்படியே
தெள்ளத்
தெளிய வடியும் தேன்
போன்ற திருப்புகழை
வெள்ளமென
பல்கி பெருகி விண்ணையும் தொட்டதே
கொள்ளை
கொண்ட மனங்களில் குகனும் அமர்ந்தானே.
கள்ளமற்ற
சிறுவரும் குஞ்சி வெளுத்த மனிதரும்
கிள்ளை
மொழி பெண்டிரும் திருப்புகழன்பர் ஆனரே
வள்ளிக்
கணவன் பேரில் தேனுண்ட வண்டாயினரே! 4
வண்டாகி
நாதமே யோகமாய் குருவும் வாழ்கின்றாரே
தொண்டனிவன்
திருப்புகழ்கென்று பேர் பெற்றனரே
பண்டைமொழி
செந்தமிழுக்கும் செல்வன் இவரன்றோ
அண்டருலகும்
இவரிசைக்கு அடிமை ஆனதன்றோ.
கொண்ட
நீர் முற்றிலும் வெல்லம்
கரையுமாப்போல்
எண்டிசையிலும்
எம் குருவின் பெயர் நிறைந்திடுமே
மண்டலம்
நிறை இரவியின் பொற்கிரணங்கள் என
கண்டோர்
உளமதில் அவர் இசையொளி பரவட்டுமே! 5
மாக்கணத்துடன்
புகழ் ஓதி சாந்தி அளித்தீர்
பார்க்கும்
மனங்களில் விரோதம் இல்லை இனி.
ஈர்க்கச்
செய்வோம் மனங்களை அன்பினாலே
நோக்கம்
இதுவே எம்குருவே என்றென்றும்.
வாக்குக்கோர்
அருணகிரியை நாம்கண்டதில்லை
நோக்குகின்றோம்
உம்மை அவரின் வடிவிலே.
பூக்கும்
மலர் போன்ற எம் இதய கமலங்களில்
நீக்கமற
வைத்திருப்போம் உம் பாதகமலங்களையே! 6
-
சாந்தா ராஜன்